பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

சிறந்த டேர்ம் இன்ஷூரன்ஸ்... கவனிக்க வேண்டிய முக்கியமான 10 விஷயங்கள்!

இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ்

நம்மவர்களுக்கு குடும்பத்தை நிதி ரீதியாகப் பாதுகாக்க டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு வந்திருக்கிறது. ஆனால், எந்த நிறுவனத்தில் பாலிசி எடுக்க வேண்டும் என்கிற குழப்பம் இப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

கா.ராமலிங்கம் 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
கா.ராமலிங்கம் இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

டேர்ம் பிளான் பாலிசிக்கு அதிக பிரீமியம் கட்டினால் நல்ல பாலிசியா, காப்பீடு நிறுவனம், இழப்பீட்டை சரியாகக் கொடுக்குமா, எந்த டேர்ம் பிளான் சரியாக இருக்கும் என்கிற குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்துவிட்டால், சரியான டேர்ம் பிளானைத் தேர்வு செய்து விடலாம்.

எந்த டேர்ம் பாலிசி எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் ஏன் தேவை?

காப்பீடு மற்றும் சேமிப்பு கலந்த எண்டோவ்மென்ட் மற்றும் யூலிப் பாலிசிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் இருந்தாலும், ஆயுள் காப்பீடு என்கிற பாதுகாப்புக் கவசத்தை முழுமையாகக் குடும்பத்துக்கு அளிப்பது டேர்ம் இன்ஷூரன்ஸ்தான். இதுதான் சரியான மற்றும் உண்மையான லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி ஆகும்.

குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர்கள், கடன் தவணை கட்டி வருபவர்கள், குறைந்த பிரீமியத்தில் மிக அதிக கவரேஜ் ஆயுள் காப்பீடு எதிர்பார்ப்பவர்கள் அனைவரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது சரியாக இருக்கும்.

மேலும், நிதித் திட்டமிடலில் முக்கியமானது மற்றும் முதன்மை யானது, லைஃப் இன்ஷூரன்ஸ் ஆகும். அதனால்தான், இன்ஷூரன்ஸ் கவுன்சில் மற்றும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ ஆகியவை ‘முதல் வேலையா இன்ஷூரன்ஸ்’ என்கிற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.

குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் பாலிசி காலத்தில் திடீரென இறந்துவிட்டால், குடும்பத்தினரை நிதி ரீதியாகப் பாதுகாக்க இழப்பீட்டுத் தொகை உதவும். கூடவே, கடன்களை அடைத்து அதிலிருந்து குடும்பத்தினர் மீள உடனடியாகக் கைகொடுக்கும்.

சிறந்த டேர்ம் இன்ஷூரன்ஸ்... கவனிக்க வேண்டிய முக்கியமான 10 விஷயங்கள்!

டேர்ம் இன்ஷூரன்ஸ் முக்கிய அம்சங்கள்...

 டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியின் சிறப்பு, அதன் பிரீமியம் அனைவராலும் சுலபமாகக் கட்டக்கூடியதாக இருப்பதாகும். இதர ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது பிரீமியம் மிகக் குறைவாகும்.

 டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை ஆயுள் காப்பீட்டு ஏஜென்டுகள், புரோக்கர்கள், வங்கிகள், இணையதளங்கள் ஆகியவற்றின் மூலம் சுலபமாக எடுக்க முடியும். ஆன்லைன் மூலம் பாலிசி எடுக்கும்போது பிரீமியம் சுமார் 40 சதவிகிதம் குறைவாக இருக்கும். காரணம், ஏஜென்ட் கமிஷன் இல்லாதது ஆகும்.

 இந்த பாலிசிக்கான பிரீமியத்தை மாதம், காலாண்டு, ஆறு மாதம், ஆண்டுக்கு ஒரு முறை என வசதிக்கு ஏற்ப கட்டலாம்.

 இந்த பாலிசிக்கு கட்டும் பிரீமியத்துக்கு நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வருமான வரிச் சலுகை கிடைக்கும். மேலும், இழப்பீட்டுத் தொகைக்கு அதைப் பெறும் குடும்பத்தினருக்கு வருமான வரி எதுவும் கிடையாது.

டேர்ம் இன்ஷூரன்ஸ்: கவனிக்க வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்...

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டிய 10 முக்கிய மான அம்சங்கள் வருமாறு...

1. காப்பீடு நிறுவனத்தின் பாரம்பர்யம்...

இந்தியாவில் மொத்தம் 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பாலிசி எடுக்கப்போகும் நிறுவனம் நல்ல பாரம்பர்யத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போது தான் சிக்கல் இல்லாமல் சுலபமாக இழப்பீடு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. சுமார் 15, 20 ஆண்டுகளாக இயங்கி வருவதோடு, அதன் தாய் நிறுவனம் நம்பகத்தன்மை மிக்க தாக இருக்க வேண்டும்.

2. ஏஜென்ட் அல்லது இணைய தளம்...

டேர்ம் பிளானை ஏஜென்ட் மூலம் எடுக்கப்போகிறீர்களா, இணையதளத்தின் மூலம் எடுக்கப்போகிறீர்களா என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். பாலிசியைப் பற்றிய விவரங்கள் முழுமையாகத் தெரியும் மற்றும் பிற்காலத்தில் இழப்பீடு கோரும் போது ஏஜென்ட் உதவி தேவை இல்லை என்றால் இணைய தளம் மூலம் பாலிசி எடுக்கலாம். பிரீமியமும் கணிசமாக மிச்ச மாகும்.

3. கவரேஜ் தொகை...

குடும்ப ஆண்டு வருமானத் தைப்போல் சுமார் 10 முதல் 15 மடங்கு தொகைக்கு டேர்ம் பாலிசி எடுக்க வேண்டும். கூடவே நிலுவையில் இருக்கும் கடன்களின் அளவை சேர்த்து கவரேஜ் தொகையை நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும்.

இந்தத் தொகைக்கு எந்தெந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் டேர்ம் பிளானுக்கு என்ன பிரீமியம் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

சிறந்த டேர்ம் இன்ஷூரன்ஸ்... கவனிக்க வேண்டிய முக்கியமான 10 விஷயங்கள்!

4. க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம்...

அடுத்து மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, காப்பீட்டு நிறுவனத்தின் க்ளெய்ம் செட்டில் மென்ட் விகிதம் ஆகும். இந்த விகிதம், அந்த நிறுவனம் எவ்வளவு இழப்பீடு கோரிக்கைகளுக்கு இழப்பீடு வழங்கி இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. இந்த விகிதம் 95-க்கு மேல் இருக்கும் நிறுவனத்தில் பாலிசி எடுப்பது நல்லது.

ஒவ்வோர் ஆண்டும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பு க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதத்தை வெளியிடுகிறது. இதைப் பார்த்து விவரம் தெரிந்துகொள்ள முடியும்.

5. டெலி மருத்துவ பரிசோதனை...

டேர்ம் பிளான் எடுக்கும்போது கட்டாயம், காப்பீடு நிறுவனம் ஏற்பாடு செய்யும் மருத்துவ பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். டெலி மருத்துவ பரிசோதனை என்றால் அதை ஒப்புக்கொள்ளாதீர்கள். இந்த முறையில் பாலிசி சுலபமாகக் கிடைக்கும். ஆனால், பிற்காலத்தில் க்ளெய்ம் என்று போகும்போது, இது இழப்பீட்டை நிராகரிக்க ஒரு காரணமாக இருந்துவிடக் கூடாது.

6. உடல் பிரச்னைகளை மறைக்காதீர்...

காப்பீடு பாலிசி எடுப்பவர்களில் பெரும்பாலானோர் செய்யும் முக்கியமான தவறு, தங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்னைகள் மற்றும் கெட்ட பழக்கங்களை மறைப்பதாகும். ஏதாவது, உடல் பிரச்னை, புகை மற்றும் மதுப் பழக்கம் இருந்தால் அதை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடத் தவறாதீர்கள்.

இவற்றின் அடிப்படையில் பிரீமியம் சில நூறு ரூபாய்கள் அதிகரித்தாலும், பிற்காலத்தில் இழப்பீடு என்று வரும்போது சிக்கல் இல்லாமல் இருக்கும்.

7. துணை பாலிசிகள்..!

டேர்ம் பிளான் எடுக்கும்போது ஆர்வக் கோளாறு காரணமாகவோ ஏஜென்ட் சொல்கிறார் என்பதற்காகவோ துணை பாலிசிகளை (Riders) எடுக்க வேண்டாம். அவசியம் உங்களுக்குத் தேவைப்பட்டால் மட்டுமே எடுங்கள். காரணம், துணை பாலிசிகளுக்கு தனியே பிரீமியம் கட்ட வேண்டும்.

யாருடைய வாழ்க்கையில் ரிஸ்க் மிகவும் அதிகமாக இருக்கிறதோ, அவர்கள் அவசியம் துணை பாலிசிகளை எடுத்துக்கொள்ளலாம். அதாவது, மார்க்கெட்டிங் தொடர் பாக வாகனங்களில் பயணம் செய்பவர்கள் விபத்து இறப்பு காப்பீட்டு பாலிசியை ரைடராக எடுத்துக் கொள்ளலாம்.

8. பணி ஓய்வுக்காலம் வரைக்கும் பாலிசி...

டேர்ம் பிளான் வருமானம் ஈட்டும் நபர் இந்த உலகில் இல்லை என்றால், அவரை சார்ந்தவர்களை நிதிச் சிக்கலில் இருந்து காப்பதாக இருக்கிறது. அந்த வகையில் பணி ஓய்வுக்காலம் வரைக்கும் டேர்ம் பிளான் எடுப்பது அவசியமாகும்.

பொதுவாக 58, 60 வயது வரைக்கும் டேர்ம் பிளான் எடுத்தால் போதும். தாமதமாகத் திருமணம் ஆனவர்கள்; மிகத் தாமதமாக நல்ல வேலையில் சேர்ந்து, பணிக் காலத்துக்குப் பிறகும் வேலை செய்ய வேண்டியிருப்பவர்கள் 65, 70 வயதுக்கும் டேர்ம் பிளான் எடுத்துக் கொள்ளலாம்.

9. இளம் வயதிலேயே டேர்ம் பிளான் எடுப்பது நல்லது...

வருமானம் ஈட்டும் நபரை சார்ந்திருப்பவர்கள் இருந்தால் வேலைக்குச் சேர்ந்த இளம் வயதிலேயே டேர்ம் பிளான் எடுத்துக்கொள்வது நல்லது.

10. குறைவான தொகைக்கு பாலிசி எடுக்காதீர்கள்...

சில லட்சங்கள் எனக் குறைவான தொகைக்கு பாலிசி எடுக்கக் கூடாது. இதனால், ஒருவர் நேசிக்கும் குடும்பத்துக்கு பெரிய நிதிப் பலன் எதுவும் இருக்காது. எனவே, நாம் ஆரம்பத்தில் சொன்னதுபோல் அதிக தொகைக்கு பாலிசி எடுப்பது அவசியமாகும்.

இனி டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது இந்த விவரங்களை எல்லாம் கவனிப்பீர்கள்தானே?