நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஆயுள் காப்பீடு... அதிக அக்கறை காட்டும் மக்கள்; தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்... சர்வே சொல்லும் உண்மை!

காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
News
காப்பீடு

காப்பீடு மிக அவசியம். அவருக்குப் பின் அவர் குடும்பத்தைப் பொருளாதாரச் சிக்கலில் இருந்து காப்பாற்றப்போவது அதுதான்..!

காப்பீடு என்றாலே பத்தடி தள்ளிச் சென்ற காலம் இப்போது மலையேறி விட்டது. காப்பீட்டின் அவசியம் புரிந்து மக்களே ஆர்வமுடன் முன்வந்து காப்பீடு எடுப்பது சமீப ஆண்டுகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இதற்குக் காரணம், அதிகரித்துள்ள கல்வி அறிவு, வேலைவாய்ப்புகள், வருமானம், தொழில்நுட்ப வளர்ச்சி, குடும்ப உறுப்பினர்கள் மீதான அக்கறை எனப் பல விஷயங்கள் ஒன்று சேர்ந்து, இன்ஷூரன்ஸ் பாலிசியை அனைவரும் கட்டாயம் எடுத்தாக வேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்தி இருப்பதுதான்.

காப்பீட்டை எடுப்பதன் அவசியத்தை மக்கள் புரிந்துகொண்டு செயல்படுவது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், காப்பீடு பற்றி அனைத்து விஷயங்களையும் மக்கள் தெரிந்துகொண்டுவிட்டார்களா, எவ்வளவு கவரேஜ் தொகைக்கு காப்பீடு எடுத்திருக் கிறார்கள், காப்பீடு எடுக்கும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன, காப்பீடு குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய மெகா சர்வே ஒன்றை ஆன்லைன் மூலமாக நாணயம் விகடன் நடத்தியது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த சர்வேயில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தனர்.

இந்த சர்வே முடிவுகளை அலசி ஆராய்ந்து காப்பீடு குறித்த மக்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது, காப்பீட்டு பாலிசிகளை எடுக்கும்போது மக்கள் சரியான பாதையில் செல்கிறார்களா என்னென்ன என்பதை விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொன் னார் காப்பீட்டுத் துறை நிபுணரும் வெல்த் லேடர் நிறுவனத்தின் நிறுவனரும் சி.இ.ஓ-வுமான எஸ்.ஶ்ரீதரன்.

எஸ்.ஶ்ரீதரன்
எஸ்.ஶ்ரீதரன்

எந்தக் காப்பீட்டுக்கு முன்னுரிமை?

“முதலில், காப்பீடு குறித்த இந்த சர்வேயில் இத்தனை பேர் கலந்துகொண்டு அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்திருப்பதில் இருந்தே காப்பீடு என்பது எந்த அளவுக்கு அவசியம் என்பது மக்களுக்குப் புரியத் தொடங்கிவிட்டது என்பதைக் காட்டுகிறது. இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.

எந்த வகை காப்பீட்டுக்கு முன்னுரிமை தருகிறீர்கள் என்ற கேள்விக்கு 53.7 சதவிகிதத்தினர் ஆயுள் காப்பீடு என்றும், 41 சதவிகிதத்தினர் மருத்துவக் காப்பீடு என்றும் சரியாகப் பதில் அளித்துள்ளனர். இதிலிருந்து மக்கள் தங்களின் மீதும், தங்களின் குடும்பத்தினர் மீதும் எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆயுள் காப்பீடு... அதிக அக்கறை காட்டும் மக்கள்; தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்... சர்வே சொல்லும் உண்மை!

வாகனக் காப்பீடு விஷயத்தில் வாகனம் வாங்கும்போதே மூன்றாம் தரப்புக் காப்பீடு கட்டாயம் என்பதால், அதைக் காப்பீடு என்கிற வகையில் பெரும்பாலானோர் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. எனவே, அதற்குக் குறைவான சதவிகிதத்தினரே பதில் அளித்திருக்கிறார்கள். போலீஸுக்கு பயந்து வாகனக் காப்பீட்டை எடுப்பதற்குப் பதிலாக, அந்தக் காப்பீட்டுக்குள்ள முக்கியத்துவதை உணர்ந்து, நாம் அந்த பாலிசியைக் கட்டாயம் எடுத்தாக வேண்டும்.

வீட்டிலுள்ள பொருள்களுக் கான காப்பீட்டை குறைவான நபர்களே எடுக்கிறார்கள் என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. ஏனெனில், மழை வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங் களின்போதோ திருட்டு, விபத்து போன்றவற்றாலோ பொருள்கள் சேதம் ஆகும் போது பெரிய பொருளிழப் பைச் சந்திக்க வேண்டி யிருக்கும். எனவே, வீட்டி லுள்ள பொருள்களின் மதிப்பைப் பொறுத்து காப்பீடு எடுத்துக்கொள்வது குறித்து மக்கள் திட்டமிட வேண்டும்.

ஆயுள் காப்பீடு... அதிக அக்கறை காட்டும் மக்கள்; தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்... சர்வே சொல்லும் உண்மை!

எதற்காக காப்பீடு எடுக்கிறோம்?

காப்பீடு விஷயத்தில் மிக முக்கியமானது எதற்காகக் காப்பீடு எடுக்கிறோம் என்ற தெளிவுதான். அந்தத் தெளிவு இருந்தால்தான் சரியான பாலிசியை நம்மால் தேர்வு செய்ய முடியும். இந்த சர்வேயில் 88.5 சதவிகிதத்தினர் குடும்பத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி காப்பீடு எடுத்திருப்பதாகச் சொல்லி யிருப்பது ஆச்சர்யப்பட வைக்கிறது. வெறும் 7.2% பேர் மட்டுமே வரிச் சலுகைக்காக என்று பதில் அளித்துள்ளனர். காப்பீட்டு பாலிசிக்கு வரிச் சலுகை என்பது ஒருவகையான ஊக்குவிப்புதான். குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு தான் முக்கியமான விஷயம். இந்த விஷயத்தில் மக்களிடம் தெளிவு அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

புதிய வருமான வரி நடைமுறையில் வரிச் சலுகை கள் இல்லை என்ற சூழலில் காப்பீடு எடுப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு, 76 சதவிகி தத்தினர் காப்பீடு எடுப்போம் எனக் கூறி இருப்பதையும் நாம் கவனிக்கத் தவறக் கூடாது. இவர்கள் குடும்ப உறுப்பினர்களின் நலனுக் காகக் காப்பீடு எடுப்பவர்கள்.

எடுக்க மாட்டேன் என்று பதில் கூறியிருப்பவர்கள் இதுவரை வரிச் சலுகைக்காக மட்டும் காப்பீடு எடுத்திருப் பவர்களாக இருக்கலாம். இவர்களும் காப்பீட்டு பாலிசிகளை ஏன் எடுக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டால், காப்பீட்டை எடுக்கத் தவற மாட்டார்கள்.

ஏனெனில், காப்பீடு ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது. அவருக்குப் பின் அவர் குடும்ப உறுப்பினர் களைப் பொருளாதாரச் சிக்கலில் இருந்து காப்பாற்றப் போவது காப்பீடுதான். இந்தக் காப்பீட்டை முதலீட்டுக் காகவோ, வரிச் சலுகைக் காகவோ எடுக்கக் கூடாது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆயுள் காப்பீடு... அதிக அக்கறை காட்டும் மக்கள்; தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்... சர்வே சொல்லும் உண்மை!

எண்டோவ்மென்ட் Vs டேர்ம் இன்ஷூரன்ஸ்

ஆயுள் காப்பீட்டுத் திட்டங் களில் எந்த வகை திட்டங் களைத் தேர்வு செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு எண்டோவ் மென்ட் பாலிசி திட்டங்களை எடுத்திருப்பதாக 50.8% பேர் கூறியிருக்கிறார்கள். இதிலிருந்து இவர்கள் காப்பீடு, முதலீடு இரண்டையும் ஒரே திட்டத்தின் மூலம் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க் கிறார்கள் என்று தெரிகிறது. ஏற்கெனவே கூறியதுபோல காப்பீடு, முதலீடு ஆகிய இரண்டையும் தனித் தனி யாகப் பிரித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர் களில் 43.7% பேர் டேர்ம் பாலிசித் திட்டங் களை எடுத்திருப்பதாகக் கூறியுள்ளனர். அவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர் களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். இன்ஷூரன்ஸ் பிரீமிய மாகக் கட்டிய பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எண்டோவ்மென்ட் பாலிசிகளைத் தாராள மாக எடுக்கலாம். கூடவே டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் எடுத்துக்கொள்வது குறித்து ஆலோசிக்க வேண்டும். டேர்ம் இன்ஷூரன்ஸில் திரும்பக் கட்டிய பணம் கிடைக்காது. ஆனால், அதற்கான பிரீமியம் குறைவு; கவரேஜ் அதிகம். ஒருவர் தன்னுடைய ஆண்டு வருமானத்தில் குறைந்தபட்சம் 10 மடங்கு அல்லது 20 மடங்கு கவரேஜ் இருக்கும்படி காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது.

இந்த சர்வேயின்படி, எண்டோவ்மென்ட் திட்டங்களைத் தேர்வு செய்து, அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையில் கவரேஜ் எடுத்தவர்கள் 51.7% பேர் இருப்பது ஆரோக்கியமான விஷயமே. டேர்ம் பாலிசி எடுத்தவர்கள் ரூ.51 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை எடுத்தவர்கள் 50 சதவிகிதத்துக்குமேல் என்பதைப் பார்க்கும்போது, இன்ஷூரன்ஸ் தொடர்பான விழிப்புணர்வில் நாம் முக்கியமான கட்டத்தைத் தாண்டி விட்டோம் என்றே சொல்லலாம். டேர்ம் பாலிசி எடுத்த மற்றவர்களும் கவரேஜை ரூ.50 லட்சத்துக்குமேல் அதிகரித்துக் கொள்வது நல்லது.

ஆயுள் காப்பீடு... அதிக அக்கறை காட்டும் மக்கள்; தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்... சர்வே சொல்லும் உண்மை!

அதென்ன ரைடர் பாலிசி..?

காப்பீட்டுத் திட்டங்களில் ரைடர் பாலிசி என்று ஒரு வசதி இருக்கிறது. ஆனால், பெரும்பாலானோருக்கு இப்படி ஒரு வசதி இருப்பதே தெரிவதில்லை. இந்த சர்வேயில் ரைடர் பாலிசி குறித்த கேள்விக்கு 35% பேர், ‘இது பற்றித் தெரியவில்லை’ என்று சொல்லி இருப்பது இதற்கு சிறந்த உதாரணம். ரைடர் பாலிசி பற்றித் தெரிந்தவர்கள்கூட அதுபற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டார்களா என்பது கேள்விக்குறியே.

ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைத்து எடுக்கப்படும் ரைடர் பாலிசியானது, பாலிசித் திட்டத்தின் கவரேஜ் தொகையை இரு மடங்காகப் பெற வழிவகுக்கும். அதாவது, ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் ரைடர் பாலிசியாக விபத்து காப்பீட்டைத் தேர்வு செய்திருந்தால், விபத்தால் இறக்க நேரும்பட்சத்தில் கவரேஜ் தொகை இரண்டு மடங்காகக் கிடைக்கும். இந்த சர்வேயில் 45.5% பேர் ஆயுள் காப்பீட்டு பாலிசியுடன் விபத்துக் காப்பீட்டை ரைடர் பாலிசி யாக எடுத்துள்ளதாகக் கூறியிருப்பது வரவேற்கத் தக்கது.

15.4% பேர் ரைடர் பாலிசி யாக கிரிட்டிகல் இல்னஸ் பாலிசி எடுத்துள்ளதாகச் சொல்லியிருக்கின்றனர். ஆனால், கிரிட்டிகல் இல்னஸ் பாலிசியைத் தனியாக எடுப்பதுதான் சிறந்தது. ஏனெனில், ரைடர் பாலிசியாக எடுக் கும்போது அதில் எல்லாவிதமான நோயும் கவர் ஆகாது. இதனால் சில நேரங்களில் ரைடர் பாலிசி பலன் தராமல் போகலாம் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

ஆயுள் காப்பீடு... அதிக அக்கறை காட்டும் மக்கள்; தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்... சர்வே சொல்லும் உண்மை!

இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் மூலம் காப்பீடு...

இன்று மொபைல் பயன் பாடும், இணையதள சேவை களும் அதிகரித்துவிட்டா லும், எந்த முறையில் காப்பீடு எடுக்கிறீர்கள் என இந்த சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விக்கு சுமார் 70% பேர் ஏஜென்டுகள் மூலமாக எடுப் பதாகவே சொல்லியிருக்கிறார்கள்.

அதே சமயம், இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்கிற கேள்விக்கு, வெளிப் படைத்தன்மை போதிய அளவு இல்லை என 42.2% பேரும், ஏஜென்டுகள் பாலிசி களை விற்பதில்தான் ஆர்வமாக இருக்கிறார்கள் என 35.9% பேரும் கூறியிருக்கிறார்கள். 21.9% மட்டுமே சரியாக வழிகாட்டுகிறார்கள் என்று கூறியுள்ளனர்.

ஆக, 70% பேர் ஏஜென்டுகள் மூலமாக இன்ஷூரன்ஸ் எடுக்கிறார்கள் என்பதிலிருந்து ஏஜென்டுகள் மிக முக்கியமான வர்களாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதே சமயம், வெளிப்படைத்தன்மை இல்லை என 42.2%, பாலிசிகளை விற்பதில்தான் ஆர்வமாக இருக்கிறார்கள் என 35.9% பேர் கூறியிருப்ப தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, கிட்டத்தட்ட 78.1 பேர், ஏஜென்டுகளின் நம்பகத் தன்மையை சந்தேகிக் கின்றனர். ஏஜென்டுகளின் பணியானது மிகவும் பொறுப்புமிக்கது. தேவை யான சரியான பாலிசியைத் தேர்வு செய்வதில் அவர் களுக்கு வழிகாட்ட ஒருவர் அவசியம் தேவை.அந்தப் பொறுப்பை ஏற்றுள்ள ஏஜென்டுகள் முழுமை யாகவும் சரியாகவும் செய லாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

காப்பீடு விஷயத்தில் சந்திக்கும் பிரச்னைகள்...

இந்த சர்வேயில் காப்பீட் டில் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்று கேட்டதற்கு, 41.4% பேர் பிரச்னை எதுவும் இல்லை என்று கூறியிருக்கின்றனர். இதைக் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல சர்வே எடுத்திருந் தால், இப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள். ஐ.ஆர்.டி.ஏ.ஐ, ஆம்பட்ஸ்மேன் போன்ற அமைப்புகள் தொடர்ச்சி யாகப் பாலிசிதாரர்களின் நலனைக் கருத்தில்கொண்டு நடவடிக்கைகள் எடுத்து வருவதன் பலன் மக்களின் பதிலில் தெரிகிறது. அதே சமயம், தவறான பாலிசியை விற்கும் (Misselling) பிரச்னை இருப்பதாக 40% பேர் கூறியிருக்கிறார்கள். இதில் பாலிசியை விற்பவருக்குப் பொறுப்புகள் இருப்பதைப் போலவே, பாலிசியை வாங்குபவருக்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன. பாலிசி குறித்த முழுமையான விவரங்களைக் கேட்டு, பாலிசியின் தன்மை, அதில் உள்ள சந்தேகங்கள், விதிமுறைகள், க்ளெய்ம் நடைமுறைகள் அனைத்தையும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். பாலிசி ஆவணத்தை முழுமையாகப் படிக்க வேண்டும். அதன்மூலமே தவறான பாலிசிகளைத் தேர்வு செய்வதைத் தவிர்க்கலாம். ஒவ்வொரு பொருளையும் நாம் பார்த்துப் பார்த்து வாங்குகிற மாதிரி, சரியான இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வாங்க வேண்டும்.

காப்பீடு குறித்த தகவல்களைக் குடும்பத்தினரிடம் பகிருங்கள்...

காப்பீட்டுத் திட்டங்களை எடுக்கும்போதே அதில் நாமினி விவரங்களைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அதே போல, காப்பீடு விவரங்களைக் குடும்ப உறுப்பினர்களிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் காப்பீட்டின் மீதான பலனைப் பெறப்போகும் நாமினியிடமாவது தெரிவிக்க வேண்டும். இந்த சர்வேயில் இதுதொடர்பான கேள்விக்கு 90% பேர் காப்பீடு விவரங்களைக் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்திருப்பதாகக் கூறியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். இனிமேல்தான் சொல்ல வேண்டும் என்று வெறும் 9.3 % பேர் மட்டுமே சொல்லியிருக்கிறார்கள். இவர்களும் தாமதிக்காமல் தெரிவித்துவிடுவது நல்லது. அதேபோல் காப்பீடு ஆவணங்களைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

ஆயுள் காப்பீடு... அதிக அக்கறை காட்டும் மக்கள்; தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்... சர்வே சொல்லும் உண்மை!

காப்பீடு என்றாலே ‘எல்.ஐ.சி...’

காப்பீடு என்றவுடன் உங்கள் நினைவுக்கு வரும் நிறுவனம் எது என்று கேட்ட கேள்விக்கு 79% பேர் எல்.ஐ.சி என்று கூறி யிருக்கிறார்கள். காப்பீட்டுத் துறையில் எல்.ஐ.சி நிறுவனத்துக்கு இருக்கும் பிரபலத்தையே இது காட்டு கிறது. காரணம், காப்பீட்டுத் துறையில் கடந்த 70 ஆண்டு களாக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் எல்.ஐ.சி-யின் ஏஜென்டுகள் காப்பீட்டின் அவசியத்தையும், காப்பீட்டுத் திட்டங்களையும் கொண்டு போய் சேர்த்திருக் கிறார்கள்’’ என்று சொன்னார் ஶ்ரீதரன்.

காப்பீடு குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் நிறை யவே இருக்கிறது என்பதையே இந்த சர்வே முடிவுகள் எடுத்துச் சொல்வதாக இந்த சர்வே இருக்கிறது!

வருமானம் இருந்தால்தான் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

‘‘டேர்ம் இன்ஷூரன்ஸ் கட்டமைப்பே ஒருவரின் வருவாய் ஆதாரம் எவ்வளவு என்பதைப் பொறுத்து கவரேஜ் தொகையை நிர்ணயிக்கும் வகையில்தான் இருக்கிறது. அதாவது, இவ்வளவு கவரேஜ் வேண்டுமெனில், இவ்வளவு பிரீமியம் செலுத்துங்கள் என்பதல்ல டேர்ம் இன்ஷூரன்ஸ். இவ்வளவு வருமான ஆதாரம் உள்ளது எனில், இவ்வளவு கவரேஜ் எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் டேர்ம் இன்ஷூரன்ஸ். குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் எதிர்பாராத விதமாக இறக்க நேரிடும்போது அவர் மூலமான பொருளாதார இழப்பை ஈடுசெய்யத்தான் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கப்படுகிறது. எனவே, முறையான வருமான ஆதாரம் முக்கியமான காரணியாக இருக்கிறது.

மேலும், டேர்ம் இன்ஷூரன்ஸ் இறப்பின் அடிப்படையில் வழங்கப்படுவதால், வெறுமனே பிரீமியம் செலுத்தினால் காப்பீடு கொடுக்கும் நடைமுறை இருந்தால் அதைப் பலரும் எடுத்து, ஆதாயம் பார்க்க வாய்ப்பிருக்கிறது. வீட்டிலிருக்கும் பெண்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் தனியாக எடுக்க முடியாது. ஆனால், வருமானம் சம்பாதிக்கும் கணவர், தான் எடுத்திருக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியுடன் மனைவிக்காகவும் பாலிசி எடுக்கலாம். அதாவது, கணவரின் பாலிசி கவரேஜில் 50% கவரேஜுடன் மனைவிக்கு டேர்ம் பாலிசி எடுக்கலாம். அப்படி எடுக்கும்போது மனைவியின் கல்வித் தகுதி கேட்கப்படலாம். மாத வருமானம் இல்லாமல் தொழில் செய்து சம்பாதிப்பவர் எனில், அவர் தன்னுடைய வருமான வரிக் கணக்குத் தாக்கல் ஆவணத்தையும், வங்கிக் கணக்கு அறிக்கை ஆவணத்தையும் காட்டி டேர்ம் பாலிசி கேட்கலாம். முறைசாரா துறையில் பணியாற்றுபவர்கள் தங்களின் வங்கிக் கணக்கு அறிக்கையைக் கொடுத்து டேர்ம் பாலிசி எடுக்க முயற்சி செய்யலாம்’’ என்றார் ஶ்ரீதரன்.