நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

பாலின இடைவெளியை ஒழித்துக்கட்டுவோம்!

தலையங்கம்
News
தலையங்கம்

தலையங்கம்

உலக அரங்கில் நாம் மீண்டும் வெட்கித் தலைகுனியும்படியான ஒரு புள்ளிவிவரம் சில நாள்களுக்குமுன் வெளியாகியிருக்கிறது. ஆண் - பெண்ணுக்கு இடையேயான பாலின இடைவெளி குறித்த பட்டியலில் உலகிலுள்ள 146 நாடு களில் நம் இந்தியா 135-வது இடத்தில் இருக்கிறது என்பதே அந்தப் புள்ளிவிவரம்.

உலகப் பொருளாதார மையம் வெளியிட்டிருக்கும் இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டைவிட நாம் ஐந்து இடங்கள் முன்னேற்றம் கண்டிருந்தாலும், இந்தப் பட்டியலில் நான்கு முக்கியமான விஷயங்களை உன்னிப்பாகக் கவனித்தால், பெண்கள் முன்னேற்றமானது நம் நாட்டில் படுபாதாளத்தில் இருப்பது தெரியும். உதாரணமாக, பொருளாதாரத்தில் பங்கேற்று வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது தொடர்பான அம்சத்தில் நம் நாடு 143-வது இடத்தில் இருக்கிறது. அதாவது, இந்த விஷயத்தில் நமக்குக் கீழே மூன்றே மூன்று நாடுகள்தான் உள்ளன. ஆரோக்கியம் மற்றும் உயிர் வாழ்தல் தொடர்பான விஷயத்தில் நம் நாடு 146-வது இடத்தில் உள்ளது. அதாவது, ஆகக் கடைசி இடத்தில் நாம் இருக்கிறோம்.

இந்தப் பட்டியலில் சற்று ஆறுதல் அளிக்கும் விஷயங்கள் இரண்டு. ஒன்று, ஆண்களுக்கு நிகராகக் கல்வி பெறும் அம்சத்தில் நாம் 107-வது இடத்தில் இருக் கிறோம். இதிலும் நாம் இன்னும் அதிக முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என்றாலும், மோசமான நிலையில் இல்லை. இரண்டாவது, பெண்களின் அரசியல் பங்கேற்பு. ஆண்களுக்கு நிகராக அரசியல் அதிகாரம் பெறுவதில் நாம் 48-வது இடத்தில் இருக்கிறோம். அரசியல் அதிகாரத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களாக இருக்க வேண்டும் என்கிற சட்டத்தைக் கொண்டுவந்து அதைக் கறாராக நடைமுறைப்படுத்தியதன் விளைவாகவே கணிசமான முன்னேற்றத்தை நாம் கண்டிருக்கிறோம். இதே மாதிரி மேற்சொன்ன இரு விஷயங்களிலும் செய் திருந்தால், நம் நாடு இந்தப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வந்திருக்குமே!

இந்தப் பட்டியலில் நம் நாடு கணிசமான முன்னேற்றம் காண வேண்டுமெனில், வேலைக்குச் சென்று சம்பாதிப்பது, சொந்தமாகத் தொழில் செய்வது போன்ற வற்றில் இன்னும் அதிகமான பெண்களை ஈடுபடுத்த வழிவகை செய்து தந்து, பொருளாதாரத்தில் பங்கேற்கச் செய்ய வேண்டும். இதற்கு ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம்பளம் தரப்பட வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும், அதில் 50% பெண்களுக்கென ஒதுக்கி, அதைக் கறாராக நடைமுறைப்படுத்த வேண்டும். பணிபுரியும் இடத்திலும், பொதுவெளியிலும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு உரிய தண்டனை உடனுக்குடன் அளிக்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

அரசுத் தரப்பில் இவையெல்லாம் செய்யப்படும் அதே நேரத்தில், ‘சமைத்துப் போட்டுவிட்டு வீட்டில் நிம்மதியாக இருந்துவிடுகிறேனே!’ என்கிற எண்ணத்தைத் தூர எறிந்துவிட்டு, எந்த வேலையாக இருந்தாலும் அதைச் செய்வதற்கு பெண்கள் முன் வர வேண்டும்! இந்த விஷயத்தில் அரசின் முயற்சி பாதி எனில், பெண்களின் முயற்சி மீதியாக இருந்தால் மட்டுமே இனிவரும் காலத்திலாவது இந்தப் பாலினப் பாகுபாட்டைக் குறைத்து, உலகின் முன்னேறிய நாடுகளுக்கு இணையாக நாமும் நடைபோட முடியும்!

- ஆசிரியர்