மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டார்கெட் குரோர்பதி @ 40 - 10: முதலீட்டை இளைஞர்கள் தாமதமாக ஆரம்பிப்பதால் என்ன பாதிப்பு..?

குரோர்பதி...
பிரீமியம் ஸ்டோரி
News
குரோர்பதி...

இளைஞர்கள் தவிர்க்க வேண்டிய இரண்டு வகை கடன்கள்..!

இன்றைக்கு பல இளைஞர்களுக்குப் படித்து முடித்தவுடன் சுமார் 20 - 22 வயதி லேயே நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து விடுகிறது. அதுவரைக்கும் பெற்றோர் பணத்தைச் செலவு செய்து வந்த அவர்களுக்கு கைநிறைய பணம் கிடைத்ததும் சந்தோஷமாகி விடுகிறார்கள். முதல் சம்பளத்தில் தன் அப்பா, அம்மாவுக்குப் பிடித்த பொருள்கள் எதை யாவது வாங்கித் தந்து மகிழ்கிறார்கள். சிலர் தங்களின் வளர்ச்சிக்கு உதவி செய்த, தன் மீது பாசமாக இருக்கும் உறவினர்கள், நண்பர்களுக்கு ஏதாவது, அன்பளிப்பாக வாங்கித் தருகிறார்கள். சிலர் தங்களுக்குத் தேவையான ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்றவற்றை வாங்கிக் கொள்கிறார்கள்.

எம்.சதீஷ் குமார்
நிறுவனர்,
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

முதலீட்டை ஆரம்பிக்கும் வயது...

இதுபோன்ற செலவுகளை எல்லாம் வேலைக்கு சேர்ந்து சுமார் 3 முதல் 5 மாதங்களில் முடித்துக்கொண்டு முதலீட்டுக்கு வந்துவிட வேண்டும். 25 வயதில் வேலைக்குச் சேருகிறவர்கள் இந்தக் காலகட்டத்தைத் தாண்டி தாமதமாக முதலீட்டை ஆரம்பிக்கும்போது இழப்பு மிக அதிகமாக இருக்கும். வேலைக்கு 22 வயதிலேயே சேர்ந்தால், 25 வயது வரைக்கும்கூட இப்படி உங்கள் விருப்பப்படி செலவு செய்யலாம்; அதன் பிறகு, எதிர்காலத் தேவைகளுக்கான முதலீட்டைக் கட்டாயம் ஆரம்பித்து விட வேண்டும்.

நம்மில் பலர் பணி ஓய்வுக்காலத்துக்காகப் பணி ஓய்வு பெற ஐந்து, பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் முதலீட்டை ஆரம்பிக்கிறோம். விளைவு, குறைவான தொகுப்பு நிதியைத்தான் (Corpus) சேர்க்க முடியும். அதிக தொகுப்பு தொகையைச் சேர்க்க வேண்டும் எனில், மாதந்தோறும் மிக அதிக தொகையைச் சேமித்து வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அப்போது குடும்பத்தின் இதர அவசிய செலவுகளை செய்யத் தடுமாற வேண்டும்; அல்லது ஓய்வுக் கால செலவுகளுக்கு அதிக தொகையைச் சேமிக்க முடியாமல் போகும். மேலும், வாழ்க்கையின் எந்த நிலையிலும் செலவு செய்ய ஒருவர் கடன் வாங்க முடியும். ஆனால், பணி ஓய்வுக்காலத்தில் மட்டும் கடன் வாங்குவது மிகக் கடினம். மேலும், நாம் இப்போது சம்பாதிக்கும் பணம் என்பது 58, 60 வயதுக்கு மேல் சும்மா இருந்து செலவு செய்யும் காலத்துக்கும் சேர்த்துதான். அந்த வகையில், ஒருவரின் முதல் சேமிப்பு என்பது அவரின் பணி ஓய்வுக் காலத்துக் கானதாக இருக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு இந்த முதலீட்டை சீக்கிரமாக ஆரம்பிக்கிறோமோ, அந்தளவுக்குக் குறைவான தொகையை முதலீடு செய்தால் போதும்.

டார்கெட் குரோர்பதி @ 40 -  10: முதலீட்டை இளைஞர்கள் தாமதமாக ஆரம்பிப்பதால்
என்ன பாதிப்பு..?

முதலீட்டு தாமதத்தால் ஏற்படும் இழப்பு...

இளைஞர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு, முதலீட்டைத் தாமதமாக ஆரம்பிப்பதுதான். இன்றைய வாழ்க்கை முறையை அப்படியே பணி ஓய்வுக்காலத்தில் சென்னை, கோயம்புத்தூர் போன்ற பெரிய நகரங்களில் தொடர வேண்டும் எனில், குறைந்தது ரூ.5 கோடி தொகுப்பு நிதி தேவைப்படும். இன்றைய தேதியில் பணி ஓய்வு பெற்றால்கூட ரூ.2 கோடி, ரூ.2.5 கோடி இருந்தால்தான் முடியும். அந்த அளவுக்கு இன்றைய தேதியில் வாழ்க்கைமுறை செலவுகள், மருத்துவச் செலவுகள் அதிகரித்துள்ளன.

முதலீட்டில் செய்யும் தாமதத்தால் ஏற்படும் இழப்பு என்ன தெரியுமா? இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் சுமார் 50 வயதில் பணி ஓய்வு பெறவே விரும்புகிறார்கள். சுரேஷ் என்பவர் தன் 50 வயதில் ரூ.5 கோடியுடன் பணி ஓய்வு பெற விரும்புகிறார். இவர் தன் 25 வயதில் முதலீட்டை சீக்கிரமாகவே ஆரம்பித்துவிடுகிறார். மாதம் ரூ.27,000 வீதம் அவரின் 50 வயது வரை 25 ஆண்டுகள் முதலீடு செய்துவருகிறார். அவர் மொத்தம் ரூ.81 லட்சம் முதலீடு செய்திருப்பார். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைக்கும் பட்சத்தில் தொகுப்பு நிதி ரூ.5.07 கோடி சேர்ந்திருக்கும்.

கண்ணன் என்பவர் திருமணமாகி பிள்ளைகள் பிறந்த பிறகு தன் 30 வயதில் ஓய்வுக்கால முதலீட்டை ஆரம்பிக்கிறார். இவரும் தன் 50 வயதில் ரூ.5 கோடி தொகுப்பு நிதி வேண்டும் என நினைக்கிறார். இவர் இந்த ரூ.5 கோடி ரூபாயைத் திரட்ட இன்னும் 20 ஆண்டு கள் உள்ளன. இந்த நிலையில், அவர் மாதம் ரூ.50,000 முதலீடு செய்தால்தான் இலக்கு தொகையை அடைய முடி யும். அவர் மொத்தம் ரூ.1.2 கோடி முதலீடு செய்திருப் பார். இந்தத் தொகைக்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைக்கும்பட் சத்தில், அவரின் 50 வது வயதில் ரூ.4.94 கோடி கிடைத் திருக்கும். தாமதமாக முத லீட்டை ஆரம்பித்ததால் இவரின் மாத முதலீடு ரூ.23,000 அதிகரித்துள்ளது. மேலும், மொத்த முதலீடு ரூ.39 லட்சம் அதிகரித்துள்ளது.

மகேஷ் என்பவர் அவரின் இளம்வயதில் சம்பளப் பணத்தை எல்லாம் செலவு செய்துவிடுகிறார். 40-வது வயதில்தான் ஓய்வுக்கால முதலீட்டை பற்றி யோசிக்கிறார். முந்தைய இருவரைப் போலவே இவரும் 50 வயதில் ரூ.5 கோடி இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார். இந்தத் தொகையை சேர்க்க அவர் மாதம் ரூ.2.20 லட்சம் வீதம் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வர வேண்டும். இந்த அளவுக்கு முதலீடு செய்ய எத்தனை பேரால் முடியும்? மகேஷின் கால தாமதத்தால் மாத முதலீடு ரூ.1.93 லட்சம் அதிகரித்துள்ளது. மேலும், மொத்த முதலீடு ரூ.1.83 கோடி அதிகரித்துள்ளது.

மேலே கண்ட மூன்று பேருக்கும் பணி ஓய்வுக்காலத்தில் ரூ.5 கோடி தேவைப்படும் நிலையில், கால தாமதத்தால் முதலீட்டுத் தொகை மிகவும் வேறுபடுகிறது. இளம் வயதில் முதலீட்டை ஆரம்பிப்ப துடன், தொடர்ந்து முதலீட்டை மேற்கொள்வது மூலமும், குறைந்த அளவு தொகையை முதலீடு செய் வது மூலமும் அதிக தொகையைச் சேர்க்க முடியும். எனவே, முதலீட் டைக் காலதாமதம் செய்யாமல் வேலைக்குச் சேர்ந்த வுடனேயே ஆரம்பித்துவிடுவது லாபகரமாக இருக்கும். ஓய்வுக்காலத் தொகுப்பு நிதி ரூ.5 கோடி என்றவுடன் மலைக்க வேண்டாம். சம்பளத்தில் பிடிக்கப்படும் பிராவிடென்ட் ஃபண்ட், பணிக்கொடை போன்றவை பணி ஓய்வின்போது கிடைக்கும் என்பதால், அதையும் ஓய்வுக்கால தொகுப்பு நிதியில் சேர்த்துக்கொள்ளலாம்.

டார்கெட் குரோர்பதி @ 40 -  10: முதலீட்டை இளைஞர்கள் தாமதமாக ஆரம்பிப்பதால்
என்ன பாதிப்பு..?

எதில் முதலீடு செய்ய வேண்டும்?

தொகுப்பு நிதி மூலம் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைக்க வேண்டும் எனில், முதலீட்டுத் தொகையை டாப் டைவர்சிஃபைட் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துவருவது அவசியம். இந்த ஃபண்டுகள் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட 3% - 5% வருமானத்தைக் கொடுக்கவல்லவை. மேலும், நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வருமானம் இல்லை. அதற்கு மேற்பட்ட ஆதாயத்துக்கு 10% வரியைக் கட்டினால் போதும். அந்த வகையில் ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் லாபத்தில் வருமான வரியைச் சேமிக்க முடியும்.

ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட் என்கிறபோது முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30 - 40 நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் குறைக்கப்படுகிறது. ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட் என்கிறபோது லார்ஜ்கேப் ஃபண்டுகள், மல்ட்டிகேப் ஃபண்டுகள். ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகள் மற்றும் லார்ஜ்கேப் & மிட்கேப் ஃபண்டுகளில் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ளலாம்.

முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் இளைஞர்கள் முதலீட்டுக் காலம் 10 ஆண்டுகளுக்குமேல் இருக்கும்பட்சத்தில் லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வரலாம்.

(குரோர்பதி ஆவோம்)

இளைஞர்கள் தவிர்க்க வேண்டிய இரண்டு வகை கடன்கள்..!

இப்போதெல்லாம் இளைஞர்கள் வேலைக்குச் சேரும்போதே வங்கியில் சம்பளக் கணக்கை ஆரம்பித்ததும் டெபிட் கார்டு உடன் கிரெடிட் கார்ட்டையும் வழங்கிவிடுகிறார்கள். கிரெடிட் கார்டு வைத்திருக்கும் இளைஞர்கள் பலரும் பெரும் செலவாளிகளாக மாறி விடுகிறார்கள். இன்றைய இளைஞர்கள் பலரிடம் 20, 25 தேதி தாண்டிவிட்டாலே கையில் செலவுக்குப் பணம் இருப்பதில்லை. விளைவு, கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். அடுத்த மாத சம்பளத்தைக் கணக்கிட்டு இந்த மாதமே செலவுகளைச் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். இதனால், எப்போதும் கிரெடிட் கார்டுக்கு பணம் கட்டி வருபவர்களாக இருக்கிறார்கள். ஏதாவது ஒரு மாதம் ஓர் அவசரச் செலவு வரும்போது, கிரெடிட் கார்டு கடனுக்கான பணத்தைக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. வட்டி கட்டுகிறார்கள். கிரெடிட் கார்டு கடனுக்கான வட்டி ஆண்டுக்கு சுமார் 36% முதல் 40% வரை.

அடுத்து இளைஞர்கள் சுலபமாகக் கிடைக்கிறது என்பதற்காக தனிநபர் கடனை சாதாரண மாக வாங்கிவிடுகிறார்கள். இதற்கான ஆண்டு வட்டி 18 - 22 சதவிகிதம். இளைஞர்கள் கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல் லோன் மூலம் ஸ்மார்ட் போன், கார் என வாங்குகிறார்கள். இவை எல்லாம் தேய்மான சொத்துகள். தேய்மான சொத்துகளை கடனில் வாங்குவது தவறு. அதுவும் கிரெடிட் கார்டு, பர்சனல் லோனில் வாங்குவது மிகப்பெரிய தவறு. கடன் இல்லாமல் இருந்தாலே அதிகமாக முதலீடு செய்ய முடியும்; நிதி இலக்குகள் விரைவாக நிறைவேறும்.