நடப்பு
Published:Updated:

அதிகபட்ச பாதுகாப்பைத் தரும் எலெக்ட்ரானிக் இன்ஷூரன்ஸ்!

எலெக்ட்ரானிக் இன்ஷூரன்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
எலெக்ட்ரானிக் இன்ஷூரன்ஸ்!

இன்ஷூரன்ஸ்

முனைவர் க.பாலசந்தர்

ர்வேஷ், தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். கைநிறைய சம்பளம் வாங்குகிறார். சர்வேஷின் நண்பர் ஆனந்த், ஆயுள் காப்பீட்டு நிறுவனமொன்றில் வேலை செய்கிறார். ஆனந்தின் ஆலோசனைப்படி, சர்வேஷ் தனக்குப் பொருத்தமான ஆயுள் காப்பீட்டு பாலிசியை வாங்கி, அதற்கான பிரீமியத்தையும் சரியாகக் கட்டிவந்தார். அந்த பாலிசி டாக்குமென்ட்டையும் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

முனைவர் க.பாலசந்தர்
முனைவர் க.பாலசந்தர்

இந்த நிலையில், அவருக்குப் பணி உயர்வுடன் வேறு ஊருக்கு இடமாற்றம் கிடைத்தது. வேறு ஊரில் வாடகைக்குக் குடியேறினார். அந்த வீடு மிகச் சிறியதாக இருந்ததால், மீண்டும் வீடு மாறினார். அந்தச் சமயத்தில், தனது இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு பிரீமியம் கட்டவேண்டிய ஞாபகம் வந்தது. பிரீமியம் தொகை கட்ட வேண்டுமெனில், பாலிசி நம்பர் வேண்டுமே. ஏற்கெனவே பிரீமியம் கட்டிய ரசீது, பாலிசி டாக்குமென்டைத் தேடிப் பார்த்தார். இரண்டுமுறை வீட்டை மாற்றியதில் அவையெல்லாம் எங்கு போயின என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், பாலிசிக்கான பிரீமியத்தைக் கட்டாமலே இருக்கிறார் சர்வேஷ்.

சர்வேஷ் தனது இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியத்தைக் கட்டி, அந்த பாலிசியைத் தொடர வேண்டுமெனில், இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து நகல் டாக்குமென்டினைப் பெறவேண்டும். அதற்கு ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டும். மேலும், நகல் டாகுமென்டைப் பெற இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு நேரில் சென்றுவர வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தொடர முடியும்.

சர்வேஷ் மட்டுமல்ல, அவரைப் போன்ற பலரும் இன்ஷூரன்ஸ் பாலிசி டாக்குமென்ட்டைத் தொலைத்துவிட்டுத் தவிக்கிறார்கள். இந்தக் கஷ்டம் இனி யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் எலெக்ட்ரானிக் இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட். அப்படியென்றால்..?

எலெக்ட்ரானிக் இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட்

எலெக்ட்ரானிக் இன்ஷூரன்ஸ்!
எலெக்ட்ரானிக் இன்ஷூரன்ஸ்!

நீங்கள் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் டாக்குமென்ட் பேப்பராக இருந்தால், அது தொலைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அதுவே, டிஜிட்டல் வடிவில் இருந்தால்...? உங்கள் கம்யூட்டர்மூலமாக இணையதளத்தில் எளிதில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். எலெக்ட்ரானிக் முறையில் இருக்கும் இந்த பாலிசி டாக்குமென்டுகள் தொலைந்துபோகும் என்கிற கவலையே இல்லாமல் இருக்கலாம்.

என்ன செய்யவேண்டும்?

நீங்கள் வைத்திருக்கும் இன்ஷுரன்ஸ் பாலிசியின் டாக்குமென்டினை டிஜிட்டல் வடிவில் மாற்றிக்கொள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ரெப்பாசிட்டரியில் எலெக்ட்ரானிக் இன்ஷூரன்ஸ் கணக்கை

(electronic Insurance Account – eIA) ஆரம்பிக்கவேண்டும். இந்தக் கணக்கில் உங்கள் பாலிசி குறித்த தகவல்கள் எலெக்ட்ரானிக் வடிவில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும்.

இன்ஷூரன்ஸ் எடுக்கும்போதே நீங்கள் விரும்பும் இன்ஷூரன்ஸ் ரெப்பாசிட்டரி நிறுவனத்தில் எலெக்ட்ரானிக் இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட்டை ஆரம்பிக்கலாம். அதில் பாலிசி பற்றிய தகவலைச் சேமிக்கவேண்டுமென்று அறிவுறுத்தினால், அவ்வாறே இன்ஷூரன்ஸ் நிறுவனம் செய்துதரும்.

ஒரு பாலிசிதாரர் ஏற்கெனவே இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறார். அதற்குரிய பாலிசி டாக்கு மென்டையும் பத்திரமாக வைத்திருக்கிறார். அந்த டாக்குமென்டை அவர் எலெக்ட்ரானிக் இன்ஷூரன்ஸ் வடிவிலும் வைத்துக்கொள்ள விரும்புகிறார் எனில், அந்தத் தகவலை இன்ஷூரன்ஸ் ரெப்பாசிட்டரி நிறுவனத்திடம் தெரிவித்தால்போதும், அவருடைய இன்ஷூரன்ஸ் பாலிசி குறித்த தகவல்களும் அந்த அக்கவுன்ட்டில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்படும்.

நான்கு இன்ஷூரன்ஸ் ரெப்பாசிட்டரி

ஐ.ஆர்.டி.ஏ.ஐ-வின் அனுமதியுடன் இந்தியாவில் தற்போது நான்கு இன்ஷூரன்ஸ் ரெப்பாசிட்டரி நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றின் இணையதள முகவரி வருமாறு...

https://nir.ndml.in/, http://www.cirl.co.in/, https://www.kinrep.com/, https://www.camsrepository.com/

எலெக்ட்ரானிக் இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட்டில் பாலிசி குறித்த தகவல்களைப் பதிந்து, பராமரிப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் ரெப்பா சிட்டரி நிறுவனங்கள் பாலிசிதாரரிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.

ஆத்தரைஸ்டு ரெப்ரசென்டேட்டிவ் (Authorised Representative)

பாலிசிதாரர் எலெக்ட்ரானிக் இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட்டில் இருக்கிற பாலிசி குறித்தத் தகவல்களை நிர்வாகம் செய்வது சிரமமாக இருப்பதாக நினைத்தால், அவர் நம்பும் ஒருவரை ‘ஆத்தரைஸ்டு ரெப்ரசென்டேட்டிவ்’-ஆக நியமிக்கலாம். பாலிசிதாரர் இறந்துபோனால், நாமினியின் சார்பாக க்ளெய்ம் தொகையைப் பெற ஆத்தரைஸ்டு ரெப்ரசென்டேட்டிவ் உதவி செய்வார். ஆனால், ‘ஆத்தரைஸ்டு ரெப்ரசென்டேட்டிவ்’ க்ளெய்ம் தொகைக்கு உரிமை கோர முடியாது.

எளிமை மற்றும் நன்மை

இந்தக் கணக்கைத் தொடங்க, விண்ணப்பப் படிவத்துடன் போட்டோ, அடையாளச் சான்று, முகவரிச் சான்று போதும். பாலிசிதாரருக்கு யூசர்நேம், பாஸ்வேர்டு, அக்கவுன்ட் எண் வழங்கப்படும். இதனைக்கொண்டு பாலிசிதாரர் இன்ஷூரன்ஸ் பாலிசி குறித்த தகவல்களை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்; பதிவிறக்கம் செய்து பிரின்ட்டும் எடுக்கலாம். ரெப்பாசிட்டரி நிறுவனம் வருடத்திற்கு ஒருமுறை இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்டை பாலிசிதாரருக்கு அனுப்பி வைக்கும்.

அனைத்துவகை இன்ஷூரன்ஸ்

லைஃப் இன்ஷூரன்ஸ், பென்ஷன் பிளான், ஜெனரல் இன்ஷூரன்ஸ் (மோட்டார் இன்ஷூரன்ஸ், மெடிக்ளெய்ம், டிராவல் இன்ஷூரன்ஸ்) ஹெல்த் இன்ஷூரன்ஸ் உட்பட அனைத்து வகை பாலிசிகளையும் எலெக்ட்ரானிக் இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட்டில் பராமரிக்கலாம். ஒரு பாலிசிதாரர் ஒரு எலெக்ட்ரானிக் இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட்டை மட்டுமே ஆரம்பிக்கலாம். ஒரு இன்ஷூரன்ஸ் ரெப்பா சிட்டரியில் உள்ள அக்கவுன்ட்டை வேறு இன்ஷூரன்ஸ் ரெப்பாசிட்டரிக்கு மாற்றும் வசதி உண்டு.

பாலிசிதாரரின் முகவரி, மொபைல் எண், இ-மெயில் மாறியிருந்தால், அதுகுறித்த தகவலை இன்ஷூரன்ஸ் ரெப்பாசிட்டரிக்குத் தெரிவிக்க வேண்டும். இன்ஷூரன்ஸ் ரெப்பாசிட்டரி பாலிசிதாரரின் அக்கவுன்ட்டில் இருக்கும் பாலிசி களை வழங்கியுள்ள அனைத்து இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கும் இந்தத் தகவலைத் தெரிவித்து தேவைப்படும் மாற்றங்களைச் செய்துதரும். பாலிசிதாரரே ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கும் நேரில் சென்று தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

பாலிசிதாரர் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குச் செலுத்தவேண்டிய பிரீமியம் தொகையை, இன்ஷூரன்ஸ் ரெப்பாசிட்டரிமூலமாக எளிதாக ஆன்லைனில் செலுத்தலாம். அதேபோல, பாலிசிதாரருக்கு இன்ஷூரன்ஸ் கம்பெனி தர வேண்டிய க்ளெய்ம் தொகையை, இன்ஷூரன்ஸ் ரெப்பாசிட்டரி வழியாக ஆன்லைனில் பாலிசி தாரரின் பேங்க் அக்கவுன்ட்டில் செலுத்திவிடும்.

உங்கள் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் டிஜிட்டல் வடிவில் மாற்றிக்கொள்ளலாமே!