மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டார்கெட் குரோர்பதி @ 40 - 3: சரியான ஆயுள் மற்றும் மருத்துவ பாலிசி.. இளைஞர்கள் தேர்வு செய்வது எப்படி?

ஆயுள் மற்றும் மருத்துவ பாலிசி...
News
ஆயுள் மற்றும் மருத்துவ பாலிசி...

டார்கெட் குரோர்பதி @ 40 - 3

அண்மையில் இளைஞர் ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர் இதுவரை செய்துள்ள முதலீடுகளை மறு பரிசீலனை செய்து தர வேண்டும் என்று கேட்டு வந்திருந்தார். அவர் செய்திருந்த முதலீடுகள் குறித்த விவரங்களைக் காட்டினார். அதில், எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிகளே இருந்தன. இந்த இளைஞர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு எடுத்திருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், அவர் தேர்ந்தெடுத்திருக்கும் திட்டங்கள்தான் தவறானவை. அவருக்கு இந்த பாலிசிகள் பெரிதாக உதவாது. காரணம், அவற்றின் ஒட்டுமொத்த கவரேஜ் என்பது ரூ.10 லட்சத்துக் குள்தான். இன்றைய விலைவாசியில் இந்த ரூ.10 லட்சம் என்பது ஒரு குடும்பத்தின் 20 மாத செலவுக்குக்கூட வராது. இந்த பாலிசிகள் மூலம் கிடைக்கும் வருமானம் சுமார் 5%தான்.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

ஆயுள் காப்பீடு...

குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்குத் திடீரென ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டு அவர் இறந்துவிட்டால், அவரை மட்டுமே நம்பி இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் நிலை என்னவாகும்? அந்தக் குடும்பத்திலுள்ள பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம் ஆகியவை எப்படி நிறைவேறும்? குடும்ப உறுப்பினர்களின் பல கனவுகள் கலைந்துவிடும். குடும்பத்தில் உணர்வு ரீதியான இழப்பு (Emotional Loss) வரலாம்; ஆனால், நிதி ரீதியான இழப்பு (Financial Loss) வரக்கூடாது. இதற்கு ஆயுள் காப்பீட்டை இளைஞர்கள் கட்டாயம் எடுக்க வேண்டும். வேலைக்குச் சேர்ந்தவுடன் எடுக்க வில்லை என்றாலும் குறைந்தபட்சம் திருமணமானவுடன் அல்லது குழந்தை பிறந்தவுடனாவது கட்டாயம் எடுக்க வேண்டும்.

ஒருவருக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது ஏஜென்டு களிடம் இருந்து ஒரு நாளைக்குக் குறைந்தது, ஐந்து போன் அழைப்புகளாவது வரும். அவை ஒவ்வொன்றும் இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் அதீத வருமானத்தைத் தருவதாக வாக்குறுதி அளிப்பதாக இருக்கும். ‘இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், உங்களின் 50-வது வயதிலிருந்து மாதம் ரூ.50,000 கிடைக்கும் என்பதாகும். இந்தத் திட்டம் சேமிப்பு, காப்பீடு, வரி சேமிப்பு என மூன்று வகையான பலன் கிடைக்கும்’ என எப்படியாவது பாலிசியை எடுக்க வைத்துவிடுவார்கள். ஆனால், இந்த பாலிசி மூலம் கிடைக்கும் வருமானத்தை சரியாகக் கணக்கிட்டுப் பார்த்தால், மிக மிகக் குறைந்த அளவு வருமானமே கிடைக்கும். எனவே, இது மாதிரியான இன்ஷூ ரன்ஸ் பாலிசிகளை எடுக்காமல் இருப்பதே நல்லது.

டார்கெட் குரோர்பதி @ 40 - 3: சரியான ஆயுள் மற்றும் மருத்துவ பாலிசி.. இளைஞர்கள் தேர்வு செய்வது எப்படி?

டேர்ம் இன்ஷூரன்ஸ்...

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் எடுக்க வேண்டிய ஒரே திட்டம், டேர்ம் இன்ஷூரன்ஸ் ஆகும். இந்த பாலிசியில் குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும். பாலிசி எடுத்தவருக்கு எதுவும் அசம்பாவிதம் நடக்கவில்லை எனில், பாலிசி முதிர்வில் எந்தப் பணமும் கிடைக்காது.

இந்த அருமையான பாலிசி பற்றி இன்ஷூரன்ஸ் ஏஜென்டோ, இன்ஷூரன்ஸ் கம்பெனியோ உங்களுக்கு சொல்ல மாட்டார்கள். காரணம், இந்த பாலிசியை விற்பதால் ஏஜென்டுகளுக்குக் கிடைக்கும் கமிஷன் மிகவும் குறைவு. எனவே, இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி விற்பதைத் தவிர்ப்பதுடன், அதை வாங்குபவர்களை ஊக்குவிக்கவும் மாட்டார்கள். எனவே, இளைஞர்கள் நீங்கள்தான் விழிப்புணர்வுடன் இருந்து குடும்பத்தைக் காக்கும் கவசமான இந்த பாலிசியை எடுக்க வேண்டும். இந்த பாலிசியை எப்படி சரியாக எடுக்க வேண்டும் எனப் பார்ப்போம்.

ஒருவரின் வயது 30. அவர் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறார். இவர் இன்னும் 20 வருடங்களுக்கு வேலை பார்க்கத் திட்டமிட்டு உள்ளார். இதே சம்பளம் என் றாலும், இவர் இந்த 20 ஆண்டு களில் ரூ.2.4 கோடியை சம்பாதிப்பார். இவரின் குடும்பம் இந்தச் சம்பளத்தை நம்பி பல்வேறு நிதி இலக்குகளை குறிப்பாக, பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்யாண செலவுகளை வைத்திருக்கும்.

இந்த நிலையில் அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால், குடும்பத்தினரின் நிலை என்னவாகும்? குடும்பத் தினரின் நிதி சார்ந்த ரிஸ்க்கை சரிக்கட்டத்தான் டேர்ம் இன்ஷூரன்ஸ். குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இல்லை என்றாலும், டேர்ம் இன்ஷூ ரன்ஸ் மூலம் அனைத்து விஷயங் களையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

ஒருவர் 50 வயது வரைதான் வேலைபார்க்கப் போகிறேன். அதற்குள் குடும்பத்தின் நிதித் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு, சுதந்திரப் பறவையாக மாறிவிடுவேன் எனத் திட்டமிட்டால், அந்த வயது வரைக்கும் டேர்ம் பிளான் எடுத்தால் போதும். அப்போது தான் பிரீமியம் குறைவாக இருக்கும்; அதிக பணத்தை முதலீடு செய்து விரைவிலேயே கோடீஸ்வரர் ஆக முடியும்.

சிலர் 75 வயது வரைகூட ஆயுள் காப்பீடு பாலிசியை எடுத்து தேவை இல்லாமல் அதிக பிரீமியத்தைக் கட்டி வருகிறார் கள். இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இதற்குமுன் சில நிறுவனங்கள்தான் டேர்ம் இன்ஷூ ரன்ஸ் பாலிசிகளை வழங்கின. மேலும், பிரீமியமும் அதிகமாக இருந்தது. கடந்த 10, 15 ஆண்டுகளில் காப்பீட்டு நிறுவனங்கள் இடையேயான கடும் போட்டி மற்றும் அதிகம் பேர் டேர்ம் பிளான் எடுக்க ஆரம்பித்திருப் பதால், பிரீமியம் குறைந்துள்ளது.

ஒருவருக்கு 25 வயதுதான் ஆகிறது எனில், ரூ.1 கோடி டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு ஆண்டு பிரீமியம் சுமார் ரூ.12,000-தான். எனவே, இளைஞர்கள் அனைவரும் இதை எடுப்பது அவசியம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும் போது, காப்பீட்டு நிறுவனத்தின் க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் சுமார் 97, 98 சதவிகிதத்துக்கு மேல் இருப்பதுபோல் பார்த்துக்கொள் ளுங்கள். காப்பீட்டு நிறுவனங்களின் க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதத்தை, இந்திய காப்பீட்டு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பு ஆண்டு தோறும் அதன் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. அதைப் பார்த்து எந்த நிறுவனம், அதிக க்ளெய்ம் தந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்த பின், நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், அதை கணவன் / மனைவிக்கு, குடும்பத்தினருக்குத் தெரிவிப்பது முக்கியம். காரணம், பாலிசி எடுத்த விவரத்தை யாருக்கும் தெரிவிக்காததால் இழப்பீடு கோராத பாலிசிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

மருத்துவக் காப்பீடு...

இளைஞர்கள் அடுத்து மிக முக்கியமாக எடுக்க வேண்டிய காப்பீடு, மருத்துவக் காப்பீடாகும். இளம் வயதில் எனக்கு என்ன நோய் வந்துவிடப்போகிறது, வயதான பிறகு பாலிசி எடுத்துக்கொள்ளலாம் என அலட்சியமாக பலர் இருக்கிறார்கள். ஆனால், இன்றைய அவசர உலகில் விபத்து என்பது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். மன உளைச்சல், வேலைப்பளு காரணமாக யாருக்கு வேண்டுமானாலும் இதய பாதிப்பு ஏற்படலாம். மேலும், இன்றைக்கு மருத்துவமனைக் கட்டணம், மருந்துகள் மற்றும் கருவி களின் செலவு மிகவும் அதிகமாக உள்ளது. தொடர் வாந்தி காரணமாக சில ஆண்டுகளுக்குமுன் நான் சாதாரண மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். மூன்று நாளுக்கான மருத்துவச் செலவு ரூ.69,000 ஆனது. எனக்கு மருத்துவக் காப்பீடு இருந்ததால், இந்தப் பணத்தைக் கையிலிருந்து கட்டும் சூழ்நிலை ஏற்படவில்லை. எனவே, அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாக உள்ளது.

இன்றைக்குக்கூட ஏதாவது ஒரு மருத்துவச் செலவு எனில், சுமார் 75% பேர் அவர்களின் சேமிப்பு மற்றும் முதலீட்டுத் தொகையிலிருந்துதான் செலவு செய்வதாக சர்வே முடிவு ஒன்று சொல்கிறது. அப்படிப் பணம் இல்லாதவர்கள் கடன் வாங்கி செலவு செய்கிறார்கள். இது போன்ற சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது. எனவே, மருத்துவக் காப்பீடு எடுப்பது முக்கியமாகும்.

விபத்து அல்லது உடல்நலக் குறைவு காரணமாக ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் போது, அந்தச் செலவை ஈடுசெய்வதாக இந்த பாலிசி இருக்கும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பொறுத்த வரை, பணமில்லா சிகிச்சை (Cashless Treatment) மற்றும் செலவு செய்துவிட்டு பணம் பெறும் முறை (Reimbursement) இருக்கிறது. பணமில்லா சிகிச்சை வசதி இருக்கும் பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது. மேலும், அதிக மருத்துவமனை நெட் வொர்க் கொண்ட காப்பீட்டு நிறுவனத்தில் பாலிசி எடுப்பது மூலம் ஏதாவது பாதிப்பு எனில், அருகிலுள்ள மருத்துவமனைகளில் மற்றும் நல்ல மருத்துவமனைகளில் சேர முடியும்.

ஏற்கெனவே டேர்ம் பிளானுக்கு சொன்னதுபோல் மருத்துவக் காப்பீட்டுக்கும் அதிக க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் கொண்ட நிறுவனத்தில்தான் பாலிசி எடுக்க வேண்டும். கிட்டத்தட்ட 95 சதவிகிதத்துக்கு மேல் க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் கொண்ட நிறுவனத்தில் பாலிசி எடுக்கலாம். மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது தற்போதுள்ள உடல்நல பாதிப்பை மறைக்காமல் சொல்லி விடுங்கள். அப்போதுதான் பின்னர் இழப்பீடு கோரும் போது சிக்கல் இல்லாமல் கிடைக்கும். நோ க்ளெய்ம் போனஸ் எத்தனை சதவிகிதம் என்பது போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

(குரோர்பதி ஆவோம்)