
இன்ஷூரன்ஸ்

அக்ஷய் தந்த், நியமன ஆக்சுவரி கனரா ஹெச்.எஸ்.பி.சி லைஃப் இன்ஷூரன்ஸ்
மனித வாழ்க்கையில் எப்போது எது நடக்கும் என்கிற கணிக்க முடியாத தன்மை மற்றும் சூழ்நிலைகளே, ஒவ்வொருவரும் நிதி ரீதி யாகத் திட்டமிட வேண்டியதை அவசியமாக்கியுள்ளது. திடீரென்று ஒருவருக்குக் கடுமையான நோய் பாதிப்பு அல்லது உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் அவரால் வேலைக்குச் செல்ல இயலாது. இதுபோன்ற நிலையில், இதய நோய் போன்ற தீவிர நோய்கள் மற்றும் உடல் குறைபாடுகளுக்கு எதிராக நிதிப் பாதுகாப்பை வழங்கும் காப்பீட்டை எடுத்திருக்கும் பட்சத்தில் நிலைமையை சுலபமாக சமாளிக்க முடியும்.
மேலும், இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் சம்பந்தப்பட்ட நபரின் முதலீட்டுக் கலவையை (Investment Portfolio) பாதுகாப்பதாகவும் இருக்கும். அதாவது, உடல் நலக்குறைவால் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் காப்பீட்டு பாலிசி மூலம் குடும்பச் செலவுக்குப் பணம் வருவதால், அவரின் முதலீட்டுக் கலவையிலிருந்து பணத்தை எடுத்து செலவு செய்ய வேண்டியதில்லை.

ஊனத்துக்கான காப்பீட்டுத் திட்டம்...
அனைத்து உடல் குறை பாடுகளும் ஊனங்களும் விபத்துகளால் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. உடல்நலக் குறைபாடுகள், ஊனங்கள், சில தீவிர நோய்களால்கூட ஏற்படலாம். ஊனங்கள் தொடர்பான காப்பீட்டுத் (Disabilities Insurance) திட்டமானது, நோய் பாதிப்பு மற்றும் விபத்து மூலம் ஏற்படும் உடல் குறைபாடுகளால் ஏற்படும் வேலை இழப்புக்கு இழப்பீடு வழங்குவதாக இருக்கிறது. அதாவது, ஒருவரின் வாழ்க்கையில் ஊனத்தால் ஏற்படும் வருமான இழப்பு போன்ற சவாலான காலங் களில், இந்த ‘டிஸ்எபிலிட்டி இன்ஷூரன்ஸ்’ கைகொடுப் பதாக இருக்கிறது. உடல் பாதிப்பால், ஊனத்தால் வேலைக்குச் செல்ல இயலாத நிலையில் நிதி நெருக்கடியில் சிக்காமல் இயல்பான வாழ்க்கைமுறையைப் (Lifestyle) பராமரிக்க இந்த ‘டிஸ்எபிலிட்டி இன்ஷூ ரன்ஸ்’ உதவுகிறது.
பாலிசி வகைகள்...
பாலிசியின் கவரேஜ் காலத்தின் அடிப்படையில், ஊனத்துக்கான காப்பீடு குறுகிய கால ஊனக் காப்பீடு மற்றும் நீண்ட கால ஊனக் காப்பீடு (Short Term Disability Insurance and Long-Term Disability Insurance.) என இரு வகையாக இருக்கிறது.
குறுகிய கால ஊனத்துக் கான காப்பீடு, அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை இழப்பீடு கிடைப்பதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். கவரேஜ் தொகை தீரும் வரை குறுகிய கால ஊனக் காப்பீட்டு பாலிசியின்கீழ் பலன்களைப் பெறலாம்.
நீண்ட கால ஊனக் காப்பீடு என்பது நிரந்தர ஊனத்துக்கான பாதுகாப்புக் காப்பீடு ஆகும். காப்பீடு செய்யப்பட்ட தனிநபர் சில வருடங்கள் முதல் வாழ்நாள் முழுவதும் பணப் பலன்களைப் பெறலாம்.
நிதிப் பொறுப்புகள், குடும்பத்தின் நிதி நிலைமை...
ஊனக் காப்பீடு பாலிசியை எடுக்கும்முன் ஒருவர் குடும்பத்தின் நிதிப் பொறுப்புகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், குடும்பத்தின் நிதி நிலைமையை மதிப்பீடு செய்து அதற்கேற்ப பாலிசி யின் கவரேஜ் தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும். இவற்றின் அடிப்படையில், பொருத்தமான கவரேஜ் தொகையைத் தீர்மானிக்க வேண்டும். தேவைப்பட்டால் காப்பீட்டு ஆலோசகரின் உதவியை நாடலாம்.
ஊனமுற்றோர் காப்பீடு என்பது நிதிப் பாதுகாப்பு, மற்றும் வருமான ஆதாரத்துக்கான மாற்று ஏற்பாடு ஆகும். ஊனக் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியத்தைத் தவறாமல் செலுத்தி வருவது மூலம் அதை எப்போதும் செயல்பாட்டில் வைத்திருக்க முடியும். இந்த ஊனத்துக்கான பாலிசியின்கீழ் வழங்கப்படும் இழப்பீடானது நிறுவனம் மற்றும் பாலிசியின் தன்மைக்கேற்ப மாறுபடும். எனவே, பல்வேறு நிறுவனங்களின் பாலிசிகளை அலசி ஆராய்ந்து ஒருவருக்குத் தேவையான பாலிசியைத் தேர்வு செய்வது மிக முக்கியமாகும்.
விபத்தின் காரணமாக முழு நிரந்தர ஊனம் ஏற்பட்டால், பொதுவாக காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசியின் காப்பீட்டுத் தொகையில் குறிப்பிட்ட சதவிகித தொகையை வழங்கும்.
நம்மில் பலருக்கு பலவிதமான நிதிப் பொறுப்புகளும் கடன்களும் இருக்கின்றன. அது போன்ற நேரத்தில் உடல் ஊனத்தால் வேலைக்குச் செல்ல இயலவில்லை எனில், இந்த பாலிசி கைகொடுக்கும். குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் ஊனமுற்றவராகி, இனி வேலை செய்ய முடியாமல் போனால், நிதிக் கடமைகளை நிறைவேற்றுவது ஒரு கனவாகி விடும். இந்தச் சூழ்நிலை உருவாகாமல் தடுக்க ஊனத்துக்கான காப்பீடு பாலிசியை எடுப்பது அவசியமாகும்.