தைசாதாரண மக்கள் `பெவிகால்’ என்றால் சட்டென்று புரிந்துகொள்வார்கள். ஆனால், அதைத் தயாரிக்கும் `பிடிலைட்’ நிறுவனம் பற்றி பலருக்கும் தெரியாது. 60 ஆண்டுகளுக்குமுன் மிகச் சிறிதாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்றைக்கு உலகின் பல நாடுகளில் தனது பிசினஸ் கிளையைப் பரப்பும் அளவுக்கு இந்த நிறுவனத்தின் பிராண்டுகள் அடுத்தடுத்து பெரிய அளவில் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் திருப்புமுனைக் கதையைப் பார்ப்போம்.

ஆபீஸ் பியூன் ஆரம்பித்த நிறுவனம்...
குஜராத் மாநிலம் பவ்நவரில் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர் பல்வந்த் பரேக். சட்டப்படிப்பு படித்தவர். ஆனால், பயிற்சி எடுக்கவில்லை. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் காந்தியுடன் பங்கேற்றவர் அதைத் தொடர்ந்து மும்பைக்கு வேலைக்காக வந்துவிட்டார்.
ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் பியூனாக வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், அந்த வருமானம் போதவில்லை. அதனால் வெளிநாட்டு பொருள்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து வர்த்தகம் செய்யும் வேலையைச் செய்தார். இந்த வியாபாரம் காரணமாக ஜெர்மனிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் தொழில் குறித்த ஐடியா இவருக்குக் கிடைத்தது.
இதனால் இவரின் சகோதரருடன் இணைந்து பரேக் டைசெம் இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். டெக்ஸ்டைல் துறைக்குத் தேவையான நிறமிகளைத் (pigment emulsion) தயாரித்தார். இந்த நிறுவனம் 1954-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகே பெவிகால் தயாரிப்பு தொடங்கப்பட்டது.
அந்தக் காலத்தில் பசைகள் அனைத்தும் மாமிசக் கொழுப்பில் இருந்தே தயாரிக்கப்பட்டன. நடைமுறையில் இது சிக்கலான வேலை என்பது மட்டுமன்றி, சைவ உணவு உண்பவர்கள் இதைத் தொடக்கூட யோசித்தனர். இந்த நிலையில், கெமிக்கல் மூலம் பசையை உருவாக்க முடியுமா என்று யோசித்ததன் அடிப்படையில் உருவான நிறுவனமே பெவிகால். `கால்’ என்றால் ஜெர்மன் மொழியில் இரு பொருள்களை இணைப்பது என்பது அர்த்தம்.

தச்சுவேலை செய்பவர்களுக்கு...
ஆரம்பத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் தச்சுவேலை செய்யும் கார்பென்டர்களுக்கான பிராண்டாக மட்டுமே பெவிகால் இருந்தது. நீண்ட காலம் அதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். போட்டி இல்லை என்பது சாதகமான விஷமாக இருந்தாலும், தொடர்ந்து புதிய யுக்திகளை வகுத்துக்கொண்டே இருந்தனர்.
தற்போது நிறுவனங்கள் செய்யும் பல யுக்திகளை 1960-களிலே பெவிகால் செய்தது. கார்பென்டர்களுக்குப் பயிற்சி வழங்குவதன் மூலம் அந்தப் பிரிவில் அசைக்க முடியாத பிராண்டாக மாறியது. மேலும், 1970-களிலே கார்பென்டர்களுக்காக சிறப்புப் பத்திரிகையும் வெளியிட்டது. இதன் மூலம் கார்பென்டர்கள் புது டிசைன்களைத் தெரிந்துகொள்ள முடியும். அதே சமயம், அவர்கள் வசம் பெவிகால் பிராணன்டையும் கொண்டு சேர்க்க முடியும் என திட்டமிடப்பட்டது.

வித்தியாசமான விளம்பரங்கள்...
இதைத் தொடர்ந்து நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களை நோக்கிச் செல்லும் விதமாக விளம்பரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. 1970-களில் சர்வதேச விளம்பர நிறுவனமாக ஒகில்வியுடன் இணைந்து விளம்பரங்களை வெளியிட்டது.
``ஒகில்வி நிறுவனத்துக்கும் பிடிலைட்டுக்கும் இடையேயான உறவும் பசை போல பல பத்தாண்டுகளாக ஒட்டிக் கொண்டிருக்கிறது. எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு பெவிகாலைவிட பலமானது’’ என்று குறிப்பிடும் அளவுக்கு பெவிகால் பிராண்ட் பிரபலமானது. பிரதமர் மோடி ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளும்போது, ``எங்கள் உறவு பெவிகாலைவிட பலமானது’’ என்று சில ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்டிருக்கிறார்.
ஒகில்வி நிறுவனத்தின் பியூஷ் பாண்டே கூறும்போது, ``மற்ற நிறுவனங்களைவிட பிடிலைட்டுக்கு வேலை செய்யும்போது 10 மடங்கு வேலை செய்வதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். பிடிலைட் நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒகில்வி நிறுவனத்துக்கும் மறுக்க முடியாத பங்கு இருக்கிறது.
B2B To B2C...
பல்வந்த் பரேகின் மகன் மதுகர் பரேக். அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினீயரிங் முடித்து, அபோட் நிறுவனத்தில் இரு ஆண்டுகள் வேலை செய்த பிறகு, 1972-ம் ஆண்டு குடும்ப நிறுவனத்தில் இணைந்தார். 1972-ம் ஆண்டு விற்பனை ஒரு கோடி ரூபாய் மட்டுமே பிடிலைட்டுக்கு இருந்தது. அதுவரை தொழில்துறைக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டுவந்த பெவிகால் சிறு வாடிக்கையாளர்களுக்கும் சென்றது மதுகரால் மட்டுமே. இதை யார் வாங்குவார்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அத்தனை எதிர்ப்பையும் மீறி, பி2சி நிறுவனமாக மாற்றியது மதுகரின் சாதனையே.
இதைத் தொடர்ந்து பெவிகுவிக், எம்.சீல் உள்ளிட்ட பல பிராண்டுகள் பல வகையான விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. பல வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கினார் மதுகர் பரேக். தற்போது அமெரிக்கா, தாய்லாந்து, துபை, பிரேசில் உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிடிலைட் துணை நிறுவனங்கள் உள்ளன.

புரொஃபஷனல்களால் நடத்தப்படும் நிறுவனம்...
இயக்குநர் குழுவை பலப்படுத்த வேண்டும். பல துறையை சேர்ந்தவர்களும் இயக்குநர் குழுவில் இருக்க வேண்டும் என தற்போதைய நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆனால், இதை 2007-ம் ஆண்டே மதுகர் செய்தார். அப்போது மாண்டலேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த பாரத் பூரியை (ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் முன்னாள் சி.இ.ஓ ஆதித்யா பூரியின் உறவினர்) இயக்குநர் குழு உறுப்பினராக இருக்குமாறு கேட்டார்.
ஆனால், தொழில்முனைவோரால் நடத்தப்படும் நிறுவனம் பிடிலைட். இங்கு புரொஃபஷனலுக்கு மரியாதை இருக்குமா என்னும் சந்தேகத்தில் என்னால் ஆண்டுக்கு இரு முறை மட்டுமே வர முடியும் எனத் தெரிவித்தார். மதுகரும் ஏற்றுக்கொள்ளவே, 2007-ம் ஆண்டு முதல் இயக்குநர் குழு உறுப்பினராக பாரத் பூரி இணைந்தார். மேலும், பல தனிப்பட்ட இயக்குநர்களும் இருந்தார்கள்.
இந்த நிலையில், 2015-ம் ஆண்டு முதல்முறையாகக் குடும்பத்தைச் சாராத ஒருவரை தலைமையில் நியமனம் செய்ய மதுகர் முடிவெடுத்தபோது அவர் தேர்ந்தெடுத்தது பாரத் பூரி. ஏற்கெனவே ஏழு ஆண்டுகள் இயக்குநர் குழுவில் இருந்திருப்பதால், பாரத் பூரியும் ஓகே சொல்லிவிட்டார். தற்போது புரொஃபஷனல் தலைமையில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ரூ.60 கோடி To ரூ.1.34 லட்சம் கோடி...
2020-ம் ஆண்டு வரை கடனே இல்லாத நிறுவனமாக இருந்தது. தற்போது மிகச் சிறிய கடன் மட்டுமே இருக்கிறது. பிடிலைட் நிறுவனத்தின் பொருள்கள் அனைத்தும் அடிப்படைத் தேவைகள் கிடையாது. நாட்டின் வளர்ச்சிக்கேற்ப கட்டுமானத் திட்டங்களுக்கு ஏற்பவே வளர்ச்சி அடையும். இருந்தாலும் இந்தத் துறையில் 70% சந்தையை பிடிலைட் வைத்திருக்கிறது.
1993-ம் ஆண்டு பட்டியலிடும்போது சந்தை மதிப்பு ரூ.60 கோடி மட்டுமே. 30 ஆண்டுகளில் ரூ.1.34 லட்சம் கோடி என்கிற அசாத்திய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது பிடிலைட்.
(திருப்புமுனை தொடரும்)