
வாகனக் காப்பீடு: தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் மட்டும் போதுமா?
கார் அல்லது பைக் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும், காவல் துறையின் நடவடிக்கைக்குப் பயந்து மூன்றாம் நபர் காப்பீட்டு (தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ்) பாலிசி மட்டும் எடுத்து வைத்திருக் கிறார்கள். ஆனால், வாகனம் வைத்திருப்பவர்கள் இந்த பாலிசியை மட்டும் எடுத்து வைத்திருப்பது போதாது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

வேறு என்ன செய்ய வேண்டும்?
மூன்றாம் நபர் காப்பீட்டில், மூன்றாம் நபரால் நம் வாகனத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கு மட்டுமே இழப்பீடு கிடைக்கும். அதாவது, வாகனம் விபத்துக்குள்ளாகி சேதம் ஏற்பட்டாலோ அல்லது வாகனம் திருடுபோனாலோ, எந்த இழப்பீடும் கிடைக்காது. இதுபோன்ற விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு ஒருங்கிணைந்த (காம்பிரிஹென்சிவ்) பாலிசி எடுக்க வேண்டும் அல்லது மூன்றாம் நபர் காப்பீடு எடுத்ததுபோக, ஓன் டேமேஜ் பாலிசியைத் தனியாக எடுக்க வேண்டும்.
தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் என்பது சட்டப்படி கட்டாயம்.

என்ன சிறப்பு?
வழக்கறிஞரும், இன்ஷூரன்ஸ் ஆலோசகருமான திருமலை கூறும் போது, “இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நமது வண்டியால் மூன்றாம் நபருக்கு ஏற்படும் பாதிப்பு (Third party), நமது வண்டிக்கு நம்மால் ஏற்படும் பாதிப்பு (Own damage) என இரண்டுக்குமே சேர்த்து பாலிசி வழங்குகின்றன. இதற்கு காம்பிரிஹென்சிவ் பாலிசி என்று பெயர்.
தற்போது, புதிதாக வாங்கும் அனைத்து வாகனங்களுக்கும் தேர்டு பார்ட்டி மற்றும் ஓன் டேமேஜ் பாலிசியை வாகனத்தை விற்கும் நிறுவனங்களே எடுத்துக் கொடுத்து விடுவார்கள். பழைய வாகனங்களை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த பாலிசிகளை முறையாகப் புதுப்பிப்பது இல்லை.

ஒருவர், தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ் மட்டுமே எடுத்திருக்கும்பட்சத்தில் அவருக்கு அந்தக் காப்பீட்டுத் தொகை மட்டுமே கிடைக்கும். குறைந்த இழப்பீட்டைப் பெற்று, நிலைமையைச் சமாளிக்க முடியும் என்று நினைத்தால், அவருக்கு தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ் மட்டும் போதும். சொந்தப் பணத்தை வைத்து இழப்பீடைச் சமாளிக்க முடியாது என்பவர்கள் காம்பிரிஹென்சிவ் பாலிசியை எடுப்பது நல்லது.
நாம் வைத்திருக்கும் வாகனம் எதுவாக இருந்தாலும், அதற்கான மதிப்பினை (Insured declared value) நாமே நிர்ணயம் செய்துவிட முடியாது. இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்தான் அதை செய்யும். அந்த மதிப்பின் அடிப்படையிலேயே வாகனத்துக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் அளிக்கப்படும். வாகனம் எப்போது வாங்கப்பட்டது, அதன் மாடல், தேய்மானம் ஆகியவற்றை வைத்து, அதன் மதிப்பீடு நிர்ணயம் செய்யப்படும். காம்பிரி ஹென்சிவ் பாலிசியை எடுப்பதன் மூலம் எல்லா விதப் பாதிப்புகளிலிருந்தும் உங்களால் தப்பிக்க முடியும்’’ என்று முடித்தார் அவர்.
இனி உங்களிடம் காம்பிரிஹென்சி இன்ஷூரன்ஸ் பாலிசி இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
-கே.எஸ்.தியாகராஜன்