
கேள்வி - பதில்

எனக்கு போனஸாகக் கிடைத்த ரூ.2 லட்சத்தை எனது இரண்டு வயது மகனின் கல்வி மேற்படிப்பிற்காக முதலீடு செய்ய நினைக்கிறேன். அவனது 18 வயதில் நல்ல வருமானம் கிடைக்கும் படியான மியூச்சுவல் ஃபண்டுகளைக் கூறவும்.
சதீஸ்குமார், நாகர்கோவில்
கனகா ஆசை, நிதி ஆலோசகர்

“உங்களது இரண்டு வயது மகனின் எதிர்காலக் கல்வி மேற்படிப்பிற்காக தற்போதே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடிவெடுத்திருப்பது சரியான முடிவு. முதலீடு செய்யவுள்ள இரண்டு லட்சம் ரூபாயை நான்காகப் பிரித்து, தலா ஐம்பதாயிரம் ரூபாயாக பின்வரும் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.
கோட்டக் ஸ்டாண்டர்ட் மல்டிகேப் ஃபண்ட், ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட், ஆதித்ய பிர்லா சன் லைஃப் ப்யூர்வேல்யூ ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யவும். இந்த ஃபண்டுகளில் உங்கள் முதலீடானது ஆண்டுக்குச் சராசரியாக குறைந்த பட்சம் 12% வருமானமீட்டும் என எதிர்பார்க்கலாம். உங்கள் மகனுக்கு 16 வயதாகும்வரை காத்திருக்கவும். அதன்பின்னர், நிதி ஆலோசகரின் வழிகாட்டு தல்படி அந்த வருமானம் அனைத்தையும் அதே ஃபண்டுகளில் உள்ள கடன் சார்ந்த திட்டங்களுக்கு மாற்றிக்கொள்ளவும். இந்த முதிர்வுத் தொகையை உங்கள் மகனின் 18-வது வயதில் கல்வி மேற்படிப்பிற்குப் பயன்படுத்திக்கொள்ளவும்.”
இரண்டாண்டுகளுக்குமுன் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்தபோது ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தேன். தற்போது அந்த அலுவலகத்தில் இருந்து வேறொரு நிறுவனத்தில் சேர்ந்துவிட்டேன். இதனால் எனது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி பாதிப்புக்குள்ளாகுமா? நான் வேலை மாறியதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்குத் தெரிவிக்க வேண்டுமா?
சிவகுமார், கோயமுத்தூர்
பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்.

“நிறுவனம் எடுத்துத் தந்த குரூப் பாலிசிதான், நீங்கள் இன்னொரு நிறுவனத்துக்கு மாறும்போது செயல்படாமல் போகும். நீங்கள் தனிப்பட்ட முறையில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துள்ள பட்சத்தில், வேலை மாறினாலும் பிரச்னை இல்லை. வேலை மாற்றத்தை நீங்கள் இன்ஷூரன்ஸ் எடுத்த நிறுவனத்துக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.’’
என் வயது 28. வரிச் சலுகை கிடைக்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டில் பத்தாண்டு காலத்திற்கு மாதம் ரூ.10 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்ய விரும்புகிறேன். நல்ல ஃபண்டினைப் பரிந்துரைக்கவும்.
மகேந்திர சேகர், கொடைக்கானல்
ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

“வரிச் சலுகைக்காக முதலீடு செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்டுகள், மூன்று வருட கால ‘லாக் இன் பீரியட்’ கொண்டவை. அதாவது, அவற்றில் போட்ட பணத்தை மூன்று வருடங்களுக்குத் திரும்ப எடுக்க முடியாது. நீங்கள் பத்து வருடங் களுக்கு முதலீடு செய்ய நினைப்பதால், இது பிரச்னையாக இருக்காது. மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால், வருடத்திற்கு 1,20,000 ரூபாய் முதலீடாகும். உங்களுக்கு இந்த அளவுக்கு வரிச் சலுகை பெற இடமிருக்கிறதா என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளவும் (நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகைக்கு வருடத்திற்கு உச்சவரம்பு ரூ.1.5 லட்சம்). வரிச் சலுகைக்கேற்ற ஃபண்டுகள் என்று வரும்போது ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் டாக்ஸ் ஷீல்ட் ஃபண்ட் மற்றும் இன்வெஸ்கோ இந்தியா டாக்ஸ் பிளான் ஃபண்ட் ஆகியவை உகந்தவை.”
ஆக்ஸிஸ் லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் டிவிடெண்ட் ஆப்ஷனில் 2014-ம் ஆண்டில் முதலீடு செய்தேன். அந்த ஃபண்டிற்கு பிரிவு 80C-ன்படி வரிவிலக்கு சலுகை உண்டு. தற்போது அதன் மூன்றாண்டு கால லாக் இன் பீரியட் முடிந்து விட்டது. தற்போது அதிலிருந்து ஒரு பகுதி பணத்தை எடுத்து, அதே ஃபண்டின் குரோத் ஆப்ஷனுக்கு மாற்ற விரும்புகிறேன். அப்படி மாற்றினால், அதற்கும் 80சி பிரிவின் படி வரிவிலக்கான சலுகையைப் பெற முடியுமா?
கோவிந்தராஜன், திண்டுக்கல்
த.சற்குணன், நிதி ஆலோசகர்

“டிவிடெண்ட் ஆப்ஷனிலிருந்து குரோத் ஆப்ஷனுக்கு மாற்றினால் வரிவிலக்குக்கான சலுகையைப் பெற முடியாது. அப்படி மாற்று வதற்குப் பதிலாகத் தேவையான அளவு தொகையை ஆக்ஸிஸ் லிக்விட் ஃபண்டிற்கு மாற்றிவிட்டு, அந்த லிக்விட் ஃபண்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை ஆக்சிஸ் லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்டிற்கு மாற்றினால் வரிவிலக்குக்கான சலுகை கிடைக்கும். அல்லது தேவையான தொகையை ரிடம்ஷன் செய்து, இதே ஃபண்டில் முதலீடு செய்தால், வரிச் சலுகை கிடைக்கும். நீங்கள் அப்படி செய்ய நினைத்தால், குரோத் ஆப்ஷனில் முதலீடு செய்யுங்கள்.’’
எழுபது வயதுடைய எனது உறவினர், சமீபத்தில் அவருடைய வீட்டை 34 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தார். அந்த வீட்டை 2010 - 11-ம் ஆண்டில், வீட்டு மனைக்கான தொகை 5 லட்சம் ரூபாய், வீடு கட்டுவதற்கான செலவு 15 லட்சம் ரூபாய் என மொத்தம் 20 லட்சம் ரூபாய் செலவிட்டார். வீடு விற்ற தொகைக்கு வரி எவ்வளவு கட்ட வேண்டும்?
திருப்பதி ராஜா, நாங்குநேரி
கே.ஆர். சத்தியநாராயணன், ஆடிட்டர்

“இரண்டு ஆண்டு காலத்திற்கு மேலாக அந்த வீட்டை வைத் திருந்து விற்பதால், இந்த வருமானம் நீண்ட கால மூலதன ஆதாயத்தில் சேரும். எனவே, இந்த வீடு விற்பனை செய்வதால், கிடைக்கும் வருமானத்திற்கான வரியை, குறியீட்டு விலையை (cost of indexation) வைத்தே கணக்கிட முடியும். வீடு கட்டப்பட்ட 2010 - 11-ம் ஆண்டில் குறியீட்டு விலை எண் 167 என்றிருந்தது. கடந்த ஆண்டில் குறியீட்டு விலை எண் 272 இருந்தது. இந்த ஆண்டிற்கான குறியீட்டு விலை இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தோராயமாக 280 இருக்கும் என்று வைத்துக்கொள்வோம். அப்படி வைத்துக்கொண்டால், விலைக்கு வாங்கிய தொகை ரூ.20 லட்சம். இதனை 167-ஆல் வகுத்துவந்த தொகையை 280-ஆல் பெருக்கினால், ரூ.33.5 லட்சம் வரும். அவர் ரூ.34 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார். எனவே, அவரது மூலதன ஆதாயம் தோராயமாக ரூ.47 ஆயிரம் வருகிறது. இவர் மூத்த குடிமகன் என்ற வகையில் வருமான வரிக் கான வரம்பு ரூ.3 லட்சம் வரை உள்ளது. அவருக்கு வேறெந்த வருமானமும் இல்லாதபட்சத்தில் அவர் எந்த வரியையும் செலுத்தத் தேவையில்லை. ஆனால், வேறு ஏதேனும் வருமானம் இருந்து, மொத்த வருமானம் 3 லட்சம் ரூபாயைத் தாண்டினால், மூலதன ஆதாயமான ரூ.47,000-க்கு 20% நீண்ட கால மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்.”
தொகுப்பு: தெ.சு.கவுதமன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.