கட்டுரைகள்
Published:Updated:

கொரோனாவும் பொருளாதாரமும் தலைகீழ்!

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா

சுதாகரன் பேரம்பலம்

எல்லோரையும் வீட்டில் இருந்தே வேலை பார்க்க வைத்திருக்கும் கொரோனா, அடுத்து, பெரும் நிதி நெருக்கடியையும் கொண்டுவரப்போகிறது. 2008-09-இல் வந்த பொருளாதார நெருக்கடியெல்லாம் கொரோனா முன்னாடி ஜுஜுபிதான்.

அந்தச் சமயம், அமெரிக்காவின் முதலீட்டு வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், மியூச்சுவல் ஃபண்ட் நிதி நிறுவனங்களும் திவாலானதால் உருவான நிதி நெருக்கடி முதலில் ஐரோப்பாவையும், பிறகு ஜப்பானையும் அதன் பிறகு சீனா, இந்தியா போன்ற நாடுகளிலும் ஒரு பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. நிறைய பேர் வேலை இழந்தாலும்கூட, உலகம் இயங்கிக்கொண்டுதான் இருந்தது.

இந்த முறை அப்படியல்ல. குறைந்தது மூன்று மாதங்களுக்கு உலகமே முடங்கி இருக்கிறது / இருக்கும். அதன்பின்னரும் உலகம் வழமைக்குத் திரும்ப ஒரு வருடமோ, அதைவிட அதிகமான காலமோ எடுக்கலாம் என்கிறார்கள்.

வெள்ளவத்தையில் (இலங்கையில் இருக்கும் ஒரு நகரம்) இருக்கிற சாராயக் கடைக்குப் பக்கத்தில் ஒரு பெட்டிக்கடை இருக்கிறது. முதலாளியோடு சேர்த்து மூன்றுபேர் வேலை செய்கிறார்கள். அங்கு வருபவர்களுக்குக் கடலை வடை, கட்லட், சுண்டல் போன்ற பைட்ஸ் (bites) செய்து விற்கிறார்கள். நல்ல வருமானமும் வருகிறது அவர்களுக்கு. கொரோனா வைரஸ், ஊரடங்கு என்று இருக்கிற தொழிலாளிகள் ஊருக்குப் போய்விட்டால், அவர்களுக்கு வியாபாரம் இல்லை. இன்னும் கொஞ்ச காலத்துக்கு பக்கத்தில் இருக்கும் சாராயக்கடைக்கு சரக்கு வருமா என்றும் சொல்ல முடியாது. வீட்டுக்கு வெளியில் வந்து யாரும் பைட்ஸ் வாங்கப்போறதும் கிடையாது. கடை பூட்டி இருக்கிறது, முதலாளித்தம்பி மற்ற பெடியமாரை ‘வீட்டில் இருந்து வேலை செய்யுங்க’ என்று அனுப்பியிருப்பார். ஒரு இரண்டு, மூன்று நாளுக்குக் கூலியும் கொடுத்து அனுப்புவார். அதற்குப்பிறகு எவ்வளவு காலத்துக்குக் கொடுக்க முடியும்? வியாபாரம் இல்லாமல், வேலை இல்லாமல் எத்தனை முதலாளிகள் சம்பளம் தருவார்கள்? அவர்களுக்கு எங்கிருந்து வரும் பணம் (Cashflow)?

கொரோனாவும் பொருளாதாரமும் தலைகீழ்!

அந்த ஊழியர்களின் நிலைதான் கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கும். இந்த மாசம் அநேகம் பேருக்கு சம்பளம் வந்திருக்கும். அடுத்த மாசம் கிடைக்குமா, கிடைக்காதா என்பது கேள்விக்குறிதான். அதற்கு அடுத்த மாதத்திலும் சில வியாபாரங்களில் காசு வருவதற்கான வழியே இல்லாதிருக்கும். ஆள் குறைப்பு (Downsizing) என்ற சொல்லை எதிர்வரும் காலங்களில் நிறையவே கேட்க நேரும். ஆட்களை வேலையிலிருந்து நீக்குவதை நாகரிகமாகச் சொல்லப் பயன்படும் சொல் அது. நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை எடுக்காது. எனவே நிறைய பேர் வேலை இழப்பர்.

வேலை இல்லாத நிறையபேர் ஒரே வேலையைக் குறிவைத்து களத்தில் குதிப்பர். ஒரு வேலையை நிறைய மனிதர்கள் துரத்தினால், அந்த வேலைக்கான சம்பளம் குறையும். அடுத்தவேளை சாப்பாடே பிரச்னை. ஆனால், 30,000 பெறுமதியான வேலையை 10,000-க்கு செய்வதற்கும் தகுதியான ஆள் கிடைக்கும். மக்களிடம் பணப் புரள்வு (rotation) கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும், ஏற்கெனவே இருக்கும் வேலையின் சம்பளம், குறைந்தது இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காது. எதிர்பார்த்த புரமோஷன் கிடைக்க நாளாகும். ஒரே வேலையில் பிடிக்காவிட்டாலும் ஒட்டிக்கொண்டு இருக்க நேரிடும். இதனால் பொருளாதாரம் வெகுவாகச் சுருங்கும் மக்களின் வாங்கும் சக்தி குறையும்; இது குறைந்தால் நிறைய வியாபாரங்களும் சோபை இழக்கும். இது ஒரு சுழற்சியாக (Spiral effect) சுருக்கிக்கொண்டு செல்லும்.

முதலீட்டின் மூலம் வருமானம் பெறுபவர்களுக்கும் கடினமே, பங்குச் சந்தை குறிகாட்டிகள் பாதாளம் வரை போகிறது. வட்டி வீதங்களும் பொருளாதார மந்த நிலையில் குறையும் என்பதே நெறிமுறை. அதுவும் ஏற்கெனவே குறைந்தாகிவிட்டது.

நிதி நெருக்கடியை எப்படி எதிர்கொள்ளலாம்?

பலருக்கும் இருக்கும் சேமிப்புகள் எவ்வளவு காலம் தாக்குக் பிடிக்கும் என்பதுதான் பிரச்னையே. சேமிப்புகளைக் கரையவிடாமல் தடுப்பது. பிசினஸில் தேவையில்லாத கொழுப்பு (fat) என்பார்கள். அதுபோல, அநியாயச் செலவுகள் என்ற கொழுப்பைத் தேடிப் பிடித்துக் குறைப்பது. முதலீட்டுச் செலவுகளைக் குறைப்பது, உற்பத்தியைக் கூட்டுவது, விரயத்தைத் தடுப்பது என்று தொழில்நிறுவனங்கள் ஏற்கெனவே தங்கள் வேலைத் திட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள். அதன் ஒருபகுதியே ஆட்குறைப்பு (Downsizing) என்பதும். இதனால் உருவாகும் நிதி நெருக்கடி எப்படி இருக்கும்? கொரோனா வைரஸுக்கு எப்படி நமக்கெல்லாம் மருந்து தெரியாதோ, அதேபோலதான் இந்த நிதி நெருக்கடி எப்படி இருக்கும் என்று கூற முடியாது என்கிறார்கள். ஆராய்ச்சிகளுக்கு அடிப்படையில் ஒரு முன்மாதிரி (reference point) தேவை. இந்த முறை வந்திருக்கும் பொருளாதார மந்தநிலைக்கு எந்த முன்மாதிரியும் இல்லை. இதை, கடந்த நூற்றாண்டில் 1930-களில் நடந்த பெரும் பொருளாதார நெருக்கடியுடன்கூட (great depression) ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

கொரோனா வைரஸும் நாம் இப்போது கடந்துகொண்டிருக்கும் அனுபவங்களும் யாருமே பார்த்திராதவை. ஒரு ஃபேக்டரி ரீசெட் மோடுக்குப் போய் உலகம் இயங்க ஆரம்பிக்க கொஞ்சம் நாளெடுக்கும். மிக மிக அதிகமாய், அதீதமாய் இயங்கிக்கொண்டிருந்த உலகத்துக்கு இந்த ரீசெட் மோடு தேவையானதும்கூட. வளர்முக நாடுகளில் கிராமங்களில் விவசாயம் செய்யும் மனிதன் கொஞ்ச நாள் படுத்திருந்து விட்டு எழும்பி இயங்குவான். மையப்படுத்தப்பட்ட இயங்குமுறையைக் கொண்டிருக்கும் மேற்கு உலகம்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படப் போகிறது. கொரோனா காலம் முடிந்து மீண்டும் உலகம் இயங்க ஆரம்பிக்கும்போது புதிய ஆதிக்க சக்தி ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதாவது, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தோற்றுப்போயிருக்கலாம்.

எந்த எந்தத் துறைகள் பாதிக்கப்படும்?

கடந்த இரண்டு வாரங்களில் நாம் என்ன வாங்கினோம்? அத்தியாவசியமான மரக்கறி, கிழங்கு, வெங்காயம், உலர் உணவுகள், மருந்துகள், பால், முட்டை என்பவை தவிர்த்து எதிலுமே காசு செலவு செய்யவில்லை. மேலே குறிப்பிட்ட பொருளைத் தவிர்த்து அத்தனை தொழில்களுக்கும் பாதிப்பு இருக்கும். பொருளாதாரம் என்பது பின்னிப் பிணைந்தது. சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் ராபர்ட் இந்த வருஷம் ஒரு லோனைப் போட்டு அப்பார்ட்மென்ட் ஒன்றை வாங்கிவிடலாம் என்று நினைத்திருந்தார். அதுக்காக வீடும் பார்த்தாகிவிட்டது. அவர் வேலை செய்யும் சாஃப்ட்வேர் கம்பெனி கனடாவில் உள்ள கம்பெனிகளுக்கு மொபைல் ஆப் டெவலப் செய்து தருகிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் கனடா கம்பெனிகள் புதிய ஆப் டெவலெப்மென்ட் அனைத்தையும் நிறுத்திவிட்டன. அதனால் ராபர்ட் வேலை செய்யும் கம்பெனியின் வருமானம் ஏற்கெனவே பாதியாகக் குறைந்துவிட்டது, ஏராளமானோரின் வேலை நிச்சயமில்லாமல் இருக்கிறது. ராபர்ட் வீட்டை இப்போது வாங்க தயங்கி நிற்கிறார். தாமதமாக வாங்கலாம் என நினைக்கிறார். அவர் போல இன்னும் நான்கு பேர் வாங்காது போனால், அது ரியல் எஸ்டேட் துறையில் தேக்கத்தைக் கொண்டுவரும். ராபர்ட்டின் முடிவால் வங்கியில் தனது கடன் இலக்கு (Credit Target) அடித்து புரமோஷன் வாங்க இருந்த சங்கருக்குப் பெரும் ஏமாற்றம். வங்கிக்கு வட்டி வருமானம் இழப்பு. ரியல் எஸ்டேட் தேங்கினால் சிமென்ட், கல், மண், பாத்ரூம் ஃபிட்டிங், டைல்ஸ், பெயின்ட், அலுமினியம் என்று எல்லாத் தொழில்களின் விற்பனையும் குறையும். அந்த வியாபாரங்களைச் சார்ந்து இருக்கிற எத்தனையோ வியாபாரங்களுக்கும் சறுக்கும். தினக்கூலி பெறுவோரும் பாதிக்கப்படுவர். ஹோட்டல்களுக்குப் போய் சாப்பிடுவது குறையும்.

இந்த நிதி நெருக்கடியை எப்படித் தடுக்கலாம்?

கொரோனாவைப் போலவே, ஒரு பொருளாதாரமும் மல்டிபிளையர் (multiplier) மாடலில்தான் இயங்குகிறது. பணத்துக்கும் வீச்சு (velocity of money) என்பது முக்கியம். அதாவது, பணம் எத்தனை தரம் மக்களின் கைகளில் புரண்டுவருகிறது என்பது முக்கியம். அந்தப் புரள்வு வேகம் குறையும்போது பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்கிறது. கொரோனாவுக்கு நாம் சமூக விலகல் (social distancing) மூலம் தொடர்புச் சங்கிலியிலிருந்து விடுபட்டு, நோய் பரவுவதைத் தடுக்க முடிந்தது. ஆனால் பொருளாதாரத்துக்கு நாம் தொடர்புச் சங்கிலியில் இருக்க வேண்டும். அந்த நெட்வொர்க்கைப் பொறுத்துதான் தொழில் வளர்ச்சி.

கொரோனாவும் பொருளாதாரமும் தலைகீழ்!

உதாரணமாக, என்னுடைய தொழில், சந்தைகளை ஆராய்வது (Market Research), இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலுமாக 35-40 பேர் எமக்காக டேட்டா சேகரிக்கிறார்கள். எமக்குப் புதிய பிசினஸ்களை எடுக்க முடியாமல் போனால் என்னிடம் வேலை பார்க்கும் அனைவரும் பாதிப்படைவார்கள். எனவே, பிசினஸ்கள் புத்திசாலித்தனமாக இயங்கவேண்டிய காலம் இது. கிரவுண்ட் ஜீரோ (Ground - Zero) போன்ற அதிரடி நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது. பிசினஸ் நிறுவனங்கள் சாதுர்யமாகச் செயற்பட வேண்டிய நேரம் இது. நானுண்டு, என் தொழில் உண்டு என்று நினைத்துக்கொண்டிருக்காமல், என்ன வேலை எல்லாம் எடுத்துச் செய்ய முடியும் என்று சிந்தித்துச் செயல்பட்டால் தப்பிக்கலாம். எல்லோரும் ஒன்றிணைந்து கொஞ்சம் அதிகமாகச் சிந்தித்து இயங்கினால் நிதி நெருக்கடியைத் தடுக்கலாம்.

கொரோனாவும் பொருளாதாரமும் தலைகீழ்!

கட்டுரையாளர் பற்றி

சுதாகரன் பேரம்பலம் ஒரு சமூக பொருளாதார ஆய்வாளர். 10 வருடங்களுக்கும் மேல் உலகின் முன்னணி ஆய்வு நிறுவனங்களின் பொருளாதார ஆய்வுகளை மேற்கொண்ட அனுபவம் வாய்ந்தவர். தற்போது கொழும்பில் Sparkwinn Research என்ற ஆய்வு நிறுவனத்தை நடத்திவருகிறார். இதற்கு முன்னர் Nielsen என்ற உலகளாவிய ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றியவர். பொருளாதாரம், உலக நடப்புகள் மக்களின், நுகர்வோரின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக தொடர்ச்சியாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் இலங்கையில் உள்ள பத்திரிகைளிலும் சமூக ஊடகங்களிலும் எழுதிவருகிறார்.