சந்தா கோச்சார்...
இந்திய வங்கித் துறையில் மறக்க முடியாத ஒரு பெயர் சந்தா கோச்சார். பெண்கள் முன்னேற்றத்தின் வரலாற்றில் இவருடைய பெயரும் சில காலம் அடிபட்டது. ஒரு பெண் மிகப்பெரிய தனியார் வங்கியின் முதன்மை பதவியில் அமர்வது பெரும் சாதனையாகக் கொண்டாடப்பட்டது. 2010-ல் பத்ம பூஷண் விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது. 2015-ம் ஆண்டு 100 சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இவரையும் சேர்த்து அழகு பார்த்தது டைம் இதழ்.
இப்படி ஊடகங்களாலும் மக்களாலும் கொண்டாடப்பட்டார் சந்தா கோச்சார். பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக அவருடைய கதையைச் சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில்தான் ரூ.3,250 கோடி ஊழல் செய்தி வெளியே வந்தது.

முறைகேடாக வழங்கிய கடன்..
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றி வந்த சந்தா கோச்சார், அவருடைய பதவிக் காலத்தில் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வீடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கினார். கடன் வழங்குவதற்கான எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல், சுய ஆதாயம் தேடிக்கொள்வதற்காக சந்தா கோச்சார் இந்தக் கடனை வழங்கியிருக்கிறார்.
இந்தக் கடன் வங்கியின் வாராக் கடனாக அறியப்பட்ட பிறகே இந்த விவகாரத்தில் நடந்திருக்கும் ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. சந்தா கோச்சார், அவருடைய கணவர் தீபக் கோச்சார் மூலம் விடியோகானுக்கு முறைகேடாகக் கடன் வழங்கி அதன் மூலம் பல கோடி ரூபாய் ஆதாயம் அடைந்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டு எழுந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட பிறகு சந்தா கோச்சார் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் வங்கி இயக்குநர் குழு அவரை பணிநீக்கம் செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
என்ன நடந்தது?
சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார், செளரப் தூத், வேனுகோபால் தூத் ஆகிய மூவரும் நியு பவர் ரெனிவபில்ஸ் என்ற நிறுவனத்தில் இயக்குனர்களாக இருந்தனர். வேணுகோபால் தூத் ஒரே மாதத்திலேயே பதவி விலகியதோடு தன்னிடம் இருந்த 20 லட்சம் பங்குகளை தீபக் கோச்சாரிடம் கொடுத்துவிடுகிறார். அதே ஆண்டு மே மாதம் தீபக் கோச்சார் தனது பங்குகள் மற்றும் வேணுகோபால் தூத் தனக்கு வழங்கிய பங்குகள் அனைத்தையும் தனக்கு சொந்தமான சுப்ரீம் எனர்ஜி என்ற நிறுவனத்துக்கு கைமாற்றிவிட்டார். இந்த சமயத்தில்தான் வேணுகோபால் தூத் தனது விடியோகான் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் கடனுக்கு விண்ணப்பிக்கிறார்.

ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இய்க்குனர் மற்றும் தலைவராக பொறுப்பேற்ற சந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்துக்கு விதிமுறைகளைப் பின்பற்றாமல் கடன் வழங்குகிறார். இந்தக் கடனில் கணிசமான தொகை வீடியோகான் நிறுவனத்திலிருந்து சுப்ரீம் எனர்ஜி மற்றும் நியு பவர் ரெனிவபில்ஸ் நிறுவனங்களுக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து சுய ஆதாயத்துக்காக வங்கியின் பணத்தை வீடியோகான் நிறுவனம் மூலமாக கணவரின் நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்யும் வகையில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஊழல் செய்துள்ளார் சந்தா கோச்சார்.
இந்த ஊழல் மீதான விசாரணை 2018 மே மாதம் தொடங்கி இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற முறைகேடான கடன்களால் ஐசிஐசிஐ கணிசமான பாதிப்பை சந்தித்தது. லாப வளர்ச்சியிலும் பின்னடைவைச் சந்தித்தது.
இந்த செய்தி அம்பலமான சமயத்தில்தான் ஃபிக்கி அமைப்பின் பெண் தொழில்முனைவோர் பிரிவில் சாதனையாளர் விருது சந்தா கோச்சாருக்கு வழங்கப்பட இருந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் விருது வாங்க வேண்டிய சந்தா கோச்சார் ஊழல் சர்ச்சையில் சிக்கியதால் விழாவில் கலந்துகொள்ளவில்லை.

நிதி மோசடி
இந்த வங்கி நிதி மோசடி விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையில் சந்தா கோச்சார், அவரின் கணவர் தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் ஆகியோர் பெயர் இடம்பெற்றது. சந்தா கோச்சாரின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றது மிகவும் அதிருப்திகரமானது என்று அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வருத்தத்துடன் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட சந்தா கோச்சார் தனக்கான ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.ஐ. சக்லா கூறுகையில், "சந்தா கோச்சாரை பணிநீக்கம் செய்ததற்கு போதுமான அடிப்படை முகாந்திரம் உள்ளது. எனவே வங்கித் தரப்பு அவரை பணியிலிருந்து நீக்கியது செல்லுபடியாகும். அதனால் அவரது ஓய்வூதிய பலன்களைக் கோரிய இடைக்கால மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.
அதுமட்டுமல்லாமல் சந்தா கோச்சார் 2018-ல் வாங்கிய ஐசிஐசிஐ வங்கியின் 6.90 லட்சம் பங்குகளில் எந்தப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் பரிவர்த்தனைகள் ஏதேனும் இருந்தால், ஆறு மாதங்களுக்குள் அதுகுறித்த பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் சந்தா கோச்சார் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு வங்கித் துறையின் செயல்பாடு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணர்ந்துதான் அது சார்ந்த ஆய்வறிக்கைகளுக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக இந்திய வங்கிகளில் பல ஆயிரக்கணக்கான மதிப்புகளில் நிதி மோசடிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றுக்கான அதிகபட்ச நடவடிக்கை என்று பார்த்தால் பணிநீக்கம் செய்யப்பட்டது மட்டும்தான் என்பது உண்மையில் மிகவும் வேதனைக்குரியது.
வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் தப்பி ஓடிய மல்லையாவும், நீரவ் மோடியும் இன்னமும் இந்தியாவுக்குக் கொண்டுவந்த பாடில்லை. ஆனால், டிராக்டருக்கு வாங்கியக் கடனை செலுத்தாத விவசாயியை டிராக்டர் ஏற்றிக் கொல்லும் அவலமும் இந்த நாட்டில்தான் நடக்கிறது.