நடப்பு
Published:Updated:

உங்கள் காருக்கேற்ற சரியான பாலிசியைத்தேர்வுசெய்வது எப்படி?

இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ்

ங்கள் காருக்கேற்ற இன்ஷூரன்ஸை, கார் வைத்திருப்பவர்கள் அனைவரும் சரியாகத் தேர்ந்தெடுப்பது அவசியம். சரியான இன்ஷூரன்ஸ் எது, எப்படித் தேர்ந்தெடுப்பது என்கிற கேள்விகள் உங்களுக்கு எழுகிறதா..? இதோ உங்களுக்கு வழிகாட்டும் சில ஆலோசனைகள்...

1. வாகனத்துக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க, பல வழிகள் உண்டு. பெட்ரோல் பங்க் மற்றும் ஏஜென்ட்டுகளிடம் தற்போது இன்ஷூரன்ஸ் பாலிசிகள் வாங்கப்படுகின்றன. ஏஜென்ட்டுகளிடம் வாங்கும்போது ஒவ்வொரு நிறுவனத்தின் பிளானைப் பற்றியும் அறிய ஒவ்வொரு நிறுவனத்தின் ஏஜென்ட்டை அணுகவேண்டியது வரும். இதனால் நேரம் அதிகம் செலவாகும்.

உங்கள் காருக்கேற்ற சரியான பாலிசியைத்தேர்வுசெய்வது எப்படி?

பெட்ரோல் பங்குகளில் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு பிளான் என இரண்டு மூன்று பிளான் வைத்திருப்பார்கள். ஆனால், ஒரு நிறுவனத்துக்குள்ளேயே இருக்கும் பல இன்ஷூரன்ஸ் பிளான்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்காது. இவர்களிடம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது 10% அல்லது குறிப்பிட்ட தொகையை கமிஷனாக செலுத்தவேண்டும். இதுவே இணையதளத்தில் நேரடியாக வாங்கும்போது காரின் பராமரிப்பு, வசிக்கும் இடம், புதுப்பிக்கும் தேதி, காரின் வயது, எதிர்பார்க்கும் ஐ.டி.வி (IDV - Insured’s Declared Value) போன்ற பல விஷயங்களை வைத்து நம் காருக்கான பிரீமியத்தை நாமே முடிவு செய்யலாம். அனைத்து நிறுவன பாலிசிகளையும் ஒப்பிட்டு நாமே தேர்ந்தெடுக்கலாம். கமிஷனும் கிடையாது. அவ்வப்போது சில ஆஃபர்களும் வழங்கப்படும்.

2. உங்கள் காருக்கான இன்ஷூரன்ஸை எங்கு வாங்குவது என்று முடிவுசெய்துவிட்டால், அடுத்து எந்த இன்ஷூரன்ஸ் வாங்கவேண்டும் என்ற கேள்விக்கு விடை தேவை. கார் இன்ஷூரன்ஸில் மூன்று வகை உண்டு. அவை காம்ப்ரிஹென்சிவ் (Comprehensive), தேர்டு பார்ட்டி (Third party-TP), பர்சனல் ஆக்ஸிடென்ட் (Personal Accident -PA). மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, வாகனம் வைத்திருப்பவர்கள் தேர்டு பார்ட்டி மற்றும் பர்சனல் ஆக்ஸிடென்ட் இன்ஷூரன்ஸைக் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

உங்கள் காருக்கேற்ற சரியான பாலிசியைத்தேர்வுசெய்வது எப்படி?

நம்மால் மற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பீட்டைத் தரவே இந்த தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ். பர்சனல் ஆக்ஸிடென்ட் கவர் என்பது, தேர்டு பார்ட்டியுடன் சேர்ந்து வருவது. இதை வைத்திருந்தால், விபத்து நிகழும்பட்சத்தில் உங்களுடைய மருத்துவச் செலவுகளை இன்ஷூரன்ஸ் நிறுவனமே பார்த்துக்கொள்ளும். இறப்பு ஏற்பட்டால் 15 லட்சம் ரூபாய் வரை இழப்பீடாக வழங்கப்படும். இந்த பாலிசியை எடுக்க ரூ.750 கட்டணமாகச் செலுத்தினால் போதும். ஓர் ஆண்டுக்கு ஒருமுறை எடுத்தால் போதும். ஒவ்வொரு கார் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போதும் இந்தக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அவசியமில்லை.

காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் என்றால், விபத்தின்போது வாகனத்துக்கு ஏற்படும் சேதத்தைச் சரிசெய்துகொள்வதற்கும் கார் தொலைந்தால் இழப்பீடு பெறுவதற்குமான காப்பீடாகும். இதில் முக்கியமானது, பம்பர் டு பம்பர்/ ஜீரோ டெப்ரிசியேஷன் பாலிசி. சாதாரண பாலிசிகள் பலவற்றில் ரப்பர், நட்-போல்ட், பெயின்ட், பிரேக் பேட், ஆயில் போன்றவை கவர் ஆகாது. ஆனால், இந்த பம்பர் டு பம்பர் பாலிசியில் காரில் ஏற்படும் அனைத்துவிதமான சேதங்களும் உள்ளடங்கும்.

சாதாரண காம்ப்ரிஹென்சிவ் பாலிசியைவிட ஜீரோ டெப்ரிசியேஷன் பாலிசிகளுக்கான பிரீமியம் தொகை அதிகம். முதல் முறை கார் வாங்குபவர்கள்/கார் ஓட்டிப் பழகுபவர்கள், கமர்ஷியலாகப் பயன்படுத்துபவர்கள் இந்த பாலிசியை எடுப்பது நல்லது.

3. கார் இன்ஷூரன்ஸைத் தேர்வு செய்யும்போது முதலில் கவனிக்கவேண்டியது, ஐ.டி.வி என்னும் Insured Declared Value (IDV). அதாவது, ஒரு வாகனத்தின் மதிப்பு. வாகனம் தொலைந்துவிட்டாலோ அல்லது சரிசெய்ய முடியாத அளவு பழுதடைந்துவிட்டாலோ இந்த ஐ.டி.வி தொகையைத்தான் இன்ஷூரன்ஸ் நிறுவனம் கொடுக்கும்.

கார் இன்ஷூரன்ஸ்
கார் இன்ஷூரன்ஸ்

புது வாகனமாக இருந்தால், ஐ.டி.வி அதிகபட்ச தொகைக்கு வாங்குவது நல்லது. பழைய வாகனங்களுக்கு நாம் விரும்பும் தொகையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஐ.டி.வி அதிகரிக்கும் போது இன்ஷூரன்ஸ் பிரீமியம் விலையும் அதிகரிக்கும்.

4. கடன் வாங்கி கார் வாங்குபவர்கள், கடன் முடியும் வரை காரை விற்பனை செய்ய மாட்டார்கள். அதனால், இரண்டு ஆண்டு களுக்கு இ.எம்.ஐ போடுகிறீர்கள் என்றால், இரண்டு ஆண்டுகளுக்கு ஜீரோ டெப்ரிசியேஷன் மற்றும் அதிகப்படியான நோ-க்ளெய்ம் போனஸ் தரும் பாலிசியை வாங்குவது நல்லது. இதனால் இன்ஷூரன்ஸ் பிரீமியம் குறையும்.

5. கார் இன்ஷூரன்ஸ் வாங்கும்போது ‘ஆட்-ஆன்’ (Add-on) என்கிற ஆப்ஷன் வரும். ‘ஆட்-ஆன்’ என்பது நாம் எடுக்கப்போகும் பாலிசியில் நமக்குத் தேவை யான சில விஷயங்ளைச் சேர்த்துக்கொள்ளலாம். ஜீரோ டெப்ரிசியேஷன் மற்றும் பர்சனல் ஆக்ஸிடென்ட் ஆகிய இரண்டுமே ‘ஆட்-ஆன்’கள்தான்.

ஜீரோ டெப்ரிசியேஷன் தேவையில்லை என்று நினைத்தால், கன்ஷுமபிள்ஸ் கவர் (consumables cover) என்று ‘ஆட்-ஆன்’ சேர்த்துக் கொள்ளலாம்.

மழை அதிகம் வரும் இடங்களில், நீர் தேங்கும் இடங்களில் இருப்பவர்கள் இன்ஜின் புரட்டக்‌ஷன் ‌கவரைச் சேர்த்துக்கொள்வது நல்லது. இன்ஜினுக்குள் தண்ணீர் சென்று கார் பழுதானால், சாதாரண பாலிசியில் அதற்கு இழப்பீடு கோர முடியாது. எனவே, இன்ஜின் புரட்டக்‌ஷன் ‌கவர் அவசியம்.

நோ க்ளெய்ம் போனஸ் அதிகமாக இருந்தால், அடுத்தடுத்து பாலிசியைப் புதுப்பிக்கும்போது காரின் பிரீமியம் குறையும். அவ்வப்போது பயணம் செல்பவர்கள் 24x7 ரோடுசைடு அசிஸ்டென்ஸ் கவர் எடுத்தால் சிறப்பாக இருக்கும். விலை உயர்ந்த கார் வாங்குபவர்கள் ‘ரிட்டர்ன் டு இன்வாய்ஸ்’ என்ற ஆட்-ஆன் போடலாம்.

கார் சேதமடைந்தால் காரின் மொத்த தொகையும் அப்படியே நமக்குக் கிடைக்கும். அதேசமயம், அனைத்து ‘ஆட்-ஆன்’களையும் தேர்ந்தெடுப்பது பணத்தை வீணடிக்கும் செயல். அவசியமானதை மட்டும் தேர்ந்தெடுங்கள்.

6. பாலிசியைச் சரியாகத் தேர்வுசெய்தபின் எந்த நிறுவனத்தின் பாலிசியை வாங்குவது என்ற குழப்பம் வரும். க்ளெய்ம் கவரேஜ் யார் அதிகம் தருகிறார்கள், க்ளெய்ம் கிடைக்க எவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறார்கள், நம்முடைய பகுதியில் எத்தனை கேஷ்லெஸ் சர்வீஸ் சென்டர்கள் அந்த நிறுவனத்திடம் இருக்கின்றன என்பதையெல்லாம் பார்ப்பது முக்கியம். கேஷ்லெஸ் சர்வீஸ் சென்டர்கள் இல்லை யென்றால், பணம் கொடுத்து காரை சரிசெய்து விட்டு, தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளும் நிலை வரும்.

எல்லாமே சாதகமாகப் பொருந்திவருகிறது; ஆனால், இரண்டு நிறுவனங்கள் வெவ்வேறு விலையில் தருகிறார்கள் என்றால், எந்த நிறுவனம் அதிக க்ளெய்ம் தந்துள்ளார்களோ அந்த நிறுவனத்தின் பாலிசியை எடுப்பது சிறப்பு.

ஐ.ஆர்.டி.ஏ.ஐ இணையதளத்தில் Annual Report என்ற இடத்தில் ஒவ்வொரு நிறுவனத்தின் க்ளெய்ம் கவரேஜையும் பார்க்க முடியும்.

7. பழைய இன்ஷூரன்ஸ் முடியும் முன்பே அதைப் புதுப்பித்துவிட்டால் பிரீமியம் குறைவாகவே இருக்கும். புதிதாக பாலிசி வாங்கும்போது பிரீமியம் அதிகமாக இருக்கும்.

உங்கள் காருக்கான சரியான பாலியைத் தேர்வு செய்து பயன்பெறுங்கள்.