
முனைவர் க.நெல்லைசந்தர்
நம்மில் பெரும்பாலோர் ஆயுள் காப்பீட்டு பாலிசி (லைஃப் இன்ஷூரன்ஸ்) எடுத்திருந்தாலும், கூடுதல் பயன் தரும் ரைடர் பாலிசியின் நன்மை களை அறியாமலே இருக்கிறோம்.
அது என்ன ரைடர் பாலிசி?
ரைடர் பாலிசி நாம் சாதாரணமாக வாங்கும் அடிப்படை லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியுடன், குறைவான பிரீமியத்தில் கூடுதலாக கவரேஜ் அளிப்பதாகும். அடிப்படை லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியுடன் மேலும் சிறிய தொகையை பீரீமியமாக கட்டினால் ரைடரின் முழுப் பலனையும் பெறலாம். ரைடர் என்பதைத் தமிழில் துணை பாலிசி என்று குறிப்பிடலாம்.

நிச்சயமற்ற இந்த வாழ்க்கையில் லைஃப் இன்ஷூரன்ஸ் அடிப்படை பாலிசிகள், நாம் சந்திக்கும் எல்லாவிதமான ரிஸ்க்கையும் முழுமையாகப் பாதுகாப்பு செய்வதில்லை. எண்டோவ்மென்ட் பாலிசி, மணிபேக் பாலிசி, டேர்ம் பாலிசி, யூலிப் பாலிசி, குழந்தைகள் பாலிசி என அனைத்து பாலிசிகளிலும் அடிப்படை பாலிசி என்று நாம் வாங்குவது எதுவாக இருந்தாலும், அதனுடன் ரைடரை கூடுதலாக வாங்கிச் சேர்ப்பதன்மூலம் கூடுதல் நிதிப் பாதுகாப்பை அடையும் முடியும். இந்த ரைடர் பாலிசியை ஒருவர் தனியாக வாங்க முடியாது, அடிப்படை பாலிசியுடன் சேர்த்துதான் வாங்கமுடியும். எனவே, இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போதே இந்த ரைடர் பாலிசியையும் எடுத்துவிடுவது நல்லது.

பாலிசி வாங்க விரும்புபவர்கள் தனது வயது, வருமானம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, சந்திக்கும் ரிஸ்க் போன்றவைகளை கருத்தில்கொண்டு போதிய அளவுக்குக் காப்பீட்டுத் தொகையுடன் (Sum Assured) அடிப்படை இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க வேண்டும். கூடவே பொருத்தமான ரைடரையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
முக்கிய ரைடர்கள்:
ஆக்ஸிடென்டல் டெத் பெனிபிட் ரைடர்: விபத்தினால் பாலிசிதாரர் இறக்க நேரிட்டால், அடிப்படை பாலிசியின் டெத் க்ளெய்முடன் ஆக்ஸிடென்டல் டெத் பெனிபிட் ரைடர் க்ளெமும் சேர்ந்து கிடைக்கும். இந்த ரைடரை வாங்கிய பாலிசிதாரர் இயற்கையாகவோ அல்லது நோய்வாய்ப்பட்டோ மரணம் அடைந்தால், அடிப்படை பாலிசியின் மூலம் மட்டும் டெத் க்ளெய்ம் பெறலாம். ஆக்ஸிடென்டல் டெத் பெனிபிட் ரைடர்மூலம் எந்தவித க்ளெய்மும் கிடைக்காது. விபத்தினால் மரணம் ஏற்பட்டால் மட்டுமே இந்த ரைடர் மூலம் இழப்பீடு கிடைக்கும்.
கடந்த ஆண்டு மட்டும் சென்னையில் 7,486 விபத்துகள் நடந்துள்ள, அதிக விபத்து நடைபெறும் மாநிலங்களில் நமது தமிழ்நாடு (11.4%) இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, ஆக்ஸிடென்டல் டெத் பெனிபிட் ரைடரை நாம் அவசியம் எடுத்து வைப்பது நல்லது.
ஆக்ஸிடென்ட் டிஸ்சபிலிட்டி பெனிஃபிட் ரைடர்: விபத்தில் சிக்குபவர்களில் பலர் உடல்காயத்துடன் உயிர் பிழைப்பார்கள். அவர்களுக்கு ஊனம் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த ஊனத்தின் காரணமாக எதிர்காலத்தில் உழைத்து வருமானம் ஈட்டமுடியாமல் போகலாம். இப்படிப்பட்ட நேரத்தில் ஒருவர் ஏற்கெனவே ஆக்ஸிடென்ட் டிஸ்சபிலிட்டி பெனிஃபிட் ரைடர் வாங்கி இருந்தால், குறிப்பிட்ட காலம் வரை ஒரு தொகை தொடர்ந்து இன்ஷூரரன்ஸ் கம்பெனி மூலம் கிடைக்கும்.
கிரிட்டிகல் இல்னஸ் ரைடர் : சுற்றுச்சூழல் பாதிப்பு, வாழ்க்கைமுறை மாற்றத்தால் இதயநோய், சிறுநீரகம் பாதிப்பு, புற்றுநோய், மூளை, நரம்பு மண்டலப் பிரச்னை, பக்கவாதம் போன்ற கொடிய நோய்கள் அதிக எண்ணிக்கையில் பலரையும் தாக்குகிறது. கொடிய நோய் பாதிப்பு ஏற்பட்டால், பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஒருவேளை கையில் பணம் இல்லாதபட்சத்தில், பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை கொடுக்க முடியாமல் அவர் இறந்துபோக வாய்ப்பு அதிகம்.

அடிப்படை இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கும்போது கிரிட்டிகல் இல்னஸ் ரைடர் சேர்த்து வாங்கிய பாலிசிதாரருக்குக் கொடிய நோய் இருப்பதாகத் தெரியவந்தால், கிரிட்டிகல் இல்னஸ் ரைடருக்கு உரிய முழு க்ளெய்ம் தொகை பாலிசிதாரருக்குக் கொடுக்கப்படும். கிரிட்டிகல் இல்னஸ் பாலிசியில் பொதுவாக, புற்றுநோய், சிறுநீரகக் குறைபாடு, கண்பார்வைக் குறைபாடு, பக்கவாதம், பைபாஸ் சர்ஜரி, மாரடைப்பு, உறுப்பு மாற்று சிகிச்சை போன்ற தீவிரப் பாதிப்பை உண்டாக்கும் நோய்களுக்கு இந்த ரைடரின் மூலம் க்ளெய்ம் பெறமுடியும்.
வெய்வர் ஆஃப் பிரீமியம் ரைடர் : விபத்தில் காயம் அடைந்தவருக்கு நிரந்தர ஊனம் ஏற்பட்டிருந்தால், அதைத் தொடர்ந்து அவரால் சரிவரப் பணிபுரிய முடியாது. எனவே, அவரின் வருமானம் தடைபடும். இந்நிலையில், வெய்வர் ஆஃப் பிரீமியம் ரைடரின் உதவியால், அடிப்படை பாலிசி மற்றும் பிற ரைடருக்கு இனிமேல் பிரீமியம் கட்ட வேண்டியதில்லை. அதேசமயத்தில், அடிப்படை பாலிசி முதிர்ச்சி அடையும் சமயத்தில் பாலிசிதாரருக்குக் கிடைக்க வேண்டிய முழு முதிர்ச்சித் தொகை கண்டிப்பாகக் கிடைக்கும்.
கேரன்டீட் இன்ஷூன்ரபிலிட்டி ரைடர் (Guaranteed Insurability Rider) : இளமைப் பருவத்தில் நாம் பாலிசி வாங்கும்போது நமது சம்பளம் மற்றும் ரிஸ்க் குறைவாக இருக்கும். எனவே, அன்றைய காலகட்டத்திற்குத் தேவைப்படும் காப்பீட்டுத் தொகைக்கு பாலிசி வாங்கியிருப்போம். ஆனால், வயது அதிகமாகும்போது குடும்பப் பொறுப்புகள் மற்றும் ரிஸ்க் அதிகமாகும். ஏற்கெனவே எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசியின் காப்பீட்டுத் தொகை, வயது அதிகமாகும்போது நமக்கு முழுமையான நிதிப் பாதுகாப்பைத் தராது. எனவே, அடிப்படை பாலிசியை முதலில் வாங்கும்போது இந்த ரைடரையும் சேர்த்து வாங்கினால், எந்த வயதில் எவ்வளவு கூடுதல் இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு தேவைபடுகிறதோ, அதை வாங்குவதற்கு எவ்வித மருத்துவ ஆய்வும் இல்லாமல் அனுமதி தருகிறது.
ஸ்பவுஸ் இன்ஷூரன்ஸ் ரைடர் (Spouse Insurance Rider):
இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கித் தனது குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பைக் கொடுத்த ஒருவர், தனது மனைவிக்குத் தனியாக பாலிசி வாங்க வேண்டாம். தனது பாலிசியுடன் ஸ்பவுஸ் இன்ஷூரன்ஸ் ரைடரைச் சேர்த்து வாங்கி மனைவிக்கும் இன்ஷூரன்ஸ் பாதுகாப்பைச் சுலபமாகக் கொடுக்கலாம்.
கவனத்தில் கொள்ளவேண்டியவை
ஒருவர் சந்திக்கும் ரிஸ்க்கை எதிர்கொள்ள அடிப்படை பாலிசியுடன் தனக்குப் பொருத்தமான எத்தனை ரைடர் பாலிசிகளை வேண்டுமானாலும் வாங்கலாம். ரைடரின் காப்பீட்டுத் தொகை அடிப்படை பாலிசியின் காப்பீட்டுத் தொகையைவிட அதிகமாக இருக்கக்கூடாது. அடிப்படை பாலிசியின் பயனீட்டுக் காலம் எவ்வளவோ, அதைவிடக் கூடுதலாக ரைடரின் பயனீட்டுக் காலம் இருக்கக் கூடாது.
வரிச் சலுகையும் உண்டு
ரைடருக்குச் செலுத்தும் பிரீமிய தொகைக்கும் 80சி பிரிவின்கீழ் வருமான வரிச் சலுகையும் பெறலாம்.
வாழ்க்கைத் தரம், குடும்பச் சூழல், எதிர்கொள்ளும் ரிஸ்க் மற்றும் எதிர்காலத் தேவையைக் கருத்தில்கொண்டு அடிப்படை பாலிசியுடன் பொருத்தமான ரைடரைத் தேர்வு செய்து கூடுதல் பலன் பெறும் வாய்ப்பைத் தவறவிட வேண்டாம்!