Published:Updated:

சகோதரர்கள் பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தால் வரிவிலக்கு கிடைக்குமா? #DoubtOfCommonMan

ஹெல்த் இன்ஷூரன்ஸ் ( vikatan )

உடல்நலக்கோளாறு காரணமாக சகோதரர்கள் நம்மைச் சார்ந்து வாழும் சூழல் ஏற்பட்டால் அவர்களுக்கான சிகிச்சைக்கு வருமான வரிவிலக்கு கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

Published:Updated:

சகோதரர்கள் பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தால் வரிவிலக்கு கிடைக்குமா? #DoubtOfCommonMan

உடல்நலக்கோளாறு காரணமாக சகோதரர்கள் நம்மைச் சார்ந்து வாழும் சூழல் ஏற்பட்டால் அவர்களுக்கான சிகிச்சைக்கு வருமான வரிவிலக்கு கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் ( vikatan )

ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது இன்று தவிர்க்கமுடியாத விஷயமாகிவிட்டது. தற்போது புதிது புதிதாக நோய்கள் உருவெடுத்துவரும் நிலையில், ஆபத்தான நேரத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கைகொடுக்கும்.

ஜெயமாலதி கிருஷ்ணமூர்த்தி என்ற வாசகி, ஹெல்த் இன்ஷூரன்ஸ் குறித்து விகடனின் #DoubtOfCommonMan பகுதியில் ஒரு கேள்வியெழுப்பியிருக்கிறார். "என் தந்தை, தாய், சகோதரி மற்றும் சகோதரன் (இருவரும் 18 வயதுக்குட்பட்டவர்கள்) நால்வருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் போட்டுள்ளேன். பிரீமியம் தொகைக்கு 80D பிரிவின் கீழ் எனக்கு வருமான வரிவிலக்கு கிடைக்குமா?" என்பதுதான் அவரது கேள்வி. இந்தக் கேள்வியை ஆடிட்டர் கமலேசனிடம் கேட்டோம்.

வருமான வரி
வருமான வரி
vikatan

"அப்பா, அம்மா, கணவன் அல்லது மனைவி, குழந்தைகள்... இவர்களுக்காக எடுத்துள்ள மருத்துவக்காப்பீட்டு பிரீமியங்களை மட்டுமே வருமான வரிச்சட்டம் 80D செக்‌ஷன்படி வரிக்கழிவுக்குக் காட்டமுடியும். சகோதரர், சகோதரிக்கு எடுக்கும் மருத்துவக் காப்பீடுகளுக்கு இந்த செக்‌ஷனைப் பயன்படுத்தமுடியாது. மருத்துவக் காப்பீட்டுப் பிரீமியம் என்றில்லாமல், உங்களைச் சார்ந்துவாழும் சகோதர, சகோதரிகளின் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு 80DD, 80DDB செக்‌ஷன்படி வருமான வரிக்கழிவு பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

பார்வையின்மை, நடக்கமுடியாதபடி முடக்கிப்போடும் வியாதிகள், ஆட்டிசம் போன்ற உடல்நலக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், இன்னொருவரைச் சார்ந்தே வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தொடர் சிகிச்சை எடுக்கவேண்டிய கட்டாயமும்கூட இருக்கிறது. அது அவர்களுக்கும், அவர்களைப் பாதுகாப்பவர்களுக்கும் பெரிய நிதிச்சுமையாக அமையக்கூடும். எனவே, அந்த நிதிச்சுமையைக் குறைக்கும்விதமாக வருமான வரிக்கழிவுக்கு வழிவகுத்துள்ளார்கள். வருமானவரிச்சட்டம் 80DD செக்ஷன்படி, செவித்திறன் குறைபாடு, மனநலக் குறைபாடு, மன நோய், ஆட்டிசம், பெருமூளை வாதம், பார்வையின்மை, குறைவான பார்வை, தொழுநோய் போன்றவற்றுக்கான மருத்துவ சிகிச்சை செலவுகளை வருமான வரிக்கழிவுக்குக் காட்ட இயலும். அதற்கென சில விதிமுறைகளை வகுத்துள்ளார்கள்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்
ஹெல்த் இன்ஷூரன்ஸ்
vikatan

உடல்நலப் பாதிப்பு, குறைந்தபட்சம் 40 சதவிகிதம் என்ற அளவில் இருக்குமென்றால் ரூ.75,000 வரையிலும், குறைந்தபட்சம் 80 சதவிகிதம் என்ற அளவில் இருக்குமென்றால் ரூ.1,25,000 வரையிலும் வரிக்கழிவுக்குக் கணக்கில் காட்டலாம். மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு கிளெய்ம் செய்வதற்கு தலைமை அரசு மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை குறித்த அத்தாட்சிச் சான்றிதழும், நியூராலஜிஸ்ட் ஒருவரிடம் சிகிச்சை சான்றிதழும் வாங்க வேண்டும். குழந்தைக்கான சிகிச்சையெனில் குழந்தை நல மருத்துவரின் அத்தாட்சிச் சான்றிதழ் தேவை. மருத்துவச்சான்றிதழ் மட்டுமின்றி ஆட்டிசம், பெருமூளை வாதம் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு ஃபார்ம் 10-IA விண்ணப்பம், சுய அறிவிப்புச் சான்றிதழ் (Self-Declaration Certificate) போன்றவை தேவைப்படும்.

அடுத்ததாக, வருமான வரிச்சட்டம் 80DDB செக்ஷன்படி, முற்றிய நிலையிலுள்ள அதிதீவிரமான நோய்களுக்கான சிகிச்சை செலவுகளுக்கு வரிக்கழிவு பெறமுடியும். டிமென்ஷியா, கோரியா உள்ளிட்ட நரம்பு தொடர்பான நோய்கள், வீரியமான புற்றுநோய், ஹெச்.ஐ.வி, சிறுநீரகச் செயலிழப்பு, ரத்தம் உறையாமை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை செலவுகளுக்கு வருமான வரிக்கழிவு பெறலாம்.

வருமான வரி
வருமான வரி
vikatan

இதற்காக விண்ணப்பிக்கும்போது அந்தந்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்களின் அத்தாட்சிச் சான்றிதழ்கள் அவசியம். வயதைப் பொறுத்து வரிக்கழிவு விகிதம் வேறுபடும். பொதுவாக அதிகபட்சம் 40,000 ரூபாய் வரையிலும், முதியவர்கள் எனில் ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் சிகிச்சைக்கான செலவுக்கு வருமான வரிக்கழிவு பெற விண்ணப்பிக்கலாம். இதில் சந்தேகமிருந்தாலோ, கூடுதல் விவரங்களைப் பெற விரும்பினாலோ, ஆடிட்டர் ஒருவரை நேரில் சந்தித்து விவரங்களைப் பெறுவது நல்லது.

Doubts of Commonman
Doubts of Commonman
vikatan

இதுபோன்று உங்களுக்கு எழும் கேள்விகளை https://special.vikatan.com/doubt-of-commonman/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். பதிலைச் சொல்ல காத்திருக்கிறோம்.