நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்காது?

ஹெல்த் இன்ஷூரன்ஸ்...  எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்காது?
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்காது?

எஸ்.ஸ்ரீதரன், wealthladder.co.in

ம்மில் பெரும்பாலோர், ஒருமுறை ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியின் மூலம் கிடைக்க வேண்டிய  இழப்பீடு (க்ளெய்ம்) மறுக்கப்படும் பட்சத்தில் அடுத்த ஆண்டு அந்த பாலிசியையே புதுப்பிக்க மறுத்துவிடுகிறோம். இன்ஷுரன்ஸ் பாலிசி பற்றிய சரியான புரிதல் இல்லாத நம்மில் பலரும் இப்படிச் செய்வதற்கு முக்கியமான காரணம். 

நாம் எடுத்திருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியின் மூலம் கிடைக்க வேண்டிய இழப்பீடு கிடைக்காமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.  நாம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது நமக்கு இருக்கும் ஒரு நோயை வெளியில் சொல்லக் கூச்சப்பட்டு, அதனை மறைத்திருப்பது அல்லது தவறான தகவலைத் தருவதன் மூலம் க்ளெய்ம் மறுக்கப்பட வாய்ப்புண்டு.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்...  எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்காது?

அடுத்த மிக முக்கியமான காரணம், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல் அந்த பாலிசியை எடுப்பது. அதாவது, இந்த பாலிசியில் எந்த விஷயங்களுக்கு இழப்பீடு கிடைக்கும், எந்த விஷயங்களுக்கு  இழப்பீடு கிடைக்காது என்பதை அறியாமல் இருப்பதாகும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் 200-க்கும் மேற்பட்ட விஷயங்களுக்கு க்ளெய்ம் கிடைக்காமல் போகலாம். பொதுவாக, ஹெல்த் பாலிசி எடுத்திருந்தால், மருத்துவச் செலவுகளை கேஷ்லெஸ் மூலம் அந்தந்த இன்ஷூரன்ஸ் நிறுவனங்களே செலுத்தும். ஆனாலும், குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை உங்கள் பாக்கெட்டில் இருந்தும் நீங்கள் செலுத்தவேண்டியிருக்கும். ஏனெனில், இந்த மருத்துவக் காப்பீட்டில் 200-க் கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்களுக்கு இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதிலிருந்து விதி விலக்கு அளிக்கப்படுகிறது. இதைப் பற்றி சற்று விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

பாலிசியிலிருந்து விலக்கப்பட்டவை

ஹெல்த் இன்ஷூரன்ஸ்...  எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்காது?


இந்திய காப்பீட்டுத் துறை ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI), ஒரு சில மருத்துவச் செலவுகளை பாலிசியிலிருந்து விலக்குமாறு கூறியிருப்பினும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், அவற்றின் விருப்பம்போல் ஒரு சில செலவுகளுக்குக் காப்பீடு வழங்கும் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், ஐஆர்டிஏஐ-க்குத் தந்த  பட்டியலில் புதிதாக விலக்கீடு எதுவும் செய்ய இயலாது.

சுமார் 200 வகையான மருத்துவ உப பொருள்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு, காப்பீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனப் பார்த்தோம். இவை மருத்துவ நடைமுறை, நிர்வாக செலவுகள், தனிமனிதனின் வசதி என்று ஒன்பது வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மருத்துவ நடைமுறைப்படி, ஒப்பனை சிகிச்சை, பல் சிகிச்சைக்குக் காப்பீட்டில் க்ளெய்ம் விலக்கு உள்ளது. ஆனால், இதுவே விபத்து மூலம் பாதிப்பு ஏற்பட்டால், மேற்கூறிய விலக்கு இல்லாமல், ஒப்பனை மற்றும் பல் சிகிச்சைக்கு க்ளெய்ம் வழங்கப்படும்.

எய்ட்ஸுக்கான சிகிச்சை, ஆல்கஹால் மற்றும் போதையால் எற்படும் சிகிச்சைக்கும் காப்பீட்டிலிருந்து விலக்கு உள்ளது. எடைக் குறைப்பு, மற்றும் எடைக் கட்டுப்பட்டிற்காக எடுக்கப்படும் சிகிச்சை, உளவியல் மற்றும் உளவியல் ரீதியான சீர்குலைவு சிகிச்சைக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் நோய் கண்டறிவதற்காக மேற்கொள்ளும் சோதனை மற்றும் சிகிச்சைக்கும் விலக்கு உள்ளது. குளியல் அறைப் பொருள்கள், ஒப்பனை மற்றும் தனிமனித வசதிகளுக்காகப் பயன்படுத்தப்படும் தொலைபேசிக்கான கட்டணம், சலவைக் கட்டணம், இணையதளக் கட்டணம் ஆகியவற்றையும் க்ளெய்ம் செய்ய முடியாது. 

இதேபோல், மூக்கு கண்ணாடி, மற்றும் கண்களுக்கு லென்ஸ்கள் பொருத்துதல், காது கேட்கும் சாதனம், பேன்டேஜ், கை உறைகள், துணிக்கட்டுக்கான செலவு ஆகியவற்றுக்கும் க்ளெய்ம் கிடையாது.  இவை தவிர, நம் வசதிக்காக ஏற்படுத்தப்படும் தொலைக்காட்சி, ஏர் கண்டிஷனர், பணிப்பெண்ணுக்கான செலவு களுக்கும் காப்பீடு நிறுவனங்கள் க்ளெய்ம் தராது. நிர்வாகத்துக்காகப் பயன்படுத்தப்படும் அனுமதிக் கட்டணம், நிர்வாகக் கட்டணங்களுக்கு க்ளெய்ம் கிடைக்காது.

ஆகவே, மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது, பாலிசியில் எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்காது என்பதை அறிந்துகொண்டு பாலிசி எடுப்பது நல்லது.