
நேரடியாக பாலிசிகளை பாலிசிதாரர்கள் நிறுவனத்திடம் வாங்கும்போது உண்டாகும் செலவினங்கள் குறைவாகும்...
ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், Wealthladder.co.in
வரும் மே 1 முதல் அனைத்து இன்ஷூ ரன்ஸ் நிறுவனங்களும் தாங்கள் வழங்கும் இன்ஷூ ரன்ஸ் பாலிசியை பாலிசி தாரருக்கு ஏஜென்டுகள் தவிர்த்து நேரடியாகவும் விற்பனை செய்ய வேண்டும் என இன்ஷூரன்ஸ் கட்டுப் பாட்டு வாரியமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ கூறியுள்ளது. இதனால் வரும் சாதகங்கள், பாதகங்கள் பற்றிப் பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்டில் நேரடி விற்பனை...
தற்போது ஒரு முதலீட் டாளர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நினைத்தால், ‘டைரக்ட் பிளான்’ என்கிற முறையில் நேரடியாகவும், ‘ரெகுலர் பிளான்’ என்கிற முறையில் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் மூலமாகவும் முதலீடு செய்ய முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நேரடியாக முதலீடு செய்யும் வாய்ப்பு முதலீட்டாளர்களுக்கு 2013-ம் ஆண்டு முதல் தரப்படு கிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இந்த ‘டைரக்ட்’ முறை நடைமுறைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் சுமார் 25% முதலீட்டாளர் கள் இந்த முறையில் முதலீடு செய்கின்றனர். மற்ற முதலீட்டாளர்கள் இன்னும் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் மூலமே முதலீடு செய்து வருகின்றனர்.
மியூச்சுவல் ஃபண்டில் ‘டைரக்ட்’ முறை கொண்டு வரப்பட்டபோது, ஃபண்ட் விநியோகஸ்தர்களின் கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால், பத்து ஆண்டுகள் கழித்து, அந்த முறை இப்போது ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. அதே போல, இன்ஷூரன்ஸ் பாலிசி விநியோகத்திலும் இப்போது ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பு நேரடி பாலிசி கொண்டு வந்திருப்பது விமர்சிக்கப்படுகிறது.

என்ன சாதகம்?
நேரடி பாலிசியால் பாலிசிதாரர்களுக்கு என்ன சாதகங்கள் எனப் பார்ப்போம்.
1. நேரடியாக பாலிசிகளை பாலிசிதாரர்கள் நிறுவனத்திடம் வாங்கும்போது உண்டாகும் செலவினங்கள் குறைவாகும். உதாரணமாக, ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒரு பாலிசியை வடிவமைக்கும்போது முதலீடு, காப்பீட்டுத் தொகை மற்றும் இதர செலவுகள் என மூன்று வகையாகப் பிரித்து பாலிசிகளின் பிரீமியத்தை முடிவு செய்யும். இதர செலவுகள் என்பது அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் செலவுகள் மற்றும் ஏஜென்டுகளின் கமிஷன் ஆகியவை அடங்கும். ஒரு பாலிசிதாரர் நேரடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் பாலிசி வாங்கும்போது இந்த இதர செலவுகள் குறைந்து, குறைவான பிரீமியம் மட்டுமே கட்ட வேண்டி இருக்கும்.
2. சில இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் தங்களது டார்கெட்டை முடிக்கத் தவறான இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விற்பதைத் தடுக்க உதவுகிறது.
3. பாலிசிதாரர்கள் நேரடியாகப் பாலிசி எடுக்கும்போது பாலிசிகளின் தன்மைகளை ஒளிவு மறைவு இல்லாமல் தெரிந்துகொள்ள உதவும்.
என்ன பாதகம்?
நேரடி இன்ஷூரன்ஸ் விற்பனையால் வரும் பாதகங்கள் என்ன என்று பார்ப்போம்.
1. ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனம் நேரடியாக பாலிசிகளை விற்கும்போது அவர்களால் பாலிசி தாரர்களுக்கு ஒழுங்கான முறையில் சேவை செய்ய முடியாமல் போகலாம்.
2. ஒரு பாலிசியை நிறுவனத்திடம் நேரடியாக வாங்கும்போது, பாலிசிதாரர் களுக்கு அவர்களின் தேவை என்ன என்று அறிந்து அதற்குத் தகுந்த பாலிசிகளை எடுக்க முடியாமல் போகலாம். இடராக இருக்கிறது.
3. ஒரு பாலிசியில் க்ளெய்ம் என்பது வந்துவிட்டால், அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நேரடியாக அணுகி க்ளெய்ம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தவிர, அந்தக் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு இன்ஷூரன்ஸ் பற்றி ஓரளவு புரிதல் இருந்தால் மட்டுமே க்ளெய்ம் என்பதை சிக்கல் இல்லாமல் வாங்க முடியும்.

பாலிசிதாரர்கள் என்ன செய்யலாம்?
இந்தத் திட்டம் மே 1-ம் தேதி வந்தபிறகு பிரீமியம் எவ்வளவு குறைகிறது என்பதைப் பார்த்து, நேரடியா அல்லது முகவர் மூலமா என்பதைத் தேர்வு செய்யலாம். இன்ஷூரன்ஸ் பற்றி நன்கு புரிந்துகொண்டவர்களும், தனக்கு எத்தகைய இன்ஷூரன்ஸ் தேவை, எவ்வளவுக்குத் தேவை என்பதை அறிந்து கொண்டவர்களும் நேரடியாக இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்க இது நல்லதொரு வாய்ப்பாகும்.
அதே சமயம், இன்ஷூரன்ஸ் எடுப்பது குறித்து தெளிவான முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம் உள்ளவர்களும், பாலிசிகளின் தன்மை குறித்து சரியாக புரிந்துகொள்ளாதவர் களும் பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்காக நேரடி முறையில் தங்களுக்குத் தேவை இல்லாத பாலிசிகளை எடுக்கக் கூடாது. இன்ஷூரன்ஸ் பற்றி நன்கு தெரிந்துகொண்டு இந்த நேரடி முறையைப் பயன்படுத்தும் போது பாலிசிதாரர்களுக்கு லாபமாகவே இருக்கும்.
‘‘ஏஜென்டுகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்..!’’
ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யின் இந்த அறிவிப்பு இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யின் இந்த அறிவிப்பு குறித்து எல்.ஐ.சி இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் சங்கத்தில் பேசியபோது, அவர்கள் கூறியதாவது...
“ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யின் இந்த அறிவிப்பு எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான ஏஜென்டுகள் பாலிசி விற்பனையைத் தங்களது தொழிலாகச் செய்து வருகின்றனர். அதை நம்பித்தான் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரத்தைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், ஏஜென்டுகளுக்குக் கிடைக்கும் கமிஷன் மட்டுமே பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. காப்பீடு எடுக்கும் மக்களுக்குத் திட்டங்களின் விவரங்களை எடுத்துச் சொல்லி, அவர்களிடம் பாலிசியை விற்கும் பணியில் இருக்கும் ஏஜென்டுகளுக்கு இந்த அறிவிப்பு பெரிய நெருக்கடியை உண்டாக்கும். மேலும், காப்பீட்டுத் துறையில் இது பெரிய குழப்பத்தை உண்டாக்கும்.
ஏஜென்டுகள் பாலிசிகளை ‘மிஸ்செல்லிங்’ செய்வதாகக் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதற்கு ஏஜென்டுகள் மட்டுமே காரணமில்லை. இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வைக்கும் டார்கெட் அழுத்தங்களே காரணம். அதை சரிசெய்தாலே போதும், பல பிரச்னைகள் தீர்ந்துவிடும்.
காப்பீட்டுத் துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. ஏஜென்டுகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்படியான ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யின் இந்த நேரடி பாலிசித் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு அவசியமற்றது. பாலிசியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, ஒப்பீடு செய்து தேர்வு செய்ய மக்களுக்கு நேரம் இல்லை. அந்த வேலையை ஏஜென்டுகள்தான் செய்கிறார்கள். எனவே, பல லட்சக்கணக்கான ஏஜென்டுகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஐ.ஆர்.டி.ஏ.ஐ தனது அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டும்” என்று கூறினர்.
- ஜெ.சரவணன்