
இன்ஷூரன்ஸ்
டி.எல்.அருணாச்சலம், இயக்குநர், பாரத் ரீ இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் பி.லிட், சென்னை
மீண்டும் டிசம்பர் சீஸன் வந்தாகிவிட்டது. நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில், கன மழை, காற்று, மழை நீர் தேங்குதல் என இயற்கைச் சீற்றத்தின் கச்சேரி ஆரம்பமாகி விட்டது. ஏரிகள் நிரம்பி, ஆற்றங்கரைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடத்தொடங்கி விட்டது.

நீர் நம் வாழ்க்கையின் ஆதாரம் என்றாலும், நீர் மேலாண்மை பிரச்னைகள் இருப்பதால், வெள்ளப் பேரழிவால் தமிழகம் முழுக்க மக்கள் பரிதவிப்பதை நாம் காண முடிகிறது.
மக்கள் வாழும் வீட்டுப் பகுதிகள் தவிர, முக்கியமாக சிறு, குறு தொழில் மற்றும் வியாபார நிறுவனங்கள் நிறைந்த இடங்களில் வெள்ளம் புகுந்தால் கடும் பொருளாதார இழப்பு ஏற்படுவதை நாடெங்கும் நாம் காண்கிறோம். இது வருடா வருடம் மீண்டும் மீண்டும் வந்து போகும் இயற்கை நிகழ்வு.

சென்னை வெள்ளம் 2005 மற்றும் 2015-ல் நிகழ்ந்தபோது, ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர் தங்கள் நிறுவனத்தின் மூலப் பொருள்கள், தயாரித்த பொருள்கள், இயந்திரங் கள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்து பெரும் நஷ்டத்தைச் சந்தித்தனர். அப்போதும் பாலிசி எடுக்காததாலும் எடுத்த பாலிசி சரியாக இல்லாததாலும் அவதிக்குள்ளாயினர். பாலிசி இருந்தாலும் எடுக்க உதவிய ஏஜென்டு களோ, வங்கிகளோ பாலிசியின் மூலம் க்ளெய்ம் செய்ய எந்த உதவியும் செய்யவில்லை. ஏதோ காரணங்களால் சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளெய்ம் தர முன்வரவில்லை என்பது போன்ற பல சிக்கல்கள் இருந்தன.
எவ்வளவு இழப்பீடு கிடைக்கும் என்று ஆய்வு செய்து கணக்கிட்டு பரிந்துரை செய்யும் இன்ஷூரன்ஸ் சர்வேயர்கள் கேட்ட கேள்விகள் ஏராளம். அடைந்த நஷ்டத்தை சரியான முறையில் ஆவணப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டிய அனுபவமும் இந்த சிறு, குறு தொழில் முனைவோர்களிடமும் இல்லை.

இத்தகைய பொருள் சேதம் காரணமாகப் பண இழப்பை ஈடுசெய்ய காப்பீடு செய்வதுதான் ஒரே வழி. என்றாலும், எல்லோரும் தேவைப்பட்ட அளவுக்கு சரியான முறையில் காப்பீட்டு பாலிசி எடுப்பதில்லை. எந்தவிதக் காப்பீடும் எடுக்காத தொழில்முனைவோர் பலர் உள்ளனர்.
காப்பீட்டு பாலிசி எடுப்பதில் நம்பிக்கை இல்லாமலும் ‘புயல் மழை வெள்ளம் வருவதெல்லாம் கடவுள் செயல்’ என்று கடவுளையோ, விதியையோ பொறுப்பாக்கி காப்பீடே எடுக்காமல் இருப்பதும் இயல்பான விஷயமாக உள்ளது.
சரி, இன்றைய நிலைமைக்கு வருவோம். ஏரிகளில் அணைகளில் உபரி நீர் திறக்கப்படுமென தண்டோரா போடும் நேரத்தில்தான் பலருக்கு காப்பீட்டின் ஞாபகம் வரும். இருக்கட்டும், இதில் உள்ள சிக்கல்கள் என்ன என்று பார்ப்போம்
1. பாலிசியே எடுக்காமல் அசட்டையாக இருந்துவிட்டு புயல் அல்லது கனமழை வருவது போல் இருக்கும்போது அவசரமாக காப்பீடு எடுக்க முயல்வதை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் விரும்புவதில்லை. இதற்கு பெயர் ‘அட்வெர்ஸ் செலக்க்ஷன்’ என்று கூறுவார்கள். அதற்கு பதில், முன்பாகவே தகுந்த நேரத்தில் சரியான காப்பீட்டுத் தொகைக்கு சரியான முறையில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதுதான் சரி.
2. புயல் வருகிறது, துறைமுகத்தில் 2-ம் நம்பர் கொடி ஏற்றிவிட்டார்கள், வெள்ளம் வந்துவிட்டது என்ற நிலையில் காப்பீடு அவசரமாக வேண்டும் என்று பறந்தடித்து ஓடி சென்றால், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தார் ‘Waiting period’ உள்ளது என்று சொல்லி விடுவார்கள். அதாவது, பிரீமிய தொகை செலுத்தி பாலிசி தொடங்கும் நாளிலிருந்து 15 நாள் களுக்குப் பிறகுதான் புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்துக்குக் காப்பீடு தொடங்கும் என்று பாலிசியிலேயே டைப் செய்து கொடுத்துவிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால், தீ, மின்னல், வெடி விபத்து, சமூக கலவரம் போன்ற ஆபத்தான விளைவுகளுக்கான காப்பீடு பிரீமியம் செலுத்திய உடனே அந்த நாள் முதலே தொடங்கிவிடும். ஆனால், வெள்ளம், புயல் போன்ற காரணங்களுக்கான காப்பீடு 15 நாள்களுக்குப் பின்னரே தொடங்கும் என்பது இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் விதிமுறை.

சிறு, குறுந்தொழில் முனைவோர் மற்றும் வியாபார நிறுவனர்கள் இதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
பாலிசியே எடுக்காமல் இருந்தால் உடனே எடுக்க வேண்டும். எடுக்கும்போது நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடங்கள், எந்திரங்கள், மூலப்பொருள்கள், முடிக்கப்பட்ட தயாரிப்புப் பொருள்கள் போன்ற வற்றின் சரியான மதிப்புக்கும் மற்றும் அந்த நிறுவனத்தில் ஏற்படக்கூடிய எல்லாவிதமான விபத்துகளுக்கும் காப்பீடு எடுக்க வேண்டும்.
தங்களுடைய எல்லா சொத்தை யும் இதில் முடக்கி, கோடிக் கணக்கில் மூலதனத்தைப் போட்டு, வங்கியிலும் பெரும் கடன் வாங்கி முதலீடு செய்த பின், காப்பீடு எடுக்காமல் போனால், பெரும் இயற்கை சீற்றங்களால் வரக்கூடிய பணம் மற்றும் பொருள் நஷ்டத்தைத் தாங்கவே முடியாது. தொழிலும் நொடிந்து சொந்த சொத்துகளும் வங்கிக் கடனை அடைக்கவே போய்விடும்.
தற்போது தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் எடுக்கும் காப்பீட்டு பாலிசிகள்... 1. தீ மற்றும் இதர விபத்து பாலிசி. 2. இலகு உதயம் சுரக்க்ஷா. 3. இண்டஸ்ட்ரியல் ஆல் ரிஸ்க் காப்பீட்டு பாலிசி போன்றவை. தவிர, பல காப்பீடுகள் ஒன்றாக ஒரே பாலிசியில் கிடைக்கும் பசகஜ் பாலிசிகளும் உண்டு.
இந்த மூன்று பாலிசிகளில் தரப்படும் கவரேஜ் மற்றும் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை விகித்தில் சில வேறுபாடுகள் உண்டு. தவிர, வெறும் மழை நீர் பட்டோ, மழைச் சாரல் அடித்தோ சேதம் ஏற்பட்டால்காப்பீடு கிடைக்காது. மழை நீர் சேர்ந்து தண்ணீரால் முழுகியோ, ஏதோ ஏரி தண்ணீர் திறந்ததால் வெள்ளம் வந்தோ நிகழும் சேதம் மட்டுமே இந்த பாலிசிகளில் கவர் ஆகும்.
எனவே, எந்தத் தொழிலாக இருந்தாலும், உற்பத்தி செய்வது எந்தப் பொருளாக இருந்தாலும், இன்ஷூரன்ஸ் பாலிசி கவர் செய்த மதிப்பீடும் விபத்துகளும், நம் நிறுவனத்தின் மற்றும் பொருள்களின் விவரங்களும் சரியாக இருந்தால்தான் இன்ஷூரன்ஸ் இழப்பீடு பெற முடியும் என்பதைப் புரிந்துகொள்வது நல்லது. இயற்கை சீற்றத்தால் வரும் நஷ்டத்தை ஈடுசெய்ய முன்னெச்சரிக்கையாக செயல்படுவதுதான் சிறந்த வழி.
சிறு, குறு தொழில்முனைவோர்களுக்கான இன்ஷூரன்ஸ் டிப்ஸ்!
ஒரு கார் வாங்கும்போது அதன் வசதிகள் என்னென்ன என்று ஆராய்ந்து வாங்குகிற மாதிரி இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அதன் பயன்கள் என்னென்ன, எந்த விதமான விபத்துகள் அதில் கவர் ஆகும், எந்தெந்தக் காரணங்களுக்கெல்லாம் அந்த பாலிசியில் காப்பீடு கிடைக்காது, என்னென்ன கூடுதல் விபத்துகளை கவர் செய்யலாம், பாலிசிதாரர் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் என்னென்ன என்றெல்லாம் ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும்.
உதாரணமாக, பல ஆண்டுகள் பழைய கட்டடம் மற்றும் எந்திரங்கள் சேதமடைந்தால் மதிப்புக் கழிமானம் (Depreciation) இல்லாமலே இழப்பீடு பெற முடியும் என்பதைப் பல தொழில்முனைவோர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சரியான காப்பீடு எடுத்திருந்தால், சேதம் காரணமாக உற்பத்தி நின்றுபோனால் இழந்த லாபத்தை இழப்பீடாகக் கோர முடியும்.
திரவ வடிவில் பெரிய டேங்க்கில் ரசாயன பொருள் இருந்து, அது கசிந்து நஷ்டம் ஏற்பட்டாலோ, அது வேறு ரசாயனம் கலந்து வீணாகிவிட்டாலோ அதற்கும் இன்ஷூரன்ஸ் செய்யலாம். இது போன்ற பல இன்ஷூரன்ஸ் எக்ஸ்ட்ரா கவர்களும் உண்டு. அதற்கேற்ற பிரீமியம் சேர்த்து செலுத்த வேண்டும்.