லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

யூடியூப்... இன்ஸ்டா... ஃபேஸ்புக்... சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

`எங்களுக்கும் டிஜிட்டல் கிரியேட்டர் ஆகி சமூக வலைதளங்கள் மூலமா சம்பாதிக்க ஆசைதான். ஆனா, என்ன பண்ணணும்னு தெரியலையே’ என்ற ஆர்வமும் தேடலுமாக இருப்பவர்கள், இன்று கிட்டத்தட்ட வீட்டுக்கு வீடு இருக்கிறார்கள்.

இணைய யுகத்தில் சமூக வலைதளங்கள் தற்போது கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் வழியாகப் புகழையும் பணத்தையும் சாமானியர்களும் சம்பாதிக்க முடிவதைப் பார்க்கிறோம். வீடியோ தயாரிப்பில் தங்கள் திறனை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்திய சோஷியல் மீடியா ஸ்டார்களை நாம் அறிவோம்.

தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி தமிழ்நாடு வந்தபோது ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ என்கிற யூடியூப் சேனல் குழுவினரை நேரே சென்று சந்தித்தார். கிட்டத்தட்ட 2 கோடி சப்ஸ்கிரைபர்களைக் கொண்டிருக்கும் அந்த சேனல் குழுவினர், `டயமண்ட் கிரியேட்டர் அவார்டு' (Diamond Creator Award) பெற்ற முதல் தமிழ் யூடியூப் சேனல் என்ற பெருமையைப் பெற்றவர்கள். `சமையல்தாங்க கன்டென்ட். பெரிய டெக்னிக்கல் அறிவெல்லாம் இல்ல. ஆனா, யூடியூப் வீடியோக்களுக்கு என்ன வேணும்ங்கிற அடிப்படை பிடிச்சுக் கிட்டோம்’ என்று சிரிக்கும் இவர்கள், ‘விக்ரம்’ படத்திலும் நடித்திருந் தனர். சமூக வலைதளப் புகழ் மற்ற தளங்களிலும் நமக்கான வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கின்றன என்பதற்கு இவர்களும், இன்னும் நூற்றுக்கணக்கான `சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்' களும் (Social Media Influencers) உதாரணமாக உள்ளனர்.

யூடியூப்... இன்ஸ்டா... ஃபேஸ்புக்... சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

`எங்களுக்கும் டிஜிட்டல் கிரியேட்டர் ஆகி சமூக வலைதளங்கள் மூலமா சம்பாதிக்க ஆசைதான். ஆனா, என்ன பண்ணணும்னு தெரியலையே’ என்ற ஆர்வமும் தேடலுமாக இருப்பவர்கள், இன்று கிட்டத்தட்ட வீட்டுக்கு வீடு இருக்கிறார்கள். நீங்களும் சமூக வலைதளங்களில் பணம், புகழ் சம்பாதிக்க... திறமையும், ஈடுபாடும் இருந்தால் போதும். இங்கே ஆண் - பெண் பேதமில்லை. ஆண்கள் சமையல் வீடியோக்கள் பதிவிடுகின்றனர், பெண்கள் சவாலான பயணம் மேற்கொண்டு வீடியோக்கள் பதிவிடுகின்றனர்.

சரி, டிஜிட்டல் கிரியேட்டர் ஆவதற்கு என்னென்ன தேவை, எந்தெந்தத் தளங்களில் எல்லாம் இயங்கலாம்? துறை சார்ந்த வல்லுநர்கள் வழிகாட்டுகிறார்கள் இந்த இணைப்பிதழில்...

ஆர்.சர்வேஷ்
ஆர்.சர்வேஷ்

வீடியோ... அடிப்படை இவைதான்!

யூடியூப், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் எந்த மாதிரியான வீடியோக்களை பதிவேற்றலாம், அவற்றை எப்படி டிரெண்டிங்கில் கொண்டு வரலாம், விளம்பரங்கள் பெறுவது எப்படி, வருமானத்தை எட்டுவது எப்படி... இவற்றுடன் இன்னும் பல வழிகாட்டல்களையும் தருகிறார், கோவையைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர் ஆர்.சர்வேஷ்.

சமையல் வீடியோ உங்கள் தேர்வு எனில்...

``யூடியூபைப் பொறுத்தவரை பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகம். இணையதள சேவை நன்கு விரிவடைந்திருக்கும் சூழலில், ஆன்லைன் வர்த்தகம் தொடங்கி, சோஷியல் மீடியா தளங்களின் மூலமாக வர்த்தகம் மற்றும் சேவை தொடர்பான செயல்பாடுகள் பன்மடங்கு உயர்ந்து நிற்கின்றன. யூடியூப் போன்ற ஊடகங்களின் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் இன்று அதிகரித்துள்ளன. உதாரணமாக, சமையல் குறிப்புகள் மற்றும் அது சார்ந்த சேனல்களைக் கருத்தில் கொள்ளலாம்.

பொதுவாக, சமையல் குறிப்புகள் சம்பந்தப்பட்ட சேனல்கள் தொடங்குவதற்கு பெரிய அளவிலான முதலீடுகள் தேவையில்லை. ஜீரோ ரூபாய் முதலீட்டில் வெறும் மொபைல் கேமராவில் பதிவு செய்து, அதை மொபைலிலேயே எடிட் செய்து தரவேற்றிய சேனல்கள்தான் யூடியூபில் மில்லியன் பார்வைகள், மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் என்று சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கின்றன.

சமையல் வீடியோக்களில் நம் முகத்தைக் காட்ட வேண்டிய தேவை குறைவு. அது மட்டுமல்லாது வெறுமனே `வாய்ஸ் ஓவர்' (Voice over) எனப்படும் ஒலிக் குறிப்புகள் சேர்க்க வேண்டிய தேவையும் இல்லை. கூற வேண்டிய செய்முறை குறிப்புகளை வீடியோவின் நடுவில் `ஸ்லைடு'களாகவோ (Slides), `டெக்ஸ்ட் லேயர்'களாகவோ (Text Layers) காண்பித்தாலே போதுமானது.

யூடியூப்... இன்ஸ்டா... ஃபேஸ்புக்... சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

யூடியூப் ஷார்ட்ஸ்... ஹிட் லிஸ்ட் என்ன?

`டிக்டாக்' செயலியின் தடைக்குப் பிறகு, அதற்கு மாற்றாகப் பல்வேறு செயலிகள் களத்தில் இறங்கினாலும் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் அதன் பயனர்களுக்கு `ஷார்ட்ஸ்' (Shorts) மற்றும் `ரீல்ஸ்' (Reels) எனும் பெயரில் டிக்டாக் செயலி கொடுத்த அதே வசதிகளை ஏற்படுத்தித் தந்து அதன் பயனர்களைத் தக்கவைக்க மெனக்கெட்டு வருகிறது. இதில் யூடியூபும் சரி, இன்ஸ்டாகிராமும் சரி... அதன் பயனர்களை வீடியோக்களைப் பார்வையிட வைப்பதற்கான முயற்சியோடு அதன் வீடியோ கிரியேட்டர்களுக்கான பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளையும் இன்று எளிதாக்கியுள்ளது.

உதாரணமாக, ஐந்து நிமிடம் நெடிய வீடியோ ஒன்றின் ஷார்ட் வெர்ஷனை வெறும் 30 விநாடிக்குள்ளாகவோ, அதன் `புரொமோ' (Promo) போன்ற ஷார்ட் வீடியோவையோ பதிவிடலாம் அல்லது யூடியூபில் 60 விநாடிகளுக்குள் குறிப்பிட்ட கன்டென்டை தயார் செய்து ஷார்ட்ஸ் வீடியோவைப் பதிவேற்றலாம். யூடியூப் இன்று இதுபோன்ற ஷார்ட்ஸ் வீடியோக்களைதான் அதிக அளவில் இலவசமாக புரொமோட் செய்து வருகிறது.

இன்ஸ்டாகிராமில் 90 விநாடிகள் வரை ரீல்ஸ் வீடியோவைப் பதிவேற்றலாம். இன்ஸ்டாகிராமும் இது போன்ற வீடியோக்களைத்தான் அதிக அளவில் அதன் பயனர்களுக்குக் காண்பித்து வருகிறது. பொதுவாக ஷார்ட்ஸ், ரீல்ஸ் வீடியோக்களைத் தயார் செய்ய இன்றைய கிரியேட்டர்கள், கட்டணம் செலுத்த வேண்டிய `பெய்ட் சாப்ட்வேர்'களைத் (Paid softwares) தேடாமல், இலவசமாகக் கிடைக்கும் மொபைல் அப்ளிகேஷன்களையே பயன்படுத்திக்கொள்கிறார்கள். உதாரணமாக, பிளே ஸ்டோரில் கிடைக்கும் `வி.என் வீடியோ எடிட்டர்' (VN Video Editor), `கேப்கட்' (Capcut), `கைன்மாஸ்டர்' (Kinemaster) போன்றவற்றின் உதவியே போதுமானதாக இருக்கிறது. இவை பயன்படுத்த எளிதானவை. மேலும், கம்ப்யூட்டரில் `பிரீமியர் புரோ' (Premiere Pro), `ஆஃப்டர் எஃபெக்ட்ஸ்' (After Effects) போன்ற அதிதிறன் மிக்க வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர்கள் எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட மிக மிகக் குறைந்த அளவு நேரத்தையே எடுத்துக்கொள்ளும்.

யூடியூப்... இன்ஸ்டா... ஃபேஸ்புக்... சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

`ஸ்பான்சர்டு கன்டென்ட்'டும் (Sponsored Content) விளம்பர வருவாயும்!

உங்களுக்கான பார்வையாளர்களைக் கட்டமைத்த பிறகு, யூடியூபின் விளம்பரம் மட்டுமன்றி பிற நிறுவனங்களின் விளம்பரங்களை உங்கள் வீடியோவிலேயே, அந்த விளம்பரத்துக்கு எனத் தனி கன்டென்ட் தயார் செய்து வீடியோவின் இடையே விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். இதற்கான விளம்பரப் படுத்தல் தொகையை உங்களை அணுகும் அந்த விளம்பர நிறுவனமே நேரடியாக அளிக்கும்.

`யூடியூப் பார்ட்னர் புரொகிராம்' (YouTube Partner Program - YPP)... எப்போது கிடைக்கும்?

உங்கள் யூடியூப் சேனலுக்கு பணம் வருவதற்கான அம்சங்களுக்கான ஒப்புதலைப் பெறுவது, யூடியூப் பார்ட்னர் புரொகிராம். இதற்கு, கடைசி 12 மாதங்களுக்குள் குறைந்தபட்சம் 4000 `வாட்ச் ஹவர்ஸ்' (Watch hours) மற்றும் 1000 சப்ஸ்கிரைபர்களை (Subscribers) பெற்றிருக்க வேண்டும். இந்த இலக்கை அடைந்தவுடன் உங்கள் அக்கவுன்டில் இருந்து, `மானிட்டைசேஷன்' (Monetization) மற்றும் விளம்பரங்களைக் காண்பிப்பதற்கான ஒப்புதல் வேண்டி விண்ணப்பிக்கலாம்‌.

யூடியூப் வீடியோ ஹிட் அடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

யூடியூபோ, மற்ற சோசியல் மீடியா அப்ளிகேஷன்ஸ்களோ... எதில் வெற்றிபெற வேண்டுமானாலும் அது அவரவரின் தனித்திறமை மற்றும் தொடர் உழைப்பைச் சார்ந்தே இருக்கும். புற்றீசல் போல ஒரு சேனல், இன்ஸ்டா பக்கத்தை உருவாக்கி ஒன்று, இரண்டு வீடியோக்களை மட்டும் பதிவேற்றம் செய்து அதில் எந்த வியூஸும் கிடைக்கவில்லை என்றவுடன் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு செல்பவர்கள்தான் இங்கு அதிகம்.

முதலில் உங்களுக்கு நல்ல திறமையுள்ள விஷயத்தைக் (கன்டென்ட்) கையில் எடுங்கள். அதே விஷயத்தைத் தொட்டுப்பேசும் சேனல்கள் எத்தனை உள்ளன, எந்தெந்த வகையில் எல்லாம் அவர்கள் தங்கள் பார்வையாளர்களைத் தொடர்ந்து தக்கவைக்கிறார்கள் என்பதைக் கண்டறியுங்கள். அவர்களது கன்டென்ட்டில் இருந்து உங்களுடைய கன்டென்ட்டை எந்த வகையில் தனித்துத் தெரிய வைப்பது என்பதை ஆராயுங்கள். அதைச் செயல்படுத்தும்போது அதற்கான முழு உழைப்பை யும் நேரத்தையும் சரியான திட்டமிடலோடு ஒதுக்கிக்கொள்ளுங்கள்.

யூடியூப்... இன்ஸ்டா... ஃபேஸ்புக்... சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

திறமையிருந்தும் பலர் ஆரம்பகட்ட முயற்சியோடு நிறுத்திக்கொள்வது பெரும்பாலும் நேரமின்மை மற்றும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால்தான். அதைச் சரிசெய்ய கொஞ்சம் டெக்னிக்கலாகவும் நாம் முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

வீடியோவின் டைட்டிலை ரத்தினச் சுருக்கமாகவும் அதே நேரம் எதிர்பார்ப்பைக் கூட்டும்படியான வார்த்தைகளை ஒருங்கிணைத்தும் வையுங்கள். உதாரணமாக, நீங்கள் பயண வீடியோக்களைப் பதிவேற்றும் `டிராவல் வ்லாக்கர்' (Travel Vlogger) என்றால், நீங்கள் சென்ற இடத்தில் நிகழ்ந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, அடுத்து என்ன நிகழ்ந்திருக்கும் எனும் கேள்வியோடு அந்த வீடியோவின் தலைப்பை வைக்கலாம்.

இது பெரும்பாலும் பார்வை யாளரின் ஆர்வத்தைத் தூண்டி அந்தக் குறிப்பிட்ட வீடியோ வைப் பார்க்க வைக்கும். இது மட்டுமன்றி வீடியோவின் முகப்புப் படம் பார்ப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகை யில் இருக்குமாறு தயார் செய்யுங்கள். உதாரணமாக, சமையல் வீடியோ என்றால் அந்த உணவை சமைத்த பின் அது எப்படி இருக்கும் (Proper presentation) என்பதை வைக்கலாம். டிராவல் மற்றும் டான்ஸ் வீடியோக்கள் என்றால், வீடியோவில் வரும் சுவாரஸ்ய மான பீக் மொமன்ட்களை சேக ரித்து கொலாஜ் செய்து வைக்க லாம். இவை எளிதாக பார்வை யாளர்களை, அந்த முகப்புப் படத்தில் காட்டப்பட்டிருக்கும் மொமன்ட்களை பார்ப்பதற் காகவே வீடியோவுக்குள் வர வழைத்துவிடும்.

யூடியூப்... இன்ஸ்டா... ஃபேஸ்புக்... சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

கன்டென்ட் மேக்கிங் குறிப்புகள்...

நீங்கள் ஷார்ட்ஸ், ரீல்ஸ் அல்லது முழு வீடியோ எதற்கான கன்டென்டைத் தயார் செய்வதாக இருந்தாலும், வீடியோவின் முதல் 10 - 30 விநாடிகளுக்குள் உங்கள் பார்வையாளரைத் தொடர்ந்து பார்க்க வைக்கத் தேவையான ஆர்வத்தைத் தூண்டி இருத்தல் வேண்டும்.

முதல் 20 விநாடிகளுக்கு மொத்த வீடியோவின் புரொமோ கன்டென்டை சேர்க்கலாம் அல்லது வீடியோவின் ஹைலைட்டான ஒரு விஷயத்தை கட் செய்து அதன் முடிவை முழுமையாகக் காட்டிவிடாமல் ஆர்வத்தைத் தூண்டி விடுவது போல் பாதியில் கத்தரித்து காண்பித்துவிட்டு அதன் பிறகு வீடியோவைத் தொடங்கலாம்.

வீடியோவை முடிக்கும்போது அடுத்த வீடியோ எதைப் பற்றியது என்ற புரொமோ (Promo) அல்லது அது குறித்த ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலான குறிப்பை சேர்ப்பதன் மூலம் உங்கள் சேனலை பார்வையாளர்கள் சப்ஸ்கிரைப் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

யூடியூப்... இன்ஸ்டா... ஃபேஸ்புக்... சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

வீடியோ வகைகள் இவை... உங்கள் தேர்வு என்ன?!

`DIY' - Do It Yourself வீடியோக்கள் பெரும்பாலும் அதிக பார்வையாளர்களை சென்றடையக்கூடியவை. ஓவியம், கைவினைப் பொருள்கள் செய்வதை வீடியோவாக மாற்றலாம். அதன் படிநிலைகளை, மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் டுடோரியல் வீடியோவாக மாற்றி பதிவேற்றலாம்.

விமர்சனம் சார்ந்த வீடியோக்கள் - ஒரு நிகழ்ச்சியையோ படத்தையோ வாய்ஸ் ஓவர் மூலம் வித்தியாசமான முறையில் உங்களுடைய வட்டார வழக்கு மொழியில் விமர்சனம் செய்தோ, விவரித்தோ வெளியிடலாம். பெரும்பாலான என்டர்டெயின்மென்ட் சேனல்கள் இதை மட்டுமே முழுநேரமாக செய்து பணம் ஈட்டுகிறார்கள். இதற்கான பார்வையாளர்களும் அதிகம்.

குழந்தைகளுக்கான பாடல்கள், அது குறித்தான கன்டென்டைத் தயார் செய்யலாம். பெரும்பாலும் இது கிட்ஸ் கேட்டகரியில் வருவதால் யூடியூபின் `ஆட்டோ ரெக்கமென்டேஷன் அல்காரிதம்' (Auto recommendation algorithm) உங்களுடைய வேலையை எளிதாக்கி, இந்த வீடியோக்களை சப்ஸ்கிரைபர்கள் பார்க்க அதுவே பரிந்துரை செய்து அதிக பார்வையாளர் களைப் பெற்றுத் தரும்.

இவை போக வரலாறு மற்றும் அறிவியல் குறித்த கட்டுரைகளை வீடியோவாக மாற்றி வெளியிடலாம். இதில் உங்களுடைய முகத்தைக் காட்ட வேண்டிய அவசியமில்லை. இலவசமாகக் கிடைக்கும் கன்டென்ட் சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் உரிமைகோரல் பிரச்னை வராத `காப்பிரைட் ஃப்ரீ' (Copyright free) வீடியோக்களை ஒருங்கிணைத்து வாய்ஸ் ஓவர் மூலம் விளக்கி வெளியிடலாம்.

டிராவல் வீடியோஸ்... இன்று பெரும்பாலும் இளம்வயது பயணர்களை வசீகரித்து இருப்பது இந்த டிராவல்/டூர் செல்லும் வீடியோக்கள்தான். உங்களால் இயலும்பட்சத்தில் தாராளமாக இந்த வகை கன்டென்ட்களின் பக்கம் திரும்பலாம். இதில் உங்களுக்கான சப்ஸ்கிரைபர்ஸ் மற்றும் பார்வையாளர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து நிறைய விளம்பரதாரர்கள் உங்களை அணுகும் வாய்ப்பு அதிகம். அது போக டூர் பிளானிங்/ டிராவல்ஸ் கம்பெனிகளின் உதவியால் உங்கள் பயணத்துக்கான செலவுகளும் குறையும். உங்கள் அனுபவங்கள் மற்றும் கைடன்ஸ் வீடியோக்களை தனித்தனியாக அப்லோட் செய்வதன் மூலம் அதிகபட்ச பார்வையாளர்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இதில் அதிகம்.

யூடியூப்... இன்ஸ்டா... ஃபேஸ்புக்... சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

தகவல் சார்ந்த `இன்ஃபோகிராபிக்' (Infographic) வீடியோக்கள், பொய் நம்பிக்கைகளை உடைக்கும் `மித் பஸ்டர்ஸ்' (Myth Busters) வீடியோக்கள்- இன்ஃபோகிராபிக் வீடியோக்களைப் பொறுத்தவரை நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய தலைப்புக்கு ஏற்றவாறு கிராபிக்கல் எலிமன்ட்ஸ் மூலமாக வீடியோவில் விவரிக்கலாம். தவறான செய்திகள் மற்றும் நம்பிக்கைகளை சில எக்ஸ்பரிமன்ட் அல்லது ஃபேக்ட் செக்கிங் முறையில் அலசுவது போலான வீடியோக்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

பொருள்கள்/படைப்புக்கான விமர்சனம் (Product & Book Review) - திரைப்பட விமர்சனங்களைத் தாண்டி, தினசரி உபயோகிக்கும் பொருள்கள் தொடங்கி கேட்ஜெட்ஸ் வரையிலான ரெவ்யூ வீடியோக்களுக்கென தனி பார்வையாளர்கள் இருக்கிறார்கள். அதிலும் புத்தக ரெவ்யூக்கள் இன்று பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளன.

மற்றவர்களை புண்படுத்தாமல் ஜாலியாக ஏமாற்றும் பிராங்க் வீடியோக்கள் (Prank Videos) மற்றும் தம்பதியாக இணைந்து செய்யும் கப்புள் வலாக்ஸ் (Couple Vlogs) - சின்ன சின்ன பிராங்க் வீடியோக்கள்தான் இன்றைய ஹிட்லிஸ்ட். ஆனால், இப்போது பிராங்க் வீடியோக்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளதால், பெரும்பாலானவர்களின் தேர்வு கப்பிள் வலாக்ஸ் தான். இவை பொழுதுபோக்கு பிரிவில் வரும்.

வளர்ப்பு விலங்குகள் வீடியோ (Pet animal videos) - செல்லப் பிராணிகள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் எடுப்பதற்கு சில முன்னேற்பாடுகளும் பயிற்சியும் ஆரம்பகாலத்தில் அவசியமாகிறது. அதற்குப் பிறகு அவற்றின் நடவடிக்கைகள், வேடிக்கை விளையாட்டுகளை சிறு சிறு வீடியோ கிளிப்ஸாக ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸில் பதிவேற்றலாம். பல நேரங்களில் வைரல் கன்டென்ட் ஆகக் கூடிய வாய்ப்பு அதிகம். இந்தப் பிரிவில், முழுநேர வீடியோக்களுக்கான ஆடியன்ஸும் அதிகம்.

யூடியூப்... இன்ஸ்டா... ஃபேஸ்புக்... சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

இவற்றைத்தாண்டி தொழில்நுட்பம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் கேமிங் சம்பந்தப்பட்ட வீடியோக்களின் பார்வையாளர்கள் வகைமையைப் (Audience Analytics) பார்த்தோமானால், அவை உலக அளவில் இருக்கும். அதிகப்படியான லாபம் பெற, அந்தத் துறை சார்ந்த அனுபவமும், வீடியோவின் தரமும் இதில் அத்தியாவசியமானது. பலரும் இதை முழுநேர வேலையாக்கிக் கொண்டுள்ளார்கள்.

வருமான வாய்ப்புகள்!

வீடியோக்களில் உங்களுக்கான சரியான பார்வையாளர்கள் அமைந்துவிட்டால், உங்களுக்கான முழுநேர தொழிலாக இதை மாற்றிக்கொள்ளலாம். ஏனென்றால், யூடியூபில் விளம்பரங்கள் மூலமாகக் கிடைக்கும் வருமானம் தாண்டி உங்களுடைய சொந்தமான தயாரிப்புகளை சரியான முறையில் மார்க்கெட் செய்து சிறந்த `கஸ்டமர் பேஸ்' (Customer base) உடன் நிறைவாக சம்பாதிக்கலாம். இதுபோக நீங்கள் உபயோகிக்கும் பொருள்களுடைய அமேசான் மற்றும் பிற தளங்களின் `ரெஃபரல் லிங்க்'குகளை உங்கள் வீடியோ டிஸ்க்ரிப்ஷனில் அளித்து அதை விளம்பரப்படுத்தியும் கணிசமான அளவு வருமானம் பெறலாம். பிற நிறுவனங்களின் விளம்பரங்கள், புராடக்ட் ரெவ்யூக்கள் எல்லாம் உங்களைத் தேடி வரும்.

யூடியூப்... இன்ஸ்டா... ஃபேஸ்புக்... சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

யூடியூப் விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட மேலே சொன்னவற்றின் மூலமான வருவாயே உங்களுக்கு நிறைவாக இருக்கும். எந்தவொரு தொழிலாக இருந்தாலும், அதை எந்தவொரு சூழலிலும் விட்டு விலகாமல் துவண்டு போகாமல் தொடர்ந்து செய்வதன் மூலமாகவே வெற்றியின் பாதைக்குள் அடி எடுத்து வைக்க முடியும். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நமக்கு நன்கு தெரிந்த இந்த யூடியூப், இன்ஸ்டா போன்றவை கொடுக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தினால் வெற்றி அடையலாம். இன்றைய டிரெண்டிங் டாபிக் எதுவோ அதைச் சுற்றி உங்களுடைய கன்டென்டை உருவாக்குங்கள். அதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய பல AI Tools (Artificial Intelligence) இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. அதைச் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களின் வேலையை அவை பெருமளவு குறைத்துவிடும்” என்று விளக்கமளித்தார் ஆர்.சர்வேஷ்

யூடியூப்... இன்ஸ்டா... ஃபேஸ்புக்... சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

செல்போன், கேமரா, எடிட்டிங்... ஒரு வீடியோ மேக்கிங் வகுப்பு!

வீடியோ வலாகிங் அல்லது யூடியூப் வீடியோக்கள் எடுக்க எந்த மாடல் செல்போன் பயன்படுத்தலாம், அதன் கேமராவின் தரம் எப்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வீடியோ மேக்கிங் ஆலோசனைகளைக் கூறுகிறார் திரைப்பட ஒளிப்பதிவாளர் சுந்தர்ராம் கிருஷ்ணன்.

``தரமான வீடியோ எடுக்க மெகாபிக்ஸல்கள் மட்டுமே போதுமானது அல்ல. எம்.பி எனக் கூறப்படும் `மெகாபிக்ஸல்கள்' (Megapixels), `ரெசல்யூஷன்' (Resolution) எனப்படும் புகைப்படத்தின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது. வீடியோக்களைப் பொறுத்த வரை கேமரா சென்சாரின் அளவுதான் முக்கியம். செல்போன்களைப் பொறுத்தவரை எல்லா போன் களிலும் ஒரே அளவு சென்சார்தான் இருக்கும்.

சுந்தர்ராம் கிருஷ்ணன்
சுந்தர்ராம் கிருஷ்ணன்

கையடக்க கேமரா என்றழைக்கப்படும் பாக்கெட் அல்லது ஹேண்டி கேமராக்கள் விலை அதிகம். அதனால், செல்போன்களே வலாகர்களுக்கு போது மானது. வீடியோ வலாகிங் அல்லது வீடியோ பதிவுகளை எடுக்க விரும்பும் அனைவராலும் கேமரா வாங்க முடியாது. மேலும், கேமராவை அனைவராலும் எளிதாகக் கையாளவும் முடியாது. இந்த இடத்தை செல்போன்கள் நிரப்புகின்றன. ஒரு பயனாளர் இதை எளிதாகப் பயன்படுத்தி வீடியோ எடுக்க முடியும், அதற்கேற்ப மெகாபிக்ஸல்கள் கொண்ட செல்போன்கள் குறைந்த விலையிலேயே சந்தையில் கிடைக்கின்றன.

`ரியல்மீ' நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள `நார்சோ' (Realme Narzo), `சாம்சங் எம்32' (Samsung M32) மாடல் போன்களில் கேமராவின் தரம் சிறப்பாக இருப்பதோடு, 14,000 ரூபாய்க்குக் குறைவான விலையிலேயே கிடைக்கின்றன. தற்போது, மிக குறைந்த விலையிலான செல்போன்கள் சிறப்பான கேமரா தரத்துடன் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன. இந்த செல்போன்களில் 4K தரத்துடன் வீடியோக்களை பதிவு செய்வதற்கான வசதிகள் உள்ளன.

யூடியூப்... இன்ஸ்டா... ஃபேஸ்புக்... சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

யூடியூப் போன்ற தளங்களில் உள்ள வீடியோக்கள் செல்போன்கள் மூலமே அதிகம் பார்க்கப்படுகின்றன. அதற்கு செல்போனில் பதிவு செய்யப்படும் வீடியோக்களே போதுமானவை. வலாக் போன்ற வீடியோக்கள் அதன் உள்ளடக் கத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதால், செல்போன் வீடியோக்களே அதற்கான தேவையைப் பூர்த்தி செய்துவிடும்.

யூடியூப் வீடியோக்களை எடுக்க வெளிச்சம் அதிகம் உள்ள இடத்தைத் தேர்வு செய்தால் லைட் தேவையில்லை. இல்லையென்றால் அதற்கேற்ற ஒளி அமைப்பு தேவை. ஒருவரோ, இரண்டு நபர்களோ வீடியோவுக்குள் இருந்தால், அவர்களின் முகத்துக்கு மட்டும் லைட்டிங் செய்தால் போதும். அதற்கு ஏற்றாற்போன்ற LED விளக்குகள் சந்தையில் கிடைக்கின்றன. சாதாரண `ரிங் லைட்' (Ring light) ஒன்றே போதும். அவற்றுக்கு இடையில் செல்போன் கேமரா இருப்பதால், நிழல் தெரியாமல் வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும், பேட்டி போன்ற வீடியோ பதிவுக்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும், பேக் லைட் மற்றும் இருவருக்குமான லைட் என்ற 3 பாயின்ட் லைட்டிங் முறையைக் கையாண்டு வீடியோ பதிவு செய்யலாம்.

யூடியூப் வீடியோக்களில் குறிப்பாக வலாக் போன்ற வீடியோக்களில் அதன் ஆடியோ தரம் முக்கியமானது. ஆடியோவின் தரம் குறைந்தால், அந்த வீடியோ வின் தரமும் குறையும். செல்போன்களுக்கான மைக் 1,000 ரூபாய் முதல் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். டிராவல் வலாக்கைப் பொறுத்தவரை பலரும் நடந்துகொண்டோ, வாகனங்களில் சென்ற படியோ பதிவு செய்கின்றனர். அந்தச் சூழலில் வீடியோக்கள் ஆடாமல் இருக்க, ஸ்டாண்ட் போன்ற `கிம்பிள்' (Kimble) வாங்கிப் பயன்படுத்தலாம்.

பைக் ரேஸ், நீச்சல் உள்ளிட்ட சாகச வீடியோக்களை எடுப்பவர்களுக்கு `கோ-புரோ' (GoPro) வீடியோ கேமராக்கள் தேவைப்பட்டால் வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். 20,000 ரூபாயில் இருந்து இந்த கேமராக்கள் கிடைக்கின்றன. யூடியூப் வீடியோக்களைப் பொறுத்தவரை, வீடியோவின் குவாலிட்டிக்கு மெனக்கெடல் தேவையில்லை. கன்டென்டே முக்கியத்துவம் பெறுவதவால் தெளிவான வீடியோ, ஆடியோ உள்ளிட்டவை சரியாக இருந்தால் போதுமானது’’ என்கிறார் சுந்தர்ராம் கிருஷ்ணன்.

 சுமையா நாஸ்
சுமையா நாஸ்

வெற்றியாளர்கள் சொல்லும் வழி!

டிஜிட்டல் கிரியேட்டராக ஆவதற்கு நம்மை எவ்விதம் தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை, தங்களின் சொந்த அனுபவத்தில் இருந்து கூறுகிறார்கள் இந்த சோஷியல் மீடியா பிரபலங்கள்…

சுமையா நாஸ், ஸ்போர்ட்ஸ் பிசியோ, ஃபிட்னஸ் மற்றும் பிசியோ வலாகர்

``பிசியோதெரபி சம்பந்தமா, ஆரம்பத்தில் எல்லோர் மாதிரியும் பொதுவான வீடியோக்கள்தான் பதிவிட்டேன். ஒரு விஷயம் என்னோட அனுபவத்தில் நான் கத்துக்கிட்டது என்னன்னா, பொதுமக்களுக்கு என்ன மொழியில் பேசினா அவங்களை போய் சேருமோ அந்த மொழியில் எளிமையா சொன்னேன்.

பொழுதுபோக்கு வீடியோக்கள் நிறைய இருக்கும்போது, இந்த மாதிரியான கற்றுக்கொடுக்கும் வகை (எஜுகேட்டிங்) வீடியோக்கள் நல்லா ரீச் ஆகணும்னா, பார்வையாளர்களை நாம கொஞ்சம் என்டர்டெயின் செய்யணும். நான் ஸ்டூடியோ, லைட்னு பெரிய செட்டப் இல்லாம, வீட்டில் என்னோட ரூம்ல ரிங் லைட் வச்சு ஷூட் பண்றேன். இதுக்காக அமேசான்ல டிரையாங்கிள் லைட் கிடைக்குது, அதை வாங்கினா போதும்... உங்க மொபைல் போன்லயே ஷூட் பண்ணலாம். உங்ககிட்ட நல்ல கம்ப்யூட்டர், எடிட்டிங் திறன் இருந்தா, DSLR கேமரா வச்சுகூட ஷூட் பண்ணலாம்.

யூடியூப்... இன்ஸ்டா... ஃபேஸ்புக்... சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

கன்டென்ட் வீடியோவைப் பொறுத்தவரை, முதல் இரண்டு வருஷம் வரை ஷார்ட்ஸ் வீடியோக்கள்தான் ஹிட் ஆகும். அதுவும் 30 விநாடிகளுக்குள் இருந்தால், நல்ல ரீச் கிடைக்கும். கன்டென்டை பொறுத்தவரை நீங்க மெனக் கெட்டு, தேடி இதுவரை யாரும் செய்யாத விஷயங்களாகவும், பார்க்கிறவங்களுக்கு பயன்படக்கூடிய வீடியோவாவும், கூகுள்ல தேடினா ஈசியா கிடைக்காத தகவல் களாகவும் இருந்தா கண்டிப்பாக ரீச் ஆகும். நம்மை நம்பி ஃபாலோ பண்றவங் களை ஏமாத்தாத வகையில் நல்ல கன்டென்டா கொடுக்கணும். நாம பதிவேற்றக் கூடிய வீடியோக்கள் பற்றி முழு விவரமும் நமக்குத் தெரிஞ்சிருக்கணும். அப்போ தான் கமென்டில் வரக்கூடிய கேள்விகளுக்கு பதில் தர முடியும்.

என்னோட துறை பிசியோதெரபி. அதுபற்றிய வீடியோக்கள் போடும்போது, என் படிப்பு மட்டும் இல்லாம நிறைய ரிசர்ச் பண்ணி, அதுக்கான அறிவை வளர்த்துக்கிட்டு, வீடியோக்கள் பண்றேன். அதே மாதிரி எந்தத் துறையாக இருந்தாலும், அதில் நம்மோட அறிவை கூடுதலாக வளர்த்துக்கிட்டு பண்ணினா நல்லா இருக்கும். உங்களோட தனித்துவம்தான் உங்களை அடையாளப்படுத்தும்.

இது எல்லாமே ஒரு கன்டென்ட் கிரியேட்டரா இருக்கிறதுக்கான டிப்ஸ். இன்ஸ்டாகிராம் மாதிரியான வலைதளத்தில் விஷயம் என்னன்னா, ஒருநாள் விடாம தினமும் வீடியோ பண்ணணும், அதுவும் நல்ல குவாலிட்டியான விஷயமா இருக்கணும். அதேமாதிரி அதை நாம வழங்கும் முறையும் (Way of presentation) முக்கியம்.’’

 பாட்டியுடன் முகமது தெளபிக்
பாட்டியுடன் முகமது தெளபிக்

முகமது தெளபிக் - என்டர்டெயினர்

``நடிப்பில் ஆர்வம் இருந்தது. அதுக்காக கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்துக் கிட்டேன். ஆரம்பத்தில் டிக்டாக் வீடியோக்கள் தனியாதான் பண்ணிகிட்டு இருந்தேன். அதுக்குப் பிறகுதான் பாட்டியுடன் சேர்ந்து வீடியோக்கள் பண்ண லாம்னு கேட்டேன், அவங்களும் அதுக்கு ஒப்புக்கிட்டாங்க. முதல்ல நாங்க பண்ண வீடியோ `வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் வந்த `ஒரு கோடிப்பே’ என்ற வசனம்தான். அது நல்லா போனதால், அடுத்தடுத்து நிறைய ஹீரோ, ஹீரோயின் சீன்ஸ் எல்லாம் எடுத்துப் பண்ணிட்டு இருந்தோம்.

டிக்டாக்ல எங்களுக்கு 1.2 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருந்தாங்க. டிக்டாக் முடக்கப்பட்டதுக்கு அப்புறம் இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ்ல வீடியோஸ் பண்ணிட்டு இருக்கோம். யூடியூப்ல 9 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க, இன்ஸ்டால 2.5 லட்சம் ஃபாலோயர்ஸ் இருக்காங்க. அதே மாதிரி ஜோஷ் ஆப்ல 3 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க.

என் பாட்டி பெயர் ராஜாமணி, 76 வயசு, டீச்சரா இருந்தவங்க. எங்க இரண்டு பேரோட காஸ்ட்யூம்ஸ் அம்மா தான் செலக்ட் பண்ணுவாங்க, பாட்டிக் கான டிரஸ் எல்லாம் அம்மாதான் தைப்பாங்க. என்னோட அண்ணன் தான் கேமரா பண்றார். நாங்க இந்த அளவுக்கு வந்ததுக்கு குடும்பம்தான் காரணம். இப்ப இதன் மூலமா எனக்கு சினிமா வாய்ப்புகளும் வந்திருக்கு, ஒரு படம் முடிச்சிருக்கேன். பாட்டியும் சினிமா, வெப் சீரிஸ் என நடிச்சுட்டு வர்றாங்க, தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்துகிட்டு இருக்கு.

யூடியூப்... இன்ஸ்டா... ஃபேஸ்புக்... சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

எங்களை மாதிரி நீங்களும் சமூக வலைதளம் மூலமா புகழ் பெற முடியுமானு கேட்டா, முடியும்னுதான் சொல்லுவேன். எந்த அளவுக்கு கடினமா உழைக் கிறோமோ, அதே அளவுக்கு ஸ்மார்ட் வொர்க் செய்யணும். நான் தனியா வீடியோ பண்ணிகிட்டு இருந்தது, ஹார்ட் வொர்க். பாட்டியோட சேர்ந்து செய்தது, ஸ்மார்ட் வொர்க். பாட்டியோட எனர்ஜி எல்லாம்தான் ஃபாலோயர்ஸ் அதிகரிக்க காரணம். என்னவா இருந்தாலும், நாம தொடர்ந்து (Consistency) தினமும் வேலை செய்தாதான், வீடியோ ரீச் ஆகும். Consistency, Smart Work எல்லாம் முக்கியம். அதே மாதிரி கமென்ட்ஸ் வரும்போது நல்லதா நிறைய வரும், நெகட்டிவ் கமென்ட்ஸும் வரும். அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து போயிடணும். அப்போதான் தொடர்ந்து வேலை செய்ய முடியும். அதை மனசுல போட்டுக்கிட்டா வேலையை பாதிக்கும். அதனால் பாசிட்டிவ்வா எதையும் எடுத்துக்கிட்டா எங்கேயும் சாதிக்கலாம்.’’

 கெளதமி முத்துக்குமார்
கெளதமி முத்துக்குமார்

கெளதமி முத்துக்குமார் - டிராவல் வலாகர்

``நான் டிராவல் வலாக் பண்ணிகிட்டு இருக்கேன். பொதுவா பார்த்தோம்னா வட இந்தியாவைவிட, தென்னிந்தியாவில் டிராவல் வலாகர்ஸ் ரொம்ப குறைவு தான். அதிலும் பெண்கள் ரொம்ப ரொம்ப குறைவு. இப்படியான சூழல்ல இன்னிக்கு பெண்கள் துணிந்து டிராவல் வலாக் பண்ண வந்தா சக்சஸ் பண்ணலாம். இதில் என்ன சவால்னா, ஒரு பொண்ணு ஊர் சுத்துறதை, குடும்பமும் உறவுகளும் அனுமதிக்காது. பார்வையாளர்கள்கூட கமென்டில் வந்து தப்பா பேசுவாங்க. அதை எல்லாம் தாண்டி வந்துதான் நாம ஜெயிச்சாகணும்.

பொதுவாக டிஜிட்டல் கிரியேட்டராக எந்த ஒரு முதலீடும் தேவையில்லை. மொபைல்போன் இருந்தா மட்டுமே போதும். கொஞ்சம், கொஞ்சமா கேமரா, மைக்னு தேவையானதை வாங்கிக்கலாம். பெண்கள்னாலே சமையல், ஃபேஷன் உள்ளிட்ட வலாக்தான் செய்யணும்னு அவசியம் இல்லை. டெக்னாலஜி குறித்த வீடியோக்கள் பண்றதில் பெண்கள் குறைவாக இருக்காங்க, அது தொடர்பான வீடியோக்கள் நிறைய பண்ணலாம். பயணத்தைப் பொறுத்தவரை வழக்கமான தாக இல்லாமல் பெண்கள் ஒரு ஊரை எப்படி பார்க்கிறாங்க, அவர்களுக்கான பாதுகாப்பு எப்படி எனப் பெண்களின் பார்வையில் அந்த ஊரைப் பற்றித் தெரிந்துகொள்ள நிறைய பேர் ஆர்வமாக இருப்பாங்க.

யூடியூப்... இன்ஸ்டா... ஃபேஸ்புக்... சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

நம்ம வீட்ல இருக்கறவங்களுக்கு டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்ல இருக்குற வாய்ப்புகள் பத்தி தெரியாது. அது அவங்களுக்குப் புரியாது, புரிய வைக்கிறதும் கஷ்டம். டிஜிட்டல் கிரியேட்டரா ஆகணும்னு முடிவு பண்ணிட்டா முதல்ல அதை நாம செய்யணும்.’’

லைக்ஸ் அள்ள, ஷேர்ஸ் பெருக வாழ்த்துகள்!

****

யூடியூப்... இன்ஸ்டா... ஃபேஸ்புக்... சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

இது முக்கியம்!

சமையல் வீடியோக்களைத் தயார் செய்து தரவேற்றுவது மிக சுலபம். அதனாலேயே இதில் போட்டிகளும் நிறைய. நிமிடத்துக்கு ஒரு சமையல் குறிப்பு சார்ந்த வீடியோ தரவேற்றம் ஆகிக்கொண்டே இருக்கிறது. அதில் ஒரு பார்வையாளர் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை அந்த வீடியோவின் `தம்ப்னைல்' (Thumbnail) எனப்படும் முகப்புப் படமே முடிவு செய்கிறது. பெரும்பாலும் ஒரு வீடியோவின் `க்ளிக் த்ரூ ரேட்' எனப்படும் CTR (Click-through rate) அந்த வீடியோவின் தம்ப்னைல் மற்றும் தலைப்பு (Title) கொண்டே முடிவு செய்யப்படுகிறது.

வீடியோவை பதிவு செய்து அதை எடிட் செய்ய எத்தனை மெனக்கெடு கிறோமோ அதே அளவு மெனக்கெடல் இந்த முகப்புப் படம் (Thumbnail) தயார் செய்வதிலும் தேவைப்படுகிறது. மற்ற வீடியோக்களில் இருந்து தனித்து தெரிவது தொடங்கி பார்வையாளரைக் கவர்ந்து அந்த வீடியோ வைத் தேர்வு செய்து பார்க்க வைப்பதற்கான வேலை அது. முகப்புப் படத்தை `போட்டோஷாப்' (Photoshop) போன்ற செயலிகள் மட்டுமன்றி மொபைலில் `பிக்ஸ்ஆர்ட்' (Picsart), `கேன்வா' (Canva) போன்ற செயலிகள் மூலம் உருவாக்கலாம். அது மிகவும் எளிமையானதும்கூட.

யூடியூப்... இன்ஸ்டா... ஃபேஸ்புக்... சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகம்!

இன்றளவில் பெரிய ஹிட்லிஸ்ட் என்று பார்த்தால் அவை குழந்தை களுக்கான பாடல்கள், செயல்முறைகள், மருத்துவக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் மற்றும் அன்றாட செய்திகளைத் தொகுத்து வழங்கும் சேனல்கள் தான் யூடியூபில் அதிகம். இவை அனைத்திலும் பெண்களுக்கான வாய்ப்புகள் நிறைந்து இருப்பதைக் காணலாம்.

`eSports' எனப்படும் கேமிங் சம்பந்தமான கேளிக்கை சார்ந்த சேனல் களின் வளர்ச்சியும் இன்று குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. இதற்கான பார்வையாளர்களும் இன்று அதிகரித்து வருகிறார்கள். பொதுவாக கேமிங்கை நேரலை (Live Streaming) செய்வதில் அதன் மூலம் கிடைக்கும் விளம்பர வருமானம் மட்டுமன்றி, பார்வையாளர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து சப்போர்ட்/டொனேட் எனும் முறை மூலம் உலகத்தின் எந்தவொரு மூலையில் இருந்தும் உங்களுக்குக் குறிப்பிட்ட தொகையை யார் வேண்டு மானாலும் அன்பளிப்பாகவோ ஊக்கப்படுத்தவோ வழங்கி உதவும் முறைகள் வந்துவிட்டன. விளம்பரம் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் மட்டுமன்றி இதுவும் ஒரு வகை வாய்ப்பு. இது எல்லா வகையான வீடியோக்களுக்கும் பொருந்தும்.

யூடியூப்... இன்ஸ்டா... ஃபேஸ்புக்... சூப்பர் வருமானத்துக்கு ஸ்மார்ட் வழிகாட்டி!

இவை முக்கியமானவை!

`கீவேர்ட்ஸ்' (Keywords), `டிரெண்டிங் ஹேஷ்டேக்ஸ்' (Trending Hashtags) களின் பயன்பாடு மிக முக்கியமானது. ஒவ்வொரு வீடியோவின் விவரிப்பிலும் (Description) அந்த வீடியோவுக்கு சம்பந்தப்பட்ட கீவேர்ட்ஸை தேடிப் பதிவு செய்யுங்கள். அது போக டிரெண்டிங் ஹேஷ்டேக்ஸ் பயன்படுத்துவதன் மூலம் அந்த வீடியோவை மக்கள் பார்க்கும் வாய்ப்பை (Visibility) அதிகப்படுத்தலாம். இதை மற்ற டிரெண்டிங் வீடியோக்களில் இருந்து எடுத்தும் பயன்படுத்திக்கொள்ள முடியும். keywordtool.io, tuberanker.com, keywordtooldominator.com போன்ற பல வெப்சைட்கள் உங்களுக்கான டிரெண்டிங் கீவேர்ட்ஸை தேடித் தருகின்றன.

சூரியனும் பச்சையும்...

செல்போன்களில் வீடியோக்களைப் பதிவு செய்யும்போது, கேமரா சூரியனை நோக்கி இருக்கக் கூடாது. சூரிய வெளிச்சம் அந்த ஒளியை கட்டுப்படுத்தி, வீடியோக்களைப் பதிவு செய்யாது. சூரிய வெளிச்சம் பக்கவாட்டில் இருப்பதுபோல் அமைத்துக்கொள்வது அவசியம். ஓர் அறைக்குள் இருந்து வீடியோ பதிவு செய்யும்போது, ஜன்னலில் கேமராவை பொருத்திவிட்டு வீடியோ பதிவு செய்யலாம். வீடியோ உள்ளடக்கத்துக்கு ஏற்ற படங்களை பின்னணியில் பயன்படுத்தலாம். வீடியோவில் கிராஃபிக்ஸ் செய்வதற்கு `கிரீன் மேட்' (Green Matte) அவசியம். அதற்கு பச்சை நிற துணியோ, சுவரில் பச்சை நிற பெயின்ட்டோ அடித்துக்கொள்ளலாம். இந்த கிரீன் மேட் முறையில் வீடியோ எடுக்க 3 பாயின்ட் லைட்டிங் முறையே போதுமானது. மேட் மீது நிழல் படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பின்னணியில் பச்சை, நீலம், கறுப்பு எந்த மேட் பயன்படுத்துகிறோமோ, அந்த வண்ணத்திலான ஆடை அணியக் கூடாது.