
ஓவியம்: பாரதிராஜா
“என் பெயர் செல்வக்குமார். சென்னையில் வசித்துவருகிறேன். வயது 47. ஆட்டோமொபைல் துறையில் 26 ஆண்டுகள் உயர்பதவியில் இருந்துள்ளேன். 2016 முதல் சொந்தமாக ஆட்டோமொபைல் கன்சல்டன்சி ஒன்றை நடத்தி வருகிறேன். தற்போது எல்லாச் செலவுகளுக்கும் போக மாதம் ரூ.1.5 லட்சம் வருமானம் கிடைக்கிறது. அடுத்தடுத்த வருடங்களில் ஆண்டுக்கு 30% வருமானம் அதிகரிக்க வாய்ப்புண்டு.

என் மனைவி வீட்டில் ஹிந்தி டியூஷன் எடுப்பதன் மூலம் மாதம் ரூ.4,000 வருமானம் வருகிறது. இதில்லாமல் கன்ஸ்யூமர் பொருள்கள் மார்க்கெட்டிங் மூலம் எனக்கு மாதம் ரூ.5,000 கூடுதலாக வருமானம் வருகிறது.
மகன் சந்தோஷ் குமாருக்கு 18 வயது. இந்த ஆண்டுமுதல் இன்ஜினீயரிங் படிக்க உள்ளான். இரண்டாவது மகன் பாலாஜிக்கு 14 வயது. 10-ம் வகுப்பு படிக்கிறான்.
முதலீடுகள் எனப் பார்த்தால் பங்குச் சந்தையில் இதுவரை ரூ.1 லட்சம் உள்ளது. வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சம் வைத்துள்ளேன். வீட்டுக் கடன் மூலமமாகச் சொந்த வீடு வாங்கி யுள்ளேன். வீட்டின் மதிப்பு ரூ.45 லட்சம். ரூ.23 லட்சம் வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்கினேன். மாதம் ரூ.25 ஆயிரம் இ.எம்.ஐ செலுத்திவருகிறேன். இது 2028-ல் முடிவடையும்.
மொத்தம் ரூ. 5.70 லட்சம், இரண்டு வங்கிகளில் பர்சனல் லோன் வாங்கியுள்ளேன் ரூ.19 ஆயிரம் (10,500 + 8,500) மாதத் தவணை செலுத்தி வருகிறேன்.
என் சேமிப்புகள் மொத்தமும் கரைந்துபோகவும், கடன்கள் இந்த அளவுக்கு அதிகமாகவும் காரணம் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதற்கு ரூ.18 லட்சம் வரை செலவானது. அவருக்கு இருந்த மெடிக்ளெய்ம் பாலிசி தொகை போக ரூ.16 லட்சம் செலவு செய்தேன். மைத்துனர் ஒருவருக்கு மூளைப் புற்று நோய் சிகிச்சைக்கு நான் ரூ.4.5 லட்சம் கொடுத்தேன். இந்த மருத்துவச் செலவுகளுக்காக என் எல்லாச் சேமிப்புகளையும் செலவு செய்தேன். அதுபோக உறவினர்களிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கி, மாதம் ரூ.13,500 இதற்காகச் செலுத்திவருகிறேன். இந்தக் கடன் 2022-ல் முடிவடையும். ஏற்கெனவே நகைக் கடன் ரூ.1.5 லட்சம் வாங்கி, செலுத்தி வருகிறேன். இந்தக் கடன் 2019-ல் முடிவடையும்.
எனக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் ரூ.50 லட்சத்துக்கு உள்ளது. என் குடும்பத்துக்கு மெடிக்ளெய்ம் ரூ.10 லட்சத்துக்கு எடுத்துள்ளேன். மூன்று எண்டோவ்மென்ட் பாலிசிகள் வைத்துள்ளேன். முதல் மகன் இன்ஜினீயரிங் படிப்புக்கு ரூ.6 லட்சம் (ஆண்டுக்கு 2 லட்சம். முதல் ஆண்டுக்குச் செலுத்தி விட்டேன்), இரண்டாவது மகன் மேற்படிப்புக்கு ரூ.10 லட்சம் (2021-ல்), முதல் மகன் முதுகலை படிப்புக்கு ரூ.5 லட்சம் (2023-ல்), அக்கா மகள் திருமணத்துக்கு ரூ.2 லட்சம் (2019-ல்) தேவை. ஓய்வுக்காலத்தில் மாதம் ரூ.50,000 வருமானம் வரும் வகையில் முதலீட்டுத் திட்டம் தேவை. 60 - 62 வயதுவரை பணியாற்றத் தயாராக இருக்கிறேன். 2025-க்குள் அனைத்துக் கடன்களையும் அடைக்க வேண்டும்” என்றவர் தன் வரவு செலவு விவரங்களை மெயில் அனுப்பிவைத்தார்.

வரவு செலவு விவரங்கள்
மொத்த மாத வருமானம் : ரூ.1,59,000, குடும்பச் செலவுகள் : ரூ.18,000, வீட்டுக் கடன் இ.எம்.ஐ : ரூ.25,000 (2028-0 முடியும்), குழந்தைகள் படிப்பு : ரூ.10,000, பர்சனல் லோன் -1 : ரூ.10,500 (2019-ல் முடியும்), பர்சனல் லோன் -2 : ரூ.8,500 (2020-ல் முடியும்), உறவினரிடம் வாங்கிய கடன் : ரூ.13,500 (2022-ல் முடியும்), மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி : ரூ.5,000, ஷேர் எஸ்.ஐ.பி : ரூ.3,000, டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியம் : ரூ.1,500, இன்ஷூரன்ஸ் பிரீமியம் : ரூ.3,000, மெடிக்ளெய்ம் பிரீமியம் : ரூ.2,000, நகைக் கடன் : ரூ.5,000 (2019 டிசம்பரில் முடியும்), இதர நிர்வாகச் செலவுகள் : ரூ.15,000, மொத்தச் செலவு : ரூ.1,20,000, மீதமாகும் தொகை : ரூ.39,000.
இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.
“பொதுவாகவே எதிர்காலத்துக் காகப் பணம் சேர்த்தால் மட்டும் போதாது; சேர்த்த பணம் கரைந்துபோகாமல் இருக்க வேண்டுமானால், முறையான காப்பீடுகள் அவசியம். குறிப்பிட்ட அளவுக்குக் குடும்ப உறுப்பினர் களுக்கு மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்கப்பட்டிருந்தால் உங்களுக்குப் பெரிய அளவிலான இழப்பு வந்திருக்காது. இப்போது இருக்கும் வாய்ப்புகளைக் கொண்டு உங்கள் இலக்குகளுக்கு எப்படித் திட்டமிடலாம் எனப் பார்ப்போம்.
உங்கள் முதல் மகனின் மேற்படிப்புக்கு அவசரமாகத் திட்டமிட வேண்டும். உங்களிடம் மீதமிருக்கும் 39 ஆயிரத்தில் ரூ.17 ஆயிரத்தை ஆர்.டி-யில் முதலீடு செய்துவரவும். ஆண்டுக்கு ரூ.2 லட்சம் அளவில் ஆகும் கட்டணத்துக்கு ஒவ்வோர் ஆண்டும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளவும்.
இரண்டாவது மகனின் படிப்புக்கு 2021-லேயே மொத்தப் பணமும் தேவைப்படாது. ஆண்டுக்கு ரூ2.5 லட்சம் தேவை. இதற்காக ரூ.15,700 முதலீட்டை நான்காகப் பிரித்து முதலீடு செய்யவும். முதலாம் ஆண்டுக் கட்டணத்துக்கு ரூ.5,900, இரண்டாம் ஆண்டுக்காக ரூ4,200, மூன்றாம் ஆண்டுக்காக ரூ.3,100, நான்காம் ஆண்டுக்காக ரூ.2,500 என்ற வகையில் முதலீடு செய்து, ஒவ்வோர் ஆண்டும் தேவைப்படும் தொகையை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளவும்.
2019-ல் உங்கள் சகோதரியின் மகள் திருமணத்துக்கு 2019-ல் முதிர்வடையும் இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் கிடைக்கும் ரூ.1.55 லட்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும். மேலே சொன்ன இரண்டு முதலீடுகளுக்கும்போக மீதமுள்ள ரூ.6,300-யை முதலீடு செய்து பற்றாக்குறைக்குப் பயன்படுத்திக்கொள்ளவும்.
முதல் மகனின் முதுகலைப் படிப்புக்கு ரூ.5 லட்சம் சேர்க்க, மாதம் ரூ.8,200 முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் தற்போது செய்து வரும் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.8,000-த்தை இதற்குப் பயன்படுத்திக்கொள்ளவும்.
அடுத்து, உங்கள் ஓய்வுக் காலத்துக்கு மாதம் ரூ.50 ஆயிரம் தேவையெனில், 7% பணவீக்கம், 85 வயது வாழ்நாள் என்ற அடிப்படை யில் கார்ப்பஸ் தொகையாக ரூ.1.32 கோடி சேர்க்க வேண்டும். இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மூலம் ரூ.7.11 லட்சம் முதிர்வுத் தொகை கிடைக்கக்கூடும். இதுபோக ரூ. 1.25 கோடி சேர்க்க வேண்டும். மாதம் ரூ.54,600 முதலீடு செய்தால் 10 ஆண்டுகளில் இந்த இலக்கை அடையலாம். அல்லது மாதம் ரூ.40,500 முதலீட்டில் ஆரம்பித்து ஆண்டுக்கு 10% முதலீட்டை அதிகரிக்கலாம். உங்கள் முதல் மகன் இன்ஜினீயரிங் படிப்பு முடிந்ததும் இந்த முதலீட்டை ஆரம்பிக்கவும். தற்போது செலுத்தி வரும் இரண்டு பர்சனல் லோனுக்கான தொகை ரூ.19 ஆயிரம், சகோதரி மகள் திருமணத்துக்காக முதலீடு செய்யும் ரூ.6,300, முதல் மகன் படிப்புக்கு முதலீடு செய்யும் ரூ.17 ஆயிரம் என உங்களிடம் ரூ.42,300 அன்றைய நிலையில் இருக்கும். இதிலிருந்து ஓய்வுக்கால முதலீட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ளவும்.
ஒரு தேவைக்கான முதலீடு முடிந்தவுடனோ, கடன் முடிந்தவுடனோ அடுத்த இலக்குக்கான முதலீட்டை ஆரம்பிக்கும்முன் இருக்கும் இடைவெளியில் உபரித் தொகைகளை அவசர கால நிதியாகச் சேமித்து வரவும். உறவினர்களிடம் வாங்கிய கடன் முடிந்ததும் உங்களிடம் கூடுதலாக மிச்சப்படும் ரூ.13,500, மற்றும் பிசினஸ் வளர்ச்சி மூலம் அதிகரிக்கும் வருமானம் என இதையெல்லாம் கொண்டு, உங்கள் முதலீட்டை மறு சீரமைப்பு செய்யும்போது உங்கள் மகன்களின் திருமணத்துக்கு முதலீட்டை ஆரம்பிக்கலாம். இயல்பாகவே 2025-க்குள் வீட்டுக் கடனைத் தவிர, அனைத்துக் கடன்களும் அடைக்கப்பட்டுவிடும். வீட்டுக் கடனை முன்கூட்டியே முடிக்கவேண்டிய அவசியம் இல்லை.
பரிந்துரை : ஏற்கெனவே முதலீடு செய்து வரும் ஃபண்டுகளுடன் ஐ.சி.ஐ.சி.ஐ புரூ ஈக்விட்டி டெப்ட் ஃபண்ட், எடெல்வைஸ் லார்ஜ்கேப் ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட், யூ.டி.ஐ மிட்கேப் ஃபண்ட் போன்றவற்றை உங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ளவும்.
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878
- கா.முத்துசூரியா

உங்களுக்கும் நிதி ஆலோசனை வேண்டுமா?
finplan@vikatan.com என்கிற மெயில் முகவரிக்கு உங்கள் குடும்ப நிதி நிலவரங்களைக் குறிப்பிட்டு குடும்ப புகைப்படங்களுடன் அனுப்புங்கள்.
உங்கள் செல்போன் நம்பரைத் தவறாமல் குறிப்பிடவும்.
தொடர்புக்கு: 9940415222