தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

“சவாலான காலகட்டம்... அழுத்தம் தந்த 6 ஆண்டுகள்...” வளர்ச்சிப் பாதையில் ஐ.ஓ.பி!

பார்தா பிரதிம் சென்குப்தா
தலைவர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பிரீமியம் ஸ்டோரி
News
பார்தா பிரதிம் சென்குப்தா தலைவர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

சிறப்புப் பேட்டி

சில ஆண்டுகளுக்கு முன்புவரை நஷ்டத்தில் இயங்கி வந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இன்றைக்கு நல்ல லாபத்தை ஈட்டி வருகிறது. இதனால் இந்த நிறுவனப் பங்கு விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் 130 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்துள்ளது.

எல்லாத் துறைகளையும் போல இன்று வங்கித் துறையிலும் போட்டி அதிகரித்து விட்டது. வணிகம், வளர்ச்சிக்கு அதிக முக்கியத் துவம் தர வேண்டிய கட்டாயத்தில் வங்கிகள் உள்ளன. என்றாலும், மக்களுக்கான வங்கிச் சேவைகளை முதன்மையாகக் கொண்டு செயல்படுவதில் முன்னணியில் இருக்கிறது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. இந்த வங்கி குக்கிராமங்களிலும் கிளைகள் பரப்பி நாடு முழுவதும் மக்களுக்கு வங்கிச் சேவை தந்து வருகிறது.

ஆனால், 2010-க்குப் பிறகு, வங்கியின் இந்த செயல்பாடு அழுத்தத்துக்குள்ளானது. லாபம் ஈட்ட முடியாமல், வாராக்கடன்கள் அதிகரித்து, மூலதன செலவினங்கள் பெருகி, பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. இதனால் ரிசர்வ் வங்கியானது, இந்த வங்கியை ‘ப்ராம்ட் கரெக்டிவ் ஆக்‌ஷன்’ (PCA) என்கிற சீர்திருத்த நடவடிக்கைக்கும் உட்படுத்தியது. பல்வேறு நிபந்தனைக்கு இடையே இந்த வங்கி சிறப்பாக செயல்பட்டு, நஷ்டத்திலிருந்து மீண்டுவந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக மீண்டும் ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறது. காரணம், இந்த வங்கியின் வணிக வளர்ச்சி மேம்பட்டிருக் கிறது; வாராக்கடன் அளவும் குறைந்துள்ளது.

இந்த மாற்றங்களுக்கு முக்கியமான காரணமாக இருப்பவர், இந்த வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான பார்தா பிரதிம் சென்குப்தா. நாணயம் விகடன் 18-ம் ஆண்டுச் சிறப்பிதழுக்கு அவர் அளித்த பேட்டி இனி...

பி.சி.ஏ நடவடிக்கையில் இருந்து ஐ.ஓ.பி மீண்டும் வந்தது எப்படி?

“இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பல கோடி மக்களின் இதயங்களில் வலுவான இடத்தைப் பிடித்திருக்கிறது. 2015-ல் ரிசர்வ் வங்கியின் பி.சி.ஏ சீர்திருத்த நடவடிக்கைக்கு உள்ளானபோது வங்கி சவாலான கால கட்டத்தில் இருந்தது. கிட்டத்தட்ட ஆறு வருட காலம் அந்த அழுத்தமானது நீடித்தது. அந்தக் காலகட்டத்தில் மக்கள் அதாவது, வங்கியின் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து வங்கியுடன் இணைந்திருந்தனர். வாடிக்கையாளர்களின் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் வங்கி அதிகாரிகள் முதல் கிளை மேலாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர். அவர்களுடைய கடுமையான முயற்சிகளின் மூலம் ரிசர்வ் வங்கி பி.சி.ஏ நடவடிக்கையிலிருந்து வெளியே வந்தது ஐ.ஓ.பி.”

பார்தா பிரதிம் சென்குப்தா
தலைவர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பார்தா பிரதிம் சென்குப்தா தலைவர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

நஷ்டத்திலிருந்து மீண்டுவந்து, மீண்டும் சிறப்பாகச் செயல்பட நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?

“வங்கியில் எடுக்கப்பட்ட உத்திசார்ந்த நடவடிக்கைகள் முக்கியமானவை ஆகும். பி.சி.ஏ நடவடிக்கைகளிலிருந்து வங்கியை வெளிக்கொண்டு வந்து சிறப்பான செயல்பாட்டுக்குக் கொண்டு வர, பல உத்திகள் உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் திட்டமிடப்பட்டது. அதை மண்டல அதிகாரிகள், கிளை மேலா ளர்கள் என அனைவரும் சரியாகச் செயல்படுத்தினர். இதனால் வங்கியின் செயல்பாடும் மேம்பட ஆரம்பித்தது. குறிப்பாக, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்று பார்த்தால், கார்ப்பரேட் அட்வான்ஸ் என்கிற பிரிவில் தீவிர கவனத்தைச் செலுத்தினோம். வங்கியின் மொத்த கடன் புத்தகத்தில் 54 சதவிகிதமாக இருந்த கார்ப்பரேட் பிரிவுக் கடன் அளவைக் குறைக்க முயற்சி எடுத்தோம்.

மேலும், வங்கியின் வளர்ச்சியானது ஒரே பிரிவை சார்ந்ததாக இருக்கக் கூடாது எனத் தீர்மானித்தோம். வங்கியின் கடன் புத்தகமானது ரீடெய்ல், விவசாயம், எம்.எஸ்.எம்.இ, கார்ப்பரேட் என அனைத்துப் பிரிவுகளுமே தலா 25% - 27% என்ற அளவில் தான் தற்போது வைத்திருக்கிறோம். அதே போல, அதிக மூலதனம் தேவைப்படாத கணக்குகளின் பிரிவில் அதிகம் கவனம் செலுத்தினோம். ஏனெனில், வங்கி அழுத்தத்தில் இருந்த சமயத்தில் மூலதனம் பெரிய சவாலாக இருந்தது. எனவே, செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.

நகைக்கடன், வீட்டுக்கடன், டாப் ரேட்டிங்க் உள்ள கம்பெனிகளுக்கான கடன்களில் மட்டும் கவனம் செலுத்தினோம். இவற்றுக்கு அதிக மூலதனம் தேவைப்படாது. அதன்பிறகு ஏஏ, ஏஏஏ ரேட்டிங் உள்ள கம்பெனிகளுக்கான கடன்கள் வழங்கு வதில் நல்ல வளர்ச்சி காணப்பட்டது. வங்கியின் வணிகம் நல்ல வளர்ச்சிப்பாதையில் முன்னேறியது. தற்போது ரூ.74,000 கோடி மதிப்புக்கு வங்கியின் மொத்த வணிகம் வளர்ச்சி கண்டிருக்கிறது.”

ஒரு காலாண்டில் ரூ.1,000 கோடி மதிப்பிலான கடன்களை மீட்பதற் காக இலக்கு வைத்திருந்தீர்கள். அந்த இலக்கு எட்டப்பட்டதா?

“வங்கியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அதே நேரம், கடன்களை மீட்பதிலும் சரிபாதி கவனம் செலுத்தினோம். என்.பி.ஏ கணக்குகள் அனைத்தையுமே ஆய்வு செய்து அவற்றை மீட்கும் முயற்சிகளை எடுத்தோம். எந்தக் கணக்கையும் விடாமல் அனைத்தின் மீதும் தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விருப்பு, வெறுப்பு, பாரபட்சமில்லாமல் ‘ஒன் டைம் செட்டில்மென்ட் ஸ்கீம்’ அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், கடன் சீரமைப்பு நிறுவனங்களுக்கு (ARC) கடன் சொத்துகளை விற்பனை செய்தது மற்றும் என்.சி.எல்.டி நடவடிக்கைகள் என அனைத்து முயற்சிகளுமே எடுக்கப்பட்டன.

வாராக்கடன்களை மீட்க இலக்கு நிர்ணயித்து செயலாற் றினோம். அந்த இலக்கை எட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்துமே நல்ல பலன் அளித்தன. ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.950 கோடி முதல் ரூ.1,050 கோடி வரை கடன்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முடிந்த காலாண்டில் ரூ.400 கோடி மதிப்பிலான கடன் மீட்கப்பட்டிருக்கிறது. அதே போல, புதிதாக வழங்கப்படும் கடன்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்த பிறகே வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.”

ஐ.ஓ.பி மீண்டும் லாபத்துக்குக் கொண்டு வர அரசும், ரிசர்வ் வங்கியும் எந்தளவுக்கு உறுதுணை யாக இருந்தன?

“குறிப்பாகச் சொன்னால், மத்திய அரசு கொண்டு வந்த ஐ.பி.பி.ஐ என்கிற திவால் சட்டம் வங்கிகளுக்குப் பெரிதும் உதவியாக இருக் கிறது. தேசிய சட்டத் தீர்ப் பாயம், என்.சி.எல்.டி ஆகியவை பல்வேறு என்.பி.ஏ வழக்குகளைத் தீர்ப்பதில் மிகுந்த உதவியாக இருந்தது. ரிசர்வ் வங்கியும் கடன் சார்ந்து கொண்டுவந்த கொள்கை சார்ந்த முடிவுகள் வங்கியின் வளர்ச்சிக்கு உதவின. பல்வேறு கடன் உத்தரவாதத் திட்டம், கொரோனா சமயத்தில் தரப் பட்ட கடன் தவணை ஒத்தி வைப்புத் திட்டம் போன்றவை கடன்தாரர்களுக்குப் பெரி தும் உதவியாக இருந்தன. கொரோனா நெருக்கடிகள் தீர்ந்ததும், மீண்டும் அவர்கள் பழையபடி தொழிலில் ஈடு பட ஆரம்பித்த பிறகு, கடன் தவணைகளைத் திரும்பச் செலுத்தினர்.”

வங்கியின் வளர்ச்சிக்கு நீங்கள் வைத்திருக்கும் அடுத்தகட்ட திட்டங்கள் என்ன, புதிதாக நிதி திரட்டும் திட்டமிருக்கிறதா?

“வங்கியை தொடர்ந்து வெற்றிகரமாக இயங்க வைக்கத் தேவையான மூலதனம் தற்போது வலுவாகவே இருக்கிறது. தற்போது வரை வங்கிக்குத் தேவையான மூலதனம் 15.12% எனும் அளவில் உள்ளது. வங்கியின் வணிகம் தற்போது ரூ.74,000 கோடி அளவுக்கு வளர்ச்சி கண்டிருப்பதால், வங்கிக்குப் போதுமான நிதிநிலை உள்ளது. இனிவரும் காலங்களில் மூலதனம் தேவைப்பட்டால், நிதி திரட்டும் திட்டங்கள் செயல் படுத்தப்படும். ஏற்கெனவே ரூ.1,000 கோடி நிதித் திரட்டுவதற்கான ஒப்புதல் தயாராக இருக்கிறது. சரியான நேரம் வரும்போது கேப்பிடல் மார்க்கெட்டிலிருந்து நிதி திரட்டுவோம்.

நம் நாட்டில் தற்போது கடன் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. இது பொருளாதாரத்துக்கு பாசிட்டிவ் சிக்னலாக இருக்கிறது. இதை இலக்காக வைத்து வங்கியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் எடுக்கப்படும்.

இப்போதுள்ள போட்டி சூழலில் புதிய தலைமுறை வாடிக்கையாளர்கள் அதாவது, மில்லினியல் தலைமுறையினரை வாடிக்கையாளர்களாக வங்கிக்குள் கொண்டுவரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஐ.ஓ.பி எப்போதும் போலவே மக்களின் வங்கியாகத் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதுதான் எங்களின் நிரந்தர நோக்கம்” என உற்சாகமாகப் பேசி முடித்தார் பார்தா பிரதிம் சென்குப்தா.