
கிரிப்டோகரன்சி
பா.லிங்கேஸ்வரன்
கிரிப்டோகரன்சியில் பணம் போடுவது குறித்து இன்றைக்குப் பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இதில் பணம் போடும்முன் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்பு உணர்வை முதலீட்டாளர்களிடம் ஏற்படுத்த நாணயம் விகடனும் - ஜியோட்டஸ் கிரிப்டோ கரன்ஸ் எக்ஸ்சேஞ்ச் நிறுவனமும் இணைந்து ஒரு கருத்தரத்தை ஆன்லைன்மூலம் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் பல நூறு வாசகர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
‘கிரிப்டோகரன்சி - பாசிட்டிவ், நெகட்டிவ் அம்சங்கள்’ என்கிற தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசினார் இன்ஃபோசிஸ் நாலேஜ் சென்டரில் மூத்த ஆலோசகராக இருக்கும் ராமச்சந்திரன். கிரிப்டோகரன்சி யானது ‘ப்ளாக் செயின்’ என்ற தொழில்நுட்பத் தின் அடிப்படையில் எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். அவரைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் ஜியோட்டஸ் கிரிப்டோகரன்ஸ் எக்ஸ்சேஞ்சின் நிறுவனரும் சி.இ.ஓ-வுமான அர்ஜுன் விஜய்.
மசோதா தாக்கல் ஆவதில் தாமதம் ஏன்?
‘‘கிரிப்டோகரன்சி என்பது 10 வருடங் களாகத்தான் பரிச்சயமாக இருக்கிறது. 2009-ம் ஆண்டுக்கு முன் இந்த கிரிப்டோகரன்சி இருந்ததில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பு இன்டர்நெட் வந்தபோது, அதை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்கிற குழப்பம் இருந்தது. ஆனால், இன்றைக்கு அது பெருமள வில் முறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. கிரிப்டோகரன்சியும் அந்த நிலையில்தான் இருக்கிறது. இதை எந்த அளவுக்கு அனுமதிக் கலாம், இதில் உள்ள ரிஸ்க்கை மக்களிடம் எப்படி எடுத்துச் சொல்வது என்பது பற்றி எல்லாம் சரியான முடிவெடுக்க வேண்டி யுள்ளது. இந்த முடிவை எடுக்க அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் பேசி வருகிறது.
உதாரணமாக, இதை செபியின்கீழ் கொண்டு வருவதா அல்லது கமாடிட்டியின்கீழ் கொண்டு வருவதா என்கிற மாதிரியான கேள்விகளுக் கெல்லாம் விடை காண வேண்டும். இப்படி பல விஷயங்கள் இருப்பதால், இந்த மசோதா வானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் படுவதற்குக் காலதாமதமாகிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட கிரிப்டோ கரன்சி பற்றி நமது அரசாங்கத்துக்கு நிறைய விமர்சனம் இருந்தது. அந்த நிலை இப்போது மாறியிருக்கிறது. கிரிப்டோகரன்சியை ஒழித்துக் கட்டுவதற்குப் பதிலாக அதை முறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளையே எடுக்க வேண்டும் என்று நினைக்கிறது. எனவே, இம்மசோதா இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடரில் வராவிட்டால், அடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரில் வர வாய்ப்பிருக்கிறது.

கிரிப்டோகரன்சி மீது ஆர்.பி.ஐ ஆட்சேபம்...
தவிர, நம் நாட்டில் கிரிப்டோகரன்சி வர்த்தகப் பரிவர்த்தனையை அனுமதிப்பதில் நமது ரிசர்வ் வங்கியும் சில கருத்துகளை முன் வைத்து வருகிறது. ரிசர்வ் வங்கி ஏற்கெனவே சில பேமென்ட் சிஸ்டங்களை வைத்திருக்கிறது. கிரிப்டோகரன்சி என்பது புதிய வகையான பேமென்ட் சிஸ்டம். இந்த சிஸ்டத்தை ஏற்றுக் கொள்ளும்போது என்னென்ன பிரச்னை வர வாய்ப்புள்ளது என்பது பற்றியும் ஆர்.பி.ஐ யோசிக்கிறது. என்றாலும், ஆர்.பி.ஐ-யின் கருத்துகளை மத்திய அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்கிற மாதிரி தெரியவில்லை. தவிர, சீனா தவிர எல்லா நாடுகளும் கிரிப்டோ கரன்சியை ஒழிக்கும் நடவடிக்கையை எடுப்பதற்குப் பதிலாக அதை முறைப்படுத்த வேண்டும் என்றுதான் நினைக்கின்றன. இந்த நிலையில், நாம் மட்டும் ஏன் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றன. இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, நம் நாட்டில் கிரிப்டோ கரன்சியானது முறைப் படுத்தப்படவே அதிக வாய்ப்புள்ளது.
ஆர்.பி.ஐ-யின் டிஜிட்டல் கரன்சி...
இது ஒருபக்கமிருக்க, மத்திய அரசாங்கமே ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தில் அடிப்படையில் கிரிப்டோகரன்சிகளை வெளியிட வாய்ப்பிருக்கிறது. சீனாவில் 2015-ம் ஆண்டு முதலே இதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கிவிட்டன. காரணம், ப்ளாக்செயின் டெக்னாலஜி என்பது அருமையான தொழில்நுட்பம். இதை யாராலும் மாற்ற முடியாது. மினிமம் பேலன்ஸ் என்கிற பிரச்னை எல்லாம் இல்லை. குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை எல்லா டேட்டாக்களையும் டவுன்லோடு செய்துவிட்டு, மீண்டும் கம்ப்யூட்டரில் ஏற்ற வேண்டும் என்கிற பிரச்னை எல்லாம் இல்லை. எனவே, இனிவரும் காலத்தில் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி என்கிற புதிய பணப் பரிமாற்ற முறை கொண்டுவரப்படலாம். ஆனால், இதன் மதிப்பு என்பது மாறாத்தன்மை கொண்ட தாகவே இருக்கும். பிட்காயினைப்போல இதன் மதிப்பு ஏறாது, இறங்காது’’ என்றார்.

எந்த காயினை வாங்கலாம்..?
‘‘கிரிப்டோகரன்சியில் பணம் போட நினைப்பவர்கள் அதிக அளவில் பரிவர்த்தனை ஆகும் பிட்காயின், எதிரியம் போன்றவற்றில் பணம் போட பரிசீலிக்கலாம். இன்றைக்கு ஏறக்குறைய 14,000 காயின்கள் உள்ளன. இவற்றில் விலை குறைவாக உள்ள காயின்களை மட்டும் நம்மவர்கள் வாங்கு கிறார்கள். இந்த காயின்கள் மூலம் அதிக அளவில் லாபம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். இது தவறான அணுகுமுறை. அதிக பேர் பரிமாற்றம் செய்யும் ஒரு காயின் தான் விலையேற்றம் காண்பதற்கு வாய்ப்பு இருக்கிறதே தவிர, விலை குறைவான காயின்கள் கடுமையாக விலை குறைந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
எவ்வளவு பணம் போடலாம்?
கிரிப்டோகரன்சியில் 100% லாபம் கிடைக்கவும் வாய்ப்புண்டு. 50% நஷ்டம் வரவும் வாய்ப்புண்டு. எனவே, உங்களிடம் இருக்கும் பணம் எல்லாவற்றையும் கிரிப்டோ கரன்சியில் போடாதீர்கள்.
உங்களிடம் இருக்கும் 100 ரூபாய் இருந்தால், அதிலிருந்து 5 ரூபாயை மட்டும் கிரிப்டோ கரன்சியில் போடலாம். அப்படி நீங்கள் போடும் பணம் காணாமல் போனால்கூட நீங்கள் அது பற்றி கவலைப்படாமல் இருக்கலாம்.
எம்.எல்.எம் முறையில்...
இன்றைக்கு சேலம் போன்ற ஊர்களில் எம்.எல்.எம் முறையில் கிரிப்டோகரன்சியில் பணம் போட மக்களை ஊக்குவித்து வருவதாகச் சொல்கிறார்கள். ஒரு லட்சம் ரூபாய் போட்டால், மாதம் ரூ.15,000 திரும்பத் தரப் படும் என்றெல்லாம் சொல்லி, பலரையும் இதில் பணத்தைப் போடச் சொல்லி வருகிறார்கள்.
ஆனால், இதில் போடும் பணத்துக்கு எந்த கேரன்டியும் கிடையாது. நாளைக்கு உங்கள் பணம் முழுக்க நஷ்டமாகிவிட்டது என்று சொன்னால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கிரிப்டோகரன்சியில் பணம் போடும்போது மூன்றாவது நபரை நம்புவதைத் தவிர்த்து, நீங்களே இதைப்பற்றி நன்கு புரிந்துகொண்டு, பணம் போடலாம்’’ என்று சொல்லி முடித்தார்.
கிரிப்டோகரன்சி பற்றி புரிந்து கொள்ள உதவியாக இருந்தது இந்த நிகழ்ச்சி!