
ஓவியம்: பாரதிராஜா
‘‘என் பெயர் ஹரிகுமார். வயது 49. நான் ஒரு பொறியியல் பட்டதாரி. கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலைப் பார்க்கிறேன்.

என் மனைவிக்கு வயது 47. தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்று கிறார். என் மகன் ராமகிருஷ்ணனுக்கு 15 வயது. இந்த வருடம் பத்தாம் வகுப்பு போக உள்ளான். குடும்பத்துடன் நாங்கள் சொந்த வீட்டில் வசித்து வருகிறோம்.
என் அம்மாவுக்கு வயது 69. சொந்த ஊரில், சொந்த வீட்டில் வசிக்கிறார். எனது மாத வருமானம் ரூ.1,15,000. என் மனைவியின் மாத வருமானம் ரூ.44,000. சொந்த ஊரில் உள்ள வீட்டின் மூலம் வாடகை வருமானமாக ரூ.21 ஆயிரம் வருகிறது. ஆக, எங்கள் மாத மொத்த வருமானம் ரூ.1,80,000.
எனக்கு ரூ.55 லட்சத்துக்கும், என் மனைவிக்கு ரூ.25 லட்சத்துக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறோம். எங்கள் மூன்று பேருக்கும் மொத்தமாக ரூ.5 லட்சத்துக்கு மருத்துவ பாலிசி எடுத்திருக்கிறேன். என் அம்மாவுக்காக தனியாக ரூ.2 லட்சத்துக்கு மருத்துவ பாலிசி எடுத்திருக்கிறேன். நான் அதிக ரிஸ்க் எடுக்க விரும்புவதால், கடந்த நான்கு வருடங்களாக மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ.1,19,000 வரை முதலீடு செய்துவருகிறேன். இதுவரை மியூச்சுவல் ஃபண்டில் ரூ.76 லட்சம் உள்ளது.
மூன்று வருடங்களில் மகனின் மேற்படிப்புக்கு, தற்போதைய மதிப்பில் ரூ.10 லட்சம் தேவை. ஏழு வருடங்களில் மகனின் பட்ட மேற்படிப்புக்கு, தற்போதைய மதிப்பில் ரூ.15 லட்சம் தேவை. அடுத்த 12 வருடங்களில் மகன் திருமணத்துக்கு, தற்போதைய மதிப்பில் ரூ.15 லட்சம் தேவை. ஒன்பது வருடங்களில் என் ஓய்வுக்காலத்துக்கு, தற்போதைய மதிப்பில் மாதம் ரூ.50 ஆயிரம் தேவை. மூன்று வருடங்களில் வெளிநாடு சுற்றுலாவுக்கு, தற்போதைய மதிப்பில் ரூ.6 லட்சம் தேவை.
என் எதிர்காலம் சுகமாக அமைய சூப்பரான முதலீட்டுத் திட்டங்களை வகுத்துத் தந்தால் உதவியாக இருக்கும்” என்றவர், தன் முதலீடுகள் வரவு செலவு விவரங்களை மெயில் அனுப்பி வைத்தார்.
இதர முதலீடுகள்: பி.எஃப் முதலீடு 5530 + 5530 (இதுவரையில் ரூ.19.5 லட்சம் உள்ளது), சூப்பர் ஆனுஷன் ஃபண்ட்: ரூ.10.35 லட்சம், தங்கம், வெள்ளி: ரூ.16 லட்சம், என்.பி.எஸ்: ரூ.3.75 லட்சம், பங்கு முதலீடு: ரூ.3.5 லட்சம், வங்கி வைப்புக் கணக்கு: ரூ.3 லட்சம்.
வரவு செலவு விவரங்கள்: வீட்டுச் செலவுகள்: ரூ.40,000, அம்மாவின் மாதச் செலவுக்கு: ரூ.10,000, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ரூ.1,19,000, இன்ஷூரன்ஸ் பிரீமியம் மாதம்: ரூ.8,000, ஒரு மாதத்துக்கான மொத்த செலவு: ரூ.1,77,000, மீதமாகும் தொகை: ரூ.3,000.
இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.
“சம்பாதிக்கும் தொகையில் 10 - 15% எதிர்காலத்துக்குச் சேமிக்கவே பலரும் தடுமாறுகிறார்கள். ஆனால், நீங்கள் வருமானத்தில் 60% எதிர்காலத்துக்கு முதலீடு செய்வது பாராட்டுக்குரியது.
நீங்கள் இதுவரை ரிஸ்க் அதிகமான முதலீடுகளையே செய்துவந்திருக் கிறீர்கள். மிட் அண்டு ஸ்மால் கேப்பில் 66% வரை முதலீடு செய்துள்ளீர்கள். இதனை இனி 50 சதவிகிதமாகக் குறைத்துக்கொள்ளுங்கள்.
இனி உங்கள் இலக்குகளுக்கான திட்டமிடலைப் பார்ப்போம். உங்கள் மகனின் மேற்படிப்புக்கு ரூ.10 லட்சம் கேட்டுள்ளீர்கள். அடுத்த மூன்று வருடங்களில் ரூ.12.25 லட்சம் தேவையாக இருக்கும். உங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள ரூ.76 லட்சத்தில் ரூ.8.7 லட்சத்தை இந்த இலக்குக்காக ஒதுக்கிக்கொள்ளுங்கள்.
அடுத்த ஏழு வருடங்களில் உங்கள் மகனின் முதுநிலைப் படிப்புக்கு ரூ.24 லட்சம் தேவையாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலிருந்து ரூ.10.9 லட்சத்தை இதற்கு ஒதுக்கினால், இந்த இலக்கை அடையலாம். ஒருவேளை வெளிநாடு அனுப்பிப் படிக்கவைக்கும் முடிவை எடுக்க வாய்ப்புள்ளதால், கூடுதலாக இன்னும் ரூ.6 லட்சம் ஒதுக்கிக்கொள்ளவும். இது தேவைப்படாத நிலையில், இந்தத் தொகையை ஓய்வுக்காலத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அடுத்து, உங்கள் மகனின் திருமணத்துக்கு, அன்றைய காலகட்டத்தில் ரூ.33.4 லட்சம் தேவையாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டி லிருந்து திருமணத்துக்கு ரூ.15 லட்சத்தை ஒதுக்கிக்கொள்ளவும். வருமானம் 12% எனில் கூடுதலாகவே உங்களிடம் பணம் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் தரம் அன்றைய நிலையில் உயர வாய்ப்புள்ளதால், தாராளமாகவே திருமணச் செலவுகளைச் செய்யும் நிலை வரலாம்.
தற்போதைய நிலையில் ரூ.50 ஆயிரம் தேவை எனில், நீங்கள் ஓய்வு பெறும்போது மாதம் ரூ.92 ஆயிரம் தேவை. கார்ப்பஸ் தொகையாக ரூ.2.6 கோடி இருக்கவேண்டும். உங்களின் பி.எஃப் தொகை மூலம் கிடைக்கும் ரூ.62.6 லட்சம் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள ரூ.30 லட்சத்தை மறுமுதலீடு செய்வதால் கிடைக்கும் ரூ.83 லட்சம் என மொத்தம் சேர்த்து ரூ.1.46 கோடி கிடைக்கும்.
இன்னும் ரூ.1.14 கோடி சேர்க்க மாதம் ரூ.59 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டும். தற்போது மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.1.19 லட்சம் முதலீடு செய்துவருகிறீர்கள். இதில் ரூ.59 ஆயிரத்தை ஓய்வுக்காலத்துக்கு ஒதுக்கிக் கொள்ளவும்.
ஓய்வுக்காலத்துக்குப்பிறகு, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் செலவு என்ற வகையில், 10 ஆண்டுகளுக்குத் சுற்றுலா செல்ல வேண்டுமானால் மாதம் ரூ.75 ஆயிரம் முதலீடு செய்துவர வேண்டும். ஓய்வுக்காலத்துக்குப் போக, இன்னுமுள்ள ரூ.60 ஆயிரம் மற்றும் மாதம் மீதமாகும் ரூ.3,000 சேர்த்து ரூ.63 ஆயிரத்தை அப்படியே முதலீடு செய்யவும். தொடர்ந்து எட்டு ஆண்டுகள் சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. அல்லது மற்ற இலக்குகளுக்கு முதலீடு செய்துள்ள தொகையில் மிச்சமாக வாய்ப்பிருக்கும்பட்சத்தில் 10 ஆண்டுகளுக்குச் சுற்றுலா சென்று இனிமையாகக் கழிக்கலாம்.
தற்போது மியூச்சுவல் ஃபண்டில் உள்ள ரூ.76 லட்சத்தில், அனைத்து முதலீடுகளுக்கும் போக, மீதியுள்ள ரூ.5.4 லட்சத்தை அடுத்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடு சுற்றுலா செல்ல பயன்படுத்திக்கொள்ளவும்.
சூப்பர் ஆனுஷன் ஃபண்டில் உள்ள ரூ10.35 லட்சமானது, உங்கள் ஓய்வுக் காலத்தில் ரூ.19 லட்சமாகக் கிடைக்கும். இதன் மூலம் மாதம் ரூ.11,000 வருமானம் வரக்கூடும். இதனை மருத்துவச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
என்.பி.எஸ், பங்குச் சந்தையில் உள்ள தொகையை ஓய்வுக்காலத்துக்குப்பிறகு அவசரகால நிதியாக வைத்துக் கொள்ளவும். மற்றபடி தேவையில்லாத ரிஸ்க் எடுக்காமல் இருந்தால், வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
பரிந்துரை: நீங்கள் உங்கள் போர்ட் ஃபோலியோவில் நிறைய ஃபண்ட் திட்டங்களை வைத்துள்ளீர்கள். இது பெரிதாக ரிஸ்க்கைக் குறைத்துவிடாது. எனவே, பின்வரும் ஃபண்டுகளில் முதலீட்டைத் தொடரவும். ஐ.சி.ஐ.சி.ஐ ஃபோக்கஸ்டு புளூசிப், ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி சைல்டு கிஃப்ட் ஃபண்ட், மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப், எல் அண்டு டி மிட்கேப் ஃபண்ட், டி.எஸ்.பி பி.ஆர் ஸ்மால்கேப் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட்.’’
குறிப்பு: தோராயமான எதிர்பார்ப்பு வருமானம் 12%, பணவீக்கம் 7%. இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878
- கா.முத்துசூரியா
எதிர்காலம் முக்கியம்!
“என்னால் மாதம் 1,000 ரூபாய்கூட எதிர்காலத்துக்காகச் சேர்க்க முடியவில்லையே என ஆதங்கப்படுபவரா நீங்கள்..? ஹரிகுமாரைப் போல நிறைய சம்பாதிப்பவர்களால் மட்டும்தான் எதிர்காலத் திட்டமிடலுக்கு முதலீடுகளைச் செய்ய முடியும் என நீங்கள் நினைத்தால் அது தவறு. எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல; சம்பாதிப்பதில் எவ்வளவு உங்களால் எதிர்காலத்துக்கு முதலீடு செய்ய முடியும் என்று திட்டமிடுவதுதான் முக்கியம். சரியாகத் திட்டமிடவில்லை என்றால் மாதம் ஐம்பதாயிரத்துக்கு மேல் சம்பாதித்தால்கூட, உங்களால் ஒருபைசாக்கூட சேர்க்க முடியாது. திட்டமிடத் தெரிந்துகொண்டவர்கள் பத்தாயிரம் சம்பாதித்தால்கூட, அதில் குறைந்தபட்சம் 1,000 ரூபாயை எதிர்காலத்துக்கு முதலீடு செய்வார்கள். உங்கள் அதிமுக்கியமான செலவுப் பட்டியலில் எதிர்கால முதலீடு இருக்கிறதா..? ஹரிக்குமாரைப் போன்று வருமானத்தில் 60% முதலீடு செய்ய வாய்ப்பு இல்லாவிட்டாலும், குறைந்த வருமானம் கொண்டவர்கள்கூட மாத பட்ஜெட்டில் எதிர்கால முதலீட்டுக்கு 10-20% ஒதுக்கவேண்டியது கட்டாயம்.”

உங்களுக்கும் நிதி ஆலோசனை வேண்டுமா?
finplan@vikatan.com என்கிற மெயில் முகவரிக்கு உங்கள் குடும்ப நிதி நிலவரங்களைக் குறிப்பிட்டு குடும்ப புகைப்படங்களுடன் அனுப்புங்கள்.
உங்கள் செல்போன் நம்பரைத் தவறாமல் குறிப்பிடவும்.
தொடர்புக்கு: 9940415222