Published:Updated:

கிரிப்டோகரன்சி: இந்தியாவில் 30% வரி; மற்ற நாடுகளில் எவ்வளவு வரி தெரியுமா?

Cryptocurrency
News
Cryptocurrency ( Pixabay )

உலக நாடுகள் கிரிப்டோக்களுக்கு வெவ்வேறு விதிமுறைகளைக் கையாண்டு வருகின்றன. இந்தியா இப்போதுதான் வரி விதிப்பு நடைமுறைக்கு வந்திருக்கிறது. பிற நாடுகளில் இருப்பதுபோல சலுகைகளோ, குறைந்த வரி விதிப்போ இல்லை என்றாலும் நிச்சயமற்ற கிரிப்டோகரன்சிகளுக்கு வரி விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.

Published:Updated:

கிரிப்டோகரன்சி: இந்தியாவில் 30% வரி; மற்ற நாடுகளில் எவ்வளவு வரி தெரியுமா?

உலக நாடுகள் கிரிப்டோக்களுக்கு வெவ்வேறு விதிமுறைகளைக் கையாண்டு வருகின்றன. இந்தியா இப்போதுதான் வரி விதிப்பு நடைமுறைக்கு வந்திருக்கிறது. பிற நாடுகளில் இருப்பதுபோல சலுகைகளோ, குறைந்த வரி விதிப்போ இல்லை என்றாலும் நிச்சயமற்ற கிரிப்டோகரன்சிகளுக்கு வரி விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.

Cryptocurrency
News
Cryptocurrency ( Pixabay )

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான முதலீடாக சமீப காலங்களில் இருந்துவரும் கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் எப்போது அங்கீகாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஏனெனில், கிரிப்டோகரன்சி வர்த்தகங்களில் மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளது. அதில் செய்யப்படும் முதலீடுகளுக்கு உத்தரவாதம் என்று எதுவும் இல்லை. மேலும், முறைகேடான முறையில் சேர்த்த பணம் அதில் அதிகம் புழங்குவதாகவும் சொல்லப்பட்டது. கிரிப்டோகரன்சிகளை அனுமதித்தால் அது ஒரு நாட்டின் நாணய மதிப்பை பெரும் அபாயத்துக்குள் தள்ளிவிடும் என்றும் கூறப்பட்டது. இதனால் கிரிப்டோகரன்சிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு மிகக் கவனமாக இருந்துவந்தது.

இந்நிலையில், 2022-23 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் கிரிப்டோகரன்சிக்கு 30 சதவிகித வரி விதிக்கப்பட்டது. மேலும் கிரிப்டோ பரிவர்த்தனைகளுக்கு 1 சதவிகித டிடிஎஸ் பிடித்தமும் அறிவிக்கப்பட்டது.

FM Nirmala Sitharaman
FM Nirmala Sitharaman

இதுவரை கிரிப்டோகரன்சி குறித்து எதேனும் அறிவிப்புகளை அரசு வெளியிடாதா என்று எதிர்பார்த்த பலருக்கும் இந்த அறிவிப்பு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது.

ஏனெனில், 30 சதவிகித வரி மட்டுமல்லாமல், கிரிப்டோ சொத்துகளுக்கு எந்தவித சலுகையோ, விலக்குகளோ கிடையாது. இந்த வரி விதிப்பு நடவடிக்கை மூலம் கிரிப்டோகரன்சிக்கு மறைமுகமான ஆதரவு அரசிடமிருந்து வந்திருந்தாலும், இதன் காரணமாகவே அது சட்டபூர்வமானதாக ஆகிவிடாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், 30 சதவிகித வரி என்பது அதிகபட்ச வரிவிதிப்பு என்றும் சிலர் புலம்ப தொடங்கியிருக்கிறார்கள். மேலும், பரிவர்த்தனைகளுக்கு ஒரு சதவிகித டிடிஎஸ் என்பது வர்த்தகர்களுக்குப் பெரிய அடியாக விழுந்துள்ளது.

இதுவரையிலும் வழக்கமான வருமான வரி விதிமுறைகளே கிரிப்டோக்களுக்கும் பயன்படுத்தப்பட்டுவந்தது. கிரிப்டோக்கள் மீதான வருமானம் பிசினஸ் வருமானமாகவோ, மூலதன ஆதாயமாகவோ கருத்தப்பட்டது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 1 முதல் கிரிப்டோக்கள் மீதான வருமானம் என்பது லாட்டரி ஜெயிப்பதில் விதிக்கப்படும் 31.2 சதவிகித வரி அளவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோ வர்த்தகம் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே நடந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 4,000-க்கும் மேலான கிரிப்டோ கரன்சிகள் புழக்கத்தில் உள்ளன. எனில், அங்கெல்லாம் வரி நடைமுறை எப்படி இருக்கிறது.

கிரிப்டோக்களுக்கு வெளிநாடுகளில் எவ்வளவு வரி விதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்த்தால் இந்தியாவில் விதிக்கப்பட்ட வரி குறித்து ஒரு தெளிவுக்கு வர முடியும்.

அமெரிக்கா

அமெரிக்காவைப் பொறுத்தவரை கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கான வரி விதிமுறைகள் பங்கு வர்த்தகத்துக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படிதான் உள்ளது. அதாவது, மூலதன ஆதாய வரி நடைமுறையே உள்ளது.

உதாரணமாக 100 டாலர் கிரிப்டோவில் முதலீடு செய்து அது 110 டாலராக ஏற்றம் கண்டால், மூலதன ஆதாயம் 10 டாலர் ஆகும். ஆனால், சொத்துகளை விற்பனை செய்யும் வரை அதற்கு எந்தவித மூலதன ஆதாயமும் இல்லை என்றே கருதப்படும்.

America
America
AP

இதில் உள்ள இந்த ஓட்டையைப் பயன்படுத்தி பெரும்பணக்காரர்கள் பலரும் தங்கள் கடனை திருப்பிச் செலுத்துவதன் மூலம் வரி செலுத்துவதிலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள்.

அமெரிக்காவில் கிரிப்டோக்கள் மீதான மூலதன ஆதாய வரி 0%-ல் இருந்து 37 சதவிகிதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோக்கள் மீது கிடைக்கும் லாபமோ, நஷ்டமோ 12 மாதத்துக்குள் இருக்குமானால் அது குறுகியகால ஆதாயமாகக் கருதி அது குறிப்பிட்ட நபரின் வருமான வரி வரம்பு படி அதிகபட்ச வரி விகிதத்தில் வரி விதிக்கப்படும். நஷ்டங்கள் உண்டாகியிருந்தால் அதிகபட்சமாக 3,000 டாலர் வரை வரி நடைமுறையில் கழித்துக்கொள்ளலாம். அதற்கு மேலான நஷ்டத்தை அடுத்த நிதி ஆண்டுக்குக் கொண்டு செல்லலாம்.

மேலும் 12 மாதங்களைத் தாண்டி கிரிப்டோ சொத்துகள் கைவசம் இருந்தால் அது நீண்டகால ஆதாயமாகக் கருதி வரி விதிப்பு 0%, 15% அல்லது 20% எனும் அளவுக்கு குறைவாக விதிக்கப்படும்.

இங்கிலாந்து

அமெரிக்காவைப் போலவே இங்கிலாந்தும் கிரிப்டோகரன்சி வரி விதிமுறைகளை பங்கு வர்த்தக விதிமுறைகளின்படியே செயல்படுத்திவருகிறது. தனிநபர் ஒருவர் கிரிப்டோக்களில் முதலீடு செய்தால் அவர் நீண்ட கால ஆதாய வரி செலுத்த வேண்டும்.

மேலும் மூலதன ஆதாய வரியில் செலவினங்கள் மீதான வரிச் சலுகை 12300 டாலர் வரை வழங்கப்படுகிறது.

ENGLAND
ENGLAND

40%, 45% வரி செலுத்துவோருக்கு கிரிப்டோகளுக்கான மூலதன ஆதாய வரி 20 சதவிகிதமாகவும், 20 சதவிகித வரி செலுத்துவோருக்கு 10 சதவிகிதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் கிரிப்டோக்களை நஷ்டத்துக்கு விற்பனை செய்தால் நஷ்டத்தை ஒட்டுமொத்த மூலதன ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்ளலாம்.

கிரிப்டோக்கள் மூலம் பிசினஸ் செய்பவர்களுக்கு மூலதன ஆதாய வரியைவிட வருமான வரி முதன்மையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஜெர்மனி

ஜெர்மனியில் கிரிப்டோகரன்சியை ஒரு கரன்சியாகவோ, பங்கு போலவோ, கமாடிட்டியாகவோ பார்க்கவில்லை என்பதால் அதைத் தனிநபரின் சொந்த நாணயமாகவே கருதுகிறது.

இதனால் ஒரு வருட காலத்துக்குப் பிறகு நீங்கள் கிரிப்டோக்களை விற்றால் அதற்கு முற்றிலும் விற்பனை வரியிலிருந்து விலக்கு உண்டு. மேலும், அதை வரிக் கணக்குத் தாக்கலில் குறிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை.

ஜெர்மனி
ஜெர்மனி
Photo by Ingo Joseph from Pexels

ஆனால் 12 மாதங்களுக்கு முன்னதாக விற்றால் 600 யூரோக்கள் வரை மட்டுமே லாபத்துக்கு வரி விலக்கு. அதற்கு மேல் ஒரு யூரோ லாபம் பெற்றாலும் மொத்த லாபத்துக்கும் வரி உண்டு.

பெர்முடா

பெர்முடா வழக்கமாகவே வரி இல்லாத அல்லது மிக மிகக் குறைவான வரி இருக்கிற நாடாக உள்ளது. இங்கு கிரிப்டோக்களுக்கு மட்டுமல்ல எல்லா விதமான சொத்துகளுக்குமே ஒன்று வரியே இருக்காது அல்லது மிகக் குறைவான வரியே இருக்கும்.

டிஜிட்டல் சொத்துகள் மீது மூலதன ஆதாய வரி, வருமான வரி, பரிவர்த்தனை வரி என எந்த வரியும் இல்லை. பெர்முடாவில் கிரிப்டோக்களுக்கு வரி இல்லை என்பது மட்டுமல்ல சுவாரஸ்யம், வரி செலுத்துவோர் கிரிப்டோக்களைப் பயன்படுத்தி வரி செலுத்தலாம் என்ற நடைமுறையும் அங்கு உண்டு.

இவ்வாறு பல நாடுகளில் கிரிப்டோக்களுக்குப் பல்வேறு விதமான விதிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இப்போதுதான் வரி விதிப்பு நடைமுறைக்கு வந்திருக்கிறது. பிற நாடுகளில் இருப்பதுபோல சலுகைகளோ,குறைந்த வரி விதிப்போ இல்லை. என்றாலும் நிச்சயமற்ற தன்மை கொண்ட கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் வரி விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்க ஒன்றே என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால், பரிவர்த்தனைகளுக்கு ஒரு சதவிகித டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவது கிரிப்டோ வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

கிரிப்டோ விஷயத்தில் இப்போதுதான் முதல் அடியை இந்தியா எடுத்து வைத்திருக்கிறது. போகப் போக விதிமுறைகளில் தெளிவு பிறக்கும் என எதிர்பார்க்கலாம்.