
இந்தியாவில் வீட்டுக்கடன் வட்டி எப்போதும் தொடர்ச்சியாக அதிகமாக இருந்ததில்லை. 2000-ம் ஆண்டுவாக்கில் 12% -13%-ஆக இருந்தது. படிப்படியாகக் குறைந்து 7.5% ஆனது. தொடர்ந்து, 6.5% அளவுக்குக்கூட குறைந்துபோனது.
வீட்டுக்கடன் மூலம் வீடு வாங்கிய பிறகு வரும் நிம்மதி, சிறிது காலம் இ.எம்.ஐ-க்களை கட்டிய பிறகு, ‘எப்போடா இந்த லோன் முடியும்’ என்ற கவலையாக மாறிவிடுகிறது பலருக்கு. வீட்டுக்கடன் பாக்கி குறித்துக் கவலைப்பட வேண்டுமா என்றால், தேவையில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் என்பதை, ஒரு கதை மூலம் புரிந்துகொள்ள முயல்வோம்.
பறக்கும் குதிரை
ஒரு ராஜா, ஒருவருக்கு மரண தண்டனை விதித்தார். அதனால் சோகத்துடன் இருந்தார். ஆனால், மரணதண்டனை விதிக்கப்பட்டவனோ, அன்றிரவு தூங்கச் சென்றபோது, ‘காலையில பார்த்துக்கலாம்’ என்று மரண பயத்தையே ஓரமாகத் தள்ளிவிட்டு தூங்கப்போனான். பிரச்னைகளின்போது இப்படி ‘பார்த்துக்கலாம்’ என்று இரவு உறங்கச் செல்லும் பலருக்கும், காலையில் எழும்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்துவிடலாம். மரண தண்டனை விதிக்கப்பட்டவனுக்கும் அப்படி ஒரு யோசனை தோன்றியது. அதைத் தன் மனைவியிடம் சொல்லிவிட்டு, ராஜாவைப் பார்க்கச் சென்றான்.

ராஜாவிடம், ‘அரசே, நீங்கள் அவசரப்பட்டுவிட்டீர்கள். நான் ஒரு குதிரையைப் பறக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். அதற்குள் நீங்கள் எனக்கு மரண தண்டனை கொடுத்து விட்டீர்கள். என் மரண தண்டனையைக் கொஞ்சம் தள்ளிவைத்தால் பறக்கும் குதிரையை உங்களுக்கு நான் காட்டுவேன்’ என்றான். ராஜாவால் அதை நம்ப முடியவில்லை. என்றாலும், ‘ஒருவேளை உண்மை என்றால் பறக்கும் குதிரை கிடைக்கலாமே’ என்ற ஆசையும் இருந்தது ராஜாவுக்கு. ‘சரி’ என்றவரிடம், சில கோரிக்கைகளைவைத்தான் அவன்.
‘‘ராஜா... எனக்கு மூன்று வருடங்கள் தேவை. 300 குதிரைகளும், அவற்றைப் பார்த்துக்கொள்ள ஆட்களும் வேண்டும். பராமரிக்கப் பணமும், பெரிய நிலமும் வேண்டும்’’ என்றான். சம்மதித்தார் ராஜா. வீட்டுக்கு வந்து மனைவியிடம் நடந்ததைச் சொல்ல, ‘‘எனில் மூன்று வருடங்கள் கழித்து உங்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடுமா?’’ என்று பதறினாள் அவள். அதற்கு அவன், ‘‘நான் இன்றே இறந்திருக்க வேண்டியவன். எனக்கு 300 குதிரையும், 600 வீரர்களும், நிலமும் பணமும் கிடைக்கின்றன. அதோடு மூன்று வருடங்களுக்கு ஆயுளும் நீள்கிறது. அதற்குள் ராஜாவே இறந்துவிடலாம். அல்லது நானே இறக்கலாம். எனவே, நாளை வருவது வரட்டும், இன்றைய பொழுதை சந்தோஷமாக வாழ்வோம்’’ என்றான்.

இ.எம்.ஐ முடிப்பதற்குள்...
இப்போது இ.எம்.ஐ கதைக்கு வருவோம். வீட்டுக்கடன் வாங்கியவருக்குப் பதவி உயர்வு வரலாம். கூடவே நல்ல சம்பள உயர்வு வரலாம். அல்லது அதிக சம்பளத்தில் வேறு வேலைக்குப் போகலாம். பிள்ளைகள் படிப்பு முடிந்து, வேலையில் சேர்ந்து சம்பாதித்து, வீட்டுச் செலவுகளைப் பகிர்ந்துகொள்ளலாம். இன்னொரு பக்கம், வீட்டின் விலை உயர்ந்துகொண்டே வரும். ஒரு பெரிய தொகை பூர்வீகச் சொத்து மூலமாகவோ, அலுவலகம் மூலமாகவோ கிடைக்கலாம். அதனால், நாளை நமக்கு நிச்சயம் சாதகமாக இருக்கும் என்று நம்பி இன்றைய வேலையைப் பார்க்க வேண்டும். நிறைய பணம் சம்பாதிக்கும் வழிகளை யோசித்து, உங்கள் மாதத் தவணையையே சிறிய தொகையாகக் கருதும் அளவுக்கு வருமானத்தை உயர்த்தலாம்.
வட்டியும் குறைவே!
இந்தியாவில் வீட்டுக்கடன் வட்டி எப்போதும் தொடர்ச்சியாக அதிகமாக இருந்ததில்லை. 2000-ம் ஆண்டுவாக்கில் 12% -13%-ஆக இருந்தது. படிப்படியாகக் குறைந்து 7.5% ஆனது. தொடர்ந்து, 6.5% அளவுக்குக்கூட குறைந்துபோனது. இந்த நிலையில், நாட்டின் பணவீக்க விகிதத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால், வீட்டுக்கடனுக்கான வட்டி படிப்படியாக 9% வரை உயர்ந்திருக்கிறது. இன்னும் அதிகபட்சம் ஏறினால் 0.5% உயரக் கூடும். இரட்டை இலக்கத்துக்கு உயர வாய்ப்பில்லை. மேலும், ரிசர்வ் வங்கி எதிர்பார்ப்பதுபோல் பணவீக்கம் குறையும்பட்சத்தில், வீட்டுக்கடன் வட்டியும் தானாகக் குறைந்துவிடும். பழையபடி 7.5% - 8%-ஆகக் குறைய அதிக வாய்ப்புள்ளது. மேலும், வீட்டுக்கடன் என்பது வீட்டின் மதிப்பில் 70% - 80% இருக்கும். போகப் போக வீட்டின் மதிப்பு அதிகரிக்கும்போது, கடன் தொகையின் சதவிகிதம் குறைந்துவிடும்.

எனவே, வீட்டுக்கடன் பாக்கி பற்றியோ, வட்டி விகித உயர்வு பற்றியோ பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. கட்டும் அசல் மற்றும் வட்டிக்குக் கிடைக்கும் வருமான வரிச் சலுகைகளும் வீட்டுக்கடனை லாபகரமாக மாற்றியமைக்கும். அதனால்... கவலைப்படாமல் கட்டுவோம் இ.எம்.ஐ!