
முனைவர் க.நெல்லைசந்தர்
இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பான ஐ.ஆர்.டி.ஏ இன்ஷூரன்ஸ் வெப் அக்ரிகேட்டர் நிறுவனங்களைத் தொடங்க அனுமதி அளித்து வருகிறது.

வெப் அக்ரிகேட்டர் என்றால்..?
இந்த நிறுவனங்கள் தங்களுக்கென சொந்தமான இணையதளம் ஒன்றை உருவாக்கி, வெவ்வேறு இன்ஷூரன்ஸ் கம்பெனிகளின், இன்ஷூரன்ஸ் பாலிசிகள் சம்பந்தப்பட்ட முக்கியமான தகவல்களை அதில் வெளியிடுகின்றன. இதன்மூலம், இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்க விரும்பும் நபர் ஒருவர், பல இன்ஷூரன்ஸ் பாலிசிகளை மிக எளிதாக ஒப்பீடு செய்யமுடியும்.
வெப் அக்ரிகேட்டரின் இணையதளத்தில், இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் பாலிசித் தொகை (coverage), விலக்குகள், விதிமுறை மற்றும் நிபந்தனைகள், பிரீமியம் போன்றவை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தரப்படுகிறது. இதனால், தனக்குப் பொருத்தமானதொரு பாலிசியை அவர் எளிதில் தேர்வு செய்யமுடிவதுடன், பாலிசிதாரர்களின் நேரமும், பணமும், சக்தியும் மிச்சமாகிறது.
இழப்பீடு

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் விற்பனைக்குப் பின்பு, பாலிசிதாரருக்கு இழப்பீட்டுத் (Claim) தொகையை எவ்வளவு விரைவாகத் தருகின்றன, இழப்பீட்டுத் தொகையை எந்த அளவுக்குக் காலம் தாழ்த்தித் தருகின்றன என்ற தகவலையும் வெப் அக்ரிகேட்டரின் இணையதளத்தில் வாடிக்கையாளர் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம், அதிக எண்ணிக்கையிலான இழப்பீட்டுத் தொகையை பாலிசிதாரருக்குத் தந்துள்ளன என்பதை அறிந்துகொண்டு, சரியான இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பொருத்தமான பாலிசியை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.
வெப் அக்ரிகேட்டர் குறித்த புதிய கட்டுப்பாட்டு விதியின்படி, வாடிக்கையாளர் ஒருவர் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்க விரும்பும்பட்சத்தில், ரூ.1.5 லட்சம் வரையிலான பிரிமீயம்கொண்ட பாலிசிகளை இணையதளத்தில் வாங்கிக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விளம்பரம் இல்லை
உப்பு விற்பதற்குக்கூட விளம்பரம் தேவைப்படும் இந்தக் காலத்தில், எந்தவொரு இன்ஷூரன்ஸ் கம்பெனி குறித்த விளம்பரமும் வெப் அக்ரிகேட்டரின் இணையதளத்தில் இடம்பெறக் கூடாது என ஐ.ஆர்.டி.ஏ.ஐ முக்கியமான கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.
வாடிக்கையாளர் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தேர்வு செய்யும் அதே இணையதளத்தில், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் விளம்பரங்கள் இடம்பெற்றால், வாடிக்கையாளர்கள் அந்த விளம்பரத்தைப் பார்த்து, அதில் சொல்லப்பட்டுள்ள இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்க நேரிடும். எனவேதான், இன்ஷூரன்ஸ் தொடர்பான எவ்வித விளம்பரமும் வெப் அக்ரிகேட்டரின் இணையதளத்தில் காண்பிக்கக்கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது ஐ.ஆர்.டி.ஏ.ஐ.

தர மதிப்பீடு கூடாது
இன்ஷூரன்ஸ் கம்பெனிகளின் பாலிசி பற்றிய தகவல் மட்டுமே வெப் அக்ரிகேட்டரின் இணையதளத்தில் கொடுக்கப்பட வேண்டும். அது பாலிசிகளை ஒப்பீடு செய்ய உதவி செய்வதாக இருக்க வேண்டும் எனவும் சொல்லியிருக்கிறது.
வெப் அக்ரிகேட்டர் தங்களது பணியாளர் குழு செய்த ஆராய்ச்சியின் அடிப்படையிலோ அல்லது வேறெந்த நிபுணர் அல்லது நிதி ஆலோசகர் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையிலோ தங்கள் இணையதளத்தில் கண்டிப்பாக பாலிசிகளைத் தர மதிப்பீடு செய்து, அதை வெப் அக்ரிகேட்டரில் வெளியிடக் கூடாது.
வாடிக்கையாளர் தங்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே பாலிசி யையும், இன்ஷூரன்ஸ் கம்பெனி யையும் தேர்வு செய்ய வேண்டும் என்பது ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யின் நோக்கம். இதனால், வாடிக்கை யாளர் எவ்விதப் புறத் தூண்டுதல் இல்லாமல் தாங்களாகவே தங்களுக்கேற்ற பாலிசியைத் தேர்வுசெய்ய ஊக்குவிக்கப் படுகின்றனர். இதனால் பொருத்தமற்ற பாலிசியைத் தேர்வு செய்வது தவிர்க்கப்பட வாய்ப்புண்டு.
இன்ஷூரன்ஸ் மட்டும்
அதுமட்டுமல்ல, வெப் அக்ரிகேட்டர் தங்களது இணைய தளத்தில் லைஃப் இன்ஷூரன்ஸ், ஜெனரல் இன்ஷூரன்ஸ், ஹெல்த் இன்ஷூரன்ஸ் சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டுமே தர வேண்டும். இன்ஷூரன்ஸுக்குத் தொடர்பற்ற கிரெடிட் கார்டு, வீட்டுக் கடன், கார் கடன், தங்க கடன், சேமிப்புத் திட்டங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், மருந்து குறித்த சிறு தகவல்களைக்கூட தரக்கூடாது என்றும் கட்டளை பிறப்பித்திருக்கிறது.
நடுநிலையான தகவல்கள்
இன்ஷூரன்ஸ் பாலிசிகள் பற்றி வெப் அக்ரிகேட்டரில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மையானதாக மட்டுமே இருக்க வேண்டும். அந்தத் தகவல்கள் இன்ஷூரன்ஸ் கம்பெனியிடம் இருந்து பெறப்பட்டு, பார்ப்பதற்கும், வாசிப்ப தற்கும், புரிந்துகொள்வதற்கும் சுலபமாக இருக்கும் வகையில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். முக்கியமான தகவல்கள் ஏதும் விடுபட்டோ, பிழையுடனோ இணையதளத்தில் இருக்கக்கூடாது.
எந்தவொரு இன்ஷூரன்ஸ் கம்பெனி பற்றியும் மிகைப்படுத்தியோ, தாழ்வுபடுத்தியோ வெப் அக்ரிகேட்டரின் இணையதளத்தில் எந்தவொரு விதத்திலும்கூட செய்தி வெளியிடக்கூடாது என்பது எல்லா இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும் சொல்லப்பட்டுள்ள பொதுவான நெறிமுறை. இதன்மூலம் இணையதளத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசி குறித்த தகவல்களைத்தானே பார்த்து, அர்த்தம் புரிந்துகொண்டு, சுயமாக முடிவு செய்து மிகக் கச்சிதமான பாலிசியை ஒருவரால் வாங்க முடியும்.
நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு இருக்கும் இன்டர்நெட், ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையினால், வெப் அக்ரிகேட்டர் இணையதளம் மூலம் பாலிசி வாங்குவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக வாய்ப்பிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை!