தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஆயுள் காப்பீட்டு பாலிசி... கவனிக்க வேண்டிய 8 முக்கிய அம்சங்கள்..!

ஆயுள் காப்பீட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
ஆயுள் காப்பீட்டு

பாலிசியைக் குடும்பத்தின் நன்மை கருதி எடுக்க வேண்டுமே தவிர பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என எடுக்கக் கூடாது!

நாற்பது வயதான ஜெய்கணேஷ், தனி யார் நிறுவனம் ஒன்றில் கார் டிரைவராக இருந்தார். சமீபத்தில் இவர், பயணி ஒருவரை ஊருக்கு அழைத்துச் சென்று, திரும்பவரும் வழியில் விபத்து ஒன்றில் சிக்கினார். அவர் ஓட்டிவந்த கார், லாரி மீது மோதியதால், விபத்து நடந்த இடத்திலேயே அவர் இறந்தார். அவர் இன்ஷூரன்ஸ் பாலிசி எதையும் எடுக்காமல் இருந்ததால், அவருக்கு எந்த வகையான இழப்பீடும் கிடைக்கவில்லை. அவரது வருமானத்தையே பெரிதும் நம்பி யிருந்த அவரின் மனைவியும் இரு குழந்தை களும் இப்போது வாழ்க்கையை நடத்தத் தேவையான பணம் இல்லாமல் தவிக்கின்றனர்.

ராமகிருஷ்ணன் விநாயக் நிறுவனர், 
https://www.dakshincapital.com/
ராமகிருஷ்ணன் விநாயக் நிறுவனர், https://www.dakshincapital.com/

இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது நம் குடும்பத்தை நிதி ரீதியாகக் காப்பாற்றும் கவசமாகும். குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர்களின் பெயரில் இந்த பாலிசியை எடுக்க வேண்டும். வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், இந்த பாலிசி மூலமான இழப்பீடு குடும்பத்தின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்கும். ஆயுள் காப்பீடு எடுக்கும்போது நாம் கவனிக்க வேண்டிய எட்டு முக்கியமான அம்சங்கள் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

ஆயுள் காப்பீட்டு பாலிசி...
கவனிக்க வேண்டிய 8 முக்கிய அம்சங்கள்..!

1. காப்பீடு வேறு, முதலீடு வேறு...

முதலில், காப்பீடுகள் முதலீடுகள் அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நம் மக்களில் பலரும் பாரம்பர்ய பாலிசியையே (Traditional Policy) எடுக்கின்றனர். இவை நீண்ட கால பாலிசியாக இருக்கின்றன. இந்த பாலிசிகளுக்குத் தொடர்ந்து பிரீமியம் கட்டி வர வேண்டும். இதன் மூலம் நமக்குக் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு 4.5% முதல் 5.5% என்கிற அளவில்தான் இருக்கும். இதை நல்ல வருமானம் என்று சொல்ல முடியாது. மேலும், இந்த பாலிசி மூலம் கிடைக்கும் ஆயுள் காப்பீடு கவரேஜ் தொகையும் மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, இன்ஷூரன்ஸ் பாலிசியைக் குடும்பத்தின் நன்மை கருதி எடுக்க வேண்டுமே தவிர, பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்று எடுக்கக் கூடாது.

2. டேர்ம் இன்ஷூரன்ஸ் சரியான தேர்வு...

டேர்ம் இன்ஷூரன்ஸில் நாம் செலுத்துகிற பிரீமியம் தொகை திரும்பக் கிடைக்காது. எனவே, அது வீண்தான் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. குறைவான பிரீமியத்தில் அதிக ஆயுள் கவரேஜ் அளிக்கும் டேர்ம் இன்ஸூரன்ஸ் மிகவும் நல்லது. இதில் 30 வயதான ஒருவருக்கு ஒரு வருடத்துக்கு ரூ.15,000 பிரீமியம் கட்டினாலே சுமார் ரூ.1 கோடி அளவுக்கு கவரேஜ் தொகை கிடைக்கும். பாரம்பர்ய பாலிசியில் ரூ.1 கோடி கவரேஜ் வேண்டும் எனில், ஆண்டுக்கு சுமார் ரூ. 9 லட்சம் பிரீமியமாகக் கட்ட வேண்டி இருக்கும். அந்த வகையில் குடும்பத்தின்மேல் அதிக அக்கறை கொண்ட அனைவரும் டேர்ம் இன்ஷூ ரன்ஸ் பாலிசி எடுப்பது மிகவும் அவசியம். அதுவும் ஆண்டு வருமானத்தைப்போல, சுமார் 15 மடங்கு தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியமாகும்.

3. வருமான வரிச் சலுகைக்காக பாலிசி...

நம்மில் பெரும்பாலானோர் வருமான வரிச் சலுகைக்காக ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கிறோம். இது சரியான அணுகுமுறை அல்ல. நம் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்காகதான் நாம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும். ஒருவேளை, வருமான வரிச் சலுகைக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் எனில், பாரம்பர்ய இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதைவிட, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கலாம்.

பாரம்பர்ய இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கும்போது அதிக தொகையை பிரீமியமாகக் கட்ட வேண்டும். ஆனால், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் குறைந்த அளவு பிரீமியம் கட்டினால் போதும். இப்படி மிச்சமாகும் பிரீமியம் தொகையை வருமான வரிச் சலுகை அளிக்கும் பி.பி.எஃப், இ.எல்.எஸ்.எஸ் (ELSS) மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் 15, 20 வருடத்தில் ஆண்டுக்கு முதலீடு செய்தால், சராசரி யாக 12% முதல் 15% வரை வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆகையால், வருமான வரிச் சலுகை மற்றும் நமது நிதி இலக்குகளை நிறைவேற்றும் விதமாக ஆயுள் காப்பீட்டுக்குத் (டேர்ம் இன்ஷூரன்ஸ்) தனியாகவும் முதலீட்டுக்குத் தனியாகவும் பிரித்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும்போது அதற்கான பயன்கள் நமக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

4. குறைவான தொகைக்கு பாலிசி...

பலரும் பாரம்பர்ய பாலிசிகளை ஆயுள் காப்பீட்டுக்காக எடுப்பதால், அதன் கவரேஜ் தொகை ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம், அதிகபட்சம் ரூ.5 லட்சம் என்கிற அளவிலேயே இருக்கிறது. இப்படிக் குறைவான தொகைக்கு பாலிசி எடுப்பது மிகப்பெரிய தவறாகும். உதாரணமாக, கொரோனா தாக்குதலில் பல குடும்பங்களில் வருமானம் ஈட்டும் நபர்கள் உயிர் இழந்தார்கள். இவர்களில் நிறைய பேர் மிகக் குறைவான தொகைக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருந்த தால், அவர்களுக்குக் கிடைத்த இழப்பீட்டை வைத்து குடும்பத் துக்கான செலவுகளை சில மாதங்களுக்கு மட்டுமே செய்ய முடிந்தது. ஆகையால், குறைவான தொகைக்கு பாலிசி எடுக்காமல், ஒருவரின் ஆண்டு வருமானத்தைப் போல, கிட்டத்தட்ட 15 மடங்கு தொகைக்கு பாலிசி எடுப்பது கட்டாயம் ஆகும்.

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்ப தால், ஒரு குடும்ப நபரின் இழப்பை ஈடுசெய்ய முடியாது. ஆனால், அந்த நபர் ஈட்டும் வருமானத்தை ஈடுசெய்ய முடியும். உதாரணமாக, ஒரு நபர் தன் குடும்பத்துக்காக மாதம் ரூ.50,000 செலவு செய்வார் எனில், ஆண்டுக்கு ரூ.6 லட்சம் அவரின் குடும்பத்துக்குத் தேவை. இந்த ரூ.6 லட்சத்தைப்போல, 15 மடங்கு என்பது ரூ.90 லட்சம் ஆகும். எனவே, ரூ.1 கோடிக்கு கவரேஜ் தொகை இருக்கிற மாதிரி இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது சரியான முடிவாக இருக்கும்.

இந்த ஒரு கோடி ரூபாயை அந்த குடும்பத்தின் நாமினி ஒரு வங்கியில் வைப்புத் தொகையாகச் செலுத்தி, அதற்கு ஆண்டுக்கு 8% வட்டி வருமானம் கிடைத்தால், ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வட்டி கிடைக்கும். அதாவது, மாதத்துக்கு சுமார் ரூ.66,000 கிடைக்கும். குடும்பத் தலைவரின் வருமான இழப்பை ஈடுசெய்யும் ஒரு மாற்றாக இந்தத் தொகை உதவும்.

5. கடனைக் காக்கும் காப்பீடு...

நாம் வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன் எனப் பல பெரிய கடன்களை வைத்திருப்போம். அதற்கு நிகராக நாம் ஆயுள் காப்பீடு வைத்திருக்க மாட்டோம். உதாரணமாக, ஒரு குடும்பத்தில் கணவர் திடீரென விபத்தில் இறக்க நேரிடுகிறது. அவரின் மனைவிக்குத் தன் கணவர் வாங்கியிருந்த வீட்டுக் கடனை எப்படித் திரும்பக் கட்டுவது என்று தெரியவில்லை. வீட்டுக் கடன் பாக்கி மட்டும் ரூ.40 லட்சம் என்கிற அளவில் இருந்தது. அந்தத் தொகையைக் கட்டும் திறன் அந்தக் குடும்பத்துக்கு இல்லை. இச்சமயத்தில், குடும்பத் தலைவர் பெயரில் ரூ.40 லட்சத்துக்கு ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத் திருக்கும் பட்சத்தில், கிடைக்கும் இழப்பீட் டைக் கொண்டு, வீட்டுக் கடனை எளிதாகக் கட்டி முடிக்கலாம். ஆனால், அவர் வெறும் ரூ.5 லட்சத் துக்கு மட்டுமே இன்ஷூ ரன்ஸ் எடுத்திருந்தார். இந்த ரூ.5 லட்சத்தை வங்கி எஃப்.டி-யில் போட்டால், ஆண்டுக்கு வெறும் ரூ.36,000 மட்டுமே வட்டி கிடைக்கும். அதாவது, மாதத்துக்கு 3,000 ரூபாய் தான் வட்டி கிடைக்கும். இதில் குடும்பத்தை நடத்தவே இயலாது.

இந்த நிலை எந்தவொரு குடும்பத் திலும் நடக்கக்கூடும். எனவே, பெரிய அளவில் கடன்கள் வைத் திருப்பவர்கள், அதை ஈடுசெய்யும் அளவுக்கு ஆயுள் காப்பீடு பாலிசி வைத்திருக்க வேண்டும். இல்லா விட்டால் அந்தக் குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.

6. பாலிசிக் காலம்...

ஒரு குடும்பத்தில் சிறுவயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் படித்து வளர்ந்து, திருமணம் செய்யும் வரையிலாவது குடும்பத் தலைவருக்கு ஆயுள் காப்பீடு பாலிசிக் காலம் இருக்க வேண்டும். பொதுவாக, நம் ஓய்வுக் காலம் வரைக்கும் பாலிசி வைத்துக் கொள்ளலாம். ஏனெனில், இதற்குள் பிள்ளைகள் உயர்கல்வி, திருமணம் முடித்திருப்போம். வீடு உள்ளிட்ட வேண்டிய அளவுக்கு சொத்துகளை சேர்த்திருப்போம். ஓய்வுக் காலத்தில் இன்ஷூரன்ஸுக்கான தேவை பெரிதாக இருக்காது.

7. தாமதமாக பாலிசி எடுப்பது...

நம்மில் பெரும்பாலானோர் செய்யும் தவறு, தாமதமாக பாலிசி எடுப்பதாகும். இடைப்பட்ட காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் குடும்பத்தின் நிலை அதோ கதிதான். மேலும், இளம் வயதில் பாலிசி எடுக்கும்போது பிரீமியம் தொகை மிகவும் குறைவாக இருக்கும். 30 வயதுக்குப் பதில் ஒருவர் 50 வயதில் பாலிசி எடுத்தால், பிரீமியம் தொகை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக இருக்கும். தவிர, 40, 45 வயது வந்துவிட்டாலே, சர்க்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம் வந்துவிடுகிறது. இந்த நோய் வந்தபின் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால், அதிக பிரீமியம் கட்டவேண்டி இருக்கும்.

8. சரியான மருத்துவ விவரங்கள்...

பாலிசி எடுக்கும்போது சரியான மருத்துவ விவரங்களைத் தெரிவிக்காமல் இருப்பது தவறாகும். நம் உடல்நிலை குறித்து நாம் தவறான தகவல்களைத் தரும்பட்சத்தில், க்ளெய்ம் கிடைக்காமல் போக நிறையவே வாய்ப்புண்டு. சிலருக்கு மது, சிகரெட் பழங்கங்கள் இருக்கலாம். அதை மறைக்காமல் தெரிவிப்பது அவசியம். அதுபோல, ஏற்கெனவே இருக்கும் நோய் குறித்த தகவல்களையும் தெரிவிப்பது அவசியம். இதனால், பாலிசி தரமாட்டார்களோ என்று நினைக்க வேண்டாம். இப்படி இருப்பவர்களுக்கு பிரீமியம் சற்றுக் கூடுதலாக இருக்கும். இதைக் கட்டிவிட்டால், பிற்காலத்தில் க்ளெய்ம் செய்யும்போது பிரச்னை எதுவும் வராது.

ஆக, இனியாவது இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது இந்த எட்டு விஷயங்களையும் கவனித்து எடுங்கள்!

இது மிக மிக முக்கியம்!

நாம் ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருக்கிறோம் என்பதை நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அவசியம். இன்றைய காலகட்டத்தில், இந்தியாவில் க்ளெய்ம் செய்யப்படாமல் நிறைய பாலிசிகள் தேங்கிக் கிடக்கின்றன. பாலிசி எடுத்துவிட்டு குடும்பத்துக்கு தெரிவிக்கப்படாமல் இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும். நமக்கு ஏதாவது ஆகிவிட்டால், நம் குடும்பத்துக்கு பயன் அளிக்க வேண்டும் என்பதால்தான் காப்பீடு எடுக்கிறோம். அதை குடும்பத்தினருக்குத் தெரிவிக்காவிட்டால் அவர் களுக்கு இழப்புதான் அதிகமாக இருக்கும்.