நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 39 - இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு?

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 39 - இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு?
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 39 - இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு?

ஓவியம்: பாரதிராஜா

“என் பெயர் அசோக். வயது 36. என்  சொந்த ஊர் கள்ளக்குறிச்சி. நான் தற்போது குவைத்தில் பணியாற்றி வருகிறேன். மாதம் ரூ.2.5 லட்சம் சம்பளம் வாங்குகிறேன். குடும்பத்துடன் அங்குதான் வசித்துவருகிறேன்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 39 - இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு?

என் மனைவி பி.டெக் படித்தவர். இப்போதைக்கு குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிறார். எதிர்காலத்தில் வேலைக்குச் செல்வாரா என்பதை இப்போது முடிவு செய்ய இயலவில்லை. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். முதல் குழந்தைக்கு வயது ஏழு வயது ஆகிறது. இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயது. இந்த ஆண்டுதான் பள்ளியில் சேர்க்க உள்ளோம்.

எனக்கு விவசாயம் மூலமாக ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வருமானம் வருகிறது. கள்ளக்குறிச்சியில் ரூ.15 லட்சம் மதிப்பில் சொந்த வீடு உள்ளது. பேங்க் எஃப்.டி-யில் ரூ.10 லட்சம் உள்ளது. மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் ரூ.55 ஆயிரம் வரை முதலீடு செய்து வருகிறேன். இதுவரையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.12 லட்சம் உள்ளது.

குவைத்தில் என் தம்பிக்கு உணவகம் ஒன்றை வைத்துக்கொடுத்துள்ளேன். இதில் ரூ.26 லட்சம் வரை இதில் முதலீடு செய்துள்ளேன். இந்த பிசினஸ்  மூலம் என் பங்காக மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம் வருகிறது.

பிசினஸுக்காக குவைத்தில் நான் ஏற்கெனவே வங்கிக் கடன் வாங்கியிருப்பதால், அதற்கு மாதம் ரூ.50 ஆயிரம் செலுத்திவருகிறேன். இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தக் கடன் முடிந்துவிடும்.  இரண்டு வருடங்கள் கழித்து மிச்சமாகும் இந்தத் தொகையையும் என் எதிர்கால முதலீட்டுக்குப் பயன்படுத்த முடியும். தற்போது எனக்கு எல்லா செலவுகளும் போக மாதம் ரூ.25 ஆயிரம் மீதமாகிறது. 

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 39 - இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு?

நான் எட்டு எண்டோவ்மென்ட் பாலிசிகள் வரை எடுத்து வைத்துள்ளேன். பிரீமியம் மட்டுமே ஆண்டுக்கு மொத்தமாக ரூ.3.55 லட்சம் செலுத்தி வருகிறேன். இதில் ஒரு பாலிசி மட்டும் எண்டோவ்மென்ட் மற்றும் டேர்ம் இன்ஷூரன்ஸ் இணைந்த பாலிசி ஆகும். இரண்டு ஆண்டு களுக்குமுன் எடுத்த இந்த பாலிசிக்கான பிரீமியம் மட்டுமே ஆண்டுக்கு ரூ.2.76 லட்சம். 25 ஆண்டுகளில் இதன் க்ளெய்ம் தொகை ரூ.1.3 கோடியாகும். ஆண்டுக்கு ரூ.2.76 லட்சம் பிரீமியம் செலுத்துவது அவசியமா, இதனை குளோஸ் செய்துவிட்டு வெறும் டேர்ம் பாலிசி மட்டும் எடுத்தால் போதுமா?  

மற்ற எல்லா பாலிசிகளுக்கான முதிர்வுத் தொகையாக 2026-ல் ரூ.2.2 லட்சம் கிடைக்கக்கூடும். 2033-ல் ரூ.17 லட்சம் கிடைக்கக்கூடும்.

நான் குவைத்தில் இன்னும் 15 ஆண்டுகள் இருப்பேன். என்னுடைய 51-வது வயதில் நான் ஓய்வுபெறத் திட்டமிட்டுள்ளேன். 15 வருடங்கள் கழித்து ஓய்வு பெறும்போது செட்டில்மென்ட் தொகையாக எனக்கு ரூ.40 லட்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.   

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 39 - இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு?

என் முதல் குழந்தையின் மேற் படிப்புக்கு 10 ஆண்டுகளில் ரூ.75 லட்சமும், திருமணத்துக்கு 17 ஆண்டுகளில் ரூ.1 கோடியும், இரண்டாவது குழந்தையின் மேற் படிப்புக்கு 14 ஆண்டுகளில் ரூ.90 லட்சமும், இரண்டாவது குழந்தையின் திருமணத்துக்கு 19 ஆண்டுகளில் ரூ.1.25 கோடியும், 51 வயதில் ஓய்வு பெற்ற பிறகு மாதம் ரூ.1 லட்சமும் (தொகை அனைத்தும் அன்றைய மதிப்பில்) தேவைப்படும் என நினைக்கிறேன். குழந்தைகளை வெளிநாட்டில் படிக்க வைக்க ஆசைப்படுகிறேன். சரியான முதலீட்டுத் திட்டங்களை வழங்கி னால் மகிழ்ச்சியாக இருக்கும்” என்ற வர் தன் வரவு செலவு மற்றும் முத லீட்டு விவரங்களை அனுப்பி வைத்தார்.

வரவு செலவு விவரங்கள்

வருமானம் : ரூ.2.5 லட்சம்

குடும்பச் செலவுகள் : ரூ.1 லட்சம்

ஃபண்ட் முதலீடு (SIP): ரூ.55ஆயிரம்

இன்ஷூரன்ஸ் பிரீமியம் (மாதமொன்றுக்கு): ரூ.30 ஆயிரம்

பிசினஸ் கடன்: ரூ.50 ஆயிரம்

மொத்தச் செலவு: ரூ.2.35 லட்சம்

மீதம்: ரூ.15,000

பிசினஸ் மூலமான வருமானம் (மாதமொன்றுக்கு) : ரூ.10 ஆயிரம்

மீதமாகும் மொத்தத் தொகை (மாதமொன்றுக்கு): ரூ.25 ஆயிரம்

இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலி டேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“இன்ஷூரன்ஸ் எடுக்கும்முன், ஒருமுறைக்கு பலமுறை யோசிக்க வேண்டும். இன்ஷூரன்ஸ் என்பது முதலீடல்ல; தனக்குப் பிறகு தன் குடும்பத்துக்கு செய்துவைக்கிற  பாதுகாப்பு. இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளாமல் ஒரு லட்சம் ரூபாய்க்கும், இரண்டு லட்சம் ரூபாய்க்கும் இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம்.

குடும்பத் தலைவர் சந்தர்ப்பவசத் தால் இறக்க நேரிட்டால் ஒரு குடும்பம் வெறும் நான்கு லட்சம் ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும்? அதை வங்கியில் டெபாசிட் செய்தால், ரூ.3,000கூட கிடைக்காது. இந்த 3,000 ரூபாய  வாடகை தரக்கூட போதாது.

இன்ஷுரன்ஸ் எடுக்கும்முன் இதுபற்றி எல்லாம் யாரும் யோசிப்பதில்லை. மாமன், மச்சான்களின் தொல்லை தாங்காமல், இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால், அவர்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும். ஆனால், பாலிசி எடுப்பவர்களுக்கு  எந்தப் பிரயோஜனமும் இருக்காது.

நம்மூரில் வரிச் சலுகைகளுக்காகவே பலரும் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார்கள். இது மகா தவறு. ஆனால், நீங்கள் வெளிநாட்டில் இருப்பதால், உங்களுக்கு வரிச் சலுகையும் கிடைக்காது என்கிறபோது, நீங்கள் இத்தனை பாலிசிகளை எடுத்திருக்க வேண்டியதில்லை.

இரண்டு ஆன்டுகளுக்கு முன் எடுத்த பாலிசியை குளோஸ் செய்தால் ரூ.5 லட்சத்துக்கு மேல் நீங்கள் செலுத்திய பிரீமியம் உங்களுக்கு நஷ்டம்தான். உங்களால் நஷ்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியுமெனில் மட்டும் குளோஸ் செய்யவும். உதாரணமாக, உங்கள் வயதுக்கு 30 ஆண்டுகளுக்கு ரூ.1.5 கோடிக்கு  டேர்ம் பாலிசி எடுத்தால், ஆண்டொன்றுக்கு ரூ.18 ஆயிரம் மட்டுமே பிரீமியம் செலுத்தினாலே போதும்.

உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணத்துக்கு மட்டும் மாதம் ரூ.67 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் தற்போது எஸ்.ஐ.பி-யில் முதலீடு செய்துவரும் ரூ.55 ஆயிரத்தையும், மீதமுள்ள தொகை ரூ.25 ஆயிரத்தில் ரூ.12 ஆயிரத்தையும் இந்த இலக்குகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும்.

மீதமுள்ள ரூ.13 ஆயிரத்தை அவசரகால நிதியாக முதலீடு செய்துவரவும். விவசாய வருமானத்தை நீங்கள் ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வந்துபோகும் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும்.

உங்கள் குழந்தைகள் படிப்பு மற்றும் திருமணச் செலவுக்கான பணத்தை எப்படிச் சேர்ப்பது என்பதைத் தெரிந்துகொள்ள முதலீட்டுத் திட்ட அட்டவணையைப் பாருங்கள்.

15 ஆண்டுகளில் ஓய்வுபெறும் போது மாதம் ரூ.1 லட்சம் தேவை எனக் கேட்டுள்ளீர்கள். 7% பணவீக்கம், 85 வயது வாழ்நாள் என்ற அடிப்படையில் கணக்கிட்டால், ரூ.3.44 கோடி கார்ப்பஸ் தொகையைச் சேர்க்க வேண்டும். இரண்டு ஆண்டுகளில் பிசினஸ் கடன் முடிந்ததும், ரூ.50 ஆயிரத்தை 13 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், ரூ.1.86 கோடி கிடைக்கும். ஓய்வுபெறும்போது செட்டில்மென்ட் தொகை ரூ.40 லட்சம் கிடைக்கும்.

மொத்தம் ரூ2.26 கோடி போக இன்னும் 1.18 கோடி பற்றாக்குறை உள்ளது. நீங்கள் வைத்துள்ள டேர்ம் பாலிசி மூலமான முதிர்வுத் தொகை ரூ.1.3 கோடியை இதற்குப் பயன்படுத்திக் கொள்ளவும்.

இன்னும் கூடுதலாகத் தேவைப்படும்பட்சத்தில் விவசாய வருமானம், பிசினஸ் மூலமான வருமானங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எஃப்.டி-யில் உள்ள ரூ.10 லட்சத்தை அப்படியே தொடர்ந்து வைத்திருக்கவும். ஓய்வுக் காலத்துக்குப் பிறகு ஆண்டுதோறும் சுற்றுலா செல்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளவும். ஏற்கெனவே முதலீடு செய்துள்ள ஃபண்டுகளை அப்படியே தொடரவும். கூடுதலாக ஹெச்.டி.எஃப்.சி கோல்டு ஃபண்டில் ரூ.3,400 முதலீடு செய்யவும்.”

குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878


- கா.முத்துசூரியா

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 39 - இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு?

உங்களுக்கும் நிதி ஆலோசனை வேண்டுமா?

finplan@vikatan.com என்கிற மெயில் முகவரிக்கு உங்கள் குடும்ப நிதி நிலவரங்களைக் குறிப்பிட்டு  குடும்ப புகைப்படங்களுடன் அனுப்புங்கள்.

உங்கள் செல்போன் நம்பரைத் தவறாமல் குறிப்பிடவும்.

தொடர்புக்கு:  9940415222