
எல்.ஐ.சி
ஆர்.காகுஸ்தன்
வருகிற மார்ச் 10-ம் தேதி அன்று எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐ.பி.ஓ தொடங்கப் போகிறது என ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் வாட்ஸ்அப்களில் வைரலாக வலம் வந்துகொண்டிருக்கின்றன. இந்தத் தேதியில்தான் ஐ.பி.ஓ வருமா அல்லது எந்தத் தேதியில் ஐ.பி.ஓ வரும் என்பது பற்றிய அறிவிப்பு அதிவிரைவில் முதலீட்டாளர் களுக்குக் கிடைத்துவிடும். இந்த நிலையில், எல்.ஐ.சி நிறுவனம் பற்றி அதிகம் தெரியவராத ஆச்சர்யமான சில தகவல்களைப் பார்ப்போம்.
1. எல்.ஐ.சி நிறுவனத்திடம் இருக்கும் மொத்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் எண்ணிக்கை 29 கோடி. இது சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகம்.
2. இன்ஷூரன்ஸ் துறையைப் பொறுத்தவரை, நம் நாடு உலக அளவில் 10-வது மிகப் பெரிய சந்தையாகவும், பிரிமீயத்தைப் பொறுத்தவரை ஆசிய அளவில் ஐந்தாவது இடத்திலும் இருக் கிறது. நிகர பிரீமியம் வருமானத்தில் (Gross Written Premiem) எல்.ஐ.சி நிறுவனம் உலக அளவில் ஐந்தாவது இடத்திலும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் மொத்த சொத்து அடிப் படையில் உலக அளவில் 10-வது இடத்திலும் உள்ளது.
3. எல்.ஐ.சி நிறுவனத்தில் இந்தியா முழுக்க 13.5 லட்சம் ஏஜென்டுகள் உள்ளனர். இவர் களுடன் 1 லட்சம் நேரடி ஊழியர்கள் எல்.ஐ.சி-யில் பணிபுரிகின்றனர். எல்.ஐ.சி-க்கு இந்தியா முழுக்க 2,048 கிளை அலுவலகங்களும் 1,554 சாட்டிலைட் அலுவலகங்களும் உள்ளன.
4. மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்களில் மிகப் பெரியது எல்.ஐ.சி நிறுவனம்தான். இந்த நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.39 லட்சம் கோடி. இது 150 நாடுகளின் ஜி.டி.பி மதிப்பைவிட அதிகம்.

எல்.ஐ.சி நிறுவனம் மற்ற நிறுவனங்களைவிட எவ்வளவு பெரியது தெரியுமா? இந்தியாவில் உள்ள அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பைவிட எல்.ஐ.சி நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 3.3 மடங்கு அதிகம்.
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைவிட எல்.ஐ.சி 16.2 மடங்கு பெரியது. இந்தியாவின் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் நிர்வகிக்கும் சொத்து மதிப்பைவிட 1.1 மடங்கு பெரியது. இந்திய ஜி.டி.பி-யில் இது 18.5% ஆகும்.
5. நிகர பிரீமியம் வருமானத்தில் (Gross Written Premiem) 64.1 சதவிகிதமும், புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பாலிசிகள் மூலம் கிடைக்கும் பிரீமியத் தில் 66.2 சதவிகிதமும் தனிநபர் பாலிசி விநியோகத்தில்74.6 சதவிகிதமும், குரூப் பாலிசிகளில் 81.1 சதவிகிதமும் எல்.ஐ.சி நிறுவனம் பெற்றிருக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் 2.1 கோடி தனிநபர் பாலிசிகளை எல்.ஐ.சி நிறுவனம் விநியோகம் செய்திருக்கிறது.
6. எல்.ஐ.சி நிறுவனத்தின் மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அளப்பரியது. தமிழகத் திலிருந்து கடந்த 2020-21-ம் ஆண்டில் புதிய பாலிசிகள் மூலம் பெற்ற பிரீமியம் ரூ.4,120 கோடி ஆகும்.
7. எல்.ஐ.சி நிறுவனம் இந்தியாவில் அதிக அளவிலான பாலிசிகளை விநியோகம் செய்யும் மாநிலங்களில் முதல் ஐந்து இடங்களில் தமிழகம் உள்ளது. தமிழகம் முழுக்க 85,000 ஏஜென்டுகள் எல்.ஐ.சி-க்கு உள்ளனர். இந்திய அளவில் 6.37% ஏஜென்டுகள் தமிழகத்தில் உள்ளனர்.
8. எல்.ஐ.சி-யின் பங்குகளை ஐ.பி.ஓ வரும்போது எல்.ஐ.சி பாலிசிதாரர் களுக்கு 10% பங்குகள் வரை ஒதுக்கப்பட உள்ளது. இதற்கு எல்.ஐ.சி பாலிசி தாரர்கள் தங்கள் பான் கார்ட்டை எல்.ஐ.சி பாலிசியுடன் இந்த மாதம் 28-ம் தேதிக்குள் இணைத்தாக வேண்டும். அதுபோல, டீமேட் கணக்கையும் பாலிசிதாரர்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.
9. பான் கார்ட்டை இன்ஷூரன்ஸ் பாலிசியுடன் இணைப்பது எளிது. WWW.Licindia.in என்கிற இணைய தளத்தில் சென்று, licindia.in/Home/Online-PAN-Registration என்கிற பகுதிக்குள் சென்று இந்த இணைப்பைச் செய்யலாம்.
10. எல்.ஐ.சி நிறுவனம் ஐ.பி.ஒ வந்த பின்பு, அதன் சந்தை மதிப்பு தற்போதுள்ள பங்கு நிறுவனங்களின் சந்தை மதிப்பைவிட மிக அதிகமான சந்தை மதிப்பு கொண்ட ஒரு நிறுவனமாக எல்.ஐ.சி நிறுவனம் இருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள்.
தற்போது நம் நாட்டில் அதிக சந்தை மதிப்புள்ள நிறுவனமாக ரிலையன்ஸ்.இதன் சந்தை மதிப்பு ரூ.16.52 லட்சம் கோடி. டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.13,99 லட்சம் கோடி. பிற நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்குக் கீழேயே உள்ளன.