
காப்பீடு
பயணம் செய்வது எல்லோருக்கும் புதிய அனுபவத்தையும் சுவாரஸ்யத்தையும் தருகிறது. பொதுவாக, படிப்பு, வேலை, ஆன்மிகம், பிக்னிக், தொழில்ரீதியாக பயணம் மேற்கொள்ளப் படுகிறது. பரந்து விரிந்து இருக்கிற இந்திய தேசத்தில் லட்சக்கணக்கானவர்கள் தினமும் வெவ்வேறு ஊர் களுக்கு விமானம், பஸ், ரயில், கார் மூலமாக பிரயாணம் செய்கிறார்கள்.

கோவிட்-19 உச்சத்தில் இருந்தபோது தடைபட்ட பயணங்கள், சுற்றுலாப் பயணங்கள் தற்போது நிலைமை சரியானவுடன் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி உச்சத்தை நோக்கி பயணிக்கிறது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் பயணங் களால் பல புதிய தொழில் துறைகள் (விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல், வாடகை வாகனங்கள், கட்டுமானம், கைவினைப் பொருள்கள், உணவு தானியங்கள் உற்பத்தி) உருவாகி, அமோக வளர்ச்சி அடைகிறது. இதன் விளை வாக, லட்சக்கணக்கான வர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் பொருளா தாரமும் உயருகிறது.
விழிப்புணர்வு தேவை
சில நேரங்களில் பயணங் கள் ஏமாற்றங்களையும், மனதை உலுக்கும் அதிர்ச்சி களையும், இடர்ப்பாடுகளை யும் எதிர்பாராமல் ஏற்படுத்து வதுடன், நிதிச் சிக்கலையும் உருவாக்குகிறது. சில நேரங்களில் உடல் ஊனம், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது.
இதன் விளைவாக ஏற்படும் நிதி இழப்புகளை ஈடுசெய்ய உள்நாட்டு பயணக் காப்பீடு பெரிதும் துணைபுரிகிறது. அவ்வப்போது பயணம் மேற்கொள்பவர்கள் அந்தக் குறிப்பிட்ட பயணம் குறித்த தகவல் (பயணம் செய்யும் ஊர், தொடங்கும் மற்றும் முடியும் தேதி, போக்குவரத்து வகை) இன்ஷூரன்ஸ் கம்பெனியிடம் சொல்லி பயணக் காப்பீடு வாங்கலாம்.
இந்த பாலிசி பல வருடங் களுக்கு முன்பே கிடைத்து வந்தாலும் இது குறித்த விழிப்புணர்வு மற்றும் விற்பனை அதிகம் இல்லாத தற்குக் காரணம் பல. அவற்றில் சில முக்கியமான காரணங்கள்...
பயணத்துக்கு ஏற்கெனவே கூடுதலாகச் செலவாகும்போது பயணக் காப்பீட்டு பிரீமியம் வீண் செலவு எனப் பலர் கருது கிறார்கள்.
‘‘நான் என் குடும்பத் துடன் ஒருசில நாள்தானே பிக்னிக் செல்கிறேன், அதற்குள் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடாது’’ என்ற அதீத நம்பிக்கை.

உள்நாட்டு பயணக் காப்பீட்டு கவரேஜ் விவரங்கள்
பாலிசிதாரர்கள் எந்த வகையான போக்குவரத்தையும் (விமானம், ரயில், பஸ்) பயன்படுத்திக்கொள்ளலாம்.
பாலிசிதாரர்கள் தங்கள் பயணத்தின்போதோ, ஏதாவது இடத்திலோ பாஸ்போர்ட், பொருள்கள், பயணச்சீட்டு தொலைந்துபோனால் க்ளெய்ம் பெறலாம்.
பாலிசிதாரர் பயணத்தின்போது சந்திக்கும் எதிர்பாராத விபத்தால் ஏற்படும் மருத்துவமனை சிகிச்சை செலவுகளை க்ளெய்ம் செய்யலாம்.
பாலிசிதாரர் பயணத்துக்காக முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்துவிடுகிறார். பயணத்துக்காக தேர்வு செய்யப்பட்ட அந்த வாகனத்தின் புறப்பாடு ரத்து செய்யப்படவோ, காலதாமதமோ ஆகலாம். இதனால் இணைப்பு விமானம், ரயிலை பாலிசிதாரர் பிடித்துப் பயணத்தைத் தொடர முடியாமல் போகலாம். மேலும், முன்பதிவு செய்த தொகையை லாட்ஜ் நிறுவனத்தினர் தர மறுக்கலாம். இந்த நிதி இழப்பை உள்நாட்டு பயணக் காப்பீடு மூலம் க்ளெய்ம் செய்யலாம்.
பயணச் செலவுக்காக பாலிசிதாரர் பர்ஸில் நிறைய பணம் வைத்துள்ளார். எதிர்பாராமல் பர்ஸுடன் மொத்த பணமும் தொலைத்துவிடுகிறது அல்லது திருடு போய்விடுகிறது. பயணத்தின் பாதியில் இந்த சம்பவம் நடப்பதால், பயணத்தைத் தொடர முடியாத நிலை வருகிறது. உணவு உண்பதற்குக்கூட கையில் பணம் இல்லாமல் போகிறது. பயணத்தை நிறுத்திவிட்டு திரும்பவும் தன்னுடைய ஊருக்குக் கிளம்புவதற்குக்கூட பணம் இல்லை. யாருடைய உதவியும் கிடைக்காத அந்த தர்மசங்கடமான நிலையில், இன்ஷூரன்ஸ் கம்பெனியிடம் தகவல் கொடுத்து மிக விரைவாக க்ளெய்ம் தொகையைப் பெற்றுவிடலாம். அதன்மூலம் பயணத்தில் ஏற்பட்ட தடங்கலை சரிசெய்து பயணத்தைத் தொடரலாம்.
பயணம் செய்யும்போது ஏற்பட்ட விபத்தால் பாலிசிதாரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அந்தச் செய்தி அவரின் குடும்பத்துக்குத் தெரிய வருகிறது. பாதிக்கப்பட்ட பாலிசிதாரரைக் கவனிக்கும் பொருட்டு ஊரிலிருந்து குடும்ப உறுப்பினர் ஒருவர் மருத்துவமனைக்கு வருகிறார். அங்கு பாலிசிதாரருடன் தங்கி இருந்து உதவி செய்கிறார். இதற்காகும் அனைத்துச் செலவுகளையும் இன்ஷூரன்ஸ் கம்பெனியிடம் க்ளெய்ம் பெற்று ஈடுசெய்யலாம்.
ப்ளாக் செய்யப்படும் கார்டு
பாலிசிதாரரின் ஏ.டி.எம் கார்டு, டெபிட் கார்ட் தொலைந்துபோனாலோ, திருடு போனாலோ உடனடியாக அந்த கார்டு பற்றிய தகவலை இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு போன் மூலம் சொன்னால் போதும். அதன் தொடர்ச்சியாக இன்ஷூரன்ஸ் கம்பெனி, தொலைந்துபோன கார்டை வழங்கிய வங்கிக்கு முழு விவரத்தையும் கூறி, அந்த கார்டை ப்ளாக் செய்துவிடும். இதனால் கார்டை எடுத்தவர்கள் யாரும் அந்த கார்டிலிருந்து பணத்தை எடுக்க முடியாது. மேலும், கடைகளில் கார்டைப் பயன்படுத்தி எந்தப் பொருளையும் வாங்க முடியாது. இதன் மூலம் பாலிசிதாரரின் மொத்தப் பணமும் பாதுகாப்பாக இருக்கும்.
பாலிசியின் விலக்குகள்
பயணம் மேற்கொள்ளும் நிதி இழப்பீட்டை ஈடுசெய்யும் கேடயமாக உள்நாட்டு பயணக் காப்பீடு இருக்கிறது. அதே சமயத்தில், ஏற்கெனவே இருக்கக் கூடிய நோய்களுக்கு மேற் கொள்ளும் மருத்துவச் சிகிச்சை, தற்கொலை, தற்கொலை முயற்சி, மனநல பாதிப்பு, போர், உள்ளூர் கலவரம், சாகச விளை யாட்டுகள் போன்றவற்றின் மூலம் ஏற்படும் நிதி இழப்புக்கு உள்நாட்டுப் பயணக் காப்பீட்டின் மூலம் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் பெறமுடியாது.

அனைத்து பயணங்களுக்கும் ஒரே காப்பீடு
அலுவலகப் பணி நிமித்தம் அடிக்கடி மற்றும் தொடர் பயணம் மேற்கொள்பவர்கள் அனைத்துப் பயணங்களுக்கும் சேர்த்து ஒரே பயணக் காப்பீடு (மல்ட்டிபிள் டிராவல் இன்ஷூ ரன்ஸ்) வாங்கலாம்.
இவ்வாறு ஒரே பாலிசியில் அனைத்துப் பயணங்களுக்கும் சேர்த்து பயணக் காப்பீட்டைப் பெறும்போது, நேரம் விரயமாவது தவிர்க்கப்படுகிறது.
ஒவ்வொரு பயணத்துக்கும் தனித்தனியாக பாலிசி வாங்க முற்படும்போது நேரமின்மை, மறதி காரணமாக ஏதாவது ஒரு பயணத்தை இன்ஷூர் செய்ய தவறிவிட வாய்ப்புள்ளது. இந்த பயணக் காப்பீட்டை ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து வாங்கி பயணத்தை இனிமையாகத் தொடங்கலாம்.
சுற்றுலாப் பயணங்கள் என்பதே மகிழ்ச்சியாக இருந்து நன்கு அனுபவிக்கத்தான். அந்த நிலையில், மனம் வருந்தும் செயல்கள் எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும் எனில், டிராவல் இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம் என்பதில் சந்தேகமே இல்லை!