டார்கெட் குரோர்பதி @ 40 - 7: லைஃப்ஸ்டைல் செலவுகள், கனவுகள்… இளைஞர்கள் மற்றவர்களைப் பின்பற்றலாமா?

டார்கெட் குரோர்பதி @ 40 - 7
இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையில் முக்கியமான பிரச்னையாக இருப்பது பியர் பிரஷர் (Peer Pressure) தான். அது என்ன பியர் பிரஷர்?

சமூக வலைதள பாதிப்புகள்...
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் இன்ஸ் டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போட்டிங், ஸ்டேட்டஸ் போடுவதை இன்றைய இளைஞர்கள் மிகவும் கௌரவமாக நினைக் கிறார்கள். மேலும், இவற்றில் மிக அதிகப் படியான நேரத்தைச் செலவிடுகிறார்கள். இதனால், நண்பர்கள், உறவினர்கள், அலுவலக நண்பர்கள், அக்கம்பக்கத்து வீட்டினர், எந்த மாதிரியான ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார் கள், எந்த மாடல் கார் வைத்திருக்கிறார்கள், கோடிகளில் வாங்கிய புது வீடுகளுக்குக் குடி போன விஷயங்கள் உடனுக்குடன் தெரிய வருகிறது. மேலும், எங்கே சுற்றுலா சென்று வந்திருக்கிறார்கள் என்கிற விவரத்தையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றும்போது நாமும் அதேபோல் செய்ய வேண்டும் என நினைப்பதை, அந்த நிலைக்குத் தள்ளப்படுவதை ‘பியர் பிரஷர்’ எனக் குறிப்பிடலாம். அதாவது, சக மனிதர்களால் ஏற்படும் அழுத்தம்.
மற்றவர்கள் போல் செய்ய வேண்டும் என்கிற ஆசை வருகிறது. அப்படி செய்யவில்லை எனில், இன்றைய இளைஞர்களுக்கு தாழ்வு மனப்பான்மையுடன் சோர்ந்துவிடுகிறார்கள். நாம் மற்றவர்களுக்கு இணையாக இல்லை. நம் வாழ்க்கைத்தரம் நன்றாக இல்லை என நினைத்து இளைஞர்கள் அதிகமாக வருத்தப்படுகிறார்கள். மேலும், பல இளைஞர்கள் புது கார் வாங்குவது சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுவதற்கும் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வதற்கும்தான் எனில், இன்றைய இளைஞர்களின் மனநிலை எந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பதைப் பாருங்கள்.
என் வாடிக்கையாளர்களில் ஒருவர் அண்மையில் தன் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளிலிருந்து ரூ.15 லட்சம் எடுக்க வேண்டும் எனக் கேட்டார். ‘எதற்கு இவ்வளவு அதிக தொகையை எடுக்க வேண்டும்?’ என்று கேட்டபோது, அவரின் மனைவி மற்றும் தந்தை சொந்த வீடு வாங்க சொல்லி மிகவும் வற்புறுத்துவதாகச் சொன்னார். சொந்த வீடு கட்டாயம் வாங்கியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில், ரூ.75 லட்சம் மதிப்புள்ள வீட்டை வீட்டுக் கடன் மூலம் வாங்க முன்பணம் கட்ட இந்த ரூ.15 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்டிலிருந்து எடுக்க வேண்டும் என்பது அவரது திட்டம்.

வீடும் போனும் வாங்குவது தவறா..?
வீடு வாங்குவது தவறா எனில் இல்லை. ஒருவர் உண்மையிலேயே சந்தோஷமாக வாழ ஆசைப்பட்டு வீடு வாங்குகிறார் எனில், அது தவறு இல்லை. ஆனால், பக்கத்து வீட்டுக்காரர் வீடு வாங்குகிறார்; அலுவலகத்தில் உடன் பணி புரிபவர் வீடு வாங்குகிறார்; தம்பி / தங்கை வீடு வாங்குகிறார் என்பதற்காக வீடு வாங்குவது தேவையில்லாத கடன் சுமையை ஏற்றுவதாகும்.
இன்றைக்கு நாம் பயன்படுத்த சொகுசு கார், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை நாம் ஏன் வாங்கினோம்? அதை வாங்கும் முடிவை ஏன் எடுத்தோம் என்பதை ஆராய்ந்து பார்த்தால், பல விஷயங்கள் தெரியவரும். உதாரணமாக, இப்போது ஐபோன் 14 புரோ என்கிற ஒரு புதிய மாடல் வெளி யாகி இருக்கிறது. இந்த போனை நண்பர்கள் வாங்கியிருக் கிறார்கள் என்பதற்காகப் பலரும் நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும் தங்களின் ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் குறைந்த விலைக்குக் கொடுத்துவிட்டு, புதிய மாடல் போனை அதிக விலைக்கு வாங்கியிருப்பார்கள். இதேபோல்தான் காரும்; பழைய காரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் குறைந்த விலைக்குக் கொடுத்துவிட்டு புதிய காரை அதிக விலைக்கு வாங்குவதாகும்.
ஒருவர் அவருக்கு என்ன வேண்டும் என்பதைத் தவிர்த்து மற்றவர்கள் என்ன பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்த்து தேவை இல்லாத பொருள்களை வாங்கி பணத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். தேவையில்லாத வாழ்க்கைத் தர பராமரிப்பை ‘பியர் பிரஷர்’ என்று சொல்லலாம்.
இந்த ‘பியர் பிரஷர்’ இளைஞர்களை எப்படி பாதிக்கிறது எனப் பார்ப் போம். இன்றைய இளைஞர் கள் வேலைக்குச் சேர்ந்து கிட்டத்தட்ட ஏழு, எட்டு ஆண்டுகளில் மாதம் சாதாரணமாக ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார் கள். அந்தச் சம்பளம் இப்போது எப்படி செலவாகி வருகிறது என்று பார்த்தால், அதிர்ச்சியாக இருக்கிறது.
வீட்டுக் கடன் மாதத் தவணை (இ.எம்.ஐ) ரூ.40,000 போய்விடும். ரூ.15,000 மற்ற கடன் தவணையாகச் சென்று விடும். தனிநபர் கடன் இ.எம். ஐ ரூ.10,000 இருக்கும். ஆக மொத்தச் சம்பளம் ரூ.1 லட்சத்தில் 65,000 ரூபாய் கடனுக்கே போய்விட்டால் மீதி 35,000 ரூபாயில் மொத்த மாதச் செலவுகளையும் சமாளிக்க வேண்டும்.
இப்படிக் குறைவான தொகையில் லைஃப்ஸ்டைல் செலவுகளையும் சேர்த்து மேற்கொள்ளும்போது மாதத்தின் 20, 25-ம் தேதிகளிலேயே செலவுக்குத் திண்டாடும் நிலை உருவாகும். சினிமாவுக்குப் போக வேண்டும்; சாப்பிட ஹோட்ட லுக்குப் போக வேண்டும்; காருக்கு பெட்ரோல் போட வேண்டும் என்றாலும்கூட கையில் பண மிருக்காது. விளைவு, கிரெடிட் கார்டு மூலம் கடனில் பொருள்களை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
பணத்தை எப்படிச் சேமிப்பது?
தேவை (Need) மற்றும் ஆசைக்கு (Want) உள்ள வித்தி யாசத்தைப் புரிந்துகொள்ளும் பட்சத்தில் சம்பளத்தில் தானாகவே சேமிப்பு உருவாகும். சில அத்தியா வசியத் தேவைகள் இல்லாமல் நம்மால் வாழ முடியாது. உதாரணமாக, குடியிருக்க ஒரு வீடு, சாப்பிட உணவு மற்றும் உடுத்த ஆடை ஆகும்.
இன்றைய நிலையில் சிலருக்கு பைக், கார் அத்தி யாவசிய தேவையாக மாறி இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நிலையில் விரைவாக அலுவலகம் செல்ல பைக் தேவைப்படு கிறது. மேலும், காற்று மாசு நிறைந்த நிலையில் அலுவல கம் செல்ல கார் தேவை. ஆசையை விடத் தேவையி லேயே இப்போது வாகனங்கள் வந்துவிடு கின்றன.
கார், மொபைல் போனை வாங்கும்போதுகூட கவனித்து வாங்குவது நல்லது. அலுவலகம் செல்ல குறை வான விலையில் சிறிய கார் வாங்கிக்கொண்டால் போதும். ரூ.5 லட்சம் அல்லது ரூ.6 லட்சத்துக்குள் ஒரு காரை வாங்கிக்கொள்ளலாம். ரூ.15 லட்சம், ரூ.20 லட்சம் காரை வாங்கும்போதுதான் மாதத் தவணை ரூ.15,000 - ரூ.20,000 வரும். ரூ.6 லட்சத்துக்கு கார் வாங்கும்போது சுமார் ரூ.10,000 - ரூ.12,000 மாதத் தவணை வரும்.
அடுத்து, தேவைக்கு செல் போன் வாங்கிக்கொண்டால் போதும். இப்போதெல்லாம் ரூ,20,000 - ரூ.25,000-ல் எல்லா வசதிகளும் கொண்ட ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. ஆனால், இதை விட்டுவிட்டு அந்தஸ்து என நம்மில் பலர் ரூ.40,000, ரூ.50,000 ஏன் ரூ.1 லட்சத்துக்குக்கூட ஸ்மார்ட்போனுக்காக செலவு செய்கிறார்கள். அதுவும் கடனில் வாங்குவார்கள். இப்படி ரூ.15 லட்சம், ரூ.20 லட்சத்தில் கார் வாங்குவது, ரூ.50,000, ரூ.1 லட்சத்துக்கு செல்போன் வாங்குவது தேவையா என யோசிக்க வேண்டும்.
ஒருவரின் வாழ்க்கைத் தரத்துக்கேற்ப எது தேவை, எது ஆசை என்பதை சரியாகப் பிரித்தறியும் திறமை இருப்பது அவசியமாகும். 50:20:30 என்ற விதிமுறையை இன்றைய இளைஞர்கள் பின்பற்றினால் செலவு குறைந்து சேமிப்பு அதிகரித்து செல்வம் சேரும். 40 வயதில் கோடீஸ்வரராக முடியும்.
அது என்ன 50:20:30 விதிமுறை எனில், மாதம் ஒருவர் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறார் எனில், அவரின் அத்தியாவசிய செலவுகள் அதாவது, வீடு, உணவு, உடைக்கான செலவுகள், வீட்டுக் கடன் தவணை எல்லாம் சேர்ந்து 50 சதவிகிதத்துக்குள் அதாவது, ரூ.50,000-க்குள்தான் இருக்க வேண்டும். நமக்கு விருப்பமான குறுகிய காலத் தேவைகளை நிறைவேற்ற ரூ.20,000 அதாவது, 20% தொகையை செலவிட வேண்டும். சுற்றுலா, சொந்த கார் போன்றவற்றுக்கு இந்த 20% தொகையை சேமித்து வர வேண்டும்.
இன்றைய வாழ்க்கையை வாழாமல் எதிர் காலத் துக்கு சேமிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அதே சமயம், தற்போ தையை வாழ்க்கையையும் அனுபவிக்க வேண்டும்; எதிர்கால வாழ்க்கைக்கும் சேமிக்க வேண்டும்.
மீதி 30,000 ரூபாயை அதாவது, 30% தொகையை எதிர்கால வாழ்க்கையை வளமாக்க சேமியுங்கள்; முதலீடு செய்யுங்கள். இப்படி செலவுகளை 50:20:30 எனப் பிரித்து செய்ய ஆரம்பித்தால் செலவுக்கும் பணம் இருக்கும். தேவை இல்லாமல் கடன் வாங்க வேண்டியிருக்காது. பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம் போன்ற நீண்ட கால நிதி இலக்குகளை நிறைவேற்ற சுலபமாக சேமிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். செல்வம் சேர்ப்பதில் இதுதான் முக்கியமான தாரக மந்திரமாகும். 50:20:30 என்கிற விதிமுறையை சரியாகப் பயன்படுத்தும் பட்சத்தில் 40 வயதில் ரூ.1 கோடியை சுலபமாகச் சேர்க்கலாம்!
(குரோர்பதி ஆவோம்)
தேய்மான சொத்தைக் கடனில் வாங்காதீர்கள்..!
எப்போதும் தேய்மான சொத்தைக் கடன் மூலம் வாங்கக் கூடாது. இப்போது ரூ.15 லட்சம் கொடுத்து கார் வாங்கினால், அதை ஆறு மாதம் கழித்து விற்கப் போனால் ரூ.12 லட்சத்துக்குக்கூட விலை போகாது. கார் என்பது தேய்மான சொத்து; அதைக் கடனில் வாங்குவது தவறாகும். நம் ஆசைக்கு செலவிடும் 20% தொகையைச் சேர்த்து வைத்து இரு சக்கர வாகனம், கார், ஸ்மார்ட்போன் போன்றவற்றை வாங்குவது நல்லதாகும். குறுகிய இலக்கான சுற்றுலாவுக்குக்கூட கடன் வாங்குவது மிகப் பெரிய தவறாகும். பணம் சேர்த்து வைத்து அதன் மூலம் சுற்றுலா செல்வதில்தான் உண்மையான ஆனந்தமே இருக்கிறது!