
பொருளாதாரம்
இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி இரண்டாம் வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு (Forex Reserve) 572 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராந்தர புள்ளிவிவரக் குறிப்பு கூறுகிறது.
ஜனவரி 13-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 10.417 பில்லியன் டாலர் அதிகரித்து, 572 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கியின் குறிப்பு தெரிவித்துள்ளது.
அதற்கு முந்தைய வாரத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 561.583 பில்லியன் டாலராக இருந்தது. ஒரே வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 10 பில்லியன் டாலருக்கு மேல் உயர்ந்து, கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

2022-ம் ஆண்டு தொடக்கத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 633 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த ஆண்டு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவைத் தடுப்பதற்காக நிறைய டாலரை இந்திய ரிசர்வ் வங்கி விற்பனை செய்தது. இதனால், அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்துகொண்டே வந்தநிலையில், கடந்த சில வாரங்களாக மீண்டும் உயர்ந்து வருவது பாசிட்டிவ்வான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
நாம் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கான தொகையை டாலரில்தான் செலுத்த வேண்டும். அதற்காக எப்போதும் குறிப்பிட்ட அளவுக்கான அந்நிய செலாவணி கையிருப்பில் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
20 ஆண்டுகளுக்கு முன்பு சில வாரங்களுக்குத் தேவையான அளவில்தான் அந்நிய செலாவணி இந்திய அரசாங்கத்திடம் கையிருப்பாக இருந்தது. பாகிஸ்தான் போன்ற நாடுகள் கடனில் தவிக்கும்போது, நாம் ஒரு வருட இறக்குமதித் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அந்நிய செலாவணியை வைத்திருப்பது பெருமையான விஷயம்தான்!