
முதலீட்டு எல்.கே.ஜி! - 15
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுரேஷுக்கு ஆஸ்துமா (Asthma) பாதிப்பு இருக்கிறது. அவரின் மருத்துவக் காப்பீட்டுப் பாலிசியில் இது ஏற்கெனவே இருக்கும் (Pre-Existing) நோய் பாதிப்பு பட்டியலில் இருக்கிறது. ஆஸ்துமா பாலிசிக்கு எடுக்கும் சிகிச்சைக்கு நான்கு ஆண்டுகள் கழித்துதான் இழப்பீடு கோர முடியும். மேலும், இந்தக் காப்பீடு நிறுவனம் ஆண்டுதோறும் பிரீமியத்தை அதிகரித்து வருகிறது; சேவையும் சரியில்லை. சுரேஷ் இந்த ஆண்டு அந்த பாலிசிக்கான பிரீமியத்தைக் கட்டாமல், வேறு காப்பீட்டு நிறுவனத்தில் புதிய பாலிசி எடுக்கத் திட்டமிட்டார்.

ஆனால், இப்படி புது பாலிசி எடுப்பதற்கு பதில், இந்த பாலிசியை அதிலுள்ள எந்தப் பலன்களையும் இழக்காமல் அப்படியே வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும். அதற்கான ஏற்பாட்டை இந்தியக் காப்பீட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ செய்திருக்கிறது என்று அவரின் நண்பர் ஒருவர் சொல்ல, கூடுதல் பிரீமியம் எதுவும் இல்லாமல் பழைய பாலிசியை வேறு நிறுவனத் துக்கு மாற்றிக்கொண்டார்.
இந்த நடவடிக்கை மருத்துவக் காப்பீட்டில் போர்ட்டபிலிட்டி (Portability) எனப்படுகிறது. இந்த வசதியை ஐ.ஆர்.டி.ஏ.ஐ 2011-ம் ஆண்டு கொண்டுவந்தது. ஏற்கெனவே உள்ள பாலிசி யில் இருக்கும் பலன்களான நோ க்ளெய்ம் போனஸ், இலவச மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஏற்கெனவே இருக்கும் நோய்க்கான மருத்துவச் சிகிச்சைச் செலவு சலுகை ஆகியவை இப்படி வேறு நிறுவனத்துக்கு பாலிசியை மாற்றினாலும் கிடைக்க, ஐ.ஆர்.டி.ஏ.ஐ ஏற்பாடு செய்திருக்கிறது.
பாலிசிக் கால இடைவெளி இல்லாமல் வேறு நிறுவனத்துக்கு பாலிசியை மாற்றிக்கொள்ள அனைத்து பாலிசிதாரர்களுக்கும் இதற்கான உரிமை இருக்கிறது. நமது செல்போன் நம்பரை ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத் துக்கு மாற்றிக்கொள்வது போன்றதுதான் இதுவும்.
மருத்துவக் காப்பீட்டை மாற்றுவதற்கான பொதுவான காரணங்கள்...
1. மோசமான சேவை.
2. குறிப்பிட்ட உடல்நிலை பாதிப்புக்கு, தற்போதுள்ள பாலிசியில் போதிய கவரேஜ் இல்லாதது.
3. மெதுவான மற்றும் சிக்கலான க்ளெய்ம் கோரல் நடைமுறை மற்றும் தீர்வு.
4. நெட் வொர்க் மருத்துவமனைக்கு வெளியே எடுக்கும் சிகிச்சைக்குத் தாமதமாகப் பணம் அளித்தல்.
5. க்ளெய்ம் செய்யப்பட்டால், அடுத்த ஆண்டு பிரீமியம் உயர்த்தப்படுவது.
6. மறைக்கப்பட்ட உட்பிரிவுகள் மற்றும் நிபந்தனைகள்.
7. பாலிசியில் வெளிப்படைத்தன்மை இல்லாமை.
8. இணைக் கட்டணம் (Co-payment), விதிமுறைகள், அறை வாடகை வரம்புகள்.
9. தற்போதைய பாலிசியில் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (Ayurveda, Yoga & Naturopathy, Unani, Siddha and Homoepathy - AYUSH) கவரேஜ், பிரசவச் செலவுக்கு கவரேஜ் இல்லாமல் இருப்பதாகும்.

எவையெல்லாம் அப்படியே மாறும்?
பழைய பாலிசியில் இடம்பெற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் புதிய பாலிசியிலும் இடம்பெற்றிருப்பார்கள்.
தற்போதுள்ள காப்பீட்டு கவரேஜ் தொகை.
சேர்ந்திருக்கும் ஒட்டுமொத்த ‘நோ க்ளெய்ம்’ போனஸ்.
ஏற்கெனவே இருக்கும் நோய்க்கான காத்திருப்புக் காலம்.
ஏற்கெனவே இருக்கும் பிரத்யேக நோய் பாதிப்பு, பிரசவச் செலவு (பழைய பாலியில் கவரேஜ் இருந்தால்) ஆகியவை புதிய பாலிசிக்கு அப்படியே மாறும்.
பாலிசியை எப்படி மாற்றுவது?
பாலிசியைப் புதுப்பிக்கும்போதுதான் இந்த மாற்றத்தை மேற்கொள்ள முடியும். பாலிசியைப் புதுப்பிக்கும் முன் குறைந்தபட்சம் 45 நாள்களுக்கு முன் இந்த ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும். புரொபசல் படிவம் (Proposal Form) மற்றும் போர்ட்டபிலிட்டி படிவம் (Portability Form) ஆகியவற்றை நிரப்பிக் கொடுக்க வேண்டும். பாலிசியை மாற்றுவதற்கு விண்ணப்பித்த மூன்று நாள்களுக்குள் அதை ஏற்றுக்கொண்ட அனுமதி (Acknowledgement) வழங்கப்படும்.
இப்படி பாலிசியை மாற்றும்போது மீண்டும் புதிதாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டிய தேவை சிலருக்கு இருக்கும். ஏற்கெனவே எடுத்த பாலிசிக்குத் தந்த விவரங்களை அப்படியே புதிய நிறுவனம் எடுத்துக்கொள்ளும். மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கான பொதுவான இணைய தளத்தில் ஐ.ஆர்.டி.ஏ.ஐ பகிர்ந்திருக்கும் தகவல்களைப் புதிய காப்பீட்டு நிறுவனம் ஏழு வேலை நாள்களுக்குள் எடுத்துக் கொள்ளும்.
விவரங்கள் எடுக்கப்பட்ட 15 நாள்களுக்குள் புதிய நிறுவனம் புதிய பாலிசியை வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை எனில், பாலிசியை மாற்றுவதற்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக முடிவு செய்யப்படும். இதன்பிறகு, பாலிசியை மாற்றுவதற்கான விண்ணப்பத்தை புதிய நிறுவனம் ரத்து செய்ய முடியாது.
பாலிசியை மாற்ற முடியாமல் போவதற்கான காரணங்கள்...
அதே நேரத்தில், 15 நாள்களுக்குள் பாலிசி மாற்றத்தை மறுக்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ அனுமதி அளித்திருக்கிறது. புதிய நிறுவனத்தின் அன்டர்ரைடர் (Underwriter), பாலிசிதாரருக்கு ரிஸ்க் அதிகமாக இருந்தால், பிரீமியத்தை அதிகரிக்க பரிந்துரை செய்யக்கூடும்; பாலிசி மாற்றதை மறுக்கக்கூடும். அப்படி மறுக்கப்பட்டால், பாலிசிதாரர் பழைய பாலிசியிலேயே தனது பாலிசியைத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
மலையேற்றம் செல்பவர்களுக்கு ரிஸ்க் குறைவு...
மருத்துவக் காப்பீட்டை வேறு நிறுவனத்துக்கு மாற்றும் விதி முறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms and Conditions) நிறுவனத் துக்கு நிறுவனம் மாறு படுகின்றன. இதை அறிந்து பாலிசியை மாற்றுவது நல்லது. மலையேற்றம் மேற்கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள். அடிக்கடி வெளிநாடு, வெளியூர் பயணம் மேற்கொள்பவர்களுக்கு பாலிசி மாற்றத்தின்போது, பிரீமியம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
காத்திருப்புக் காலம் குறையும்...
முந்தைய பாலிசியில் ஏற்கெனவே இருக்கும் நோய் களுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து சிகிச்சை எடுக்கலாம் என்கிற நிபந்தனை இருக்கிறது. பழைய பாலிசி எடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்திருக்கும் நிலையில், புதிய நிறுவனத்திலும் இந்தக் காத்திருப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக இருக்கும் பட்சத்தில், புதிய நிறுவனத்தின் மூலம் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். இதுவே புதிய நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் எனில், காத்திருப்புக் காலம் ஓராண்டாக இருக்கும்.
பாலிசிதாரர் இளம் வயதாக இருந்தால், அவருக்கான ரிஸ்க் குறைவாக இருக்கும். அந்த வகையில், ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு பாலிசியை மாற்றுவது சுலபமாக இருக்கும். பாலிசிதாரரின் வயது 45-50-க்குமேல் இருக்கும் பட்சத்தில் சற்று சிக்கல் இருக்கிறது.
எந்த பாலிசிகளை எல்லாம் மாற்றலாம்?
பொதுக் காப்பீடு நிறுவனங்களின் மருத்துவக் காப்பீடு பாலிசிகள், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங் களின் பாலிசிகளை இப்படி ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
தனிநபர்களுக்கான பாலிசிகள், குடும்பத்தினருக் கான ஃப்ளோட்டர் பாலிசிகளை இன்னொரு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளலாம். மேலும், ஒரே காப்பீட்டு நிறுவனத்தில் ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்துக்கும் இந்த போர்ட்டபிலிட்டி முறையில் மாற்றிக்கொள்ள முடியும்.
கவனிக்க வேண்டிய அம்சங்கள்...
புதிய காப்பீட்டு நிறுவனம், பழைய நிறுவனத்தில் உள்ள கவரேஜைவிட அதிக கவரேஜ் அளிக்கலாம். ஆனால், குறைந்தபட்சம் பழைய பாலிசியின் காப்பீடு அளவுக்காவது கவரேஜ் அளிக்க வேண்டும். பழைய நிறுவனத்திடம் எந்த நிறுவனத்துக்கு பாலிசியை மாற்றப் போகிறீர்கள் என்பதைக் குறிப்பிட்டு ஒரு கோரிக்கை கடிதம் எழுத வேண்டும். இந்த முறையில் பாலிசியில் பிரேக் எதுவும் இல்லாமல் புதுப்பிக்கப்படும். பாலிசி மாற்றும் நடைமுறையின்போது 30 நாள்கள் கருணைக் காலம் (Grace period) அனுமதிக்கப்படும்.
பழைய நிறுவனத்தில் எந்த மாதிரியான பாலிசி எடுத்திருக்கிறீர்களோ, அது போன்ற ஒரு பாலிசிக்குத் தான் மாற்றிக்கொள்ள முடியும். பாலிலி கவரேஜ் தொகை, வேறு திட்டம் போன்றவற்றை முழுமையாக மாற்றிக்கொள்ள முடியாது.
பாலிசி கவரேஜ் அதிகரிக்கப்படும்போது அதிகரிக்கும் கவரேஜ் தொகைக்குக் காத்திருப்புக் காலம் தனியே கணக்கிடப்படும். உதாரணமாக, ரூ.2.5 லட்சம் கவரேஜ் ரூ.3 லட்சமாக புதிய பாலிசியில் அதிகரிக்கப்பட்டால், ரூ.50,000-க்கு மட்டும் தனி காத்திருப்புக் காலம் இருக்கும்.
தேவைப்பட்டால் புதிய நிறுவனத்தின் பாலிசியில் கவரேஜை அதிகரித்துக்கொள்ள முடியும். ஆனால், அதற்கு புதிய நிறுவனம் ஒப்புக்கொள்ள வேண்டும். கவரேஜ் அதிகரிக்கும் நிலையில் ஏற்கெனவே இருக்கும் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் காலம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் பாலிசியில் பிரசவச் செலவுக்கு க்ளெய்ம் இல்லை. புதிய பாலிசியில் இருக்கிறது எனில், அதற்கான முழு காத்திருப்புக் காலமும் அமலுக்கு வரும்.
பாலிசியை மாற்றத் திட்டமிடும் போது ஒன்றுக்கு இரண்டாகப் பல காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசிகளை ஒப்பிட்டு பார்ப்பது நல்லது. ஆன்லைன் வழியாகவும் பாலிசியை வேறு நிறுவனத்துக்கு மாற்றும் வசதி இருக்கிறது.
பாலிசியை வேறு நிறுவனத்துக்கு மாற்ற இரு மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும் கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது.
(வளரும்)