கட்டுரைகள்
Published:Updated:

தலைகீழ் வீட்டுக் கடன்... வருமானம் இல்லாதபோது காப்பாற்றும் வீடு!

வீட்டுக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக் கடன்

#HomeLoanReverseMortgage

முந்தைய தலைமுறையில் பெற்றோர்கள், பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் இருந்தார்கள். ஓய்வுக்காலத்தில் அவர்களுக்கு எனத் தனியே பணம் தேவைப்படவில்லை; பிள்ளைகள் பெற்றோரின் தேவைகளைப் பார்த்துக் கொண்டார்கள். இன்று காலம் மாறிவிட்டது. பிள்ளைகள் பெரும்பாலும் பெற்றோரைப் பிரிந்து வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என்று வசிக்கிறார்கள்; அவரவர் பாட்டைப் பார்த்துக்கொள்கிறார்கள். பெற்றோரை எத்தனை பேர் பார்த்துக்கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறி. இந்தச் சூழலில், வருமானம் இல்லாத ஓய்வுக்காலம் கடினமானது.

இப்படிக் கையில் பணம் இல்லாத சூழலில், சொந்த வீடு இருந்தால்... எதிர்வரும் நாள்களை மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடலாம். ‘வீட்டை வாடகைக்குவிட அல்லது விற்கச் சொல்கிறீர்களா... பின்னர் நாங்கள் எங்கே போவது?’ என்கிறீர்களா... ஓய்வுக்காலத்தில் சொந்த வீட்டில் ஆயுள் முழுவதும் இருந்துகொண்டு, மாதா மாதம் அந்த வீட்டின் மூலமே பணம் பெறுவதற்கு என்றே ஒரு வகைக் கடன் இருக்கிறது. அதுதான்... தலைகீழ் அடமான வீட்டுக்கடன் (Reverse Mortgage Home Loan).

பொதுவாக, வீட்டுக் கடனாக ஒரு தொகையைப் பெற்று வீடு வாங்கி, மாதா மாதம் அதைத் திருப்பிச் செலுத்திவருவோம். அதுவே தலைகீழ் அடமான வீட்டுக்கடனில், வீட்டுப் பத்திரத்தை வங்கி வாங்கிக்கொண்டு, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை வீட்டின் உரிமையாளருக்கு வழங்கும்.

தலைகீழ் வீட்டுக் கடன்... வருமானம் இல்லாதபோது காப்பாற்றும் வீடு!

தலைகீழ் அடமானக்கடன்... சிறப்பம்சங்கள்!

உரிமையாளர்களான தம்பதி, வாழ்க்கைக் காலம் முழுக்க அவர்களது வீட்டிலேயே வசிக்கலாம். வங்கிக்கு எந்தப் பணமும் செலுத்தத் தேவையில்லை. மாறாக, வங்கி அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பணம் தரும். வங்கியிடமிருந்து பெறும் பணத்துக்கு வருமான வரி கிடையாது. வங்கியிடமிருந்து பணம் பெறும் காலத்தில் வீடு, உரிமையாளர் பெயரிலேயே இருக்கும். தம்பதியின் ஆயுள் காலத்துக்குப் பிறகு, வாரிசுகளும் வங்கிக்கு எந்தப் பணமும் செலுத்தத் தேவையில்லை.

அடிப்படைத் தகுதிகள்!

* வீடு, தம்பதி இருவர் பெயரிலோ, ஒருவர் பெயரிலோ இருக்கவேண்டியது கட்டாயம்.

* தம்பதியில் ஒருவரின் வயது 60-க்கு மேலும், மற்றவர் வயது 55-க்கு மேலும் இருக்க வேண்டும்.

* வீட்டின் மீது நடப்பில் வேறு எந்தக் கடனும் இருக்கக் கூடாது.

* தம்பதி அந்த வீட்டிலேயே நீண்ட காலத்துக்கு வசிக்கலாம். இருவரில் ஒருவர் இல்லாதபோதும், மற்றொருவர் அந்த வீட்டிலேயே தொடர்ந்து வசிக்கலாம்.

* வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டின் மீதோ, வர்த்தகக் கட்டடங்களின் மீதோ இந்தக் கடனைப் பெற முடியாது.

* கடன் கொடுப்பதற்கு, கடன்பெறும் தம்பதியின் வருமானம் எவ்வளவு இருக்கிறது அல்லது அவர்களுக்குக் கடன் பெறும் தகுதி (Credit Score) இருக்கிறதா என்ற விவரங்கள் வங்கிகளால் பார்க்கப்பட மாட்டாது. அந்த வீட்டின் மதிப்பு எவ்வளவு என்பதை மட்டுமே பார்க்கும்.

*நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் பல இந்த வகைக் கடனை முதிய தம்பதிகளுக்கு வழங்கிவருகின்றன.

I எம்.கண்ணன், நிதி ஆலோசகர் radhaconsultancy.blogspot.com
I எம்.கண்ணன், நிதி ஆலோசகர் radhaconsultancy.blogspot.com

கடன் நடைமுறை இவைதான்!

1. வங்கி மதிப்பீட்டாளர், வீடு கட்டி எத்தனை வருடம் ஆகியிருக்கிறது, இன்னும் எத்தனை வருடங்கள் கட்டடம் நன்றாக இருக்கும் என்று ஆய்வுசெய்து, அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் கடன் வழங்குவார்.

2. கடன் தொகை என்பது, நமக்குக் கிடைக்கும் தொகை மற்றும் அதற்கான வட்டி, இந்தக் கடனுக்காகச் செய்த மற்ற செலவினங்களெல்லாம் சேர்ந்த மொத்தத் தொகை.

3. கடனுக்கான வட்டி 9% - 13% இருக்கலாம். இது வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது.

4. வீட்டின் மதிப்பீட்டுத் தொகையிலிருந்து சுமார் 60% - 80% வரை கடன் கிடைக்கும். உதாரணமாக, மாதா மாதம் ரூ. 15,000, 15 வருட காலம் பெறுவதற்கு, 9% வட்டி விகிதத்தில், கடன் பெறும் தொகை வட்டியுடன் சேர்த்து சுமார் 50 லட்சமாக இருக்கும். இதற்கு வீட்டின் இன்றைய மதிப்பு சுமார் 70 லட்சமாக இருக்க வேண்டும்.

5. வீட்டின் மதிப்பை வங்கி ஆய்வாளர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்து, அதற்கு ஏற்றவாறு கடன் தொகையை மாற்றிக்கொள்வார்கள்.

6. பொதுவாக, வீடு கட்டுவதற்கு வாங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தைவிட இந்தக் கடனுக்கு வட்டி விகிதம் சற்றுக் கூடுதலாகவே இருக்கிறது.

7. வங்கியிடமிருந்து தேவைக்கு ஏற்ப மாதா மாதமோ, குறிப்பிட்ட கால இடைவெளியிலோ பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தவிர, மருத்துவச் செலவு உள்ளிட்ட சில காரணங்களுக்காக, அதிக தொகை அல்லது ஒரே தடவையாக பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையும் சில வங்கிகளில் இருக்கின்றன.

8. தம்பதி இருவரின் ஆயுள் காலத்துக்குப் பிறகு வங்கி அந்த வீட்டை அன்றைய தேதிக்கான விலையில் விற்று, வரும் தொகையில் வங்கிக்குச் சேரவேண்டிய தொகையை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையைத் தம்பதியின் சட்டப்படியான வாரிசுகளுக்குக் (Legal Heirs) கொடுக்கும்.

தலைகீழ் வீட்டுக் கடன்... வருமானம் இல்லாதபோது காப்பாற்றும் வீடு!

9. ஒருவேளை வீட்டை விற்று வரும் தொகை, வங்கி வழங்கிய கடன் தொகையைவிடக் குறைவாக இருந்தாலும், அவர்களின் வாரிசுகள் அந்த வங்கிக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை. வங்கி அதற்கான தொகையைக் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும். இது மிக முக்கியமான அம்சம்.

10. வாரிசு அந்த வீட்டை அவரே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அன்றைய தேதியில் வங்கிக்குத் தரவேண்டிய தொகை அனைத்தையும் கட்டிவிட்டு, வீட்டை அவர் வைத்துக்கொள்ளலாம்.

11. தம்பதி வேறு வீட்டுக்குச் செல்ல நினைத்தால், கடன் போதும் என்று நினைத்தால் அல்லது வீட்டை விற்றுவிட நினைத்தால்... வங்கிக்குத் தரவேண்டிய தொகை அனைத்தையும் செலுத்திவிட்டு அவர்கள் நினைத்தவாறு செய்யலாம்.

முதிய தம்பதிகள் ஓய்வுக்காலத்தில் போதிய வருமானம் இல்லாதபோது, சொந்த வீட்டிலேயே ஆயுள்காலம் வரை இருந்து, செலவுக்கும் தொகை பெற... தலைகீழ் வீட்டுக் கடன் நல்லதொரு வழி!