
மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை எடுக்கும்போது, அறை வாடகை வரம்பு விஷயத்தை உன்னிப்பாகப் பாருங்கள்...
பாஸ்கர் நெருர்கர், தலைவர், மருத்துவக் காப்பீட்டுப் பிரிவு, பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்
இன்றைய சூழலில் மருத்துவக் காப்பீடு என்பது அனைவருக்கும் மிக அவசியமான ஒன்று. எதிர்பாராதவிதமாக ஏற்படக் கூடிய நிதி நெருக்கடியைச் சமாளிக்க இது உதவுகிறது. மருத்துவச் சிகிச்சை செலவு கள், மருந்துகள், ஆம்புலன்ஸ் எனப் பல செலவுகளைச் சமாளிக்க மருத்துவக் காப்பீடு உதவியாக இருக்கிறது. ஆனால், மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது பாலிசிதாரர் கள் அதில் உள்ள உட்பிரிவுகள், நுணுக்கமான நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை சரிவரப் பார்ப்பதில்லை.

இதனால் க்ளெய்ம் செய்யப் போகும்போது குழப் பமும் அதிருப்தியும் ஏற்படு கிறது. அப்படி குழப்பத் தையும் அதிருப்தியையும் உண்டாக்கக்கூடிய ஒரு விஷயம்தான் ‘அறை வாடகை வரம்பு.’ இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும், க்ளெய்ம் செய்யும்போது இதனால் வரக்கூடிய பிரச்னைகள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

அறை வாடகை வரம்பு என்றால் என்ன?
அறை வாடகை வரம்பு என்பது மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாலிசிதாரர் எடுக்கும் அறைக்குக் காப்பீட்டு நிறுவனம் வழங்கும் அதிகபட்ச வாடகைத் தொகையைக் குறிக்கிறது.
பொதுவாக, காப்பீட்டு பாலிசியின் கவரேஜ் தொகை யில் ஒரு குறிப்பிட்ட சத விகிதம் அறை வாடகை வரம்பாக நிர்ணயிக்கப்படும். உதாரணமாக, அறை வாடகை வரம்பு காப்பீட்டுத் தொகை யில் 1% என வைத்துக் கொள்வோம். காப்பீட்டுத் தொகை ரூ.5,00,000 எனில், அறை வாடகை வரம்பு 5,000 ரூபாயாக வரையறுக்கப்படும்.
ஒரு சில பாலிசிகளில் அறை வாடகை வரம்பு சத விகிதத்தில் இல்லாமல் தொகை கணக்கில் குறிப் பிடப்படும். உதாரணமாக, பாலிசியில் அறை வாடகை வரம்பு ரூ.3,000 எனக் குறிப்பிடப்படும்.
சில காப்பீட்டு நிறுவனங் கள் அறையின் வகை சார்ந்தும் வரம்புகளை விதிப்பதுண்டு. அதாவது, இரண்டு பேர் பகிரும் அறை கள் அல்லது தனி அறைகள் அல்லது டீலக்ஸ் அல்லாத அறைகள் என வரம்பு விதிக்கப்படலாம்.
இப்படி எதுவாக இருந்த லும், அறை வாடகை வரம்பு குறித்த நிபந்தனைகள் பாலிசி ஆவணத்தில் வெளிப்படை யாகக் குறிப்பிடப்படும்.
பாலிசிதாரர் அறை வாடகை வரம்பை மீறினால்..?
மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ள அறை வாடகை வரம்பைக் காப்பீடு செய்தவர் மீறினால், அவர் க்ளெய்ம் செய்ய விண்ணப்பிக்கும்போது காப்பீடு நிறுவனம் ‘விகிதாசாரக் கழிவுகள்’ என்கிற நடைமுறையைச் செயல்படுத்தும்.
இந்த நடைமுறையின்படி, பாலிசிதாரர் அறை வாடகை வரம்பை மீறும்போது, எவ்வளவு சதவிகிதம் அதிகமாகிறதோ, அதற்கேற்ற விகிதாசாரத்தில் காப்பீட்டு நிறுவனம் பாலிசிதாரரின் அனைத்து மருத்துவச் செலவுகளிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தைப் பிடித்தம் செய்துவிடும். ஏனெனில், பெரும்பாலும் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர் பரிசோதனை, அறுவைசிகிச்சை கட்டணம் அல்லது பிற கட்டணங்கள் என அனைத்துமே அறை வாடகையுடன் நேரடியாகத் தொடர்புடையவையாக இருக்கின்றன. எனவே, பாலிசிதாரர் தேர்ந்தெடுக்கும் அறையின் வகையைப் பொறுத்து அனைத்துக் கட்டணங்களும் மாறுபடும்.
உதாரணமாக, அறுவைசிகிச்சைக்கான கட்டணம் இரண்டு பேர் பகிரும் அறை எனில், ரூ.15,000; அதுவே தனி ஏசி அறை எனில், ரூ.20,000 ஆகும். மேலும், சூட் போன்ற உயர் வகை அறை எனில், அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.1 லட்சம் வரை ஆகும்.இதை ஓர் உதாரணத்துடன் புரிந்துகொள்ளலாம்.
ஒரு நபர் ரூ.3 லட்சம் காப்பீட்டுத் தொகை உள்ள பாலிசியை வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். இந்த பாலிசியின் அறை வாடகை வரம்பு காப்பீட்டுத் தொகையில் 1% எனில், அறை வாடகை வரம்பு ஒரு நாளுக்கு ரூ.3,000 ஆகும். அந்த நபர் அறுவைசிகிச்சை செய்து மூன்று நாள்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நபருக்கு அறை வாடகை வரம்பு பற்றித் தெரியவில்லை. ஒரு நாளுக்கு ரூ.4,000 வாடகை இருக்கக்கூடிய அறையை அவர் தேர்வு செய்தால், காப்பீட்டு நிறுவனம் மூன்று நாள்களுக்கு ரூ.9,000 அறை வாடகையாக வழங்கும். கூடுதலாக வரும் ரூ.3000 (நாளுக்கு ரூ.1,000 கூடுதல் எனில்) பாலிசிதாரர் தன்னுடைய பணத்தை மருத்துவமனைக்குத் தருவார் என்று நினைக்கலாம்.
ஆனால், கணக்கு அப்படி அல்ல. ‘விகிதாசாரக் கழிவுகள்’ நடைமுறைப்படி அனைத்து மருத்துவ செலவுகளிலிருந்தும் காப்பீடு நிறுவனம் குறிப்பிட்ட சதவிகித தொகையைக் கழித்துவிடும். நாம் எடுத்துக்கொண்ட உதாரணப்படி, விகிதாசார கழிவு 75 சதவிகிதமாகக் கணக்கிடப்படும். அந்த வகையில், அறுவைசிகிச்சை செலவு ரூ.50,000 எனில், கழிவுக்குப் பிறகு ரூ.37,500 மட்டுமே க்ளெய்ம் தொகையில் சேர்க்கப்படும். அதேபோல, மருத்துவர் கட்டணம் ரூ.20,000 எனில், அதில் ரூ.15,000 க்ளெய்ம் தொகைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
மேலும், இந்த ‘விகிதாசாரச் கழிவுகள்’ நடை முறைக்குள் மருந்துகள் வருவதில்லை. காரணம் எம்.ஆர்.பி விலையில் விற்பனை செய்யப் படுவதாலும், மருத்துவ செலவுகளுடன் இதைத் தொடர்புடையதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதாலும் ஆகும். மேலும், இந்த விகிதாசார நடைமுறை கன்ஸ்யூமபிள்ஸ், இம்ப்ளான்ட்ஸ், மெடிக்கல் உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தாது. முக்கியமாக, ஐ.சி.யு கட்டணங்களிலும் இந்த நடைமுறை பொருந்தாது.
அறை வாடகை வரம்பு மருத்துவக் காப்பீட்டின் க்ளெய்ம் தொகையில் முக்கிய தாக்கத்தைக் கொண்டிருப்பதால், மருத்துவக் காப்பீடு எடுக்கும் அனைவரும் பாலிசியின் அறை வாடகை வரம்பு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த அறை வாடகை வரம்புக்கு ஏற்ப மருத்துவமனை அறைகளைத் தேர்வு செய்து கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

என்ன தீர்வு?
இந்த அறை வாடகை வரம்பு பிரச்னைக்கு வேறு தீர்வு ஏதும் இருக்கிறதா எனில், உண்டு. அறை வாடகை வரம்பை மீறும் போது வரக்கூடிய இழப்பை சமாளிக்க வேறு தீர்வு இருக்கிறது. சில காப்பீடு நிறுவனங்கள் ‘Room Rent Co-pay Waiver’ என்ற ஆட் ஆன் வசதியைத் தருகின்றன. கூடுதலாக குறிப்பிட்ட தொகை பிரீமியம் செலுத்துவதன் மூலம் இந்த ‘ஆட் ஆன்’ வசதியைப் பெறலாம். இதன்மூலம் அறை வாடகை வரம்பு தொடர்பாக உள்ள கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிக்கலாம். மேலும், அறை வாடகை வரம்பு கட்டுப்பாடுகள் இல்லாத பாலிசிகளையும் தேர்வு செய்யலாம்.
பாலிசி எடுக்கும் முன் அறை வாடகை வரம்பு என்றால் என்ன, அதனால் க்ளெய்ம் தொகையில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன எனப் புரிந்து கொள்ளுங்கள். மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது இந்த அறை வாடகை வரம்பு விஷயத் தில் சொல்லப்பட்டுள்ள விதி முறைகளை உன்னிப்பாகப் பாருங்கள். பாலிசியின் விதி முறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி எப்போதும் முழுமையாகத் தெரிந்துகொள்வது சிறந்தது. இதன்மூலம் க்ளெய்ம் நேரத்தில் ஏற்படக்கூடிய குழப்பம் மற்றும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.