
மருத்துவக் காப்பீடு
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியம். பொதுவாக, குடும்பத் தலைவர், துணைவர் (கணவர் / மனைவி), மகன், மகள், சார்ந்திருக்கும் தந்தை மற்றும் தாய் ஆகியோர் குடும்பம் எனப்படும். இவர்கள் அனைவரையும் உள்ளடக்கி எடுக்கப்படும் மருத்துக் காப்பீடு, குடும்ப மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் (Family Health Insurance Plans) எனப்படும்.

இதில் ஒரே பாலிசியில் குடும்ப உறுப்பினர் கள் அனைவருக்கும் கவரேஜ் அளிக்கப்படுகிறது. அதாவது, குடும்பத் தலைவரோ, குடும்ப உறுப்பினர்களோ மேற்கொள்ளும் மருத்துவச் சிகிச்சைக்கு இந்த பாலிசியில் இழப்பீடு வழங்கப்படும். இந்த பாலிசியை இந்தியா விலுள்ள அனைத்து பொதுக் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் அளித்து வருகின்றன. அதிகபட்சம் ஆறு பேருடன் சேர்ந்து குடும்ப பாலிசியை எடுக்க முடியும்.
இந்தக் குடும்ப மருத்துவ பாலிசியில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தனித்தனி கவரேஜ் அல்லது சுழற்சி (Floater) முறையில் கவரேஜ் இருக்கும். ஃப்ளோட்டர் பாலிசியில் ஒற்றை பிரீமியம் (Single Premium) கட்டுவது மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சுழற்சி முறை யில் கவரேஜ் கிடைக்கும்.
குடும்ப மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகள் வருமாறு...

விண்ணப்பதாரரின் வயது...
பொதுவாக, குடும்ப மருத்துவக் காப்பீட்டு பாலிசியில் குடும்பத்தின் மூத்த உறுப்பினரின் வயதின் அடிப்படையில்தான் பிரீமியம் நிர்ணயம் செய்யப்படும். குடும்ப உறுப்பினரின் வயது 56 வயதுக்கு மேல் இருந்தால் குடும்ப பாலிசியின் பிரீமியம் அதிகமாகத்தான் இருக்கும். இதுபோன்ற நிலையில் வயதானவர் களுக்கு தனி பாலிசி அல்லது மூத்த குடிமக்களுக் கான சிறப்பு பாலிசியை எடுத்துவிட்டு, மற்றவர்களை இணைத்து குடும்ப பாலிசியை எடுப்பது லாபகரமாக இருக்கும்.
கவரேஜ் தொகை...
குடும்ப பாலிசியின் கவரேஜ் தொகையைப் பொறுத்துதான் பிரீமியத் தொகை இருக்கும். அதிக கவரேஜ் எனில், பிரீமியம் அதிகமாக இருக்கும்.
மருத்துவ வரலாறு...
குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ வரலாறு மற்றும் பெற்றோரின் மருத்துவ வரலாற்றைப் பொறுத்து பிரீமியம் நிர்ணயம் செய்யப்படும். பெற்றோருக்கு இதயம், நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருந்தாலோ, குடும்ப உறுப்பினர்களுக்கு இது போன்ற பாதிப்புகள் இருந்தாலோ குடும்ப பாலிசியின் பிரீமியம் அதிகரிக்கும்.
பாலிசி காலம்...
ஆண்டுக்கு ஒரு முறை பிரீமியம் கட்டுவதைவிட இரண்டு ஆண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து மொத்தமாக பிரீமியம் கட்டுவது லாபகரமாக இருக்கும். ஆனால், மொத்தமாக கட்டும்போது பெரிய தொகை தேவைப்படும். பண வசதியைப் பொறுத்து ஆண்டுக்கு ஒரு முறை பிரீமியம் கட்டுவதா அல்லது நீண்ட கால பாலிசியாக எடுப்பதா என்பதை முடிவு செய்துகொள்ளவும்,
துணை பாலிசிகள்...
அடிப்படை பாலிசி உடன் துணை பாலிசிகளை (Riders) எடுக்கும்போது பிரீமியம் அதிகரிக்கும். விபத்துக் காப்பீடு, கிரிட்டிக்கல் இல்னஸ் போன்ற துணை பாலிசியை எடுத்தால் பிரீமியம் அதிகரிக்கும்.
வசிக்கும் நகரம்...
வசிக்கும் நகரத்தைப் பொறுத்தும் பிரீமியம் அதிகரிக்கும். அதிக விபத்து மற்றும் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதி, அதிக மாசு நிறைந்த நகரத்தில் வசிக்கும்போது குடும்ப மருத்துவக் காப்பீட்டுக் கான பிரீமியம் அதிகமாக இருக்கும். இந்த நகரங்களில் வசிக்கும் நிலையில் விபத்தில் சிக்கவும் நோய் வாய்ப்படவும் அதிக வாய்ப்புகள் இருப்பதால், பிரீமியம் அதிகமாக இருக்கும்.
விண்ணப்பதாரரின் பணித் தன்மை...
விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பணித் தன்மைக்கு ஏற்ப பிரீமியம் இருக்கும். உதாரணமாக, வேலை விஷயமாக அதிக பயணம் செய்பவர்கள் மற்றும் புகையை சுவாசிக்கக்கூடிய, உலோகம் சார்ந்த பணிகளில் ஈடுபடுபவர் களைக் கொண்ட குடும்ப பாலிசியில் பிரீமியம் அதிகமாக நிர்ணயம் செய்யப்படும்.
புகை, மதுப் பழக்கம்...
குடும்ப உறுப்பினர்களுக்கு அடிக்கடி புகை மற்றும் மது குடிக்கும் பழக்கம் இருந்தால் பிரீமியம் அதிகரிக்கும். அடிக்கடி தொடர்ந்து புகை பிடிப்பவர்கள், மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கு இதய பாதிப்பு போன்ற தீவிர நோய் வர வாய்ப்பிருப்பதால், அது போன்றவர்களைக் கொண்ட குடும்ப பாலிசியில் பீரிமியம் அதிகமாக இருக்கும்.

கவரேஜ் தொகை...
ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் ஒருவரின் ஆண்டு சம்பளத்தைப் போல் சுமார் 15 மடங்குக்கு இணையான தொகைக்கு பாலிசி எடுக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறையாகும். ஆனால், மருத்துவக் காப்பீட்டைப் பொறுத்தவரை, பல்வேறு விஷயங்களைக் கவனித்துதான் பாலிசி தொகையை முடிவு செய்ய முடியும்.
வயது, மருத்துவ வரலாறு, வசிக்கும் நகர் உள்ளிட்டவைகளைக் கவனிக்க வேண்டும். மேலும், ஒருவரால் எந்த அளவுக்கு சுலமாக பிரீமியம் கட்ட முடியும் என்பதையும் பார்க்க வேண்டும். பணிபுரியும் நிறுவனத்தில் மருத்துவக் காப்பீடு எடுத்துத் தரப்பட்டிருந்தால் அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், பொதுவாக, நான்கு பேர் கொண்ட குடும்பத்தினருக்கு சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு பாலிசி எடுத்துக்கொள்வது நல்லதாகும்.
அலுவகத்தில் எந்தளவு தொகைக்கு பாலிசி இருக்கிறதோ, அதை ரூ.10 லட்சத்திலிருந்து கழித்து மீதித் தொகைக்கு எடுத்துக்கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் பாதிப்பு இருக்கிறது எனில், அலுவலக பாலிசி தவிர சுமார் 10 லட்சத்துக்கு பாலிசி இருப்பது நல்லது.
குடும்பத் தலைவர், குடும்பத் தலைவி, இரண்டு பிள்ளைகளைக்கொண்ட நான்கு பேர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சத்துக்கு குடும்ப மருத்துவக் காப்பீடு எடுக்க ஆண்டு பிரீமியம் சுமார் ரூ.25,000 ஆகும். (பார்க்க, அட்டவணை).

கடந்த ஓராண்டில் மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் சராசரியாக சுமார் 5% அதிகரித்திருக்கிறது. இதற்குக் காரணம், மருத்துவ பணவீக்கம் என்கிற மருத்துவச் செலவுகள் அதிகரித் திருப்பதாகும்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பிரீமியம் அதிகரிக்கும். ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியில் பிரீமிய அதிகரிப்பு இல்லாமல் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினரைச் சேர்க்க உதவுகிறது.
அதே நேரத்தில், குடும்ப பாலிசி, ஒவ்வொருவருக்கும் தனித்தனி கவரேஜ் கொண்டதாக இருக்கும் பட்சத்தில், ஒருவரைப் புதிதாக சேர்க்கும்பட்சத்தில் பிரீமியம் கணிசமாக அதிகரிக்கும். பொது வாக, தனிப்பட்ட பாலிசிகளைவிட ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டங்களில் பிரீமியம் குறைவாக இருக்கும்.