
கேள்வி - பதில்

நான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். அதற்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

சந்திரசேகர், சாயல்குடி
எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்
“மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தற்போது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. பான் கார்டு அவசியம். கே.ஒய்.சி (Know your customer) படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். www.cvlkra.com / www.karvykra.com-ல் பதிவிறக்கிக்கொள்ளலாம். இதன்பிறகு மியூச்சுவல் ஃபண்ட் விண்ணப்பப் படிவத்தை நீங்களாகவோ அல்லது முகவரின் உதவியுடனோ பூர்த்தி செய்து தரலாம். முடிந்தவரை நீங்களாகவே பூர்த்தி செய்து தருவது நல்லது. ஜனவரி, 2018 முதல், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முகவரிச் சான்று: ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, சொத்து விற்பனைப் பத்திரம் பதிவு செய்யப்பட்ட வீட்டுக்கான குத்தகைப் பத்திரம் அல்லது இன்ஷூரன்ஸ் ரசீது, வங்கிக் கணக்குப் புத்தகம் இவற்றில் ஏதேனும் ஒன்று தேவை.
அடையாளச் சான்று: பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அட்டை, மத்திய, மாநில அரசுகள், பார் கவுன்சில் மூலமாக வழங்கப்பட்ட அடையாள அட்டை, வங்கிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய டெபிட் / கிரெடிட் கார்டுகளில் இவற்றில் ஏதேனும் ஒன்று.
அடையாளச் சான்று, முகவரிச் சான்று இவற்றில் ஒவ்வொன்றின் நகலெடுத்து, உங்கள் கையொப்பமிட்டு, விண்ணப்பப் படிவத்துடன், அந்த மியூச்சுவல் ஃபண்டின் பெயருக்கு கிராஸ் செய்யப்பட்ட ஒரிஜினல் வங்கிக் காசோலை ஒன்றையும் இணைக்க வேண்டும். ஒரேயொரு முறை (Lump Sum) நீங்கள் மொத்தமாக முதலீடு செய்வதென்றால், விண்ணப்பப் படிவத்தை மட்டும் பூர்த்திசெய்து, காசோலையுடன் இணைத்துத் தரவேண்டும். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதென்றால், மேற்கூறியவற்றோடு எஸ்.ஐ.பி/ இ.சி.எஸ்/ ஒன் டைம் மேன்டேட் பாரத்தில் இரண்டு இடங்களில் கையொப்பமிட்டு முகவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.”
என் வயது 30. ஐந்தாண்டு காலத்திற்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். மாதம் ரூ.3,000 முதலீடு செய்ய, எனக்கேற்ற ஃபண்டு களைக் கூறவும்.
ஷியாம், புதுக்கோட்டை

என்.விஜயகுமார், நிதி ஆலோசகர்
“மாதம் ரூ.3,000 முதலீடு செய்வதற்கு ஐ.டி.எஃப்.சி ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் டி.எஸ்.பி.பி.ஆர் ஆப்பர்ச் சூனிட்டீஸ் ஃபண்ட் ஆகியவை ஏற்றதாக இருக்கும். உங்கள் வயது 30 என்பதால், இன்னும் சில ஆண்டுகளுக்கு உங்கள் முதலீட்டை வைத்திருக்கும் பட்சத்தில், கால அளவின் நீட்டிப்புக்கேற்ப அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம்.”
கிரிட்டிகல் இல்னெஸ் பாலிசி பெறுவதற்கான விதிமுறைகள் எவை?
செல்வகுமார், திருவண்ணாமலை

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்
“கிரிட்டிகல் இல்னெஸ் இன்ஷூரன்ஸ் பாலிசி பெறுவதற்கு, முதலில் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். அடுத்ததாக, விண்ணப்பதாரரின் உடல்நிலை குறித்த முழுமையான மருத்துவ அறிக்கைகளை மருத்துவரின் சான்றுக் கையொப்பத்துடன் பெற்று இணைக்க வேண்டும். மூன்றாவதாக, விண்ணப்பிக்கும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் தொகையானது, விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானத்தின் ஐந்து மடங்குகளின் மொத்தத் தொகையைவிட அதிகமாக இருக்கக்கூடாது. வாடகை, டிவிடெண்ட், வட்டி வருமானம் போன்றவை வருமானமாகக் கணக்கிடப்படாது. நான்காவதாக, விண்ணப்பதாரர் எடுத்துள்ள மற்ற இன்ஷூரன்ஸ் பாலிசி விவரங்கள் அனைத்தையும் உடன் இணைத்துத் தர வேண்டும். சமர்ப்பிக்கப் பட்ட அனைத்துத் தகவல்களின் அடிப்படையில் கிரிட்டிகல் இல்னெஸ் பாலிசி தரப்படும்.
புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, மாரடைப்பு போன்ற தீவிர நோய்களுக்கான சிகிச்சைகள் மற்றும் சிறுநீரகம், நுரையீரல், எலும்பு மஜ்ஜை, கணையம் போன்ற பெரிய உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் இந்த பாலிசியில் அடங்கும். ஏற்கெனவே இருந்துவந்த நோய்கள் கண்டறியப் பட்டால், அவற்றை இதில் சேர்க்க இயலாது.”
இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மியூச்சுவல் ஃபண்டுகளில் இப்போது முதலீடு செய்யலாமா?
வெங்கடேஷ், சென்னை

எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர், வெல்த்லேடர்.காம்
“இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மியூச்சுவல் ஃபண்ட் என்பது அந்தத் துறை நிறுவனப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்வதால், இது அதிக ரிஸ்க் கொண்ட ஃபண்டாகும். எந்தவொரு குறிப்பிட்ட துறையில் மட்டும் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகள், அதிக ரிஸ்க் எடுக்கும் தன்மையுள்ள முதலீட்டாளருக்கு மட்டுமே உகந்ததாகும்.
ஒரு முதலீட்டாளரின் போர்ட்ஃபோலியோவில் 10 சதவிகிதத்துக்கு மேல் துறை சார்ந்த முதலீடு இல்லாமல் பார்த்துக்கொள்வது, சரியானதாக இருக்கும். இன்றையச் சூழ்நிலையில் உள்கட்டமைப்புக்குப் பிறகு, அரசாங்கம் சற்று முன்னுரிமை கொடுப்பதால், அதிக ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில், தங்களின் போர்ட் ஃபோலியோவில் 10% மிகாமல் முதலீடு செய்யலாம்.”
இன்கம் ஃபண்ட், லிக்விட் ஃபண்ட், மன்த்லி இன்கம் பிளான், இந்த மூன்றிற்கும் என்ன வித்தியாசம்?
காதர் மொய்தீன், நாகப்பட்டினம்

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா
“இந்த மூன்று வகையான ஃபண்டுகளுமே கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுபவை. கடன் பத்திரங்களில் பல வகை உண்டு. ஒவ்வொரு பத்திரமும் ஒவ்வொரு கால அளவில் முதலீடு செய்யத்தக்கவை. குறைவான (ஒரு மாதம் முதல் ஆறு மாதம் வரை) கால அளவுக்கான பத்திரங் களில் முதலீடு செய்யும் ஃபண்டுகளில் ரிஸ்க் குறைவாகவும், அதிக (பத்து வருடங்கள் வரை) கால அளவிற்கான பத்திரங்களில் முதலீடு செய்பவை ரிஸ்க் அதிகமானதாகவும் கருதப்படு கின்றன.
அந்த வகையில் லிக்விட் ஃபண்ட் மிகவும் ரிஸ்க் குறைவானது. இன்கம் ஃபண்டுகள், அதன் தன்மையைப் பொறுத்து, ரிஸ்க் சற்றே அதிகமானவை. மன்த்லி இன்கம் பிளான் எனப்படுபவை, கடன் பத்திரங்கள் என்று மட்டுமில்லாமல், ஒரு 10-15% பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யப்படும் ஃபண்டுகள்.
ஆகையால், இந்த மூன்று வகை ஃபண்டுகளில் இதுவே சற்று ரிஸ்க் அதிகம். முதலீட்டாளர்கள், அவர்களின் முதலீட்டுக் காலத்திற்கேற்ப இவற்றிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கலாம்.”
நான், ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட், ஃப்ராங்க்ளின் ஃப்ளெக்சி கேப் மற்றும் ரிலையன்ஸ் டைவர்சிஃபைடு பவர் செக்டார் ஃபண்ட் ஆகிய மூன்றிலும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்திருக்கிறேன். இது சரியான முதலீடாக இருக்குமா, ஐந்து ஆண்டுகள் கழித்து நான் எவ்வளவு வருமானத்தை எதிர்பார்க்கலாம்?
பழனிச்செல்வம், திருவில்லிபுத்தூர்

ஏ.கே.நாராயண், முதலீட்டு ஆலோசகர்
“ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட், ஃப்ராங்க்ளின் ஃப்ளெக்சி கேப் இரண்டும் டைவர்சிஃபைடு ஃபண்ட் பிரிவில் வருகின்றன. ரிலையன்ஸ் டைவர்சிஃபைடு பவர் செக்டார் ஃபண்ட் மட்டும் செக்டோரல் ஃபண்ட் பிரிவில் வருகிறது. அதிக ரிஸ்க் எடுக்கும் துணிச்சலிருந்தால் மட்டுமே செக்டோரல் ஃபண்டில் முதலீடு செய்வது சரியாக இருக்கும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது, அந்த ஃபண்டுகள் எந்த அளவுக்குத் தொடர்ச்சியாகச் சீரான வருமானம் அளித்திருக்கிறது என்பதைக் கணக்கிடுவதன்மூலம், அந்த ஃபண்ட் குறித்த முடிவுக்கு வர இயலும்.
இதை வைத்துப் பார்க்கும்போது, முதல் இரண்டு ஃபண்டுகளும் ஐந்து ஆண்டுகால முதலீட்டுக்கு ஏற்றவையாக இருக்கும். செக்டோரல் ஃபண்டைப் பொறுத்தவரை, எந்தக் கால கட்டத்தில் முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம். எனவே, செக்டோரல் ஃபண்டிலிருந்து முதலீட்டை டைவர்சிஃபைடு மல்ட்டிகேப் ஃபண்டுக்கு மாற்றுவது நல்லது.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கான வருமானத்திற்கு உத்தரவாதம் கிடையாது. அவற்றின் முந்தைய கால வருமானத்தை வைத்துக் கணிப்பதன்மூலம், இவற்றிலிருந்து ஐந்து ஆண்டுகளில் சுமார் 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும், நீண்ட கால முதலீட்டு எண்ணத்தையும், அதற்கேற்ற பொறுமையையும் வளர்த்துக் கொண்டால் எஸ்.ஐ.பி முறையிலான முதலீட்டில் நல்ல வருமானம் கிடைக்கும். ”
தொகுப்பு: தெ.சு.கவுதமன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.