நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வாழ்க்கையில் கவலை இல்லாமல் இருக்க இந்தக் காப்பீடுகளைக் கட்டாயம் எடுங்கள்..!

இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஷூரன்ஸ்

பல காப்பீடுகளை தேவை இல்லாத செலவுகள் என விட்டுவிடுகின்றனர். இது மிகப்பெரிய தவறு!

நம்மில் பலர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளை எடுத்திருக் கிறோம். இவை தவிர, வேறு சில பாலிசிகளையும் எடுப்பது அவசியம். ஏன் தெரியுமா?

அபுபக்கர் சித்திக் 
செபி பதிவு பெற்ற நிதி ஆலோசகர், 
Wealthtraits.com
அபுபக்கர் சித்திக் செபி பதிவு பெற்ற நிதி ஆலோசகர், Wealthtraits.com

ஷேர் ஆட்டோவால் இடித்துத் தள்ளப்பட்டு விழுந்ததில் என் நண்பருக்கு இடதுகாலின் பல்வேறு பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அறுவைசிகிச்சை வழியாக உலோகப் பட்டையும் ஆணிகளும் கொண்டு அது சரி செய்யப்பட்டது. அதற்கு அவசரமாகத் தேவைப்பட்ட பணத்தை அவர் நண்பர்களிடம் கடன் வாங்கித்தான் சமாளித்தார். பிறகு, நண்பர்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டி வங்கியில் தனிநபர் கடன் வாங்கினார். அதற்கான மாதத் தவணையைக் கட்டி வரும் நிலையில், அவரது காலிலிருந்த உலோகப் பட்டையையும் ஆணிகளையும் நீக்க இப்போது மீண்டும் மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். அதற்காக மேலும் கடன் வாங்கியிருக்கிறார்.

வாழ்க்கையில் கவலை இல்லாமல் இருக்க இந்தக் காப்பீடுகளைக் கட்டாயம் எடுங்கள்..!

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பலருக்கும் நேர்வதுதான் இது. பெரும்பாலானோர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகள் எடுத்திருப்பார் கள். ஆனால், அவை மட்டுமே போதாது. அதன் தொடர்ச்சியாக, ஒரு தனிநபர் மற்றும் அவரின் குடும்பம் சார்ந்த தேவைகளுக்கு அத்தியாவசிய மாக எடுக்கவேண்டிய பிற காப்பீட்டுத் திட்டங்கள் பற்றி இனி பார்ப்போம்.

தனிநபர் விபத்துக் காப்பீடு...

விபத்தால் ஏற்படும் உடல்ரீதியான காயங்கள் அனைத்துக்குமான மருத்துவச் செலவை இழப்பீடு செய்யும் காப்பீட்டுத் திட்டம் இது. ஏதேனும் நோயால் ஏற்படும் மரணத்துக்கோ, காயங்களுக்கோ இதில் காப்பீடு இல்லை. பெரும்பாலான தனிநபர் விபத்துக் காப்பீட்டில், விபத்தால் ஏற்படும் மரணத்துக்கு முழுக்காப்பீட்டுத் தொகையும் இழப்பீடாக வழங்கப்படும். கைகால்கள், கண்கள் போன்றவற்றின் இழப்புக்கு பாதிப்புக் கேற்ற அளவு இழப்பீடு வழங்கப்படும்.

விபத்தால் உண்டாகும் நிரந்தரமான முழுச் செயலிழப்புக்கு (Permanent Total Disablement) முடக்குவாதம் போன்றவற்றுக்கு 100% காப்பீட்டுத் தொகை இழப்பீடாகக் கிடைக்கும். தற்காலிகமான முழுச் செயலிழப்புக்கு (Temporary Total Disablement) இரண்டு கால்களும் எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டு நடமாட முடியாமல் போகும் நிலையில், இழப்பீடாக வாராந்தர உதவித் தொகை அளிக்கப்படும். இதற்கான பணவரம்பு (காப்பீட்டுத் தொகையில் 1%) காலவரம்பும் (அதிகபட்சம் 100 வாரங்கள்) உண்டு.

விபத்தில் இறந்துவிட்டால் விபத்து நடந்த இடத்திலிருந்து வீடு வரை உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் செலவுக்கு இழப்பீடு வழங்கப்படும். இதற்கும் வரம்பு உண்டு.

இறப்போ, நிரந்தரமான முழுச் செயலிழப்போ ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட நபரின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கல்வி நிதி அளிக்கப்படும். இது அதிகபட்சமாக இரு குழந்தைகளுக்கு வழங்கப்படும். இந்த பாலிசித் திட்டத்தில் உள்ள வசதி மற்றும் பயன்களைப் பரிசீலித்துச் சரியான காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.

வாழ்க்கையில் கவலை இல்லாமல் இருக்க இந்தக் காப்பீடுகளைக் கட்டாயம் எடுங்கள்..!

வீட்டு உடைமையாளர் காப்பீட்டுத் திட்டம்....

ஒரு தனிநபர் தன் உயிர் மற்றும் உடல் சார்ந்து ஏற்பட சாத்தியமுள்ள விரும்பத்தகாத நிகழ்வுகளால் உண்டாகும் நிதிப் பிரச்னைகளிலிருந்து காத்துக்கொள்ள காப்பீடு எடுப்பதைப் போலவே, அவர் தனது சொத்துகளையும் காப்பீடு செய்துகொள்ள வேண்டும். 2015–ம் ஆண்டில் வட தமிழகத்தை மூழ்கடித்த வெள்ளமும், 2016–ம் ஆண்டில் வார்தா புயலும் இதன் தேவையை நமக்கு நன்கு உணர்த்தின.

பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் நாசமடைந்தன. அதில் பாதிக்கப்பட்ட வீடுகள், கடை கள் போன்ற வாழ்வாதாரச் சொத்துகளை மீள்கட்டுமானம் செய்யத் தேவைப்பட்ட பணத்துக்கு அந்தச் சொத்து களைக் காப்பீடு செய்யாதவர் கள் பட்ட பாடு படுபயங்கர மானவை. எனவே, வீட்டு உடைமையாளர் காப்பீடு என்பது ஒவ்வொரு வருக்கும் மிக மிக அவசியமான ஒன்று.

வீட்டுக் கட்டடம் மற்றும் அதிலுள்ள சாதனங்கள் தீயில் நாசமானாலோ, பின்வரும் தீமைகளால் பாதிப்புக்கு உள்ளானாலோ இழப்பீடு உண்டு. மின்னல், பூகம்பம், அதிர்வு மற்றும் நிலச்சரிவுப் பாதிப்புகள். வெள்ளம், நீரில் மூழ்குதல், புயல்மழை, சூறாவளி, சுழல்காற்று போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள்தான் அவை. இவற்றோடு, வீட்டை உடைத்து கொள்ளை, திருட்டு, பொருள்கள் காணாமல் போதல் போன்ற வற்றுக்கும் இழப்பீடு உண்டு. விலை மதிப்புள்ள நகைகள் போன்றவை காணாமல் போனாலோ, பாதிப்புக்கு உள்ளானாலோ இந்தக் காப்பீட்டில் இழப்பீடு வழங்கும். ஆனால், பாலிசி எடுக்கும்போதே அந்தப் பொருள்களின் பட்டியல் தெரிவிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது அவசியம்.

வீட்டு உரிமையாளருக்கு விபத்தால் ஏற்படும் உடல் மற்றும் உயிர் பாதிப்புக்கும், ஒரு வரம்புக்கு உட்பட்டு இந்தக் காப்பீட்டின் மூலம் இழப்பீடு அளிக்கும். மூன்றாம் நபரின் உடலுக்கோ உடைமைக்கோ பாதிப்பு ஏற்பட்டால் உண்டாகும் சட்டபூர்வமான பொறுப்பைத் தீர்க்கும் இழப்பீடும் இந்தக் காப்பீட்டில் உண்டு. விபத்தால் வீட்டில் வேலை செய்யும் நபர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கும் இழப்பீடு அளிக்கப்படுகிறது. சிற்சில பல மாறுதல்களுடன் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை அளிக்கின்றன.

வாகனக் காப்பீட்டுத் திட்டம்...

வாகனம் திருடப்பட்டாலோ அல்லது விபத்தினால் பாதிக்கப்பட்டாலோ இந்தக் காப்பீட்டில் இழப்பீடு உண்டு. மூன்றாம் நபருக்கு உடல் காயம் ஏற்பட்டாலோ அல்லது மூன்றாம் நபரின் சொத்துகளுக்கு சேதம் விளைந்தாலோ இழப்பீடு உண்டு. பொதுவாக, இயற்கை பாதிப்புகளுக்கு வாகனக் காப்பீட்டில் இழப்பீடு கிடைக்காது. தாழ்வான பகுதியில் இருப்பவர்கள், அடிக்கடி மழை பெய்யக் கூடிய பகுதிகளில் இருப்பவர்கள் என்ஜின் பாதுகாப்பு என்கிற ரைடர் பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது.

பயணக் காப்பீட்டுத் திட்டம்...

காப்பீட்டு வாடிக்கையாளர் தனது பயணத்தில் (இந்தியாவுக்குள்) எடுத்துச் செல்லும் பொருள்கள் (Baggage) விபத்தாலோ, எதிர்பாராத விதமாகவோ பாதிக்கப்பட்டால் அல்லது தொலைந்துபோனால் இந்தக் காப்பீடு அதற்கான இழப்பீட்டைத் தரும்.

மோட்டார் வாகனக் காப்பீடு சட்டப்படி அவசியம் என்பதால், பெரும்பாலானோர் அதை எடுத்துவிடுகின்றனர். மற்ற காப்பீடுகளை தேவை இல்லாத செலவுகள் என்று எண்ணி விட்டுவிடுகின்றனர். இது மிகப்பெரிய தவறு என்பதை நாம் உணர்வது அவசியம்!

காப்பீடுகளும் கணக்கீடுகளும்...

ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிக்கையின்படி, 1% இந்திய வீடுகள் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் சாலையில் ஓடும் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் எந்தக் காப்பீட்டுப் பாதுகாப்பும் இல்லாமல் இயக்கப்படுகின்றன.