
கேள்வி - பதில்

நான் சமீபத்தில்தான் பணி ஓய்வு பெற்றேன். என்னிடமுள்ள 50 லட்சம் ரூபாயை முதலீடு செய்து, நல்ல வருமானம் ஈட்ட ஆலோசனை கூறுங்கள்.
ரங்கராஜன், வந்தவாசி
என்.விஜயகுமார், நிதி ஆலோசகர்.

‘‘சமீபத்தில் பணி ஓய்வு பெற்றிருப்பதால் உங்களுடைய வயது 58-60 இருக்கலாம் என்று யூகிக்கிறேன். எனவே, உங்களுடைய பணத்தில் 35% கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும், 25% அஸெட் அலோகேஷன் ஃபண்டுகளிலும், 30% ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளிலும் மற்றும் 10% தொகையை அவசரத் தேவைகளுக்காக வங்கி வைப்பு நிதி / லிக்விட் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யவும். கடன் சார்ந்த ஃபண்டுகள் பிரிவில் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட், டி.எஸ்.பி.பி.ஆர் கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.
ஈக்விட்டி வகையில், ஐ.டி.எஃப்.சி ஃபோக்கஸ்டு ஈக்விட்டி ஃபண்ட், ஆதித்ய பிர்லா ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். பேலன்ஸ்டு மற்றும் அஸெட் அலோகேஷன் ஃபண்டுகளுக்கு ஐ.சி.ஐ.சி.ஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.’’
எனது கல்லீரலின் ஒரு பகுதியை மூன்று ஆண்டுகளுக்குமுன் எனது தந்தைக்குத் தானமாகக் கொடுத்தேன். இப்போது எனக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, இந்த விஷயத்தை இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குக் கட்டாயம் தெரிவிக்க வேண்டுமா?
இலக்கியசெல்வன், கரூர்
பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்

''தானமாக அளித்த விவரத்தை, விண்ணப்பப் படிவத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்குக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்."
(முன்னர் கேள்வி-பதிலில் இருந்த பிழை நீக்கப்பட்டுவிட்டது. சுட்டிக் காட்டிய வாசகர்களுக்கு நன்றி)
எனது மகன், மாதம் 8,000 ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறான். அதற்கேற்ற லார்ஜ்கேப், மிட் கேப், மல்டிகேப், ஸ்மால்கேப் ஃபண்டுகளைப் பரிந்துரைக்கவும்.
கார்த்திக், திருச்செங்கோடு
ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

‘‘இருபது வருடங்களுக்கு மேல் முதலீடு செய்யும்பட்சத்தில் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளிலேயே முதலீடு செய்யலாம். ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் (லார்ஜ்கேப்), மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் (மிட்கேப்), பராக் பரிக் லாங்க் டேர்ம் ஈக்விடி ஃபண்ட் (மல்டி கேப்), ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனிஸ் ஃபண்ட் (ஸ்மால்கேப்) ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.’’
ஐந்தாண்டுகளுக்குத் தொடர்ச்சியாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றியபின் இன்னொரு நிறுவனத்திற்குப் பணி மாறுகிறேன். பழைய நிறுவனத்தின் பி.எஃப் பணத்தை முழுவதுமாக எடுத்தால், வரி கட்ட வேண்டுமா?
இளங்கோ, திருவாரூர்
எஸ்.பாலாஜி, ஆடிட்டர்

‘‘ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட பி.எஃப் பணத்தை எடுக்கும்போது வரி எதுவும் கட்ட வேண்டியிருக்காது. ஐந்தாண்டுகளுக்கு குறைவாக பணியாற்றிய நிலையில் பி.எஃப் பணத்தை முழுமையாக எடுக்கும்பட்சத்தில் வரி செலுத்த வேண்டும்.’’
வயது 35. ஓய்வுக்காலத் தேவைக்காக மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ரூ.15,000 முதலீடு செய்ய ஆலோசனை வழங்கவும்.
செல்வராஜன், மணப்பாறை
ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர், மணிகேர்

‘‘உங்களுடைய பணி ஓய்வுக்காலத்துக்கு இன்னும் சுமார் 23 ஆண்டுகள் உள்ளதால், நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்கலாம்.
நீங்கள் அதிக ரிஸ்க் தயார் எனில், அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், எல்&டி மிட்கேப் ஃபண்ட், சுந்தரம் மிட்கேப் ஃபண்ட் போன்ற மிட்கேப் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்யலாம்.
நீங்கள் மிதமான ரிஸ்க் எடுப்பவராக இருந்தால், இன்வெஸ்கோ இந்தியா கான்ட்ரா ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா ஃபோக்கஸ்டு ஈக்விட்டி ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி கேப்பிட்டல் பில்டர் வேல்யூ ஃபண்ட் போன்ற டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீட்டைப் பிரித்து எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவரலாம்.’’
வருமான வரித் துறை அனுப்பிய கடிதத்தில், செக் ஷன் 143(1)-ன்படி 60 ரூபாயை ‘Net Amount Payable’ எனக் குறிப்பிட்டுள்ளது. வருமான வரி ஐ.டி துறையின் இணையத்தில் அதுகுறித்த விவரம் காணப்படவில்லை. இதன் அர்த்தம் என்ன, அந்த 60 ரூபாயை எப்படிக் கட்டுவது?
திருப்பதி, ஆவுடையார்கோவில்
கே.ஆர் சத்யநாராயணன், ஆடிட்டர்

‘‘கண்டிப்பாகக் கட்டவேண்டிய ஒன்றுதான். செக்ஷன் 143(1) என்பது என்னவென்றால், நாம் வரித் தாக்கல் செய்யும்போது அதை மதிப்பீடு செய்து ஆர்டர் அனுப்புவார்கள். அந்த ஆர்டரில்தான் ரூ.60 கட்ட வேண்டும் என்று என்று வந்துள்ளது.
ஆனால், டிமாண்டில் பார்க்கும் போது அதைக் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.செக்ஷன் 143(1)-யைப் பொறுத்தவரை, நாம் வரித்தாக்கல் செய்யும்போது எந்த மெயில் ஐ.டி கொடுக்கிறோமோ அந்த மெயில் ஐ.டி-க்கு வருமான வரித் துறையிலிருந்து மதிப்பீடு செய்யப்பட்டு, மதிப்பீட்டு ஆர்டர் (Assessment Order) வரும். மதிப்பீடு முடிந்தபிறகு 60 ரூபாய் கட்ட வேண்டுமென்று வந்திருக்கக்கூடும்.
எனவே, நீங்கள் அந்தத் தொகையைக் கட்டுவதற்கு சலான் 280-ஐ தேர்வு செய்ய வேண்டும். அதன்பின், டாக்ஸ் ஆன் அஸ்ஸெஸ்மென்ட் என்று கோடு நம்பர் 400-யைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் எந்த மதிப்பீட்டு வருடத்திற்கு இந்த ஆர்டர் வந்திருக்கிறதோ, அந்த வருடத்தை சலானில் குறிப்பிட்டு, பான் கார்டு எண் உள்பட அத்தனை விவரங்களையும் பூர்த்தி செய்து, வரி ரூ.60 செலுத்த வேண்டும்.’’
வயது 27. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் என்.ஆர்.ஐ ஆகிய நான், எஸ்.ஐ.பி முறையில் 15 ஆண்டுக்கு மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்ய ஃபண்டுகளைப் பரிந்துரைக்கவும்.
நெடுமாறன், யுஏஇ
த.சற்குணன், நிதி ஆலோசகர்

‘‘எஸ்.பி.ஐ ஃபோக்கஸ்டு ஈக்விட்டி ஃபண்ட், ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட், இன்வெஸ்கோ இந்தியா கான்ட்ரா ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ஆகிய நான்கு ஃபண்டுகளில் ஏதேனும் இரண்டில் தலா ரூ.2,500 முதலீடு செய்யுங்கள். ஆண்டுக்கு ஒருமுறை ஃபண்டுகளை ஆய்வு செய்துகொள்வது அவசியம்.’’
தொகுப்பு: தெ.சு.கவுதமன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.