
பலர் காப்பீட்டையும் ‘எண்டோமென்ட் (Endowment) பாலிசி’ போன்ற பாசிலிகள் மூலம் முதலீடாக மேற்கொள்ள நினைக்கிறார்கள்
அவசரக்கால நிதி (Emergency Fund) மற்றும் மருத்துவ, ஆயுள் காப்பீடுகள் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமானவை. ஆனால், அவற்றின் முக்கியத்துவமும், அவற்றை சரியான முறையில் எப்படி மேற்கொள்வது என்பது பற்றியும் பலருக்கும் தெரிவதில்லை. அது பற்றி விரிவாகப் பார்ப்போம்.
அவசரக்கால நிதி
மருத்துவம் உள்ளிட்ட அவசரச் செலவு ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதுபோலவே, வேலையிழப்பு, தொழில் முடக்கம் என வருமானம் திடீரென நின்றுபோகலாம். அப்போது கைகொடுக்கக் கூடியதுதான் அவசரக்கால நிதி. எனவே, குடும்ப மாதச்செலவுபோல 3 முதல் 6 மடங்குவரை தொகையை அவசரக்கால நிதியாகக் கைவசம் வைத்திருக்க வேண்டும். கணவன், மனைவி இணைந்தோ தனித் தனியாகவோ, தங்களது 6 மாத சம்பளத்தை/வருமானத்தை வங்கி சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றில் விரைந்து எடுக்கும்படி வைத்துக்கொள்ளலாம். அவசரக்காலத் தொகையை, கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் வைத்திருக்கும்போது சிறிது கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

காப்பீடுகள்
மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு... இவை இரண்டும் அத்தியாவசியமானவை. மருத்துவக் காப்பீட்டைப் பொறுத்தவரை சிலர், ‘எங்க ஆபீஸ்ல எனக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்காங்க’ என்பார்கள். ஒருவேளை அந்த வேலையில் இருந்து நின்றுவிட்டாலோ, நிறுத்தி
விட்டாலோ மருத்துவக் காப்பீடு இல்லை என்றாகிவிடும். குடும்பத்தின் மருத்துவச் செலவுகளுக்கு சேமிப்பையும் முதலீட்டையும் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே, அலுவலக மருத்துவக் காப்பீடு பாலிசி இருந்தாலும் தனியே ஒரு மருத்துவக் காப்பீடு பாலிசி எடுத்துக்கொள்ளவும். அலுவலகம் எடுத்துக் கொடுத்திருக்கும் பாலிசியில் பெரும்பாலும் கவரேஜ் என்பது ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் என்பதாகத்தான் இருக்கும்.
மெடிக்ளெயிம் பாலிசியில் பின்வரும் விஷயங்களைக் கவனத்தில் வைக்கவும். கணவன், மனைவி, ஒரு/இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்துக்கு, ஓர் அடிப்படை ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வசிக்கும் நகரம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, வயது, குடும்ப மருத்துவ வரலாறு ஆகியவற்றைப் பொறுத்து ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ளலாம். குறைவான தொகைக்கு அடிப்படை பாலிசியை எடுத்துக்கொண்டு, பின்னர் டாப்அப் பாலிசி எடுத்துக்கொள்ளலாம். அடிப்படை பாலிசியின் கவரேஜ் தாண்டி செலவு வரும் போது டாப்அப் திட்டம் மூலம் செலவை க்ளெய்ம் செய்யலாம். எதற்கு இந்த டாப்அப் திட்டத்தை எடுக்க வேண்டும் என்றால், டாப்அப் திட்டத்திற்கான பிரீமியம் மிகவும் குறைவானதாக இருக்கும்.
ஆயுள் காப்பீடு
ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பது ஒரு வகையான குடும்பப் பாதுகாப்பு, அது முதலீடு அல்ல. அதாவது, குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கும்போது, அவருக்கு அசம்பாவிதம் ஏற்படும்பட்சத்தில் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து கவரேஜ் தொகை இழப்பீடாக வழங்கப்படும். இந்தத் தொகையைக் கொண்டு குடும்ப உறுப்பினர்கள் அடுத்து வரும் ஆண்டுகளில் அவர்களின் நிதித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அந்த வகையில், அதிக கவரேஜ் இருக்கும்படி ஆயுள் காப்பீடு பாலிசி எடுப்பது அவசியம்.
பலர் காப்பீட்டையும் ‘எண்டோமென்ட் (Endowment) பாலிசி’ போன்ற பாசிலிகள் மூலம் முதலீடாக மேற்கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் இந்தப் பாலிசிகள் மூலம் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 5 சதவிகித அளவுக்குத்தான் வருமானம் கிடைக்கும். மேலும், ஆயுள் காப்பீடு கவரேஜும் மிகக் குறைவாகத்தான் இருக்கும். அதனால், இந்த வகை பாலிசிகளைத் தவிர்க்க வேண்டும்.

சரி, ஆயுள் காப்பீடு பாலிசியை எவ்வளவு தொகைக்கு எடுக்க வேண்டும்? ஒருவருக்கு 30 வயது என்றால், அவர் 50 வயது வரை வேலைபார்ப்பார் என்றால், அவருடைய 20 வருட வருமானம் அளவுக்கு கவரேஜ் இருப்பது போல் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க வேண்டும். உதாரணத்துக்கு அவர் இப்போது மாதம் ரூ.50,000 சம்பாதிக்கிறார் என்றால் சம்பளம் அதிகரிக்கவில்லை என்றாலும் அவர் இந்த 20 வருடங்களில் மொத்தம் ரூ.1.2 கோடி சம்பாதிப்பார். அந்த வகையில் சுமார் ரூ.1.5 கோடி அளவுக்கு அவர் டேர்ம் பிளான் எடுத்துக்கொள்ளலாம். இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் மிகவும் மலிவானது. ஆனால், நிறைய காப்பீட்டு முகவர்கள் இதை வெளியே சொல்வதில்லை. காரணம், இதில் அவர்களுக்கு அதிக கமிஷன் கிடைப்பதில்லை.
உங்கள் அவசரக் கால நிதி, காப்பீட்டுத் திட்டங்களை முதலில் தயார் செய்யுங்கள். பின்னர்தான் பங்குச் சந்தையில், மியூச்சுவல் ஃபண்டில், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஆரம்பிக்க வேண்டும்.