
பரிசல் கிருஷ்ணா
புதுவழி காண்!
ஆதில் ஷெட்டியின் பூர்வீகம் மங்களூர் என்றாலும், பிறந்தது, படித்தது எல்லாமே சென்னையில்தான். படித்து முடித்து, ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை, கை நிறைய சம்பளம், வீக் எண்ட் பொழுதுபோக்குகள், கல்யாணம், குழந்தை... இப்படித்தான் இருந்தது அவரது பள்ளிக்காலக் கனவு. பத்து வருடங்களுக்கு முன் அவர் நண்பர்களுடன் ஆரம்பித்த `பேங்க் பஜார்’ வளர்ந்து, அவரது கனவின் எல்லையை வானையும் தாண்டி விரித்திருக்கிறது.
கிண்டி இன்ஜினீயரிங் கல்லூரியில் படிப்பு முடித்து நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பும் முடித்தவருக்கு, அமெரிக்காவிலேயே வேலையும் கிடைத்தது. தான் பிறந்து வளர்ந்த சென்னையில் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று சின்னதாக ஒரு பொறி மனதில் உருவானது, அந்தச் சமயத்தில்தான். ஆனால், என்ன தொழில், எப்படி ஆரம்பிப்பது போன்ற எந்தத் திட்டமிடலும் அப்போது அவரிடம் இல்லை.
2007-ம் ஆண்டில் அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த இவரின் கல்லூரி நண்பர் அர்ஜுன் ஷெட்டி இந்தியா வந்து, வீட்டுக்கடனுக்காக அலைந்திருக்கிறார். ஒரு வங்கிக்கடனுக்காக, வங்கிகள் கேட்ட பத்திரங்கள் அவரை மலைக்க வைத்திருக்கின்றன. ரேஷன் கார்டில் தொடங்கி எத்தனை பேப்பர்கள்... அந்தக் கடன் அப்ரூவ் ஆகும் தினம் வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பத்திரங்களை வங்கி கேட்டிருக்கிறது.

ஆதில், அர்ஜுன், எம்.ஓ.பி.வைஷ்ணவா மாணவியான இன்னொரு நண்பர் ரதி மூவரும் சந்திக்கிறார்கள். வங்கிக்கடனுக்குச் செல்லும் வாடிக்கையாளர்களுக்கும் வங்கியின் செயல்பாடுகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதைக் குறித்துப் பேச்சு எழுகிறது. போகிறபோக்கில், ``இதெல்லாம் பேப்பரே இல்லாம, கஸ்டமருக்கு இன்னும் நல்லாப் புரியும் வகையில் பண்ணினா நல்லா இருக்கும்ல?” என்று புலம்பியிருக்கிறார் அர்ஜுன். ``அதை நாமளே பண்ணினா என்ன?” என்று தன் மனதில் இருந்த `தொழில் தொடங்க வேண்டும்’ என்ற பொறியை அப்போது நண்பர்களுடன் பகிர்ந்தார் ஆதில்.
வங்கியின் செயல்பாடுகளுக்கான ஒரு இணையதளம். வாடிக்கையாளர்கள் வங்கிக்கு அலையவேண்டியதில்லை. மொபைலிலோ, கணினியிலோ பத்திரங்களைப் பதிவேற்றினால் கடன் கிடைக்குமா, கிடைக்குமென்றால் எவ்வளவு கிடைக்கும், திருப்பிக் கட்டும் வசதிகள் என்னென்ன என்பது உள்ளிட்ட அத்தனையும் வாடிக்கையாளருக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதான் `பேங்க் பஜாரு’க்கான ஆரம்பகட்ட உரையாடல். தவிர, பெரிய அளவில் கடன் வாங்குபவர்களுக்கு நிதி ஆலோசகர்கள் இருப்பார்கள். ஒவ்வொன்றையும் சொல்லி விளக்கி, எது சிறந்தது என எடுத்துரைப்பார்கள். பர்சனல் லோன், கார் லோன், வீட்டுக்கடன் என, நடுத்தர மக்களுக்குக் கேள்வி கேட்பதில் தயக்கமும், அப்படியே கேட்டாலும் பதில் சொல்லி விளக்குவதில் வங்கிகளுக்குச் சுணக்கமும் இருந்ததைத் தகர்க்க வேண்டும் என்று ஆதிலும் நண்பர்களும் முடிவெடுத்தனர்.
எந்தத் தொழிலையும் ஆரம்பிக்கும்போது பலநூறு சந்தேகங்கள் எழும். அவற்றைப் பத்துப் பத்தாகப் பிரித்தால், எல்லாம் ஒன்றிரண்டுக்குள் அடங்கிவிடும். ஆதிலும் நண்பர்களும் இதை முன்னெடுக்க என்னென்ன செய்ய வேண்டும் எனப் பட்டியலிட்டார்கள். கடைசியில் எல்லாமே மூன்று ஆரம்பகட்ட சவால்களில் அடங்கியவையாக இருந்தன.
* தொழில்நுட்பம்தான் இதற்கு மிக முக்கியம். மென்பொருள் உருவாக்குவது உள்பட அடிப்படையானவற்றுக்குப் பணம் தேவை. அதற்கான முதலீட்டாளர்களைப் பிடிக்க வேண்டும்.
* வங்கி அதிகாரிகளைச் சந்தித்து, அவர்களுக்கு இதுகுறித்து விளக்கி வாடிக்கையாளர்களுக்கும் வங்கிக்குமான பாலமாக பேங்க் பஜார் இருப்பதன் அவசியத்தைப் புரியவைக்க வேண்டும்.
* மக்களிடம் கொண்டு சேர்க்க மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்ய வேண்டும்.
இந்த மூன்றையும் திட்டமிட்டு முடித்தால், நிச்சயம் நம் பிசினஸ் `கிக் ஸ்டார்ட்’ ஆகிவிடும் என்று உணர்ந்தார்கள். ஆதிலின் அம்மா எழுத்தாளர் ரேகா ஷெட்டி. அப்பா ஜெய். “அமெரிக்காவுல வேலை. கைநிறைய சம்பளம். தொழில் தொடங்குகிறதெல்லாம் ஓகே. செட்டில் ஆகிட்டு, 40 வயசுல தொடங்கிக்கலாம்’’ என்பதுதான் பலரின் அறிவுரையாக இருந்தது. ஆனால், ஆதில் உறுதியாக இருந்தார். 28 வயதில் வேலையை விடுகிற ரிஸ்க் அவருக்கு த்ரில்லிங்காக இருந்தது. அப்போதுதான் இன்னும் முனைப்புடன் இதில் இறங்குவோம் என நம்பினார்.
முதலீட்டாளர்களைச் சந்தித்து இந்தத் திட்டத்தைச் சொன்னபோது ஆரம்பத்தில் யாருக்குமே நம்பிக்கை இல்லை. பத்து வருடங்களுக்கு முன், டிஜிட்டலாக இது சாத்தியமா என்ற கேள்வி, எல்லோருக்குமே இருந்தது. வங்கிகள் இதற்கு ஒத்துழைக்குமா என்பதையும் தாண்டி, வாடிக்கையாளர்கள் தொழில்நுட்பத்தை எந்த அளவுக்கு நம்பி, தங்களது சொந்த விவரங்களைப் பதிவார்கள் என்ற கேள்வியும் முதலீட்டாளர்களுக்கு இருந்தது. ஆதிலை நோக்கிக் கேள்வி எழுப்பப்படும்போதெல்லாம், அதற்கான விடை, தான் உருவாக்கவிருக்கும் மென்பொருளில் இருக்குமாறு வடிவமைக்க எண்ணினார். அப்படி, அவரை நோக்கிக் கேட்கப்பட்ட சந்தேகங்கள் எல்லாம் அவரது நிறுவனத்தை மேலும் வளர்க்கவே உதவின.
2008-ம் வருடம் 45 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஆறு பேருடன் ஆரம்பிக்கப்ப ட்டது பேங்க் பஜார்.வாடிக்கை யாளர்களுக்குக் கணினி மூலம், ஒரு வங்கியை அணுகும் தொழில்நுட்பத் தெளிவின்மை இருந்தது. விளம்பரங்களை எளிமையாக்கி இன்னும் அதிக மக்களிடம் கொண்டுசேர்த்தார் ஆதில்.
ஆரம்பத்தில் தனிநபர் கடனுக்கான சப்போர்ட் மட்டுமே பேங்க்பஜாரில் இருந்தது. மக்களின் தேவையில் முக்கிய இடத்தில், கார், பைக் இன்ஷூரன்ஸ் இருப்பதை உணர்ந்த ஆதில், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களையும் சேர்த்துக்கொண்டார். இப்போது இன்னும் அதிக வாடிக்கை யாளர்களிடம் சென்று சேர்ந்தது பேங்க் பஜார். நான்கைந்து வங்கிகள் மட்டும்தான் ஆரம்பத்தில் பேங்க் பஜாருடன் கைகோத்தன. விடாமல் எல்லா வங்கிகளையும், நிதி நிறுவனங்களையும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களையும் சென்று இந்தத் தொழில் குறித்து விளக்கினார். ஆரம்பத்தில், `நமக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் இவர் யார்?’ என்ற கண்ணோட்டத்தில் பார்த்த நிதி நிறுவனங்கள், இதன் எளிமையும் வெளிப்படைத்தன்மையும் இன்னும் அதிக வாடிக்கையாளர்களை நம்மிடம் கொண்டுவரும் என உணர்ந்தனர்.
முதல் ஐந்து வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாகத் தவழ்ந்துகொண்டிருந்த பேங்க் பஜார், 2013-ம் ஆண்டில் டிஜிட்டல் குறித்து மக்களின் விழிப்பு உணர்வு அதிகரித்த காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. எதற்கும் இணையத்தில் விடை தேடும் மக்கள், பேங்க் பஜார் குறித்துத் தெரிந்துகொண்டார்கள். அப்படி வரும் வாடிக்கையாளர்களுக்கும் சில சலுகைகளைக் கொடுக்கும்வண்ணம், பேங்க் பஜாரின் பக்கத்தை மாற்றினார் ஆதில். இலவசமாகவே வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர்களை வழங்கினார். ஒவ்வொரு வங்கியின் கடனையும் திருப்பிச் செலுத்தும் வசதியை ஒப்பிட்டுப்பார்க்க வசதி செய்தார்.

வாடிக்கையாளர்கள், தங்களது நிதி நிலைமையை வெளிப்படையாகச் சொல்லி, அவர்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப கடன் பெறவோ, முதலீடு செய்யவோ என்னென்ன வேண்டுமோ எல்லாவற்றையும் வடிவமைத்தார். ஒரு நிதி ஆலோசகர் உங்கள் முன் அமர்ந்து உங்களுக்கு உண்டான எல்லா சாதக பாதகங்களையும் சொல்வதற்கு ஒப்பானது இது.
சில வருடங்களிலேயே வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தாமாகத் தங்களை பேங்க் பஜாரில் இணைத்துக்கொள்ள முன்வந்தன. கடன், இன்ஷூரன்ஸ் என ஆரம்பித்து, வாடிக்கையாளருக்கான 14 வகையான வங்கித் தேவைகள் பேங்க் பஜாரில் இப்போது கிடைக்கின்றன. ``ஒவ்வொரு முறையும் இவற்றைப் புதுப்பித்தலும், வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து எளிமையாக்குவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்கிறார் ஆதில்.
இன்னும் பல முதலீட்டாளர்களும் கைகோக்க, வங்கிகள், நிதி நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் என 85 நிறுவனங்கள் இன்றைக்கு பேங்க் பஜாருடன் இணைந்திருக்கின்றன. சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, சிங்கப்பூர், மலேசியா என, 1,900 ஊழியர்களுடன் பல இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. 2017-2018-ம் நிதி ஆண்டில் 20 கோடி விசிட்டர்களைப் பெற்றிருக்கிறது பேங்க் பஜார்.
எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கலாம் என யோசிப்பது ஒருவகை. நமக்கான பாதையை நாமே உருவாக்குவது இன்னொரு வகை. ஆதில், அவருக்கான பாதையை அவரே உருவாக்கினார். அந்த முடிவுதான் இன்றைக்கு அவரை வெற்றிகரமாகப் பயணிக்கவைக்கிறது!
ஆதிலின் பிசினஸ் மொழிகள்

* எந்தத் தொழில் தொடங்கும்போதும், அதைச் சுற்றி உள்ள வேறு வாய்ப்புகளையும் உங்கள் தொழிலில் கொஞ்சம் கொஞ்சமாக இணைத்துக்கொள்ளுங்கள். அவைதாம் உங்கள் தொழிலை முன்னேற்றிக்கொண்டே இருக்கும்.

* உங்கள் நோக்கத்தில் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் இருந்தால், நிச்சயம் நான்கு புறங்களிலிருந்தும் உங்களை அரவணைத்துக்கொள்ளக் கைகள் நீளும்.

* எந்தத் தொழிலிலும் திட்டமிடலுக்குப் பிறகான செயலாக்கம் ஒரு நல்ல குழு இருந்தால் மட்டுமே சாத்தியம். அப்படியான குழுவை அமைப்பதும் நம் திட்டமிடலில் இருக்கவேண்டும்.