நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

அவசரப்பட்டேன்; ரூ.50,000 இழந்தேன்! வாசகருக்கு நேர்ந்த பரிதாபம்!

பாலிசி பிரீமியம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாலிசி பிரீமியம்

வாசகர் அனுபவம்

பதறாத காரியம் சிதறாது; அவசரப்பட்டு செய்கிற எந்த வேலையும் சரியாக நல்ல படியாக அமையாது. அதிலும் பணம் தொடர்பான விஷயத்தில் அவசரப் பட்டு, விசாரணை எதுவும் செய்யாமல், செயல் பட்டால் கணிசமான பணத்தை இழக்க வேண்டியிருக்கும் என்பதற்கு நானே ஓர் உதாரணம்’’ என்று நமக்குக் கடிதம் எழுதி யிருக்கிறார் சிவகாசியைச் சேர்ந்த பாண்டிய ராஜன் என்கிற வாசகர். அவரது கடிதம் இனி...

“நான்கு ஆண்டுகளுக்கு முன் என் மகளுக்குத் திருமணம் நடந்தது. கல்யாணச் செலவுக்கு திடீரென மூன்று லட்சம் ரூபாய் கூடுதலாகத் தேவைப்பட்டது. இந்தப் பணத்தை எப்படித் திரட்டுவது என யோசித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து, ‘உங்களுக்கு பர்சனல் லோன் வேண்டுமா’ என்று போன் வந்தது. ‘வேண்டும்’ என்றேன். சில டாக்குமென்டுகளைக் கேட்டார்கள். அனுப்பிய அடுத்த நாளே, லோன் சாங்ஷன் ஆவிட்டது.

ஆனால், இந்தக் கடனைத் தர ஒரு கண்டிஷன் போட்டார்கள். ஆண்டுதோறும் ரூ.25,000 பிரீமியம் கட்டுகிற ஒரு இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். அவசரமாகக் கடன் வாங்க வேண்டிய நிலையில் நான் இருந்ததால், அது என்ன பாலிசி, எத்தனை ஆண்டுகளுக்கு பிரீமியம் கட்ட வேண்டும் என்பதைப் பற்றி யெல்லாம் நான் விசாரிக்கவில்லை. பாலிசியை எடுக்க நான் ஒப்புக்கொண்டேன். உடனே எனக்குத் தருகிற மூன்று லட்சம் ரூபாயிலிருந்து 25,000 ரூபாயை பிரீமியம் பணமாகக் கழித்துக் கொண்டு, ரூ.2,75,000 என் வங்கிக் கணக்கில் வரவு வைத்தார்கள்.

அவசரப்பட்டேன்; ரூ.50,000 இழந்தேன்! வாசகருக்கு நேர்ந்த  பரிதாபம்!

என் மகளின் திருமணம் நல்லபடியாக முடிந்தது. நானும் அந்த இன்ஷூரன்ஸ் பாலிசி பற்றி மறந்தே போனேன். அடுத்த வருஷம் என் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.25,000 திடீரென குறைந்ததைப் பார்த்து நான் விசாரித்தபோது தான், பாலிசிக்கான பிரீமியமாக அந்தப் பணம் எடுக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். அப்போதும் அது என்ன பாலிசி என்பது குறித்து நான் விசாரிக்கவில்லை. மூன்றாவது முறையும் இப்படியே பணம் போனது.

நான்காவது வருஷமாக சமீபத்தில் ரூ.25,000 பிரீமியம் போனபோதுதான் அந்த இன்ஷூரன்ஸ் பாலிசி பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். நான் எவ்வளவு பெரிய தப்பை செய்திருக்கிறேன் என்பது அப்போதுதான் புரிந்தது. என் தலையில் கட்டப்பட்டது ஒரு எண்டோவ்மென்ட் பாலிசி. பாலிசி காலம் 15 ஆண்டுகள் (2033-ல் முடிகிறது). அதாவது, 15 ஆண்டுகள் பிரீமியம் கட்ட வேண்டும். இந்தக் காலத்தில் நான் இறக்கும்பட்சத்தில் எனக்கு ரூ.2 லட்சத்துக்குள் இழப்பீடு கிடைக்கும். இப்போதைக்கு ரூ.5,000 போன ஸாகக் கிடைத்திருக்கிறது. 15 ஆண்டுகள் தவறாமல் பிரீமியம் கட்டிமுடிக்கும்பட்சத்தில் அதிகபட்சமாக ரூ.7,00,0,00 எனக்குத் திரும்பக் கிடைக்கலாம்.

இப்போது என் வருமானம் திடீரெனக் குறைந்திருக்கும் நிலையில், இந்த பாலிசியில் தொடர்ந்து பணம் கட்ட முடியுமா என்பது சந்தேகமே. இனி என்ன செய்யலாம் என ஒரு இன்ஷூரன்ஸ் நிபுணரிடம் விசாரித்தேன். ‘நான்கு ஆண்டுகள் பணம் கட்டிவிட்டீர்கள். இன்னும் ஓர் ஆண்டு கட்டிவிட்டால், பாலிசியை சரண்டர் செய்ய முடியும். அப்படிச் செய்தால், மூன்று ஆண்டுகள் நீங்கள் கட்டிய பிரீமியம் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். பாலிசியை சரண்டர் செய்வதற்குப் பதிலாக, ‘பெய்ட் அப்’ பாலிசியாக மாற்றினால், 2033-ல் உங்களுக்கு ஒரு தொகை கிடைக்கும். ஆனால், எப்படிப் பார்த்தாலும், இந்த பாலிசியை நீங்கள் எடுத்ததால், உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை’ என்றார்.

ஒன்றிரண்டு ஆண்டு நான் பிரீமியம் கட்டிய நிலையில், நான் மரணம் அடைந்திருந்தால், என் குடும்பத்துக்கு ரூ.2,00,000 கிடைத்திருக்கும். ஆனால், நான் போனபிறகு, ரூ.2 லட்சத்தை வைத்து, என் மனைவி எத்தனை நாளைக்குக் குடும்பத்தை ஓட்ட முடியும்?

இதையெல்லாம் இந்த பாலிசியை எடுக்கும் முன்பே நான் யோசித்திருக்க வேண்டும். இந்த பாலிசியில் ரூ.1,25,000 பிரீமியம் கட்டி சரண்டர் செய்தால், எனக்கு 75,000 ரூபாய்தான் கிடைக்கும் என்பதே இப்போதுள்ள நிலை. கடன் தரும் வங்கி என் அவசரத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு, அவர்களுக்கு லாபம் தரும் பாலிசியைத் என் தலையில் கட்டி விட்டது. அவசரப்பட்டதால், எனக்கு எந்தப் பிரயோஜனம் இல்லாத ஒரு பாலிசியை வாங்கி தப்பு செய்துவிட்டேன். பாலிசியை எடுக்கும் முன், இன்ஷூரன்ஸ் நிபுணர் ஒருவரிடம் நான் கலந்தாலோசித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாததால் எனக்கு ஏற்பட்ட நஷம் ரூ.50,000.

அதிக தொகை தந்துதான் சின்ன பாடத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். நான் செய்த தவற்றை நீங்களும் செய்யாதீர்கள்’’ என்கிற கோரிக்கையுடன் முடித்திருக்கிறார் வாசகர் பாண்டியராஜன்.