கட்டுரைகள்
Published:Updated:

இந்தியாவிலும் வருமா ஹெலிகாப்டர் மணி?

ஹெலிகாப்டர் மணி
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெலிகாப்டர் மணி

ஹெலிகாப்டர் மணி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான மில்டன் ப்ரைட்மான் 1969-ஆம் ஆண்டு ‘ஹெலிகாப்டர் மணி’ என்ற வார்த்தையை உலகிற்கு முதன்முதலில் அறிமுகம் செய்தார். பின்னர் நவம்பர் 2002-ல் அப்போதைய ஃபெடரல் ரிசர்வ் கவர்னரான ‘பென் பெர்னான்கே’ ஹெலிகாப்டர் மணி யுக்தியைக் கொண்டு அமெரிக்க நாட்டின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முன்மொழிந்தார். அதன்பிறகே பல நாடுகள், நிதி நெருக்கடியின் போது இந்த யுக்தியைக் கையாண்டார்கள்.

‘ஹெலிகாப்டர் மணி’ என்றவுடனேயே ‘மணி ஹெய்ஷ்ட்(Money heist)’ சீரிஸில் வருவது போல உண்மையான ஹெலிகாப்டர் மூலம் பணம் வீசப்படுவது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது இல்லை. பொதுவாக ஒரு நாட்டின் மத்திய வங்கியானது, பணத்தை அச்சிடப் பத்திரங்களையோ அல்லது அதற்கு ஈடான தங்கம் மற்றும் அந்நிய நாட்டுப் பணத்தையோ இருப்பாகப் பயன்படுத்தும். பின்னர், இது பணமாக மக்களின் புழக்கத்திற்கு வந்து சேரும்.

ஆனால், ஹெலிகாப்டர் மணி யுக்தியில் பணத்தை அச்சிட இப்படிப்பட்ட எந்த விதிமுறை களையும் கையாளத் தேவையில்லை. அந்த நாட்டின் மத்திய வங்கி தேவையான பணத்தை அச்சடித்து மக்களுக்கு இலவசமாக வழங்கலாம். இது திருப்பிச் செலுத்தத் தேவையில்லாத பணமாகக் கருதப்படும். இதை வைத்து மக்கள் பொருள்களை வாங்குவதால், பொருள்களின் தேவை அதிகமாகும், அதற்கான உற்பத்தி பெருகும் நிதிச் சுழற்சி முறையில் உடனடியாகப் பணப் புழக்கம் உருவாகும். இந்த மாதிரியான யுக்தியை, ‘ஹெலிகாப்டர் கொண்டு மக்களுக்கு இலவசமாகப் பணத்தை வீசலாம்’ என ப்ரைட்மான் கூறிய காரணத்தால் இது ‘ஹெலிகாப்டர் மணி’ என்று பெயர் பெற்றது.

ஹெலிகாப்டர் மணி
ஹெலிகாப்டர் மணி

மீண்டும் கையிலெடுத்த அமெரிக்கா!

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, ‘ஹெலிகாப்டர் மணி’ யுக்தியை மீண்டும் கையிலெடுத்திருக்கின்றன. ஆனால், இந்திய அரசாங்கம், அது பற்றி யோசிப்பதிலும் தாமதம் காட்டிவருவதாகப் பொருளாதார நிபுணர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

கொரோனா நிவாரண நிதி என்று தனியாக ஒதுக்காமல், 2020-21-ம் நிதி ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிகளைத்தான் தற்போது மத்திய அரசாங்கம் மக்களுக்கு வழங்குவதாக அறிவித்திருக் கிறது. ஏற்கெனவே நிலுவையில் இருந்த வருமான வரித் தொகை மற்றும் ஜி.எஸ்.டி தொகையையும் இப்போது உடனடியாக மக்களுக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறது. இவையெல்லாம் மத்திய அரசாங்கம் மக்களுக்கு வழங்க வேண்டியது. அதை இப்போது தாமதமாக வழங்குகிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, அதை கொரோனா நிவாரண நிதியாகத் தருகிறது எனக் கருதமுடியாது. இந்த நேரத்தில் மக்களிடம் நேரடியாகப் பணத்தைக் கொண்டு சேர்ப்பதற்கான வழியை மத்திய அரசாங்கம் கடைப்பிடித்தால்தான் உடனடித் தீர்வு கிடைக்கும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.

“கடந்த சில வருடங்களாகவே இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்தச் சரிவை அதிகப்படுத்தும் விதமாக கொரோனா பொருளா தாரத்தில் பேரிடியை இறக்கியிருக்கிறது. தற்போதைய அசாதாரணச் சூழலில் மக்களின் நிதிப் பிரச்னையைக் களைவதற்கு, பணத்தை அச்சிட்டு, அதை அவர்களுக்கு இலவசமாக வழங்குவதுதான் ஒரே வழி. கரன்சி அச்சடிப்பதில், ஆர்.பி.ஐ-க்குச் சில விதிமுறைகள் இருப்பது உண்மைதான். ஆனால் அதை இப்போது தளர்த்திக்கொண்டு, பேரிடர் பிரச்னைகளை சமாளிக்கத் தேவைப்படும் பணத்தை அச்சிட்டு, அதை மக்களிடத்தில் விரைவில் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்” என்கிறார் பொருளாதார நிபுணரான ஜோதி சிவஞானம்.

‘ஹெலிகாப்டர் மணி’ வழங்கிய நாடுகள்!

வல்லரசு நாடான அமெரிக்கா இதற்கு முன் ஹெலிகாப்டர் யுக்தியை வேறு விதத்தில் பயன்படுத்தியுள்ளது. கடந்த 2008-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அமெரிக்கா அப்போது எல்லா வீடுகளுக்கும் யுனிவர்சல் வரிச் சலுகையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மத்திய வங்கியே இதற்கான நிதியை வழங்கின.

தற்போது கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பைச் சீர்செய்ய ஹாங்காங்கில் ஹெலிகாப்டர் மணி நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. கடந்த மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி ஹாங்காங் அரசு 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் 10,000 டாலர்களை வழங்கப்போவதாக அறிவித்தது.

அமெரிக்கக் குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் 1,000 டாலர்களை வழங்கப்போவதாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார். மேலும், அமெரிக்க அரசு தனது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகித பணத்தை, பொருளாதாரத்தைச் சீர் செய்ய ஒதுக்கியுள்ளது. அதாவது 2 ட்ரில்லியன் டாலர்களை இந்தக் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பிலிருந்து மீள்வதற்காகப் பயன்படுத்தியுள்ளது. இதில் 500 பில்லியன் டாலர் களைப் பெரிய தொழில்துறைக்கு ஒதுக்கியுள்ளது. மேலும் 349 பில்லியன் டாலர்களைச் சிறு குறு தொழில் செய்வோர் மற்றும் கடை உரிமையாளர்க ளுக்குக் கடனாக வழங்க ஒதுக்கியுள்ளது. இந்தக் கடன்களை வாடகை மற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குதல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தினால் அரசுக்குத் திருப்பிக் கட்டத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஜெர்மனி சுயதொழில் செய்வோர், கடைகள் வைத்திருப்போர் மற்றும் சிறு தொழில் செய்வோர் தங்களின் தொழிலை இழக்கக் கூடாது என்பதற்காக, அவர்களின் இழப்பைச் சீர் செய்ய 5000 யூரோக்களை ஒவ்வொருவருக்கும் அறிவித்துள்ளது. இதே போல் பிரான்ஸ் அரசும் சுய தொழில் செய்வோர் மற்றும் சிறு குறு தொழில் செய்பவர்களில் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு 1,200 டாலர்கள் வரை வழங்கியுள்ளது. இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இதே போன்று பல ‘ஹெலிகாப்டர் மணி’ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கும் இந்த ஹெலிகாப்டர் உத்தியைக் கையாள்வதில் பொருளாதாரத்திற்கான சாதகங்களும், அதே சமயத்தில் பாதகங்களும் இருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனும் ஹெலிகாப்டர் மணிக்கு எதிரான கருத்தையே கொண்டிருந்தார். “இந்த நடவடிக்கையின் மூலம் கிடைக்கும் பணத்தை மக்கள் செலவு செய்ய மாட்டார்கள். கையிருப்பில் வைத்துக் கொள்வார் கள். அதனால் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக் காது” என்று அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார். ஆனால் இப்போது, “நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க, மத்திய அரசாங்கம் அதிக நிதியை ஒதுக்க வேண்டும்” என்றும், “மக்களுக்குப் பணத்தை நேரடியாகக் கொண்டு போய்ச் சேர்க்கும் திட்டங்களை வகுக்க வேண்டும்” என்றும் தெரிவித் துள்ளார். மேலும், “பொருள்களுக்கான தேவை இருந்தும் இருப்பு இல்லை, வாங்கப் பணமும் இல்லை என்கிற நிலை மிகவும் மோசமானது. இந்நிலை மாற, பணப் புழக்கம் அதிகரிக்க மக்களிடம் நேரடியாகப் பணம் வழங்கப்பட வேண்டியது அவசியம்” என்கிறார் அவர்.

ஆனால், ஹெலிகாப்டர் மணியானது, அதிக பண வீக்கத்திற்கு வழி வகுத்துவிடும் என்ற கருத்து நிலவிவருகிறது. இது சட்டபூர்வமான ஒன்றல்ல என்றும் சில பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்குக் காரணம் இது நிதிக் கொள்கை மற்றும் பணக் கொள்கை இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நீக்கிவிடுகிறது என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது.

உலக நாடுகளைப்போல, தொழில்துறையைச் சீர்செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்தவில்லை. இப்போது வரை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிகிதத்தைக்கூடப் பொருளாதார நடவடிக்கைக்காக ஒதுக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் ஊரடங்கானது இன்னும் சில நாள்கள் நீடிக்கலாம் என்ற கருத்து நிலவிவருகிறது. இந்நிலையில் மத்திய அரசு தொழில்துறையை சீர் செய்ய குறைந்தபட்ச பொருளாதார நடவடிக்கைகளையாவது அறிவிக்க வேண்டும் எனப் பொருளாதார அறிஞர்களின் எதிர்பார்க்கிறார்கள். இந்திய மக்களின் எதிர்பார்ப்பும் அதுவே!