நடப்பு
தொடர்கள்
Published:Updated:

விபத்துக் காப்பீட்டில் மாற்றங்கள்... நிஜமா, வதந்தியா?

விபத்துக் காப்பீட்டில் மாற்றங்கள்... நிஜமா, வதந்தியா?
பிரீமியம் ஸ்டோரி
News
விபத்துக் காப்பீட்டில் மாற்றங்கள்... நிஜமா, வதந்தியா?

விபத்துக் காப்பீட்டில் மாற்றங்கள்... நிஜமா, வதந்தியா?

பிரேசிலில் உள்ள பிரேசிலியாவில் 2014-ம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், மோட்டார் வாகன விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக இந்தியா வாக்குறுதி அளித்தது. அதிலிருந்தே ‘மோட்டார் வாகனச் சட்டம்-1988’-ஐ திருத்தியமைக்கும் பணியில் ஈடுபட்டது. அதன்படி, முதலில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மசோதாவில் சில ஷரத்துகள், மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதாக இருப்பதாகக் குற்றம் சாட்டியது.  தமிழக அரசு உள்ளிட்ட சில மாநிலங்கள் அதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைத்திருக்கின்றன.

இந்த நிலையில், மோட்டார் வாகன விபத்தின்போது இன்ஷூரன்ஸ் தொகை பெறுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் 11 கடுமையான விதிமுறைகளை வகுத்துத் தீர்ப்பளித்திருப்பதாகவும், அந்தத் தீர்ப்பு, ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தன. அந்தத் தகவலில் குறிப்பிடப் பட்ட விதிமுறைகளில் சில மிகக் கடுமையாக இருந்தன. குறிப்பாக, தவறான திசையில் வாகனம் ஓட்டி, ஏற்படும் உயிரிழப்பிற்கு ஈடாக ரூ.20 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும்; இதைத்  தரத்தவறினால் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்றும், அவரது ரத்த உறவுகளின் ஓட்டுநர் உரிமமும் 7 ஆண்டுகள் ரத்து செய்யப்படும் என்றெல்லாம் அதில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து விபத்துக் காப்பீடு இன்ஷூரன்ஸ் துறையின் சட்ட வல்லுநர் வி.எஸ்.சுரேஷிடம் கேட்டோம். 

விபத்துக் காப்பீட்டில் மாற்றங்கள்... நிஜமா, வதந்தியா?

“முதலில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்களை அதன் உண்மைத்தன்மை அறியாமல் பரப்புவது தவறு என்பதை நாம் உணர வேண்டும். அப்படிச் செய்தாலே பல்வேறு குழப்பங்களைத் தவிர்க்கலாம்.

மோட்டார் வாகனச்சட்டம் எனப்படும் M.V Act, 1988-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பெருக்கமும் இல்லை; விபத்துக்களும் அதிகமில்லை. எனவே, சட்ட விதிமுறைகள் அந்தக் காலகட்டத்திற்கேற்ப எளிமையாக இருந்தன.

ஆனால், வாகனங்கள் அதிகரிக்க அதிகரிக்க, காலத்திற்கேற்ப சில திருத்தங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டன. மோட்டார் வாகன இழப்பீட்டுத் தீர்ப்பாயச் சட்டம் என்பதைப் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்கான சட்டம் என்பார்கள். அதன்பிறகு இந்தச் சட்டத்தில் சிறுசிறு திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப் பட்டன. தற்போது காப்பீட்டு நிறுவனங்கள், நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் வாகன விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்குகின்றன.

தவறான திசையில் வாகனம் ஓட்டி ஏற்படும் உயிரிழப்பிற்கு ஈடாக, 20 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்பதெல்லாம் கற்பனை செய்யமுடியாததாக இருக்கிறது. கவனக்குறைவால் நடக்கும் விபத்துக் கான இந்தத் தண்டனையை, பெருங்குற்றம் செய்த குற்றவாளிகளுக்குக்கூட அவ்வளவு எளிதில் எதிர்பார்க்க முடியாது. தண்டனைகள், தவறை உணர வைப்பதற்காகத்தானே தவிர, இந்தத் தண்டனையிலிருந்து எப்படித் தப்பிப்பது எனச் சிந்திக்க வைப்பதாக இருக்கக்கூடாது. 

விபத்துக் காப்பீட்டில் மாற்றங்கள்... நிஜமா, வதந்தியா?


ஆட்டோவைப் பொறுத்தவரை, தற்போதும் கூட, மூன்று பயணிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநருடன் சேர்ந்து நான்குபேர் பயணித்தால் மட்டுமே ஏதேனும் விபத்து நேர்ந்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் காப்பீட்டுத் தொகையை வழங்கும். மற்ற பயணிகளுக்கு வாகன உரிமையாளர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றுள்ளது. அதேபோல, தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கியவர்களுக்கான காப்பீட்டுத்தொகையை நிறுத்தி வைப்பது குறித்து சில நீதிமன்றங்கள் ஏற்கெனவே கண்டிப்போடு தீர்ப்பு வழங்கியிருக்கின்றன.

அடுத்ததாக, சாலையில் தவறான திசையில் பயணித்து விபத்தில் சிக்குபவர்களுக்கு அவர்களின் அலட்சியமான பயணத்தைக் காரணம் காட்டி காப்பீட்டுத் தொகையில் 50% இழப்பீடு குறைக்கப்பட்ட தீர்ப்புகள் ஏற்கெனவே உண்டு.

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது நிரூபிக்கப்பட்டால், இன்ஷூரன்ஸ் நிறுவனமானது இழப்பீடு வழங்க மறுக்கும் நடைமுறை தற்போதும் வழக்கத்தில் இருக்கிறது. வாகன உரிமையாளர்தான் இதற்கான இழப்பீடு தரவேண்டியிருக்கும்” என்றார்.

ஆக, உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த தகவல் முழுக்க முழுக்கக் கற்பனையாலும், யூகத்தாலும் உருவாக்கப்பட்ட செய்தியாகவே உள்ளது. அதை வாசித்து வீணாகக் குழப்பம் அடையத் தேவையில்லை.

-தெ.சு.கவுதமன்