
முனைவர் க.நெல்லைசந்தர்
முன்பு நம்மில் பலரும் பக்கத்தில் இருக்கிற சுற்றுலாத்தலங்களுக்கு மட்டுமே சென்று வருவோம். ஆனால், இப்போது நம்மவர்களில் பலருக்கும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுவர வேண்டும் என்கிற ஆசை பிறந்திருக்கிறது. பாஸ்போர்ட், விசா எடுப்பதற்கான நடைமுறைகள் எளிதாகி விட்டன. விமானச் சேவை நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பயணக் கட்டணத்தைக் குறைத்துவருகின்றன. இதனால் பலரும் குடும்பத்தோடு வெளிநாடு சென்றுவரத் தொடங்கியிருக்கின்றனர்.
வெளிநாட்டுக்குப் பயணம் செய்யும்போது, எதிர்பாராத அசம்பாவிதம் நடந்துவிட்டால், செலவிடும் தொகை கற்பனையில்கூட நினைத்து பார்க்கமுடியாத அளவுக்கு மிக அதிகமாக உள்ளது. வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்குமுன்பே சரியாகத் திட்டமிட்டு, வெளிநாட்டுக்கான பயணக் காப்பீட்டை எடுத்தால், இது மாதிரியான எந்தச் சிக்கல் வந்தாலும் பாதிப்பில்லாமல் தப்பிக்கலாம். இதற்கான பிரீமியமாக சில ஆயிரம் ரூபாய்களைச் செலவிட வேண்டியிருந்திருக்கும்.
ஒருவர் நம் நாட்டுக்குள் சுற்றுப்பயணம் செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், அவர் ஏற்கெனவே எடுத்து வைத்திருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் இழப்பீட்டை பெறலாம். ஆனால், வெளிநாடுகளில் பயணம் செய்யும்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், நாம் எடுத்திருக்கும் எந்த இன்ரஷூன்ஸ் பாலிசி மூலமும் இழப்பீடு பெற முடியாது.
எனவே, வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிற பயணிகளின் தேவைக்கேற்ப நிறுவனங்கள் பலவகையான காப்பீடுத் திட்டங்களை அளித்து வருகின்றன. அந்தத் திட்டங்கள் பற்றி பார்ப்போம்.

கார்ப்பரேட் டிராவல் இன்ஷூரன்ஸ்
அலுவலகத் தேவைக்காக பணியாளர்கள் வெளிநாடு செல்லும்போது, எதிர்பாராதவிதமாக ஏற்படும் அபாயத்தி லிருந்து பாதுகாக்க இந்த பாலிசி உதவும்.
ஃபேமிலி டிராவல் இன்ஷூரன்ஸ்

வெளிநாடுகளுக்குக் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போது எடுக்கவேண்டிய பாலிசி இது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதில் இணையலாம். உதாரணமாக ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். கணவர் (வயது 42), மனைவி (39), முதல் குழந்தை (14), இரண்டாவது குழந்தை (7). அவர்களது பயண நாள்கள் 10. இவர்கள் குடும்ப ட்ராவல் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் எவ்வளவு பிரீமியம் என்பதை அட்டவணை 1-ல் பார்க்கவும்.
ஸ்டூடண்ட் டிராவல் இன்ஷூரன்ஸ்
நம் நாட்டிலிருந்து மருத்துவம், பொறியியல் மற்றும் ஏனைய படிப்பு களுக்காக வெளிநாடு செல்லும் மாணவர் களின் எண்ணிக்கை பல லட்சம். அந்த மாணவர்களின் படிப்பில் தடங்கல் ஏற்படும்போது, இந்த பாலிசி பாதுகாக்கிறது. எடுத்துக்காட்டாக, உயர்கல்வி கற்பதற்காக ஓர் இந்திய மாணவன், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் சேருகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் வயது 20. வெளிநாட்டில் அவன் 365 நாள்கள் தங்கிப் படிக்க இருக்கிறான். இந்த சமயத்தில் எதிர்பாராத நிகழ்வால் பெரும் பணஇழப்பு ஏற்பட்டு, கல்வி தடை படாமல் இருக்க இந்த பாலிசி உதவும்.
மல்டிபில் ட்ரிப் ட்ராவல் இன்ஷூரன்ஸ்
வெவ்வேறு காலகட்டத்தில் ஒருவர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங் களில் இது உதவியாக இருக்கிறது. இதன் காப்பீட்டுக் காலம் ஓராண்டாகும்.
சிங்கிள் ட்ரிப் ட்ராவல் இன்ஷூரன்ஸ்
ஒருவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத் திட்டத்துக்கும் தனித்தனியாக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது.

சீனியர் சிட்டின் ட்ராவல் இன்ஷூரன்ஸ்
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளி நாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது, பாலிசியை எடுப்பது அவசியம். வெளி நாட்டில் ஏதாவது நிதிச் சிக்கல்களை, பிரச்னைகளைச் சந்தித்தால், இந்த பாலிசி நல்ல நண்பனைப்போல அவருக்கு உதவிபுரியும்.
எதற்கெல்லாம் கவரேஜ் கிடைக்கும்?
1. இந்த ட்ராவல் பாலிசியின் முக்கியக் குறிக்கோள், பயணிகள் எதிர்பாராத விதமாக விபத்தைச் சந்தித்தாலோ அல்லது நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலோ, செலவாகும் மருத்துவச் செலவுகளை, இன்ஷூரன்ஸ் நிறுவனமே சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்குச் செலுத்திவிடுவதாகும். 2. வெளிநாட்டுப் பயணம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது தடங்கல் ஏற்பட்டாலோ இழப்பீடு கிடைக்கும். 3. லக்கேஜ் அல்லது விலை உயர்ந்த சாமான்கள், பாஸ்போர்ட் போன்றவை வெளிநாட்டில் காணமல் போனால் இழப்பீடு கிடைக்கும். 4. இந்தியாவில் நாம் ஒப்டைத்த லக்கேஜ், வெளிநாட்டில் விமானச் சேவை நிறுவனத்திடமிருந்து காலம்தாழ்த்தி பல மணி நேரம் கழித்து பயணியைச் சேர்ந்தால்கூட இழப்பீடு கிடைக்கும். 5. பாலிசிதாரர் இறந்துபோனாலோ, உடல் உறுப்புகளை இழந்தாலோ தகுந்த இழப்பீடு கிடைக்கும். இறந்துபோன பாலிசிதாரர் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர ஆகும் செலவையும் இன்ஷூரன்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். 6. பாலிசிதாரர் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்யும்போது இந்தியாவில் உள்ள அவரது வீட்டில் திருட்டு நடந்தால், திருடுபோன பொருள்களின் மதிப்புக்கேற்ப இழப்பீடு கிடைக்கும்.
பாலிசி எப்படி செயல்படுகிறது?
வெளிநாடு செல்ல விரும்பும் நபர், இன்ஷூரன்ஸ் கம்பெனியில் தான் இந்தியாவை விட்டு வெளியே செல்ல இருக்கும் நாடு, பயணம் புறப்படும் மற்றும் முடியும் நாள், நேரம், வயதைச் சொன்னால் இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் அதற்கான பிரீமியத் தொகையைக் குறிப்பிடும். அதனைச் செலுத்திவிட்டால், பாலிசி கிடைத்துவிடும்.
வெளிநாட்டில் ஏதாவது பிரச்னையைச் சந்திக்க நேர்ந்தால், இன்ஷூரன்ஸ் கம்பெனியின் கஸ்டமர் கேர் தொலைபேசி எண்ணுக்குத் தகவல் கொடுத்து, புகாரைப் பதிவு செய்ய வேண்டும். பாதிப்பு உண்மையாக இருக்கும்பட்சத்தில் பாலிசிதாரருக்கு க்ளெய்ம் கிடைக்கும். வெளிநாடு செல்வோர் இங்கிருந்து மசாலா பொடி, உடை, உணவு வகைகளை எடுத்துச் செல்வதைப்போல, ட்ராவல் பாலிசியை எடுத்துச் சென்றால் எதற்கும் பயப்படாமல் உலகத்தை இனிதே சுற்றிவரலாம்.
குறிப்பு: குறிப்பிட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பாலிசியின் தன்மை, கவரேஜ் (மருத்துவச் செலவு, பாஸ்போர்ட் காணாமல் போவது, லக்கேஜ் இழப்பு, தனிநபர் பொருளாதாரக் கடமைகள்), விலக்குகளுக்கேற்ப பிரீமியம் மாறுபடும். அட்டவணையில், அடிப்படை பிளானுக்கான பிரீமியம் தரப்பட்டுள்ளது.)

ஜி.எஸ்.டி.. முன்னணியில் உள்ள தமிழகம்!
ஜி.எஸ்.டி நடை முறைக்கு வந்தபிறகு வர்த் தகர்கள் அதைப் பின்பற்று வதில் பல்வேறு பிரச்னை கள் இருந்தாலும், வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை 50 சதவிகி தத்துக்கு மேல் உயர்ந் துள்ளது.
மகாராஷ்ட்ரா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநிலங்களிலிருந்து அதிக அளவிலான வர்த்தகர்கள் ஜி.எஸ்.டி-யின் கீழ் பதிவு செய்திருக்கிறார்கள். ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபிறகு முதல் ஐந்து மாதங்களில் கிடைத்த சராசரி வரி வருவாயை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், இந்த நிதியாண் டில் ரூ.10 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.