மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இனி உன் காலம் - 17 - சோர்வு தீர்வல்ல!

இனி உன் காலம் - 17 - சோர்வு  தீர்வல்ல!
பிரீமியம் ஸ்டோரி
News
இனி உன் காலம் - 17 - சோர்வு தீர்வல்ல!

டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

ல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடந்துகொண்டிருந்தது. நல்ல மார்க் எடுத்து மென்திறனில் திறமை வாய்ந்த மாணவர்களைக் கல்லூரியிலிருந்து நேரடியாக பிளேஸ்மென்ட் செய்துவிட்டனர். ரிசல்ட்டை எதிர்நோக்கியிருந்த மற்ற மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்படி பயிற்சி கொடுக்க வந்த பயிற்சியாளர் வகுப்பறைக்குள் நுழையும்போது மாணவர் களுடைய முகம் சோர்வாக இருந்தது. அதைப் பார்த்த பயிற்சியாளர் அந்த மாணவர்களிடம், “நீங்க ஏன் இப்படி இருக்கீங்கன்னு நான் கேட்க மாட்டேன், ஆனா என்னோட வகுப்பை  ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்றேன், கேட்டுக்கங்க’’ என்றபடி அவர் கதை சொல்லத் தொடங்கினார். 

இனி உன் காலம் - 17 - சோர்வு  தீர்வல்ல!

கதை: 1

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவர் இருந்தார். அவரிடம் கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் விவசாயம் செய்து பிழைத்துவந்தார். நாள்கள் செல்லச் செல்ல அவர் நிலத்திலுள்ள ஊற்றில் நீர் வற்றியது. அவரின் வயலை ஒட்டி பாறை முகடு ஒன்று இருந்தது. அந்தப் பாறையை உடைத்துவிட்டால் அவருடைய வயலுக்குத் தாராளமாகத் தண்ணீர் வரத் தொடங்கிவிடும்.

தண்ணீரை வரவிடாமல் தடுத்துக்கொண்டிருந்த அந்தப் பாறையை அவரே உடைக்கத் தொடங்கினார். தினம் காலை முதல் மாலை வரை பாறையை உடைப்பார். பின்பு வீட்டிற்கு வந்துவிடுவார். பத்து நாள்களுக்குத் தொடர்ந்து  உடைத்தும், பாறை உடைவதற்கான அறிகுறியே தெரியவில்லை. வருத்தமும், சோர்வும் அவர் மனதில் ஏற்பட்டது.

இனி உன் காலம் - 17 - சோர்வு  தீர்வல்ல!மறுநாள் காலை, அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு, அவரைச் சந்தித்தார். அவரிடம் சென்று தன் நிலையை எடுத்துச்சொன்னார். மறுநாள் அந்தப் பாறை இருக்கும் இடத்துக்கு வந்தார் சாமியார். அந்தப் பாறையின் அருகில் உட்கார்ந்துகொண்டு, கண்களை மூடி எதேதோ மந்திரங்கள் சொல்லிப் பாறையை உடைத்தார். அந்தப் பாறை உடைந்து, வயலுக்குள் தண்ணீர் பாயத் தொடங்கியது.

ஊரிலிருந்த அனைவரும் அந்தச் சாமியாரைப் பாராட்டினார் கள். அந்தச் சாமியார் அனைவரையும் அமைதியாக இருக்கும்படிச் சொல்லிவிட்டு, ‘‘இந்தப் பாறை என் ஒரு அடியினாலோ அல்லது என் மந்திரத்தினாலோ உடையவில்லை. பாறை உடைய விவசாயியின் பத்துநாள் உழைப்புதான் மூலக் காரணம். நான் வந்து உடைத்ததற்குப் பதிலாக இந்த  விவசாயி உடைத்திருந்தாலும், அந்தப் பாறை உடையத்தான் செய்திருக்கும். ஆனால், அந்த விவசாயி தன்னை நம்பாமல் அடுத்தவரை நம்பினார்’’ என்றார்.

இந்தக் கதையிலிருந்து நமக்குத் தெரியவரும் பாடங்கள்...

1. பல சமயங்களில் நாமும் நம்மை முழுமையாக நம்புவதில்லை. 

2. தோல்வி என்பது சோர்ந்துபோவதற்கல்ல. அடுத்து நாம் செய்யக்கூடிய விஷயங்களில் எதை நாம் செய்யக்கூடாது என்பதைக் கற்றுக்கொள்வதற்கான களம்.

3. ஒரு நாளில் உடையாதது, பத்து நாளில் உடையும்  என்பதை நாம் நம்பாததே நம்முடைய சோர்விற்குக் காரணம்.

கதை : 2


மரத்தடியில் ஒருத்தன் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான். அவனுக்கு ஓர் அதிசயமான கனவு வந்தது. அவன் படுத்திருந்த மரம் அவன் கனவில் வந்து, ‘‘இனி நீ என்னவெல்லாம் நினைக்கிறாயோ, அது அப்படியே நடக்கும்’ என்று சொன்னது. அவன் திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தான். அவனுக்கு ஒண்ணும் புரியல. சரி, இதை செக் பண்ணிப் பார்ப்போம் என்று முதலில், ‘சாப்பாடு வேண்டும்’ என்று நினைத்தான். அவனுக்குச் சாப்பாடு கிடைத்தது. போட்டுக்கொள்ள நல்ல உடைகள் வேண்டும் என்று நினைத்தான். அதுவும் அப்படியே கிடைத்தது.  இப்படியே வீடு, கார், சொத்து என எல்லாவற்றையும் நினைத்தவுடன், அதெல்லாம் கிடைத்தது.  அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

ஒருநாள் அவன், ‘ஆகா, நம்மக் கிட்ட இவ்வளவு பணம், கார் இருக்கே, இதையெல்லாம்   திருடர்கள் திருடிட்டா என்ன பண்றது?’ என்று நினைத்தார்.  அடுத்த நிமிஷம் திருடர்கள் வந்து எல்லாவற்றையும் திருடிக்கொண்டு போனார்கள்.  

இந்தக் கதையிலிருந்து நமக்குத் தெரியவரும் பாடம்...

நம் வாழ்க்கையில்  நாம் நினைக்கக்கூடிய எண்ணங்கள் மட்டுமே செயல் வடிவம் பெறுகிறது.

இனி உன் காலம் - 17 - சோர்வு  தீர்வல்ல!

கதை : 3

இரண்டு ஊருக்கு நடுவில் ஒரு பாலம் இருந்தது. அந்தப் பாலத்தை இரண்டு துறவிகள் கடந்து போனார்கள். அந்தப் பாலத்துக்கு நடுவில் கால் ஊனமான ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். தூரத்திலிருந்தே இதைப் பார்த்த  இரண்டு துறவிகளில் ஒருவர்,  “பாவம், அந்தப் பெண். நடக்க முடியாமல் வெயிலில் உட்கார்ந்திருக்கிறாளே’’ என்றார்.

அதற்கு மற்றொரு துறவியோ, “நம்மோட துறவு விதிப்படி நாம் எந்தப் பெண்ணுடனும்  பேசவோ, தொடவோ கூடாது’’ என்றார். உடனே முதல் துறவி, “அதுக்காக அந்தப் பெண்ணை அப்படியே விட்டுட்டுப் போக முடியுமா, அது அதைவிடப் பெரிய பாவம் இல்லையா...” என்றார். “நான் சொல்லிட்டேன், குருவுக்குத் தெரிஞ்சா நம்மளை துறவுலேருந்து நீக்கிடுவார்” என்றார்.

முதல் துறவி அதைக் காதில் வாங்கிக்காமல், அந்தப் பெண்ணிடம் போய், “ஏம்மா, இப்படிப் பாலத்துக்கு நடுவுல உட்கார்ந்திருக்க..?” என்றார். அந்தப் பெண், “நான் ஊன்றுகோல் எடுத்துட்டு வந்தேன். இந்த இடத்துல கொஞ்சம் தடுக்கி விழுந்ததால, அந்தக் குச்சி தண்ணியில விழுந்துடுச்சு. நீங்க போங்க சாமி, வேற யாராவது வந்தா, நான் உதவி கேட்டுக்கிறேன்” என்றாள். அதற்கு அந்தத் துறவி, “இல்லமா, நீ என் முதுகில் ஏறிக்கொள். உன்னை அந்தப் பக்கம் கொண்டுபோய் விடறேன்” என்று சொல்லி, அந்தப் பெண்ணைத் தன் தோளில் தூக்கிக்கொண்டு போய், கரையின் அடுத்த பக்கத்தில் விட்டார்.

பிறகு இரண்டு துறவிகளும் தாங்கள் போகவேண்டிய இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். ‘‘அந்தப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு போனது குருவுக்குத் தெரிந்தால், என்னவாகும் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது’’ என்றார். ‘‘நான் அந்தப் பெண்ணை ஒரு தாயாக, தங்கையாக நினைத்துத்தான் தூக்கிட்டு வந்தேன். அவளை பத்திரமாக இறக்கியும் விட்டுவிட்டேன். நான் இறக்கிவிட்டதுமே நான் சுமந்துவந்த பாரமும் இறங்கிவிட்டது. ஆனால், நீங்கள் இன்னும் அதை சுமந்துகிட்டே இருக்கீங்களே” என்று கேட்டார். 

இந்தக் கதையிலிருந்து நமக்குத் தெரியவரும் பாடம்... 

வெற்றியோ தோல்வியோ, அதை நாம் எப்போதும் தூக்கி சுமந்து கொண்டே இருந்தால், நம்மால் ஒருபோதும் அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்க முடியாது.

ஸ்கூல்ல நாம் நல்லா படிச்சு, நல்ல மார்க் எடுக்குறோம்; காலேஜ்லையும் கஷ்டப்பட்டு படிச்சு நல்ல மார்க் எடுக்குறோம். ஆனா, வேலைக்கு இன்டர்வியூக்கு போறப்ப மட்டும் ஏன் பயப்படணும், ஏன் நெகட்டிவா யோசிக்கணும்?

ஆரம்பத்துல எல்லாம் நல்லாப் பண்ணிட்டு, கடைசியில தடுமாறினா எப்படி? தயக்கம், தடுமாற்றம் இல்லாம இன்டர்வியூவை அட்டென்ட் பண்ணுங்க. கண்டிப்பா உங்களுக்கு வேலை கிடைக்கும், கிடைக்கலைன்னாலும் அதை ஒரு அனுபவமா எடுத்துக்கங்க.

இந்த மூணு கதையோட அடிப்படைக் கருத்தை நீங்க உணர்ந்துட்டீங்கன்னா, வாழ்க்கையில எந்தச் சூழ்நிலையிலையும் நீங்க ஜெயிச்சிடலாம்’’ என்று பேசி முடித்தார் பயிற்சியாளர்.

சோர்வாக இருந்த மாணவர்கள், “சார், தோல்வி நிரந்தரம் கிடையாதுங்கிறதை எங்களுக்குப் புரிய வச்சுட்டீங்க. நாங்க இந்த இன்டர்வியூல ஜெயிப்போம்” என்றார்கள். அதற்கு அவர், “ஜெயிக்கலைன்னா...” என்று இழுத்தார். உடனே மாணவர்கள், “சார், நாங்க நெகட்டிவா எதையும் நினைக்க விரும்பலை. நாங்க கண்டிப்பா ஜெயிப்போம்” என்றார்கள் உற்சாகமாக.

நீங்களும் உங்கள் எண்ணங்களை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.  உங்கள் செயல்கள் தானாகவே மேம்படும்!

(காலம் வெல்லும்)

படங்கள்: ப.சரவணக்குமார்

இனி உன் காலம் - 17 - சோர்வு  தீர்வல்ல!

இ-வே பில்... ஆர்வம் காட்டாத தமிழகம்!

ஜி.எஸ்.டி-யைச் செலுத்தத் தேவையான பில்களை ஆன்லைன் மூலம் உருவாக்கக்கூடிய, இ-வே பில்களை உருவாக்குவதில் வட மாநிலங்கள் சுறுசுறுப்பாக உள்ளன. கடந்த ஏப்ரல் 1 முதல் 22 வரையில் இந்தியா முழுக்க 1.84 கோடி இ-வே பில்கள் உருவாக்கப்பட்டன. இதில் குஜராத் (34.41 லட்சம் பில்கள்) முதலிடத்திலும், கர்நாடகா (25.23 லட்சம்) இரண்டாவது இடத்திலும், மகாராஷ்ட்டிரா (21.06 லட்சம்) மூன்றாம் இடத்திலும் உள்ளன. உ.பி. (15.49 லட்சம்), ஹரியானா 14.69, டெல்லி (10.94) ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் கீழ்தான் இ-வே பில்களை உருவாக்கப்பட்டுள்ளன.