
ஓவியம்: பாரதிராஜா
லட்சங்களில் சம்பாதிக்கும் இளைஞர்கள், கார் வாங்க வேண்டும், ஃப்ளாட் வாங்க வேண்டும், வெளிநாடுகள் செல்ல வேண்டும் என்று கனவு காண்பது பெரிய விஷயமில்லை.

“வெறும் பத்தாயிரம்தான் சம்பளம் வாங்குகிறேன். ஆனாலும், நான் என் 45 வயதுக்குள் ரூ.1 கோடி சேர்க்க வேண்டும்” என ஒரு இளைஞர் கனவு காண்கிறார் என்றால் கொஞ்சம் ஆச்சர்யமான விஷயம்தான். அவருடைய கனவு கைகூட வாய்ப்பு உண்டா என்பதைப் பார்க்கும்முன் அவரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
“என் பெயர் வெங்கட். வயது 25. விழுப்புரம் அருகே என் சொந்த ஊர். நான் தற்போது மும்பையில் வசிக்கிறேன்.
நான் மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்திருக்கிறேன். நான் சில தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போது பகுதி நேரமாகப் பணியாற்றி வருகிறேன். நண்பர்களுடன் அறையில் தங்கி யிருக்கிறேன். என் சம்பளம் ரூ.10 ஆயிரம்தான். இந்தச் சொற்ப வருமானத்தி லிருந்தும்கூட செலவுகள் போக மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் ரூ.4,000 வரை முதலீடு செய்துவருகிறேன். மியூச்சுவல் ஃபண்டுகளில் இதுவரை ரூ.80,000 வரை உள்ளது. மேலும், அவ்வப்போது கூடுதலாகப் பணியாற்றும்போது வரும் கூடுதல் வருமானத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்துவருகிறேன். இதுவரை ரூ.35,000 முதலீடு செய்துள்ளேன்.
அடுத்த மூன்று மாதங்களில் நான் முழு நேரப் பணியில் சேர்ந்துவிடக் கூடிய சூழல் உருவாகிவிடும். ஆரம்பத்தில் குறைந்தபட்சம் ரூ.20,000 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்துவிடுவேன். படிப்படியாகச் சம்பளம் அதிகரிப்பதற்கான முயற்சியை மேற்கொள்வேன். அடுத்த ஓராண்டுக்குள் ரூ.25,000 சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்துவிடுவேன்.

இப்போது எனக்கு 25 வயது. அடுத்த மூன்று வருடங்களில் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளேன். அதற்குள் என் சம்பளத்தை ரூ.45,000 - 50,000 என்ற அளவில் அதிகரித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அடுத்த மூன்று மாதங்களில் புதிய வேலை கிடைத்தபின் எஸ்.ஐ.பி மூலம் கூடுதலாக மாதம் ரூ.6,000 வரை, அதாவது மாதம் மொத்தம் ரூ. 10 ஆயிரம் வரை முதலீடு செய்ய முடியும்.
இப்போதைக்கு என் இலக்குகள் இரண்டு மட்டுமே. என் திருமணத்துக்கு ரூ.3 லட்சம் சேர்க்க வேண்டும். அடுத்து, என்னுடைய 45 வயதுக்குள் நான் ரூ.1 கோடி பணம் சேர்க்க வேண்டும். அதற்கு இப்போதே முதலீட்டைத் தொடங்க வேண்டும்.
என் திருமணத்துக்குப்பிறகு இலக்குகளும், முதலீட்டுத் திட்டங்களும் மாறக்கூடும் என்பதை அறிவேன். அன்றைய நிலையில் என் வருமானமும் அதிகரித்திருக்கும். என் மனைவியும் கணிசமாகச் சம்பளம் வாங்கக்கூடும். அப்போது எனது எல்லா இலக்குகளுக்குமான திட்டமிடலைச் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். எனக்கான ஆலோசனைகளைச் சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கும்’’ என்று முடித்தார் வெங்கட்.

இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.
“பொதுவாகவே, எவ்வளவு சம்பாதித்தாலும், சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இல்லையென்றால் ஒரு பைசாகூட சேர்க்க முடியாது. நீங்கள் மிகக் குறைந்த வருமானத்திலும்கூட சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மாதம் ரூ.4,000 முதலீடு செய்துவருவதற்கு உங்களைப் பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் கூடுதலாக வருமானம் ஈட்டும்போது நிச்சயமாகப் பெரிய அளவில் முதலீடுகளைச் செய்யக்கூடிய பக்குவம் உங்களுக்கு இருப்பதை உணர முடிகிறது.
தற்போதைய நிலையில், இரண்டு இலக்குகளை நிர்ணயித்து முதலீட்டு ஆலோசனையைக் கேட்டுள்ளீர்கள். உங்கள் திருமணத்துக்கான இலக்கு ஒருபக்கமிருக்கட்டும். 45 வயதுக்குள் ஒருகோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். எதற்காக இந்த ரூ.1 கோடி என்று நீங்கள் சொல்ல வில்லை. எனினும், நீங்கள் கேட்டுள்ளபடி, ரூ.1 கோடிக்கான முதலீட்டுத் திட்டங்களைச் சொல்கிறேன். திருமணத்துக்குப் பிறகு முதலீட்டை மீண்டும் சரிசெய்துகொள்ளுங்கள்.
தற்போது நீங்கள் செய்துவரும் மாதம் ரூ.4,000 முதலீட்டைத் தொடர்ந்து செய்து, அதற்கு 10% வருமானம் என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுகளில் ரூ.1.68 லட்சம் கிடைக்கும். தற்போது வரை உள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ரூ.80 ஆயிரத்துக்கு 10% வருமானம் என்றாலும் ரூ.1.06 லட்சம் கிடைக்கும். மொத்தம் ரூ.2.74 லட்சம் கிடைக்கும். பங்குச் சந்தையில் உள்ள ரூ.35 ஆயிரத்துக்கு 10% வருமானம் என்றாலும் ரூ.47 ஆயிரம் கிடைக்கும். இந்தப் பணத்தை வைத்து உங்கள் திருமணத்தை முடித்துக்கொள்ள லாம்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, கூடுதலாக ரூ.6,000 முதலீடு செய்ய முடியும் என்று சொல்லியிருக் கிறீர்கள். அதிலிருந்து மாதம் ரூ.5,100 முதலீடு செய்து, ஆண்டு தோறும் 10% முதலீட்டை உயர்த்திக் கொள்வதன் மூலம் 12% வருமானம் எனக் கொண்டால், 20 ஆண்டுகளில் அதாவது, உங்களின் 45 வயதில் ரூ.1.01 கோடி கிடைக்கும்.
பொதுவாக, ஒவ்வொரு மனிதனும் தங்களது குழந்தைகளின் கல்வி, குழந்தைகளின் திருமணம், தனது ஓய்வுக்காலம் போன்ற இலக்குகளுக்குக் கட்டாயமாக ஆரம்பக் காலத்திலிருந்தே முதலீடு செய்துவர வேண்டும். கார் வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும், வெளி நாட்டுக்குச் சுற்றுலா செல்ல வேண்டும் என்பதெல்லாம் கூடுதல் இலக்குகள். உங்கள் வருமானம் மற்றும் சூழலுக்கு ஏற்ப உங்கள் திருமணத்துக்குப்பிறகு உங்களுக்கான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து முதலீட்டை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் குறைந்தபட்சமாக ரூ.2 லட்சத்துக்கு மெடிக்ளெய்ம் பாலிசி எடுத்துக்கொள்ளவும். தேவைப்படும்பட்சத்தில் ஊரில் இருக்கும் பெற்றோருக்கும் ரூ.2 லட்சத்துக்கு மெடிக்ளெய்ம் பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. உங்களுக்கு தற்போதைக்கு ரூ.25 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளவும். வருமானம் உயரும்போது இந்தத் தொகையை அதிகரித்துக்கொள்ளவும்.
பரிந்துரை : திருமணத்துக்கு... ஐ.சி.ஐ.சி.ஐ புரூ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் ரூ.2,000, மோதிலால் ஆஸ்வால் டைனமிக் ஃபண்ட் ரூ.2,000.
ரூ.1 கோடி சேர்க்க... ஆக்ஸிஸ் ஃபோக்கஸ்டு 25 ஃபண்ட் ரூ.2,000, யூ.டி.ஐ மிட்கேப் 2,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ புளூசிப் ரூ.1,100.
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878
- கா.முத்துசூரியா

உங்களுக்கும் நிதி ஆலோசனை வேண்டுமா?
finplan@vikatan.com என்கிற மெயில் முகவரிக்கு உங்கள் குடும்ப நிதி நிலவரங்களைக் குறிப்பிட்டு குடும்ப புகைப்படங்களுடன் அனுப்புங்கள்.
உங்கள் செல்போன் நம்பரைத் தவறாமல் குறிப்பிடவும்.
தொடர்புக்கு: 9940415222