இந்தியாவின் முன்னணி பெரிய காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி 'ஜீவன் ஆசாத்’ என்ற புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டம் பங்குச் சந்தையோடு இணைக்கப்படாத சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு திட்டமாகும். இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு எதிர்காலத்துக்கான சேமிப்பும், குடும்பத்துக்கான நிதிப் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என எல்.ஐ.சி தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் பாலசி காலங்கள் 15 முதல் 20 ஆண்டுகள் வரையில் உள்ளன. மொத்த பாலிசி காலத்தில் 8 ஆண்டுகள் போக மீதமுள்ள ஆண்டுகளுக்கு மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதுமானது. பிறந்து 90 நாட்கள் ஆன குழந்தைகள் முதல் 50 வயது பெரியவர்கள் வரை இந்தத் திட்டத்தில் சேர முடியும். பாலிசியின் குறைந்தபட்ச முதிர்வு வயது 18, அதிகபட்ச முதிர்வு வயது 70 ஆகும்.

பிரீமியத்தை ஆண்டுக்கு ஒருமுறையோ, அல்லது அரையாண்டு, காலாண்டு அடிப்படையிலோ, மாதந்தோறுமோ என அவரவர் வசதிக்கேற்ப செலுத்தலாம். இத்திட்டத்தின் முதிர்வுக் காலத்தில் உறுதி செய்யப்பட்ட உத்தரவாதமான பணம் பாலிசிதாரருக்குக் கிடைக்கும். இத்திட்டத்தில் குறைந்தபட்ச அடிப்படை உத்தரவாத தொகை ரூ.2 லட்சமாகவும், அதிகபட்ச அடிப்படை உத்தரவாத தொகை ரூ.5 லட்சமாகவும் உள்ளது.
அதேசமயம் பாலிசி காலத்தில் பாலிசிதாரர் இறக்க நேர்ந்தால் இத்திட்டத்தின் மூலம் பாலிசிதாரரின் குடும்பத்துக்கு நிதி ஆதரவு கிடைக்கும்.
இது அதிகபட்ச அடிப்படை உத்தரவாத தொகையாகவோ அல்லது ஆண்டு பிரீமியத்தில் 7 மடங்காகவோ இருக்கலாம். ஆனால் மொத்தமாகச் செலுத்தப்பட்ட பிரீமியத்தில் 105 சதவிகிதத்துக்குக் குறைவாக இருக்காது. 8 வயதுக்குக் கீழ் உள்ள மைனர் இறக்கும்பட்சத்தில் அவர் செலுத்திய பிரீமியம் தொகை மட்டும் (வரி, வட்டி போன்றவை சேர்க்கப்படாது) வழங்கப்படும்.

இத்திட்டத்தின் ரிஸ்க் கவரேஜ் 8 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் எடுக்கும்போது 8 வயதை எட்டும்போதோ அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்தோ (எது முதலில் வருகிறதோ) அதன்படி கவரேஜ் ஆரம்பமாகும். 8 வயதுக்கு மேற்பட்டவர் எனில் பாலிசி வாங்கிய நாளிலிருந்தே கவரேஜ் தொடங்கும்.மேலும் இந்தத் திட்டத்தில் கடன் பெறும் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.