Published:Updated:

தலைமைப் பொருளாதார ஆலோசகர்களை அலட்சியப்படுத்துகிறதா மத்திய அரசு?

தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி சுப்பிரமணியன்
News
தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி சுப்பிரமணியன்

தாய்நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்தப் பதவிக்கு வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும் என்பதே அரசுத் துறை அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.

Published:Updated:

தலைமைப் பொருளாதார ஆலோசகர்களை அலட்சியப்படுத்துகிறதா மத்திய அரசு?

தாய்நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்தப் பதவிக்கு வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும் என்பதே அரசுத் துறை அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.

தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி சுப்பிரமணியன்
News
தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி சுப்பிரமணியன்

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவியிலிருக்கும் கே.வி.சுப்ரமணியனின் பதவிக்காலம் முடிகிறது. மூன்றாண்டு பதவிக்காலம் முடிந்த நிலையில், மேலும் பொறுப்பில் நீடிப்பது குறித்து கேட்கையில், தான் கல்விப்பணிக்குத் திரும்ப விரும்புவதால், பதவியிலிருந்து விலகுவதாகக் கூறியுள்ளார் சுப்ரமணியன். ஆனால், உண்மையான காரணம் அதுதானா என்பது ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம்!

கே.வி.சுப்பிரமணியத்துக்கு முன் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியம் விலகியபோதும், இப்படியொரு காரணத்தைதான் சொன்னார். அதே போன்றதொரு காரணத்தைத்தான், கே.வி.சுப்பிரமணியனும் இப்போது சொல்லியிருக்கிறார்.

அரவிந்த் சுப்ரமணியன்
அரவிந்த் சுப்ரமணியன்

அரவிந்த் சுப்ரமணியன் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தபோது சிறப்பான பொருளாதார ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்தார். ஆனால், நாட்டின் பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்து அவர் தந்த ஆலோசனை எதையும் அரசுத் தரப்பில் பரிசீலிக்கப்படவே இல்லை என அவர் பதவி விலகிய பிறகு சொன்னார். மத்திய அரசு தன்னை கண்டுகொள்ளவில்லை என்பதைப் புரிந்துகொண்டபிறகுதான் அவர் பதவி விலகும் முடிவையே எடுத்தார்.

அவருக்குப் பிறகு கே.வி.சுப்ரமணியனைத் தேர்வு செய்தது மத்திய அரசாங்கம். தற்போது இவருடைய பதவிக் காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மூன்று மாதத்துக்கு முன்பே இப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். இவரும் பதவியிலிருந்து விலகி சில மாதங்கள் ஆனபிறகுதான் அரசுடனான இவருடைய அனுபவங்களைச் சொல்ல ஆரம்பிப்பார் போல!

இந்த நிலையில், அடுத்த தலைமை பொருளாதார ஆலோசகரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்தப் பதவிக்காக 10 பேர் விண்ணப்பித்தனர்.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

அந்த விண்ணப்பங்களிலிருந்து பூனம் குப்தா, சஞ்சீவ் சன்யால் மற்றும் பமி துவா ஆகிய மூன்று பேர் இறுதி தேர்வுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் இன்னும் சில நாட்களில் தலைமை பொருளாதார ஆலோசகராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் சஞ்சீவ் சன்யாலுக்கு நிறைய வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பொருளாதார நிபுணர்கள் சொல்லும் ஆலோசனைகளை மத்திய அரசாங்கம் கேட்காமல் போனதற்கு மிகச் சிறந்த உதாரணம், பணமதிப்பு நீக்க நடவடிக்கை. இந்த நடவடிக்கை குறித்து முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்ததற்காகவே ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.

பொருளாதார நிபுணர்கள் சொல்லும் அறிவுரைகளை மத்திய அரசாங்கம் கேட்டு நடக்கிற மாதிரி தெரியவில்லை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு இந்தப் போக்கைத்தான் அதிகம் பார்க்க முடிவதாக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு உருவாகியிருக்கிறது.

இந்த நிலை தொடர்வது நல்லதல்ல என்பதே அதிகாரிகள் பலரின் கருத்தாக இருக்கிறது. பொருளாதாரம் என்பது ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டு அணுக வேண்டிய விஷயம். தலைமைப் பொருளாதாரப் பதவிக்கு வருகிறவர்கள், தங்கள் துறைகளில் பெரும் விற்பன்னர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கை நிறைய சம்பளம் கிடைப்பதுடன், உலகம் முழுக்க உள்ள கல்வி நிலையங்களில் அங்கீகாரமும் கிடைக்கிறது. அப்படிப்பட்டவர்கள் தாய்நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்தப் பதவிக்கு வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும் என்பதே அரசுத் துறை அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.

இனி அடுத்து வரும் தலைமைப் பொருளாதார ஆலோசகரையாவது மத்திய அரசாங்கம் உரிய மரியாதையுடன் நடத்தினால் மகிழ்ச்சிதான்!