
நம் வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களுக்கு செலவு செய்யும் நாம், மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுக்க நிறையவே யோசிக்கிறோம்..!
ராதிகா கணேசன், நிதி & வாடிக்கையாளர் பிரிவு தலைவர், https://winworthwealth.com/
நம் மக்களில் பலருக்கும் மருத்துவக் காப்பீட்டின் முக்கியத்துவம் தெரியாமலே இருந்தது. ஆனால், கோவிட்டுக்குப் பிறகு, பலரும் மருத்துவக் காப்பீடு ஏன் எடுக்க வேண்டும் என்பதை ஓரளவு உணரத் தொடங்கி இருக்கின்றனர். நாம் எதற்கு மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுக்க வேண்டும், அப்படி எடுக்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நம் மக்களில் பலரும் மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுக்காமல் இருப் பதற்கு முக்கியமான காரணம், நம் உடம்புக்கு என்ன பிரச்னை வந்துவிடப் போகிறது என்ற அஜாக்கிரதை யான எண்ணம்தான். நம் உடம்புக்கு எந்த நோயும் வராது; அப்படி ஏதாவது பிரச்னை வந்தால், அப்போது செலவு செய்துகொள்ளலாம் என்றே பலரும் நினைத்து, பாலிசி எடுக்காமல் இருக்கிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு ஒரு விஷயம் புரியவில்லை. மருத்துவக் காப்பீடு எடுக்காமல் இருந்துவிட்டு, திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டால், லட்சக் கணக்கில் பணம் செலவாகும். அந்தச் சமயத்தில், பணம் இல்லாத நேரத்தில் யாரும் நமக்கு உதவி செய்ய வருவார் களா என்று தெரியாது.
மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுத்து வைத்திருந்தால், அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால், அந்த பாலிசியின் மூலம் மருத்துவ மனைக்கான செலவுகளை எந்தப் பிரச்னையும் இல்லாமல் சமாளித்து விடலாம்.
பணமில்லா (Cashless) சிகிச்சை வசதிகொண்ட பாலிசி எனில், பணம் எதுவும் கட்டாமலேயே மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்ந்துவிடலாம். மருத்துவக் காப்பீட்டு பாலிசி எந்த கம்பெனியில் எடுத்திருக்கிறோமோ, அந்த கம்பெனி யிலிருந்து அனுமதி கிடைத் ததும் மருத்துவமனையில் சிகிச்சையை ஆரம்பித்து விடலாம் என்பதால் கவலை இல்லாமல் இருக்கலாம்.
உதாரணமாக, மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுக்காத ஒருவருக்கு திடீரென மாரடைப்பு வருகிறது. அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை செலவாகும். அவ்வளவு பணம் கையில் இருந்தால், செலவு செய்துவிடலாம். இல்லையெனில், எங்கே போவது? அந்த மாதிரியான நேரத்தில் மருத்துவக் காப்பீடு பாலிசி நமக்குக் கைகொடுக்கும். நம் கையில் இருந்து பெரிய அளவில் பணம் செலவு செய்யாமல், பிரச்னையை சமாளிக்கலாம்.
ஒட்டுமொத்தமாக 20 வருடத்தில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் பிரீமியம் கட்டுவதாக வைத்துக் கொள்வோம். ஆனால், அந்த 20 வருடத்தில் எத்தனையோ முறை சிகிச்சைக்காக மருத்துமனையில் சேர்ந்திருக்கலாம். எவ்வளவோ தொகையை க்ளெய்ம் செய்திருக்கலாம். மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுக்காமல் இருந்திருந்தால், மருத்துவமனை செலவுகள் அனைத்துக்கும் கையில் இருந்துதான் காசு போட்டுக் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
எனக்கு எந்த நோயும் வராமல் இருந்து, மருத்துவ மனைக்கே போகாமல் இருந்திருந்தால் எனக்கு பிரீமியம் செலுத்திய தொகை மிச்சம்தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், மருத்துவமனையில் சேர்ந்து பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டிய நிலை வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்..? எதிர் பாராத நிகழ்வுகள் எப்போதும் வரலாம். எனவே, அதற்காக நாம் குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவதே பாதுகாப்பான நிலையை உருவாக்கும்.
நம் வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களுக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம். மனசந்தோஷத்துக் காக மட்டுமே நாம் செய்யும் அந்தச் செலவுகளுக்கு நாம் கணக்கே பார்ப்பதில்லை. ஆனால், மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுக்கும்போது மட்டும் நம்மில் பலரும் நிறையவே யோசிப்பதைப் பார்க்கிறோம். மருத்துவக் காப்பீட்டுக்கு ஆண்டுக்கு ஒரு முறைதான் பிரீமியம் செலுத்தப்போகிறோம். இளம் வயது குடும்பம் எனில், ஒரு தனிநபருக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2,000-தான் பிரீமியமாகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால், ரூ.5 லட்சம் கவரேஜ் கொண்ட ஒரு பாலிசிக்கு சுமார் ரூ.8,000-தான் பிரீமியமாக இருக்கும்.
வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்ட இந்தக் காலத்தில் நம் உடம்புக்கு எந்த நோயும் வராது என் றெல்லாம் நாம் சொல்ல முடியாது. நம் மூதாதையர்கள் சாப்பிட்ட உணவுகளை நாம் சாப்பிடுவதில்லை. அவர்கள் போல, நாம் ஓடியாடி வேலை பார்ப்ப தில்லை. உடலுக்கும் மனதுக்கு அவ்வப்போது ஓய்வு தந்து, உற்சாகப்படுத்திக்கொள்வதில்லை. யாரும் சரியான நேரத்துக்கு சாப்பிடுவதில்லை; தூங்குவ தில்லை, இந்தப் பிரச்னை எல்லாத் தரப்பினரிடமும் உண்டு என்றாலும், தகவல் தொழில்நுட்ப துறையினர் இது மாதிரியான வாழ்க்கை முறையினால் அதிகமாக பாதிப்படைந்துள்ளனர்.
இன்னும் சிலர், வேலை பார்க்கும் அலுவலகத்தில் தரப் பட்டுள்ள குழுக் காப்பீட்டை (Group Insurance) மலை போல நம்பி இருக்கிறார்கள். இந்தக் குழுக் காப்பீட்டு பாலிசி மட்டுமே ஒருவருக்குப் போதுமானதாக இருக்காது. ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்துக்கு வேலை மாறும்போது, பழைய நிறுவனத்தில் எடுத்த மருத்துவக் காப்பீடு பாலிசி புதிய நிறுவனத்தில் செல்லுபடி ஆகாது. புதிய நிறுவனத்தில் நீங்கள் வேலைக்குச் சேர்ந்த பிறகு உடனடியாக உங்களை அவர்களின் குழு மருத்துவக் காப்பீட்டில் சேர்க்க கொஞ்சம் காலம் பிடிக்கலாம். மேலும், புதிய நிறுவனத்தில் குழுக் காப்பீட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதும் கேள்விக்குறி தான்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அலுவலகங்களில் தரப்படும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளுக்குத் தரப்படும் கவரேஜ் தொகை என்பது ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சத்துக்கு உள்ளாக மட்டுமே இருக்கும். மருத்துவச் செலவானது ஆண்டுதோறும் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், இந்த கவரேஜ் தொகை என்பது நிச்சயம் போதாது. மருத்துவமனையில் ரூ.4 லட்சம் செலவாகும்பட்சத்தில் குழுக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் தந்துவிட்டு, மீதமுள்ள ரூ.2 லட்சத்தை உங்கள் கையில் இருந்துதான் தர வேண்டும்.
ஆனால், நீங்கள் தனியாக ஒரு மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுத்திருந்து, குழுக் காப்பீட்டு பாலிசியும் உங்களிடம் இருந்தால், இந்த இரண்டு பாலிசிகள் மூலமும் மருத்துவமனைக்கான செலவுகளை க்ளெய்ம் செய்ய முடியும்.
ஒருவர் ஆயுள் காப்பீட்டு பாலிசியை எடுப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு முக்கியம் மருத் துவக் காப்பீட்டு பாலிசியை எடுப்பதாகும். இந்த பாலிசியை எடுப்பவர்கள் மருத்துவமனை தொடர்பான செலவுகள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கலாம். பல லட்சம் ரூபாயை மருத்துவமனைக்குச் செலவு செய்வதைவிட சில ஆயிரம் ரூபாயைத் தந்து மருத்துவக் காப்பீட்டு பாலிசியை அனைவரும் எடுக்கலாமே!
பெற்றோருக்கு மருத்துவக் காப்பீடு..!
வயது முதிர்ந்த, நோய்வாய்ப்பட்ட பெற்றோருக்கு மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுக்க வேண்டும் எனில், அதிகமாக பிரீமியம் கட்ட வேண்டியிருக்கிறது என்று பலரும் யோசிக்கிறார்கள். மூத்த குடிமக்களுக்கு வயதுக்கு ஏற்ப பிரீமியம் தொகையும் கூடுதலாகவே இருக்கும். ஆனால், பெற்றோர்களுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் அவர்களுக்கும் மருத்துவக் காப்பீடு பாலிசி எடுக்கத் தவறக் கூடாது.
உதாரணமாக, பெற்றோர் இருவருக்கும் சேர்த்து ரூ.10 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு எடுக்க ஆண்டுக்கு சுமார் ரூ.50,000 பிரீமியம் கட்ட வேண்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். முதல் வருடம் ரூ.50,000 பிரீமியம் செலுத்திய சில மாதங்களில், அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ மருத்துவச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது. இப்போது நீங்கள் செலுத்தியிருக்கும் பிரீமியம் ரூ.50,0000-தான். ஆனால், நீங்கள் ரூ.10 லட்சம் வரை சிகிச்சை எடுத்துக்கொண்டு, க்ளெய்ம் செய்யலாம். ஆனால், நீங்கள் மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுக்கவில்லை எனில், இந்தச் செலவை கையிலிருந்துதான் செய்ய வேண்டியிருக்கும். பணம் இல்லாத நிலையில் கடன் வாங்க வேண்டியிருக்கும்; முக்கியமான சொத்தை அடமானம் வைத்து பணத்தைத் திரட்ட வேண்டியிருக்கும். இந்த மாதிரியான நிலை வராமல் இருக்க மருத்துவக் காப்பீடு அவசியமாகும்.